ஐரோப்பாவில் COVID-19 வைரஸ் எழுச்சியடைகையில், மக்ரோன் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை பாராட்டுகிறார், பொது முடக்கத்தை நிராகரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 வைரஸின் ஐரோப்பிய அளவிலான மறுஎழுச்சிக்கு மத்தியில், நேற்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பல பிரெஞ்சு நகரங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்த அதே நேரத்தில் வைரஸைத் தடுக்க, புதிய பொது முடக்கம் (lockdown) இருக்காது என வலியுறுத்தினார். ஆனால், ஊரடங்கு உத்தரவு வைரஸை நிறுத்தாது, இது இப்போது பிரான்சில் தினமும் 20,000 மக்களுக்கும் ஐரோப்பா முழுவதும் 130,000 மக்களுக்கும் அதிகமானவர்களுக்கு இப்போது தொற்று ஏற்பட்டுக்கொண்டிருகிறது.

இன்னும் ஒரு பெரிய பேரழிவு அச்சுறுத்துகிறது. தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது, பிரான்சில் அவசரகால அறைகள் ஏற்கனவே பாரிஸ், மார்சைய் மற்றும் பிற நகரங்களில் கடுமையான நோயாளர்களால் நிரம்பி வழிகின்றன. செப்டம்பர் பிற்பகுதியில், மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் Patrick Brouet, எச்சரித்தார்: அதாவது “எதுவும் மாறவில்லை என்றால், 3-4 வாரங்களில், பிரான்ஸ் நீண்ட இலையுதிர்காலம் மற்றும் குளிர்கால மாதங்களில் அதன் முழு நிலப்பரப்பிலும் ஒரு முழு அளவிலான தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், குறைவான பாதிப்புக்குள்ளான பிராந்தியங்கள், அவற்றின் சுகாதார ஊழியர்கள் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ முடியும், மேலும் வரம்பை மீறிய நிலையுடன் ஒரு சுகாதார அமைப்புமுறை இருக்கும்.”

"நாங்கள் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்" என்று பிரபலமாக கூறிய மக்ரோன், இருப்பினும், எதுவும் மாறாது என்றும் "நாங்கள் கட்டுப்பாட்டை இழக்கவில்லை" என்றும் கூறினார். அவர் "பீதி நிலையில் இல்லை" என்றும் சேர்த்துக்கொண்டார். பாரிஸ் பகுதியில், எக்ஸ்-மார்சைய், லியோன், லீல், துலூஸ், சான்-எத்தியான், ரூவன், கிரெனோபில் மற்றும் மொன்பெல்லியே ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஊரடங்கு உத்தரவை அவர் அறிவித்தார். "பொது முடக்கத்திற்கு முன்கூட்டிய இந்த நிலையில் நாடு இருக்கும்," என்று அவர் கூறினார்.

ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், அனைத்து தொழிலாளர்களும் வேலைக்கு திரும்புவார்கள், மாணவர்கள் பள்ளிக்கு செல்வார்கள் என அவர் வலியுறுத்தினார். "எங்கள் மிகுதியான கொண்டாட்ட உறவுகளை மட்டுப்படுத்துவதே" குறிக்கோள், ஆனால் பொருளாதாரம் தொடர்ந்து தொழிற்படவேண்டும், அவரைப் பொறுத்தவரை, அது பணியிடங்களிலும் பள்ளியிலும் மட்டுமே "ஒரு சமூக வாழ்க்கையைத் தொடருங்கள்" என்பதாகும். வைரஸுக்கு எதிரான தற்போதைய முன்னெச்சரிக்கைகள், பணியிடங்களிலும் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் திருப்திகரமான வேலையைச் செய்கின்றன என்றும் அவர் அறிவித்தார்.

