“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை ஐரோப்பிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையை படுகுழியில் வீழ்த்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் இறுதியில் புதிய கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை பல நாடுகளில் கடுமையாக அதிகரித்ததைத் தொடர்ந்து, பல்வேறு ஐரோப்பிய அரசாங்கங்கள் அறிவித்த மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள், வேலைக்குத் திரும்புவதற்கும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் அவர்களின் முன்கூட்டிய கொள்கையால் ஏற்பட்ட பேரழிவை மறைக்க முடியாதுள்ளது.

ஞாயிறன்று, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் நோய்தொற்றுக்களின் உச்சபட்ச எண்ணிக்கைகள் மேலும் அதிகரித்தன. இத்தாலியில் ஒரே நாளில் 21,273 புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டன. தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவன (Robert Koch Institute-RKI) தரவின் படி ஜேர்மனியில் முன்னைய நாளைக் காட்டிலும் 11,176 அதிகப்படியான நோய்தொற்றுக்கள் பதிவாகியிருந்தன. பிரான்சில் ஞாயிறன்று 52,010 நோய்தொற்றுக்கள் பதிவாகின, இது முன்னைய நாள் எண்ணிக்கை 45,000 இல் இருந்து இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.

அக்டோபர் 22, 2020 வியாழக்கிழமை, கிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கின் நோவெல் மருத்துவமனை சிவில் பகுதியில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை மருத்துவப் பணியாளர்கள் கவனிக்கின்றனர் (AP Photo/Jean-Francois Badias)

பிரான்சில், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தற்போது வரையிலுமாக உருவான நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இந்த நோயினால் ஞாயிறன்று நிகழ்ந்த இறப்புக்கள் 116 ஐ எட்டியதுடன், தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலிருந்து தற்போது வரையிலான மொத்த கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை 34,761 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்படும் நோய்தொற்றுக்களின் நேர்மறை விகிதம் அன்று 17 சதவிகிதத்தை எட்டியிருந்தது, இது முன்னைய நாள் 16 சதவீதத்திலிருந்து இருந்து அதிகரித்திருந்தது, அதிலும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இது வெறும் 4.5 சதவிகிதமாக இருந்தது.

ஸ்பெயின், இந்த வார இறுதியில் 52,000 க்கும் மேலாக புதிய நோய்தொற்றுக்கள் உருவாகியிருப்பதாக பதிவு செய்துள்ளது, மேலும் கடந்த 14 நாட்களில் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 361.7 புதிய நோய்தொற்றுக்கள் என்ற வீதத்தின் கூட்டு எண்ணிக்கையும் கண்டறியப்பட்டது. தீபகற்பம் மற்றும் பலேரிக் தீவுகள் (Balearic Islands) எங்கிலும் உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. வெள்ளிக்கிழமை, 231 கூடுதல் இறப்புக்கள் அங்கு பதிவாகி, ஒட்டுமொத்த உத்தியோகபூர்வ இறப்புக்களின் எண்ணிக்கையை 34,752 ஆக உயர்த்தியது. என்றாலும் உண்மையான எண்ணிக்கை ஸ்பானிய பத்திரிகைகளின் கூற்றுப்படி, 55,000 க்கும் மேலாக இருக்கும் எனத் தெரிய வருகிறது.

உலக சுகாதார அமைப்பு (WHO), தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களின் உச்சபட்ச எண்ணிக்கைகள் பதிவாகியிருப்பதாக சனிக்கிழமை அறிவித்தது, அதிலும் குறிப்பாக வடக்கு அரைக்கோள நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறியது. உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் வியாழனன்று 437,247 என்றும், வெள்ளியன்று 449,720 என்றும் புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை பதிவானதுடன் ஒப்பிடுகையில், சனியன்று 465,319 புதிய நோய்தொற்றுக்கள் உறுதிசெய்யப்பட்டது.

ஐரோப்பாவில் சீர்குலைந்த சுகாதாரச் சூழல் எதிர்கொள்ளப்பட்ட நிலையில், பல ஐரோப்பிய நாடுகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இத்தாலி திரையரங்குகள், நாடக அரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நீச்சல் தடாகங்களை மூடவிருக்கும் அதேவேளை, மதுபானகங்கள் மற்றும் உணவகங்களின் சேவையை மாலை 6 மணிக்கு மேல் நிறுத்தவுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் அதன் ஊரடங்கு உத்தரவை இரவு 10 மணிக்கு முன்னோக்கி நகர்த்தியது. மேலும் கலாச்சாரம் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளன.

