முன்னோக்கு

ஐரோப்பாவில் COVID-19 வைரஸ் எழுச்சியடையும் போது, அரசாங்கங்கள் மனித உயிர்களுக்கு மேலாக இலாபத்தைப் பாதுகாக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த ஆண்டு COVID-19 வைரஸினால் 9 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றுக்கும் மற்றும் 250,000 மக்களின் இறப்புகளுக்குப் பின்னர், ஐரோப்பாவானது பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. இந்த வசந்த காலத்தில் ஐரோப்பிய அரசாங்கங்களின் பொது முடக்கத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவது பேரழிவு தரும் என்பதை வைரஸின் மீளெழுச்சி தெளிவாக்கியுள்ளது. இது நோயின் உலகளாவிய மீளெழுச்சிக்கு வழிவகுத்ததோடு, குறிப்பாக ஐரோப்பாவிலும், இப்போது ஐரோப்பாவின் மருத்துவ அமைப்புமுறையை முற்றிலுமாக மூழ்கடிக்க அச்சுறுத்துகிறது.

ஒவ்வொரு நாளும், இப்போது 200,000 க்கும் மேற்பட்ட புதிய உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களையும் COVID-19 வைரஸினால் 2,000 இறப்புகளையும் ஐரோப்பா பதிவு செய்து கொண்டிருக்கிறது, இது ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிறது. இந்த நிலைமை நிறுத்தப்படாவிட்டால், மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளிலுள்ள மருத்துவமனைகள் நிரம்பிவழிவதுடன், ஏராளமான மக்கள் சிகிச்சையிலிருந்து துண்டிக்கப்படுவதற்கும் சில வாரங்களே ஆகும். பிரான்சின் சுவாச உதவி கருவியுடைய மருத்துவமனை படுக்கைகளில் பாதி அளவும் மற்றும் ஸ்பெயினின் கால் பகுதி அளவுக்கு மேற்பட்ட படுக்கைகளும் ஏற்கனவே கடுமையான COVID-19 வைரஸ் தொற்று நோயாளிகளால் பயன்படுத்தப்படுகின்றன. பிரிட்டன், இத்தாலி மற்றும் போலந்து போன்ற நாடுகள் 20,000 தினசரி நோய் தொற்றுக்களை பதிவு செய்கின்றன. ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் சுமார் 14,000 நோய் தொற்றுக்களை பதிவு செய்து சில வாரங்கள் தான் பின்னால் உள்ளன.

20 ஆம் நூற்றாண்டின் உலகப் போர்களுக்குப் பின்னர் இதுவரை கண்டிராத அளவில் உயிர் இழப்புகளின் விளிம்பில் ஐரோப்பா உள்ளது. பல மில்லியன் மக்கள் உயிர் ஆபத்தில் உள்ளனர். மார்ச் மாதத்தில், ஜேர்மன் உளவுத்துறை ஒரு அறிக்கையைத் தயாரித்தது, அதில் இந்த வைரஸ் மக்கள் தொகையில் பரவினால் ஜேர்மனியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்து விடுவார்கள் என்று தெரிவித்தது. நேற்றிரவு, ஒரு தேசிய தொலைக்காட்சி உரையில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பிரான்சில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் 400,000 மக்கள் இறக்கக்கூடும் என்று மதிப்பிட்டார்.

பெருகிவரும் பொது மக்களின் சீற்றத்தையும், பேரழிவுகளைத் தவிர்க்க மருத்துவ அதிகாரிகளிடமிருந்து வரும் அழைப்புகளையும் முகங்கொடுத்து, ஐரோப்பிய அரசாங்கங்கள் திடீரென தாங்கள் பொது முடக்கங்களை பரிசீலிப்பதாகவும் அல்லது மீண்டும் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தன. அயர்லாந்து மற்றும் வேல்ஸ் இரண்டும் கடந்த வாரம் பொது முடக்கங்களை அறிவித்த பின்னர், மக்ரோன் நேற்றிரவு பிரான்சில் புதுப்பிக்கத்தக்க வகையில் நான்கு வார கால பொது முடக்கம் ஒன்றை அறிவித்தார்.