ஒரு வங்கியாளரும், நிதியப் பிரபுத்துவத்தின் வெட்கமில்லாத பிரதிநிதியுமான மக்ரோன், தொழிலாளர்களை வேலையில் வைத்திருக்கவும், இது அத்தியாவசியமற்ற வேலைகளில் கூட, இலாபங்களை வங்கிகளுக்கு தொடர்ந்து பாய்ச்சுவதை உறுதிசெய்ய ஏராளமான உயிர்களை தியாகம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் (EU), லண்டன் மற்றும் வாஷிங்டனுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட மக்ரோனின் கொள்கையானது முழுக்க முழுக்க பொய்கள் மற்றும் பிற்போக்குத்தனமான ஏய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டது, இது அவரது சொந்த அமைச்சகங்களின் தரவுகளால்கூட நேரடியாக முரண்படுகிறது.

வேலைப்பணி முடிந்த பின்னர், பிரெஞ்சு மக்களின் சமூக வாழ்க்கையை மட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஊரடங்கு உத்தரவு, தொற்றுநோயைத் தடுக்காது. சமீபத்திய பிரெஞ்சு பொது சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, தொழிலாளர்கள் தங்கள் சமூக தொடர்புகளை மட்டுப்படுத்தியதால், பொது அல்லது தனிப்பட்ட ஒன்றுகூடல்களுடன் தொடர்புபட்ட கொத்தணிகளின் சதவீதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, மொத்தத்தில் இது 7.9 சதவீதம் மட்டுமேயாகும். பள்ளிகள், நிறுவனங்கள், ஆபத்தான வேலைகள் மற்றும் வெகுஜன போக்குவரத்துக்களானது COVID-19 வைரஸ் கொத்தணிகளில் 61 சதவிகிதத்தை கொண்டுள்ளன, மீதமுள்ளவை முக்கியமாக மருத்துவமனைகள் மற்றும் சமூக சேவைகள் வசதிகளில் குவிந்துள்ளன.

பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மட்டும் 35 சதவீதக் கொத்தணிகளைக் கொண்டுள்ளன, இந்த இலையுதிர்காலத்தில் நேரில் கற்றுக்கொள்வதை மறுதொடக்கம் செய்வதற்கான அரசியல்ரீதியான குற்றவியல் முடிவின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தற்போதுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளானது பணியிடங்களிலும் பள்ளியிலும் தொற்றுநோயைத் தடுக்கின்றன என்ற மக்ரோனின் கூற்று தவறானது மட்டுமல்லாமல், COVID-19 வைரஸ் பரவுவதை நிறுத்த ஊரடங்கு உத்தரவு சிறிதளவும் அல்லது ஒன்றும் செய்யப்போவதில்லை. நாட்டை “முன்கூட்டிய” பொது முடக்கம் செய்தல் என்ற அவரது கூற்று, எல்லாவற்றிற்கும் மேலாக உழைக்கும் மக்களின் வாழ்வின் மீது நிதியப் பிரபுத்துவத்தின் முற்றிலுமான அவமதிப்பை பிரதிபலிக்கிறது.

பிரான்சில் தினசரி புதிய தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையை 20,000 இல் இருந்து 3,000 க்கும் 5,000 இடையில் குறைப்பதை இலக்காக கொண்டிருப்பதாக மக்ரோன் கூறினார். முழுமையாக முன்தயாரிப்பு செய்யப்பட்ட இந்த நேர்காணலை நடாத்திய ஊடகவியலாளர்களான, TF1 இன் செய்தி தொகுப்பாளர்களான Gilles Bouleau மற்றும் France2 இன் Anne-Sophie Lapix ஆகியோர் மக்ரோனின் ஊரடங்கு உத்தரவு, இந்த இலக்கை அடைய வாய்ப்பில்லை என்ற உண்மையை வெளிப்படுத்தக்கூடிய எந்தவிதமான சங்கடமான கேள்விகளையும் அவரிடம் கேட்கவில்லை.

ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு மாதமும் 90,000 முதல் 150,000 மக்கள் வரை ஆபத்தான வைரஸால் பாதிக்கப்படுவதற்கு விடப்படுகின்ற தனது கொள்கையின் குறிக்கோள் என்ற மக்ரோனின் கூற்று பொறுப்பற்றதும் மற்றும் அரசியல்ரீதியாக குற்ற விசாரணைக்குரிய குற்றமுமாகும்.