ஸ்பெயினில், சுமார் 4,500 வகுப்பறைகள் அல்லது மொத்தத்தில் 1.3 சதவிகிதம் பேர் தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில், பிரதமர் பெட்ரோ சான்சேஸ், கேனரி தீவுகளைத் தவிர்த்து தேசியளவிலான முழு ஊரடங்கிற்கு உத்தரவு விதித்துள்ளார். அத்துடன் அங்கு சுகாதார அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சான்சேஸ் தனது அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் வழங்கிய ஒரு உரையில் இவ்வாறு தெரிவித்தார்: “யதார்த்தம் என்னவென்றால், ஐரோப்பாவும் ஸ்பெயினும் தொற்றுநோயின் இரண்டாவது அலையில் மூழ்கியுள்ளன. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலை மிகத் தீவிரமானது.” என்றாலும், புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சான்சேஸ் நிராகரித்தார். “வீட்டில் அடைந்திருக்கும் படி இங்கு அவசரகால நிலை உத்தரவு எதுவும் கிடையாது, என்றாலும் நாம் தொடர்ந்து வீட்டிலேயே இருப்போம், நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்,” என்றார். மேலும், “என்ன செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றும் கூறினார்.

“சமூக மேற்பரப்பில் பல தொற்றுநோய்கள் இருந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம், என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை இரவில், அதிலும் குறிப்பாக நள்ளிரவுக்குப் பின்னர் அவை வேலை செய்யும் என்பது பற்றி நான் சந்தேகிக்கிறேன்,” என்று ஸ்பானிய தொற்றுநோயியல் சங்கத்தைச் சேர்ந்த பெட்ரோ குய்யான் (Pedro Gullon) தெரிவித்தார், இது மற்ற பல நாடுகளைப் போல ஸ்பெயினில் நடைமுறையில் உள்ள பின் இரவு சமூக முடக்கத்தை கேலி செய்வதாக உள்ளது.

அதற்கு பதிலாக சமூக முடக்கத்தை செயல்படுத்தவும் சாத்தியமுள்ள இடங்களில் வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயப்படுத்தவும் குய்யான் பரிந்துரைக்கிறார். இந்த நிலைமைகளின் கீழ், “பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை மக்கள் நிறுத்திக்கொண்டால், பெரியளவில் மக்கள் இயக்கம் தவிர்க்கப்படும்,” என்பதால் நோய்தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது என்று விவரித்தார்.

பிரான்சில், இலத்திரனியல் பொருளாதாரத்திற்கான இளைய அமைச்சர் செட்ரிக் ஓ (Cedric O) ஞாயிறன்று வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, அரசாங்கத்திற்குள் இன்னமும் உள்ளூர் மற்றும் தேசியளவிலான சமூக முடக்கங்களை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருவது தெரிய வருகிறது. France Info வானொலியில் ஓ பேசுகையில், மீண்டும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கு சாத்தியமுள்ளதா என்று கேட்கப்பட்டபோது, “அனைத்தும் சாத்தியமே” என்று பதிலிறுத்தார். மேலும், தொற்றுநோயை கையாளுவது பற்றி விவாதிக்க மக்ரோன் இன்றும் நாளையும் பாதுகாப்புக் கவுன்சிலுடன் இரண்டு கூட்டங்களை நடத்துகிறார்.

தொற்றுநோயின் தற்போதைய பரவும் தீவிரம் கண்டத்தை அழிவுக்குள்ளாக்கும் அதேவேளை, ஓ, “நாம் எதையும் நிராகரிக்கக்கூடாது என்றும், தொற்றுநோயின் பரிமாணத்திற்கு ஏற்ப நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும்” என்றும் சாதாரணமாகத் தெரிவித்தார்.

உண்மையில், பிரான்ஸ் எரிந்து கொண்டிருக்கையில் மக்ரோன் பல வாரங்களாக Nero ஐ போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு பேரழிவு ஐரோப்பா முழுவதையும் அச்சுறுத்துகிறது. பிரான்சில் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில் மூன்றில் ஒரு பகுதியும், பாரிஸைச் சுற்றியுள்ள Ile-de-France பிராந்தியத்தில் 68 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் கோவிட்-19 நோயாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிக் கொண்டே வருகிறது. கண்டிப்பான மற்றும் பரவலான வகையில் உடனடியாக முழு சமூக முடக்கம் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, நோயாளிகளின் எண்ணிக்கை பல வாரங்களுக்கு தொடர்ந்து உயரும் என்பதுடன், மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழியும்.

தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் பாரிசியன் பத்திரிகைக்கு இவ்வாறு தெரிவித்தார்: “மருத்துவமனையின் நடைபாதையில் 15 நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர், இடமில்லாத நிலையில் அவர்களை எங்கு படுக்க வைப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் காலை 4 மணி வரை வேலை செய்கிறோம். நாங்கள் இப்படியே தொடர்ந்து வேலை செய்தால், நாங்கள் செயலிழந்து போக நேரிடும். வசந்த காலத்தை விட தற்போது மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் கூறியதை Les Echos தலைப்புச் செய்திகளில் நாங்கள் கேட்டபோது, நாங்கள் மூச்சுத் திணறிப்போனோம். மேலும், நாங்கள் பீதியடைந்தோம்!”

