இலங்கை: சம்பள வெட்டு மற்றும் கொடூரமான வேலை நிலைமைகளுக்கு எதிரான தோட்டத் தொழிலாளர்களின் போரட்டத்திற்கான முன்னாக்கிய பாதை

தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அண்மைய நாட்களில் நுவரேலியா மாவட்டத்திலுள்ள பல தேயிலைத் தோட்டங்களில் நுாற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான போராட்டங்கள், சம்பள வெட்டுக்கள் மற்றும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் வேலைச்சுமை அதிகரிப்புக்கும் எதிராக, தோட்டத் தொழிலாளர் மேற்கொள்ளும் போராட்டங்களின் புதிய அலையின் ஆரம்பத்தினைக் குறிக்கின்றன. இந்தப் போராட்டங்கள் மீளெழுச்சிபெறும் உலகலாவிய வர்க்கப் போராட்டத்தின் ஒரு பாகமாகும்.

* களனிவெலி பெருந்தோட்ட கம்பனியால் நிர்வகிக்கப்படும், நானு ஓயாவில் உள்ள உட ரதல்ல தோட்டத்தில் சுமார் 300 தொழிலாளர்கள் செப்டம்பர் 10 முதல் 18 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில், வேலை இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு நிரந்தரத் தொழிலாளர்களை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்துவது உட்பட இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். எவ்வாறாயினும், தொழிலாளர்கள் எந்தவொரு கோரிக்கைகளையும் பெறாமல் செப்டம்பர் 29 அன்று வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர்.

* செப்டம்பர் 19, மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனியின் கீழுள்ள மஸ்கெலியா, சாமிமலையில் உள்ள ஸ்ராத்ஸ்பி தோட்டத்தின் அகறவத்த பிரிவின் 175 தொழிலாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

* செப்டம்பர் 10, ஹட்டன் பெருந்தோட்டத்தின் கீழுள்ள ஸ்றெத்டன் தோட்டத்தின், செம்பகவத்த பிரிவின் சுமார் 150 தொழிலாளர்கள், மூன்று நாள் வேலைநிறுத்தம் செய்தனர்.

* ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான, மஸ்கெலியா, சாமிமலையில் உள்ள கவரவில தோட்டத்தின் மூன்றாவது பிரிவிலிருந்து கிட்டத்தட்ட 100 தொழிலாளர்கள் செப்டம்பர் 11 முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தனர்.

குறிப்பிடத்தக்க வகையில், அந்த அனைத்து எதிர்ப்புப் பிரச்சாரங்களும், தோட்டத் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக வெடித்தவையாகும். எவ்வாறாயினும், இந்தப் போராட்டங்கள் பிற தோட்டப் பிரதேசங்களில் பரவக்கூடும் என்ற அச்சத்தில், தொழிற்சங்க தலைவர்கள் தொழிலாளர்களை தடுப்பதற்காக கம்பனி நிர்வாகத்துடனும் அரசாங்க தொழில் அதிகாரிகளுடனும் ஒத்துழைத்தனர். தொழிலாளர்கள் ஒவ்வொரு தோட்டத்திலும் ஊதிய வெட்டுக்கள், வேலைச்சுமை அதிகரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை போன்ற ஒரே மாதிரியான பிரச்சினைகளையே எதிர்கொள்கின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) உட்பட தொழிற்சங்கங்கள், உட ரதல்ல தோட்ட நிர்வாகம் மற்றும் நுவரேலியா உதவி தொழில் ஆணையாளருடனும் நடத்திய கலந்துரையாடலில், செப்டம்பர் 29 அன்று வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்ள உடன்பட்டன. கலந்துரையாடலுக்குப் பின்பு, ம.ம.மு. தலைவர் எம். கனகராஜ், தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வழங்க உடன்பட்டதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தொழிலாளர்கள் மறுத்தனர். தோட்ட நிர்வாகம் தங்களது கோரிக்கைகளினை நிறைவேற்ற மறுத்துவிட்டது என தொழிலாளர்கள் கூறினர். எவ்வாறாயினும், பொருளாதார சிரமங்கள் காரணமாக தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். தொழிற்சங்கங்கள் ஏனைய ஆர்ப்பாட்டங்களிலும் தலையிட்டு, போலியான வாக்குறுதிகளை கொடுத்து தொழிலாளர்களை தடுத்து நிறுத்தின.

இ.தொ.கா., தற்போதய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அரசாங்கத்தின் ஒரு பங்காளியாகும். அதன் தலைவர் ஜீவன் தொண்டமான், தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராவார். ஏனைய தொழிற்சங்கங்கள், முந்தைய ஐக்கிய அரசாங்கத்தின் பங்களிகளாக இருந்தன.

தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பானது வேலைச் சுமை அதிகரிப்பு எதிராகவும், அதன் மூலம் அவர்களது நாள் சம்பளம் வெட்டப்படுவதற்கு எதிராகவும் வளர்ச்சியடைகின்றது. ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு 16 முதல் 18 கிலோ வரை கொழுந்து பறிக்க வேண்டும். ஒரு தொழிலாளி குறைந்தபட்சம் 12 கிலோ பறிக்காவிட்டால் அவருக்கு அடிப்படை தினசரி ஊதியமான 700 ரூபாவில் (3.78 டொலர்) அரைவாசி மட்டுமே கிடைக்கும்.

