இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு பகுதியில் மரக் கடத்தல் சம்பந்தமாக தகவல் திரட்டச் சென்ற, வீரகேசரி மற்றும் ஹிரு நியூஸ் பிராந்திய நிருபர்களான கனபதிபில்லை குமனன், சண்முகம் தவசீலன் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை ஒரு கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

இரும்பு கம்பிகளுடன் ஆயுதபாணிகளாக இருந்த நான்குபேர் அடங்கிய கும்பல், மோட்டார் சைக்கிள்களில் வந்து அவர்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கமரா மற்றும் கைபேசிகளை பறித்து, அவர்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அழித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் குமனனுக்கு மூக்கு உடைக்கப்பட்டுள்ளது. தவசீலானுக்கு இரண்டு பற்கள் உடைந்து போயுள்ளன. இந்த தாக்குதல் குறித்து அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர், ஆனால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

முல்லைத்தீவில் தாக்கப்பட்ட குமணன் மற்றும் தவசீலன்

மருத்துவமனையில் இருந்தபோது ஊடகங்களிடம் பேசிய தவசீலன், தன்னைத் தாக்கிய கும்பலின் தலைவரை கைது செய்ய ஒரு பிடி ஆணை இருப்பதாகவும், அவர் மீது பல புகார்கள் இருந்த போதிலும், அவர் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் கைது செய்யப்படும் வரை தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார். இந்த தாக்குதல் தொடர்பாக "பக்கச்சார்பற்ற விசாரணை" நடத்துமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தியதாக மறுநாள் அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடக அமைச்சர் கெஹலியே ரம்புக்வெல்ல கூறியிருந்தாலும், அவை வெறும் வெற்று அறிக்கைகளாவே உள்ளன.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ், காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் அழிவு அதிகரித்து வருகிறது. அவற்றில், சிங்கராஜ வனப்பகுதி வழியாக இராணுவத்தால் நெடுஞ்சாலை அமைப்பதும், அனவிலுந்தாவ மற்றும் வனாத-வில்லுவ வனப்பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் நிலங்களை அரசியல் ஆதரவுடன் தனியார் ஒருவர் துப்புரவு செய்வதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக எதிர்க்கின்றனர்.

சுற்றுச்சூழல் பேரழிவிற்கு இணையாக, அவர்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மொனராகலையில் உள்ள கும்புகன் ஓயா பாலம் அருகே சட்டவிரோத மணல் அகலும் நடவடிக்கையை பற்றி தகவல் சேகரிக்கச் சென்ற இந்தூனில் விஜேநாயக்க என்ற பத்திரிகையாளர் இதேபோன்று அக்டோபர் 3 அன்று தாக்கப்பட்டார். இது தொடர்பாகவும் அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை, முல்லைத்தீவில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் தலைவிதியும் இதேபோன்றே இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

சுதந்திர ஊடக இயக்கம், ஊடகத் தொழிலாளர் சங்கம் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புகள் தாக்குதலைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளதோடு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து தாமதமாகி வருவது குறித்து அவை பிரதானமாக கவனம் செலுத்தியுள்ளன.

சுற்றுச்சூழல் அழிவு குறித்த தகவல்களை வழங்கியவர்களுக்கு எதிராக கோட்டாபய இராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட கருத்துக்களை ஆராய்ந்தால், இந்த தாக்குதல்கள் குறித்த விசாரணையை பொலிஸ் ஏன் தட்டிக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். இவ்வாறு தகவல்களை அம்பலப்படுத்துகின்றமை "தவறான செய்திகளை இட்டுக்கட்டுவதற்கும் சமூகமயமாக்குவதற்குமான ஒரு நடவடிக்கை" என்று கண்டனம் செய்த அவர், "பொதுமக்களை தவறாக வழிநடத்தும் பொருட்டு வேண்டுமென்றே பொய்யான செய்திகளை உருவாக்கி பல்வேறு ஊடகங்கள் மூலம் சமூகமயமாக்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த கருத்துக்களை இன்னும் விரிவாக அறிவித்துள்ளது: “பாதுகாக்கப்பட்ட காடுகளை எரித்து அழிப்பதாகவும் இயற்கை காடுகளில் மரங்களை வெட்டுவதாகவும் இந்த பொய்யான செய்திகள் மூலம் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற சுற்றுச்சூழல் பேரழிவு இதற்கு முன்னர் நடந்ததில்லை என்றும், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டும் அரசாங்கம் அமைதியாக இருப்பதாகவும் நம்ப வைப்பதற்கு இந்த செய்தி தயாரிப்பாளர்கள் முயற்சிக்கின்றனர். இத்தகைய செய்திகள் முற்றிலும் பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டிருப்பதைக் காணலாம்.”

இராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து குறுகிய காலத்தில், அது மக்களால் விரைவாக வெறுக்கப்பட்டு வருகின்றது. உயரும் வாழ்க்கைச் செலவுகள் உட்பட கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் அலட்சியத்தால் பெருகிய முறையில் அதிருப்தி அடைந்துள்ள பொது மக்களிடையே வளர்ச்சியடையும் எந்தவிதமான எதிர்ப்பையும் இராஜபக்ஷ அரசாங்கத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது. வெகுஜன எதிர்ப்புக்களை ஒடுக்குவதன் ஒரு பகுதியாக, கொரோனா தொற்றுநோய் பரவுவது குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.

அதே நேரத்தில், பொலிஸ் மற்றும் இராணுவத்தை மையமாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் இராஜபக்ஷ அரசாங்கம், உண்மையான தகவல்களை பொதுமக்களுக்கு கசியவிடுவது ஒரு சமூக வெடிப்பை துரிதப்படுத்தும் என்று அஞ்சுகிறது. இதுபோன்ற தகவல்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை பொய் செய்தி வெளியிடுபவர்கள் என முத்திரை குத்தி அவர்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசாங்கம் ஆதரவளித்து வருகிறது,

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு பத்திரிகையாளர்கள் மீது கொலைகார தாக்குதல்களை நடத்திய ஒரு கொடூரமான வரலாறு உள்ளது. 2009 ஜனவரியில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை பொதுமக்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வாகும்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மற்றும் தெற்கில், "வெள்ளை வேன்களில்" ஊடகவியலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதோடு, அவர்களில் சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். இந்த குற்றங்களுக்காக இதுவரை எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத போதிலும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய இராஜபக்ஷவின் முழு உடந்தையோடு செயல்படும் இராணுவ கொலைப் படைகளால் இந்த கொடூரங்கள் நடந்துள்ளன என்பதை இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

தகவல்களை சமூகமயப்படுத்துவதற்கு எதிரான அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதானது இராஜபக்ஷவின் தற்போதைய ஜனநாயக விரோத ஆட்சியின் கொடூரத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அரசாங்கம் தனது அரசியல் எதிரிகள் மீது, குறிப்பாக எதிர்கால போராட்டங்களில் நுழையவிருக்கும் தொழிலாளர்கள் மீது இத்தகைய தாக்குதலை தீவிரமாக்க பல்வேறு சாக்குப்போக்குகளைப் பயன்படுத்தும். அது குறித்து தொழிலாள வர்க்கம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Loading