மார்ச் மாதத்தில் ஐரோப்பிய நாடுகள் விதித்திருந்த சமூக முடக்க நடவடிக்கைகளினால் கிடைத்த பலன்கள் அனைத்தும் இப்போது இழக்கப்பட்டுவிட்டன. இத்தாலிய தொழில்துறையை முற்றிலும் முடக்கிய மற்றும் ஐரோப்பா எங்கிலுமாக பரவி வந்த தொடர்ச்சியான திடீர் வேலைநிறுத்தங்களை எதிர்கொள்வதற்கான ஆளும் உயரடுக்கின் விருப்பங்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விதிக்கப்பட்டிருந்தன. என்றாலும், வேலைகளுக்கும் பள்ளிகளுக்கும் முன்கூட்டி திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்ட நிலையில், ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவுள்ள தொற்றுநோய் மீள்எழுச்சி சூழலை ஆளும் வர்க்கம் உருவாக்கியுள்ளது.

புதிய முடக்கங்களுக்கு அரசாங்கங்களும் வங்கிகளும் எதிர்ப்பு தெரிவிப்பதிலிருந்து, உயிர்கள் ஆபத்தில் இருப்பதைப் பற்றி அவர்கள் முற்றிலும் கவலைப்படவில்லை என்பது தெரிகிறது. “வைரஸூடன் வாழ்வது” என்ற மக்ரோனின் கொள்கைக்கு எதிராக முக்கியமாக சமூக கோபம் வெடிக்கும் என்ற அச்சத்தில், தலைவர்கள் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற அல்லது குறைவான ஏளன நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில், தொற்றுநோயும், நூறாயிரக்கணக்கான உயிர்களின் இழப்பும் நிதிய பிரபுத்துவத்தின் திவால்நிலையையும், மனித உயிர்களை பாதுகாக்க இயலாத அவர்களது கையாலாகத்தனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.

மீண்டும் வேலைக்குத் திரும்பும் மற்றும் பள்ளிகளை மீளத் திறக்கும் பேரழிவுகர கொள்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் “இடதுசாரி ஜனரஞ்சக” அரசியல் கூட்டணிகளின் உடந்தையுடன் இந்த குற்றவியல் கொள்கை செயல்படுத்தப்படுவதற்கான சாத்தியம் இருந்தது. இந்த சக்திகள் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையின் பிரச்சாரகர்களாக மட்டும் செயல்படவில்லை. மாறாக அதை அவர்கள் செயல்படுத்தினர்.

தொற்றுநோயினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில், அரசாங்கம் சமூக ஜனநாயகத்திற்கும் பொடேமோஸின் “இடதுசாரி ஜனரஞ்சகவாதிகளுக்கும்” இடையிலான கூட்டணியைக் கொண்டுள்ளது. இந்த கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை செயல்படுத்தியதுடன், கோடையில் மாட்ரிட்டின் வரையறுக்கப்பட்ட தொழிலாள வர்க்க அண்டை பகுதிகளுக்கு பொலிஸை அனுப்பி வைக்க ஆதரவளித்தது. தற்போது ஸ்பெயினில் சுகாதார நிலைமை மீண்டும் ஒரு பேரழிவை எதிர்கொள்கிறது, பொடெமோஸ் உறுப்பினராக உள்ள அரசாங்கம், தொழிலாளர்களின் முதுகில் பாரம் ஏற்றுவதன் மூலம் இலாபங்களை பிழிந்தெடுக்கும் நோக்கில் வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுக்கிறது.

இந்த நிகழ்வுகள், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, பள்ளிகளிலும் பணியிடங்களிலும் தொழிலாளர்கள் தங்களது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான சொந்த குழுக்களை நிறுவும் படி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தொழிலாளர்களுக்கு விடுத்த அழைப்பு சரி என்பதை நிரூபிக்கின்றன. இந்த குழுக்கள், அத்தியாவசிய வேலை தொழிலாளர்களை வைரஸிலிருந்து பாதுகாப்பதை உறுதிசெய்கின்றன, மேலும் இந்த கொடிய வைரஸ் நோய்தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட ஒரே சிறந்த முறையான முழு சமூக முடக்கங்களை செயல்படுத்தக் கோரும் தொழிலாளர் போராட்டங்களுக்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.

அத்தியாவசியமில்லாத துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வீட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும், மேலும் ஊக்கத் திட்டங்களிலிருந்து கிடைக்கும் ஆயிரக்கணக்கான பில்லியன் யூரோக்களை வங்கிகளை பிணையெடுக்க வாரிக் கொடுக்காமல், தொழிலாளர்களுக்கு எந்தவித வருமான இழப்புமின்றி அவர்கள் வீட்டில் பாதுகாப்புடன் இருக்க வழிவகை செய்ய வேண்டும். இதற்கு நிதிய பிரபுத்துவத்திடமிருந்து சோசலிச அபகரிப்பு அவசியப்படுகிறது. இதன் பொருள், ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு போராட்டம் தேவை என்பதுடன், அதனைத் தொடர்ந்து மனிதகுலத்தின் தேவைகளுக்கு ஏற்ப சமூகத்தை மறுசீரமைக்க வேண்டும்.

Loading