எவ்வாறிருப்பினும், இந்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளானது, இளைஞர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பணிகளின் அனைத்து தொழிலாளர்களும் வீட்டிலேயே தங்கியிருப்பதற்கும், தொற்றுநோயைத் தவிர்க்க அனுமதிக்கும் வீட்டில் தங்கியிருப்பதற்கான உத்தரவுகள் அல்ல. புதிய பொது முடக்கங்களை சுமத்தும் போது, ஐரோப்பிய அரசாங்கங்களானது முன்னைய பொது முடக்கங்களை முன்கூட்டியே அகற்றுவதற்கு இட்டுச் சென்ற அதே இலக்கைத்தான் கொண்டுள்ளன: அதாவது பணிகளில் தொழிலாளர்களையும் பள்ளிகளில் இளைஞர்களையும் வைத்திருப்பது நிதிப் பிரபுத்துவத்திற்கு இலாபங்களை உற்பத்தி செய்வதற்காகும்.

தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்: ஐரோப்பிய அரசாங்கங்களால் முன்மொழியப்பட்ட பொது முடக்கங்கள் தொற்றுநோயைத் தடுக்காது அல்லது பேரழிவு தரும் உயிர் இழப்புகளைத் தவிர்க்காது. உலகளாவிய பெருந்தொற்று நோயிலிருந்து மக்கள் தொகையைப் பாதுகாக்க, ஒரு உண்மையான, வீட்டில் தங்கியிருத்தல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான, சர்வதேச அணிதிரட்டல் அவசியமாக இருக்கிறது.

ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் இரண்டு நாடுகளும் நேற்று பகுதியளவு பொது முடக்கங்களை ஏற்றுக்கொண்டு, கலாச்சார நிறுவனங்கள் மற்றும் உணவகங்களை ஒரு மாதத்திற்கு மூடின. சான்சிலர் அங்கேலா மேர்க்கலின் “தீர்மான அறிக்கையானது” “பள்ளிகளும் மழலையர் பள்ளிகளும் திறந்திருக்கும்” என்றும் “தொழிற்துறை, வர்த்தகம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முடிந்தவரை பாதுகாப்பாக செயற்பட முடியும் என்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன” என்றும் கூறுகிறது. மக்ரோன் "பள்ளிகள் திறந்திருக்கும், பணிகள் தொடரும், ஓய்வுபெற்றோர் பராமரிப்பு இல்லங்கள் பார்வையிட திறந்திருக்கும்" என்று கூறினார். அதனால் வைரஸ் தொடர்ந்து பரவத்தான் செய்ய முடியும்.

ஐரோப்பா முழுவதும் கடுமையான பொது முடக்க நடவடிக்கைகள் ஏற்கப்பட்டுள்ள நாடுகளில், அத்தியாவசியமற்ற தொழிற்துறைகளும், பள்ளிகளும் திறந்தே உள்ளன. ஐரிஷ் அரசாங்கம் "ஆறு வாரத்திற்கு கொரோனா வைரஸ் பொது முடக்கத்தை" அறிவித்தது, இது குடிமக்கள் நடமாட்டங்களை அவர்களின் வீடுகளிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் மட்டுப்படுத்துகிறது. எனினும் மார்ச் மாத பொது முடக்கம் போலல்லாமல், பள்ளிகள், கட்டுமான தளங்கள் மற்றும் தொழிற்துறை திறந்தநிலையே இருக்கும், புதிய வைரஸ் பரவல் வெடிப்புகளுக்கான முக்கிய இடங்களான இறைச்சி பதப்படுத்தும் தொழிற்கூடங்கள் கூட திறந்தே இருக்கும்.

பொது முடக்கங்களைத் தொடருவதாகக் கூறும் அதே வேளையில், ஐரோப்பிய அரசாங்கங்கள் அடிப்படையில் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்” என்ற கொலைகார மூலோபாயத்தை தொடர்கின்றன, இதனால் வைரஸ் மக்கள் தொகையில் தொடர்ந்து பரவுகிறது.