2018 இல் இலட்சக் கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்கள், டிசம்பர் மாதம் நடந்த காலவரையறையற்ற வேலைநிறுத்தம் உட்பட ஒரு போராட்ட நடவடிக்கையினை ஆரம்பித்தனர். அதை இ.தொ.கா. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முடித்துவைத்தன. அவர்கள் தங்களது தினசரி ஊதியத்தை 500 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாக நுாறு சதவீதம் உயர்த்தக் கோரினர். பின்னர், அரசாங்கத்தின் ஆதரவுடன் முதலாளிமார்களுடன் செய்துகொண்ட ஒரு இரகசிய ஒப்பந்தத்தில், தொழிலாளர்களின் அடிப்படை தினசரி ஊதியத்தை 700 ரூபாவாகவும் பங்குக் கொடுப்பனவை 50 ரூபாவும் விதித்து, இந்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்தன. உண்மையில் அதிகரிக்கப்பட்டது வெறும் ரூபா 20 மட்டுமே. ஏனெனில் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், முன்னர் வழங்கப்பட்ட வருகை மற்றும் உற்பத்தித்திறன் போன்றவற்றுக்கான 200 ரூபா கொடுப்பனவை நீக்கிக்கொண்டன.

2019 ஜனவரியில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்த்தில், உற்பத்தி இலக்கினை அதிகரிப்பதற்கான நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டதோடு ஓய்வுதியம் மற்றும் ஏனைய வசதிகளையும் ஒழிக்கும் வருமானப் பகிர்வு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. வருமானப் பங்கீடு திட்டத்தின் கீழ், ஒரு தொழிலாளிக்கு அல்லது குடும்பத்துக்கு 1,000-1,500 தேயிலை செடிகள் கொண்ட ஒரு சிறிய காணித்துண்டு வழங்கப்படும். அதை பராமரித்து அறுவடை செய்வது தொழிலாளர்களின் பொறுப்பாகும். செலவுகளையும் அறுவடையில் வருகின்ற வருமானத்தில் இலாபத்தையும் கழித்துக்கொள்வதன் அடிப்படையில், உரம் மற்றும் இரசாயனங்கள் கம்பனியால் கொடுக்கப்படும். மீதமுள்ள அற்ப தொகையினையே தொழிலாளி தனது வருமானமாகப் பெறுகிறார்.

தொழிலாளர்களின் தொடர்ச்சியான எதிர்ப்புக்கு மத்தியிலும், கம்பனிகள் தொழிற்சங்கங்களின் உதவியுடன் வருமானப் பகிர்வு முறைமையை திட்டமிட்டு செயல்படுத்திக்கொண்டிருக்கின்றன. பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொஹோலியகொட, தற்போதைய ஊதிய முறைமையை அகற்றவேண்டும் என கடந்த மாதம் மீண்டும் வலியுறுத்தினரார். “இந்த ஊதியக் கட்டமைப்பானது முற்றிலும் காலாவதியானதென நாங்கள் உறுதியாக நம்புவதோடு உடனடியாக உற்பத்தித்திறன் அடிப்படையிலான மற்றும் விலையுடன் பிணைக்கப்பட்ட ஒரு சம்பள மாதிரிக்கு மாற்ப்பட வேண்டும்,” என அவர் கூறினார்.

இலங்கை உட்பட உலகம் மழுதுமுள்ள தோட்டத் தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாள வர்கத்தின் ஏழ்மையான பிரிவினரில் ஒரு பகுதியாக உள்ளனர். அவர்கள் ஆரோக்கியம், கல்வி, போக்குவரத்து போன்ற போதுமான அடிப்படை வசதிகளின்றி சிறிய லயன் அறைகளில் வாழ்கின்றனர்.

2019 பூகோள வாழ்க்கை ஊதிய கூட்டணி அமைப்பின் அறிக்கையின் படி, இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த வருமானமானமானது மதிப்பிடப்பட்ட மாதாந்த வாழ்கை ஊதியமான 23,785 ரூபாவை விட குறைவாக இருந்தது. இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையின் படி, தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ தனியார் துறையின் உண்மையான ஊதியமானது 2017 இல் 5.9 சதவீதமாகவும் 2018 இல் 3.5 ஆகவும் 2019 இல் 1.3 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கொரோனா தொற்று பரவலினைத் தடுப்பதற்காக, அரசாங்கம் பொதுமுடக்கத்தை அறிவித்த வெறும் நான்கு நாட்களுக்குப் பின்னர், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் தொழிற்சங்கங்களதும் ஆதரவுடன், பாதுகாப்பு வசதிகள் எதுவுமின்றி தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குச் செல்ல கட்டயாப்படுத்தின. இராஜபக்ஷ அரசாங்கம், கம்பனிகளின் இலாபத்தை பற்றியும் அதன் வெற்று கஜானாவை நிரப்புவதற்கு வெளிநாட்டு வருமானத்தைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே அக்கறை கொண்டது.