நோய்வாய்ப்பட்டவர்கள் இறக்காவிட்டாலும் கூட, “எங்களால் புரிந்துகொள்ள முடியாத”, “வாசனை மற்றும் சுவை உணர்வை இழந்துவிட்டார்கள்” அல்லது “நுரையீரலில் புண்கள் உள்ளன, சில சமயங்களில் அவர்களின் இருதய, இரைப்பை, குடல்கள் அல்லது நரம்பு மண்டலங்களின்” பாதிப்புக்களினால் அவர்கள் வருந்துகிறார்கள் என்பதை மக்ரோன் ஒப்புக்கொண்டார். உயிர் காக்கும் கருவிகள் தேவைப்படுபவர்களாக நோய்வாய்ப்பட்டவர்களில் பாதிப் பேர் 65 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். ஆயினும்கூட, காலவரையற்ற எதிர்காலத்தில், பிரான்சில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்காக தொற்றுக்களால் பாதிக்கப்படலாம் என்பதையும் கூட அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்தக் கொள்கையை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் அவசியமான தேவையாக இருக்கிறது. மக்ரோனின் கொள்கையானது ஒரு நனவானதும், கொலைக்காரக் கொள்கையுமாகும், இது வேண்டுமென்றே பிரான்ஸ், ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்களின் இழப்பில் வங்கிகளுக்கு இலாபத்தை இறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பேர்லின், பாரிஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமானது வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கும், பெரும் செல்வந்தர்களின் பங்கு இலாபங்களை உயர்த்துவதற்கும் பல டிரில்லியன் யூரோக்கள் பிணையெடுப்புகளுக்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர்கள் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பிச் செல்ல தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதோடு, ஆளும் வர்க்கத்திற்கு ஒரு இலாப ஓட்டத்திற்கு உத்தரவாதமும் அளிக்கிறார்கள்.

குறிப்பிடத்தக்க வகையில், மக்ரோன் தனது உரையில், ஐக்கிய இராச்சியத்தின் (UK) பிரதமர் போரிஸ் ஜோன்சன் அரசாங்கத்தின் பெருந்தொற்று நோய்க் கொள்கையை பாராட்டினார், டொனால்ட் ட்ரம்ப்புடன் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையின் மிகவும் வெளிப்படையான பாதுகாவலர் இவராவார். கால்நடைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்திற்கு உட்படுத்தும் இந்த மூலோபாயம் ஒரு கால்நடைக்கு ஒரு நோய் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒரு மந்தையின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நோயெதிர்ப்பு தடுப்பூசியாக போடப்படுகிறது. இப்போது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கால்நடைகளை விட குறைவான மதிப்புடையவர்களாகக் கருதி, மக்ரோன், ஜோன்சன், ட்ரம்ப் மற்றும் பிற நேட்டோ அரச தலைவர்கள் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு கொடிய நோயை தொற்றுவதற்கு அனுமதிக்க முன்மொழிகின்றனர்.

COVID-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான மைய விடயமாக இருப்பது, வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒரு பொது முடக்கத்தின் போது தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு நிதியளிக்கத் தேவையான நிதி மற்றும் தொழில்துறை வளங்களை ஒதுக்குவதோடு, அதே நேரத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளில் பெருமளவில் முதலீடு செய்வதுமாகும். எவ்வாறாயினும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதியப் பிரபுக்கள் அத்தகைய எந்தவொரு கொள்கையையும் பிடிவாதமாக ஏற்க மறுக்கிறார்கள்.

மருத்துவ சமூகத்தில் மக்ரோன் மீதான விமர்சனங்கள் அதிகரித்துவரும் நிலையில், சீனாவின் ஸ்ராலினிச பொலிஸ் அரசின் கொள்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைக்கு வேறுபாடாக பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன, அவைகள் இரண்டும் குறைந்த செயற்திறனும் மற்றும் மனிதாபிமானமற்றவையாகவும் இருந்தன. பொது முடக்கங்கள் பெரும்பாலும் சீனாவிற்குள் COVID-19 பரவுவதை நிறுத்தியுள்ளன. இந்த மாதத்தில் கிங்டாவோவில் 12 வைரஸ் தொற்று கொத்தணிகள் கண்டறியப்பட்டபோது, COVID-19 வைரஸ் தொற்றிய வெளிநாட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு மருத்துவமனையைச் சுற்றியும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், அவர்களை வீட்டில் தங்கவைக்கவும், பரந்த அளவில் தீவிர நோய் பரவலைத் தடுக்கவும் நகரத்தின் 9 மில்லியன் மக்களை பரிசோதிக்க அதிகாரிகள் விரைவாகச் செயற்பட்டனர்.