சுகாதாரக் கொள்கையின் கட்டுப்பாட்டை முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் விட முடியாது. ஒரு பகுத்தறிவான, விஞ்ஞானபூர்வ அடிப்படையிலான கொள்கையை நடைமுறைப்படுத்த அணிதிரட்டப்பட வேண்டிய சக்தி இருப்பது, ஐரோப்பிய தொழிலாள வர்க்கமாகும், இது நிதியப் பிரபுத்துவத்தினால் தீயமுறையில் சூறையாடப்பட்ட செல்வத்தை பறிமுதல் செய்வதற்காக தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமான ஒரு சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கிற்காக போராட வேண்டும்.

தொழிலாள வர்க்கம்தான் இந்த வசந்தகாலத்தில் முதல் பொது முடக்கங்களை திணித்தது. மார்ச் மாத தொடக்கத்தில் இத்தாலிய வாகன, எஃகு மற்றும் பொறியியல் ஆலைகளில் தொடங்கிய ஒரு திடீர் வேலைநிறுத்த அலை ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் முழுவதும் பரவியது. இது விநியோக சங்கிலிகளை நிறுத்தி, ஐரோப்பா எங்கிலும் தொழிற்துறையை ஒரு நிறுத்தத்திற்கு கொண்டு வந்தது. COVID-19 வைரஸ் மக்கள்தொகை மீது வெடித்து பரவும் போது, கீழே இருந்து வந்த இயக்கத்தால் அதிர்ச்சியடைந்த ஐரோப்பிய அரசாங்கங்கள், திடீரென்று போக்கை மாற்றி, பொது முடக்கங்களை நடைமுறைப்படுத்தியது.

இந்த அனுபவத்திலிருந்து அரசியல் படிப்பினைகளை எடுப்பது மிகவும் முக்கியமாகும். விஞ்ஞானபூர்வ அடிப்படையில் ஒரு கொள்கையை நடைமுறைபடுத்துவதற்கான அதனுடைய திறனை தொழிலாள வர்க்கம் நிரூபித்தாலும், அது ஒரு தன்னெழுச்சியான இயக்கமாக இருந்தது. வேலைநிறுத்தங்கள் முடிந்து, ஆரம்ப கட்ட பொது முடங்கங்கள் ஏற்கப்பட்டன, ஆனால் அரச அதிகாரமும், வங்கிகளின் கட்டுப்பாடும் மற்றும் தொழிற்துறை வாழ்க்கையும் நிதி பிரபுத்துவத்தினதும் பல்வேறு அதிகாரத்துவ தொழிற்சங்கங்களின் கைகளில் தான் இருந்தன. இதற்கு ஐரோப்பிய மக்கள் தொகையானது இப்பொழுது கடுமையான விலையை கொடுத்து வருகின்றனர்.

அரசாங்கங்கள் உயிரைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக பெரும் செல்வந்தர்களின் செல்வத்தைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பிரிட்டன் 645 பில்லியன் பவுண்டுகள் வங்கி பிணையெடுப்பும், யூரோ வலையம் 1.25 டிரில்லியன் யூரோக்கள் வங்கி பிணையெடுப்பும் மற்றும் 750 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றிய பெருநிறுவன பிணையெடுப்புக்களையும் ஏற்றுக்கொண்டது. வேலையின்மை காப்பீடு மற்றும் சிறு வணிக கடன்களுக்காக செலவிடப்பட்ட ஒரு மிகச் சிறிய பகுதியைத் தவிர, இந்த தொகைகள் பெரும் செல்வந்தர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் பங்கு முதலீடுகளை பிணை எடுப்பதற்கும், அமெரிக்கா மற்றும் சீனாவுடன் போட்டியிட பெரிய ஐரோப்பிய பெருநிறுவனங்களை மீட்டெடுப்பதற்கும் சென்றன.