கொரோனா தொற்று நோயானது கடந்த பல வருடங்களாக தொடர்ந்த தேயிலை துறையின் நெருக்கடியினை ஆழப்படுத்தியுள்ளது. இலங்கைத் தேயிலையின் பெரும்பகுதி மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகிரிக்கின்ற புகோள-அரசியல் பதட்டங்களும் கேள்வியை குறைத்துள்ளன. உலக சந்தையில், இலங்கை மற்றும் தேயிலை உற்பத்தி செய்யும் கென்யா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கிடையிலான போட்டி கூர்மையடைந்துள்ளது. துரிதமாக வளரும் இந்த நெருக்கடியின் சுமைகள், தொழிலாளர்களி்ன் முதுகில் சுமத்தப்படும்.

தொழிலாளர்களின் எதிரப்பு பெருகும் நிலையில், தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, செப்டம்பர் 28 அன்று பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடான ஒரு கலந்துரையாடலுக்கு அழைப்புவிடுத்தார். தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியமாக 1,000 ரூபாவை கொடுக்க முடியுமா என்பதை பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும், இல்லையேல், தோட்டங்கள் இலாபமற்றதாக இருந்தால் அரசாங்கம் அவற்றை மீண்டும் பெற்று சரியாக இயக்க முடியும், என ஒரு போலி எச்சரிக்கையினை விடுத்தார்.

உண்மையில், சில்வாவின் வாய்ச்சவடால் ஒருபுறமிருக்க, இராஜபக்ஷ அரசாங்கமானது பெருந்தோட்டத் துறையை பிரிக்கவும், தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரக்கணக்கான தொழில்கள் மற்றும் பிற சமூக உரிமைகளை அழிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கின்றது.

கடந்த மாதம், பொருளாதார மீளெழுச்சிக்கான ஜனாதிபதி செயற்குழுவின் கூட்டத்தில், ஜனாதிபதி இராஜபக்ஷ, 20 பெருந்தோட்டக் கம்பனிகளில் 10 நட்டத்தில் இயங்குவதாகவும், அவற்றை சிறு தோட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் அறிவித்தார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதே அதன் அர்த்தமாகும்.

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலானது தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான ஒரு பரந்த தாக்குதலின் பாகமாகும். இராஜபக்ஷ அரசாங்கமானது அத்தியவசிய பொருட்களுக்கான வரி மற்றும் விலைகளை அதிகரிப்பது உட்பட சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளதோடு, அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வது மற்றும் தனியார்மயமாக்குவதையும் வேகப்படுத்தியுள்ளது.

அதே நேரம், இராஜபக்ஷ அரசாங்கமானது அந்தத் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்கு சர்வதிகார ஆட்சியை தயார்செய்து வருகின்றது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம், அதற்கான ஒரு முக்கிய முன்நகர்வாகும்.

கொரோனா தொற்றினால் மேலும் மோசமாக்கப்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடி சூழ்நிலையில், ஒவ்வாரு நாட்டிலுமுள்ள தொழிலாளர்கள், அவர்களின் ஊதியம், தொழில், வாழ்க்கை நிலைமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரேமாதிரியான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.

ஒரு ஒழுக்கமான வாழ்க்கைக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற மாதாந்த ஊதியம் அவசியமாகும். சரியான வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் கல்வி, இளைஞர்களுக்கு தொழில் போன்றவை சலுகைகள் அல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை சமூக உரிமைகள் ஆகும். இடுப்பை முறிக்கும் வேலைச் சுமை முறைமை ஒழிக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரிக்கின்ற தாக்குதல்கள், இலாபத்தினை தொழிலாளர்களின் உயிர்வாழ்வுக்கும் மேலாக பேணுகின்ற சமூக அமைப்பின் கீழ் இந்த நியாயமான கோரிக்கைகளை அடையமுடியாது என்பதைக் காட்டுகின்றது. தொழிலாளர்களின் நலனுக்காக உற்பத்தியை மறுசீரமைப்பதன் ஒரு பகுதியாக, பெருந்தோட்டங்கள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் தேசியமயமாக்கப்படல் வேண்டும். இது சோசலிச பொருளாதார திட்டத்திற்கான பரந்துபட்ட போராட்டத்தின் ஒரு பாகமாகும்.

கம்பனிகள் மற்றும் அரசின் தொழிற்துறை பொலிஸாக செயற்படும் தொழிற்சங்கங்களின் கீழ், தொழிலாளர்கள் இந்த முன்னோக்கிற்காக போராட முடியாது. அதே சமயம், தொழிற்சங்கங்கள் தொடர்பான அற்ப எதிர்ப்பும் விமர்சனங்களும் போதுமானவையல்ல. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து போராட்டங்களை தங்கள் கைகளில் எடுக்கவேண்டும். அவர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும். அந்த நடவடிக்கை குழுக்களின் பணி, முதலாளித்துவத்துவ அரசாங்கத்திற்கும் முதலாளிகளுக்கும் அழுத்தம் கொடுப்பதல்ல. மாறாக சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தை உருவாக்குவதும் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராடுவதுமாகும்.

Loading