எவ்வாறாயினும், பிரான்ஸ் மற்றும் பிற செல்வந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், வைரஸின் ஒரு வெகுஜன பரவலை அரசு ஏற்றுக்கொள்கிறது, மேலும் மிகச் சில நூறாயிரக்கணக்கான சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டாலும், தொழிலாளர்கள் இன்னும் பல நாட்கள் அல்லது ஒரு வாரத்திற்கு மேல் பரிசோதனை முடிவுகளுக்கு காத்திருக்க வேண்டும்.

குளிர்காலத்தில் நுரையீரல் நோய்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் போது, ஐரோப்பிய சுகாதார அமைப்புமுறையின் பேரழிவு நிலைகுலைவின் உடனடி ஆபத்து இருப்பதாக கிளெர்மான்ட் - ஃபெராண்ட் நாளேடான La Montagne ஆனது தற்போது சீனாவில் வேலைசெய்யும் ஒரு பிரெஞ்சு மருத்துவர் டாக்டர் பிலிப் கிளைய்ன் அந்தப் பேட்டியில் வலியுறுத்தினார். “எங்கள் அவசரகால அறைகள் மற்றும் உயிர் காக்கும் கருவிகள் பற்றாக்குறையான நேரம் வரும்போது, மேலும் எந்த நோய்க்கு முதலில் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் தேர்ந்தெடுத்து தேர்வு செய்ய வேண்டியதாக இருக்கும். அங்கே ஒரு பொது முடக்கம் இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

பெருஞ் செல்வந்தர்களின் நலன்களுக்காக, பெருந்தொற்று நோயை மக்ரோன் கையாளுவதை கிளைய்ன் கடுமையாக விமர்சித்தார்: அதாவது “ஒரு பொது முடக்கம் எளிதானது. எல்லாவற்றையும் நிறுத்தவேண்டும், மக்கள்தொகை ஒன்றுகலப்பதையும் பரப்புவதையும் நிறுத்தவேண்டும். ஆனால் பிரான்சில் நாங்கள் பொது முடக்கம் முடிவுற்றது நடப்பதைத்தான் கண்டோம்.” கிளைய்ன், தான் மக்ரோனுடன் பேசியதாகவும், சீனாவைப் போலவே மிகவும் கடுமையான வீட்டில் இருத்தலுக்கான உத்தரவுகளை பரிந்துரைத்ததாகவும் கூறினார். இருப்பினும், “மக்ரோன் செவிமடுத்தார், பொருளாதார நலன்கள்தான் வென்றது. [பெருந்தொற்று நோயை] மெதுவாக்க விரும்புவோர், அதைத் தடுக்காமல், தவறான தேர்வை செய்தனர்” என்று கிளைய்ன் கூறினார்

தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அவர்களின் பணியிடங்களிலும் பள்ளிகளிலும் சுயாதீன பாதுகாப்புக் குழுக்களில் ஒழுங்கமைப்பது என்பதே இப்போதைய மையமான கேள்வியாக இருக்கிறது, மேலும் முறையான பாரிய வேலைநிறுத்தங்களும் மற்றும் மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கையை எதிர்ப்பதற்கான அரசியல் அடிப்படையாக அமைய வேண்டும். வருகின்ற மாதங்களில் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தவிர்க்கக்கூடியதும் ஆனால் உண்மையிலேயே கொடூரமான உயிர் இழப்புகளைத் தடுக்கவும் இளைஞர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற தொழிலாளர்களும் வீட்டில் இருத்தல் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டமும் இதில் உள்ளடங்கும்.

Loading