சந்தைகளில் முக்கிய முதலாளித்துவ சக்திகளுக்கிடையில் வளர்ந்து வரும் பூகோளரீதியான போராட்டமானது, ஒரு நீடித்த வீட்டில் தங்கியிருத்தல் கொள்கையை தவிர்த்தது மற்றும் பாரிய மரணங்களின் அவசியத்தை அங்கீகரித்தது என்று Le Mondeஇன் ஒரு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஏற்கனவே கற்றுக்கொண்டிருந்த நாடு கடந்து சென்றுவிட்ட ஆலைகளை மீண்டும் உள்நாட்டிற்குள் எடுத்தல், விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்துதல் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய மூலோபாயங்கள் இப்போது ஒரு முழுமையான முன்னுரிமையாக உள்ளன,” என்று அது எழுதியது, “அதனால்தான் ட்ரம்ப் நிர்வாகம் ‘முதலில் வணிகம்’ என்ற பயங்கரமான விருப்பத் தேர்வைச் செய்து, சீன அதிகாரத்தை ஒரு திறந்த களத்தில் விட்டுவிடக்கூடாது என்பதற்காக, அதன் சொந்த மக்கள் தொகையில் ஒரு பகுதியை தியாகம் செய்து வருகிறது" என்று அது எழுதியது.

ஐரோப்பிய முதலாளித்துவமும் இதே கொள்கையையே பின்பற்றியது. ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து கையெழுத்திட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்பெயினிலுள்ள பொடேமோஸ் (Podemos) மற்றும் ஜேர்மனியில் இடது கட்சி போன்ற போலி இடது கட்சிகளின் ஒத்துழைப்புடன், பணிக்கு மீண்டும் திரும்பும் ஒரு முயற்சியை அரசாங்கங்கள் தொடங்கின. குழந்தைகள் வைரஸைப் பரப்புவதில்லை அல்லது தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு நீண்ட கால பொது முடக்கத்திற்கு உதவ பணம் இல்லை என்ற பொய்யானது பெரும் செல்வந்தர்களுக்கு கொடுக்கப்பட்ட பொதுப் பணத்தில் பெரும் தொகைகள், இலாபங்களை ஈட்டுவதற்கு தொழிலாளர்களை மீண்டும் பணிக்குத் திருப்பிவிட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்திய போது இதைவிட மிகவும் மூர்க்கமான எந்தப் பொய்யும் இருந்ததில்லை.

பெருந்தொற்று நோயை நிறுத்துவதும், ஒரு விஞ்ஞானபூர்வமான, வீட்டில் தங்கியிருத்தல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் கட்டமைப்பிற்குள் சாத்தியமற்றது என்பதை நிரூபித்துள்ளது. இதற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாள வர்க்கத்தின் நனவான அரசியல் அணிதிரள்வு அவசியமானதாக இருக்கிறது. அது நிதியப் பிரபுத்துவத்தின் அதிகாரத்தை நசுக்குவதற்கும், தொழிற்சங்க ஆதரவு பெற்ற பிணையெடுப்புகளில் பெரும் செல்வந்தர்களுக்கு சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட பொது நிதிகளை பறிமுதல் செய்யவும், சுகாதார பராமரிப்பு சேவையையும் அதனுடைய தொழிலாளர்களையும் பாரியளவில் மேம்படுத்துவதற்கும், பெருந்தொற்றிலிருந்து உயிர்வாழ்வதற்கு தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு தேவையான வளங்களை வழங்குவதற்குமான ஒரு போராட்டத்தை அது கொண்டிருக்க வேண்டும்.

பெருந்தொற்று நோய்க்கு முதலாளித்துவத்தின் அரசியல் குற்றவியல் கொள்கைகளுக்கு எதிராக சர்வதேச பொது வேலைநிறுத்த நடவடிக்கையை தயாரிப்பதற்கு தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சுயாதீன பணியிட பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) இன் ஐரோப்பிய பிரிவுகள் அழைப்பு விடுத்துள்ளன. இது நிதியப் பிரபுத்துவத்திடமிருந்து பறிமுதல் செய்து, மக்கள்தொகையின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு பகுத்தறிவான, விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் சமூகத்தை சோசலிச மறுசீரமைப்பு செய்ய இதனால் தயாரிப்பு செய்ய முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தை தொழிலாள வர்க்கம் தூக்கியெறியவும், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை நிர்மாணிப்பதும் இதற்கு அவசியமாக இருக்கிறது.

Loading