சீனா தலைமையிலான புதிய வர்த்தக அணி அமெரிக்காவுடன் இன்னும் அதிக பதட்டங்களுக்குக் களம் அமைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பேச்சுவார்த்தைகள் தொடங்கி எட்டாண்டுகளுக்குப் பின்னர், ஒரு பிராந்திய வர்த்தக மற்றும் பொருளாதார உடன்படிக்கையான பிராந்தியளவிலான பரந்த பொருளாதார பங்காண்மை (Regional Comprehensive Economic Partnership – RCEP) என்பது சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றுடன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பான ஆசியானின் (ASEAN) மொத்தம் 10 உறுப்பு நாடுகள் உள்ளடங்கலாக 15 ஆசிய-பசிபிக் நாடுகளிடையே ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தானது.

இது ஒப்பீட்டளவில் அதன் வீச்சில் மட்டுப்பட்டு இருந்தாலும், இந்த உடன்படிக்கை அப்பிராந்தியம் மீதான பொருளாதார மேலாதிக்கத்திற்கான அமெரிக்க வேட்கைகளுக்கு மற்றொரு அடியாக உள்ளது. பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கையிலிருந்து (Trans-Pacific Partnership – TPP) ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவை வெளியில் இழுத்துக் கொண்ட பின்னர், உலகின் மிகப்பெரிய அந்த பொருளாதாரம் இவ்விரு பிரதான பொருளாதார அணிகளில் எதுவொன்றிலும் பாகமாக இல்லை.

இந்த RCEP உடன்படிக்கைக்கு அழுத்தமளிக்க முன்முயற்சி எடுத்தது சீனா அல்ல, மாறாக ஆசியான் நாடுகளாகும், என்றாலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சீன பொருளாதாரத்தின் மாபெரும் அளவு இந்த குழுக்குள் சீனா தான் மேலோங்கி செல்வாக்கு செலுத்தும் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஜோசப் பைடெனோ அல்லது ட்ரம்போ இறுதியில் யார் அடுத்த ஜனாதிபதியாக அமர்த்தப்பட்டாலும் சரி, பொருளாதார செயலெல்லை உட்பட பெய்ஜிங் உடனான வாஷிங்டனின் மோதலை மேற்கொண்டு அதிகரிக்க இருவருமே சமிக்ஞை செய்துள்ளனர்.

அந்த உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட நாடுகள் உலகளாவிய பொருளாதார வெளியீட்டில் சுமார் 30 சதவீதத்தைக் கணக்கில் கொண்டிருக்கின்றன என்பதால், அது உலகின் மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கையாக கணக்கில் வைக்கப்படுகிறது. கடந்தாண்டு பேச்சுவார்த்தைகளில் வெளியில் இழுத்துக் கொண்ட இந்தியா இதில் சம்பந்தப்படவில்லை என்றாலும் கூட, அப்பிராந்தியம் 2.2 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவை மையமாக கொண்ட பேராசிரியர்கள் பீட்டர் பெட்ரி மற்றும் மைக்கெல் பிளம்மெர் கருத்துப்படி, உலகளாவிய பொருளாதார அளவில் RCEP 186 பில்லியன் டாலருக்கும் மற்றும் அதன் உறுப்பு நாடுகளது பொருளாதாரங்களுக்கு 0.2 சதவீதமும் பங்களிக்கும் என்பதை பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டது.

ஆசிய-பசிபிக் பிராந்தியம் ஏற்கனவே பல்வேறு இருதரப்பு மற்றும் பன்முக வர்த்தக உடன்படிக்கைகளைக் கொண்டுள்ளது, RCEP ஏற்பாடுகள் இவற்றை முறைப்படுத்த முனையும். அந்த உடன்படிக்கை பரந்தளவில் பண்டங்கள் மற்றும் சேவைகள், முதலீடு, அறிவுசார் சொத்துக்கள் மற்றும் மின்னணு வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும். அது ஐரோப்பிய ஒன்றியம் அல்லது வட அமெரிக்கா போன்று இன்னும் அதிக ஒத்திசைவான வர்த்தக மண்டலம் உருவாக்குவதை நோக்கிய ஒரு படியாக கருதப்படுகிறது என்றாலும், இதிலுள்ள பல பண்டங்கள் ஏற்கனவே இருக்கும் வர்த்தக உடன்படிக்கைகளில் உள்ளடங்கி இருப்பதால் பெரியளவில் வரிவிலக்கு கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் அப்பிராந்தியம் எங்கிலும் தற்போது கணிசமானளவுக்கு வேறுபட்டுள்ள தரமுறைகளைச் சீரமைக்கும்.

சான்றாக ஒரு பண்டம் எங்கே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தற்போதைய உற்பத்தி விதிமுறைகள் பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகளுக்கு இடையே வேறுபடுவதாக கருதப்படுகிறது. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள், வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட துணைபாகங்களைக் கொண்டிருக்கும் பட்சத்தில், ஜப்பான் உடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் அது தகுதி உடையதாக இருக்கும், ஆனால் தென் கொரியாவில் ஏற்புடையதாக இருக்காது. இப்போது RCEP இன் கீழ் ஒரு பொருள் தகுதியுடையதாக இருந்தால், அது அனைத்து 15 உறுப்பு நாடுகளுக்கும் ஒரே மாதிரி பொருந்துவதாக இருக்கும்.

சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று பிரதான வடகிழக்கு ஆசிய பொருளாதாரங்களும் முதன்முறையாக RCEP இல் ஒரே வர்த்தக அணியின் பாகமாக உள்ளன. ஓர் உடன்பாடு எட்டுவதற்கான இம்மூன்று அரசுகளின் முந்தைய முயற்சிகள் தொடர்ந்து பலமுறை தோல்வி அடைந்திருந்தன. ஜப்பானிய அரசு மதிப்பீடுகளின்படி, இந்த புதிய வர்த்தக உடன்படிக்கை அம்மூன்று நாடுகளுக்கு இடையே 91 சதவீத பண்டங்கள் மீதான வரிவிதிப்புகளை நீக்கும். ஜப்பானிலிருந்து தென் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முந்தைய வெறும் 19 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இப்போது சுமார் 92 சதவீத ஜப்பானிய பண்டங்கள் வரிவிலக்குடன் இருக்கும், அத்துடன் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்கள் 8 சதவீதத்திலிருந்து 86 சதவீதமாக இருக்கும்.

அந்த உடன்படிக்கை குறிப்பாக முக்கியமானவை அல்லது நுண்மையானவையாக கருதப்படும் துறைகளில் நாடுகள் அவற்றின் இறக்குமதி வரிவிதிப்பை வைத்திருக்க அனுமதிக்கிறது என்ற உண்மையே அந்த உடன்படிக்கையின் மட்டுப்பட்ட தன்மையை அடிக்கோடிடுகிறது. இதன் விளைவாக, பெரும்பாலும் வேளாண்துறை அந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்படவில்லை, மேலும் சேவைகளில் உள்ளடங்கி இருப்பவையும் மட்டுப்பட்டு உள்ளன.

அடியிலிருக்கும் புவிசார்-அரசியல் பதட்டங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.

ட்ரம்ப் நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டு வரும் வர்த்தகப் போருக்கு இந்த உடன்படிக்கையை ஓர் எதிர்வினை வரவேற்பாக பெய்ஜிங் கருதுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஏனெனில் ட்ரம்ப் நிர்வாகம் மூன்றில் இரண்டு பங்கு சீன நுகர்வு பண்டங்கள் மீது வரிவிதிப்புகளைச் செய்துள்ளது. சீனப் பிரதமர் லீ கெக்கியாங் அந்த உடன்படிக்கையை "பன்முகச்சார்பியம் மற்றும் சுதந்திர வர்த்தகத்தின் வெற்றி" என்று விவரித்தார்.

அரசுக்குச் சொந்தமான ஆக்ரோஷமான Global Times பத்திரிகையின் ஒரு கருத்துரை, “RCEP மேற்கு பசிபிக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும்" என்று தலைப்பிட்டிருந்தது. அது அறிவிக்கையில், “ஆசிய்ய நாடுகள் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே தரப்பெடுக்க விரும்பவில்லை என்ற செய்தியை" இந்த புதிய உடன்படிக்கை "அனுப்புகிறது" என்றும், இது “மேற்கு பசிபிக்கில் சீனாவைச் சுற்றி வளைப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகள் தோல்வி அடைந்திருப்பதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது" என்றும் குறிப்பிட்டது.

இந்த பொருளாதார குழுவாக்கத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய முன்னாள் அமெரிக்க இராணுவக் கூட்டாளிகளின் பிரசன்னம் என்ன உண்மையை அடிக்கோடிடுகிறது என்றால், இவை மூன்று நாடுகளும் பலமாக சீனாவுடனான வர்த்தகத்தைச் சார்ந்துள்ளதுடன், பெய்ஜிங் மற்றும் வாஷிங்டனுக்கு இடையே மிகவும் எச்சரிக்கையாக சமநிலைப்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளன.

வெளிநாட்டு தலையீட்டை எதிர்க்கும் கடுமையான சட்டமசோதாவை நியாயப்படுத்துவதற்காக சீன-விரோத உணர்வை அதிகரித்தளவில் முடுக்கி விட்டதும் மற்றும் ட்ரம்பின் மோதல் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளதுமான ஆஸ்திரேலிய அரசாங்கம், அதற்கு விடையிறுப்பாக சீனாவின் வர்த்தக முறைமைகளை முகங்கொடுத்துள்ளது. அது பெய்ஜிங்குடன் உறைந்து போயிருந்த உறவுகளைச் சுமூகமாக்குவதற்கான ஒரு வழிவகையாக RCEP உடன்படிக்கையை வரவேற்றது.

இந்தியா அதன் உற்பத்தியாளர்களால் சீன பண்டங்களுடன் போட்டியிட முடியாது என்ற கவலைகளை மேற்கோளிட்டு கடந்தாண்டு பேச்சுவார்த்தைகளில் இருந்து பின்வாங்கியது. ஏற்கனவே இந்தியா சீனாவுடன் ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் இணைய இந்தியாவுக்குக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றாலும், இந்தாண்டு எல்லை மோதல்களுக்கு மத்தியில் சீனாவுடனான இந்திய உறவுகள் இன்னும் அதிகமாக மோசமடைந்துள்ளன.

அடுத்த அமெரிக்க நிர்வாகம் ஆசியாவில் சீன பொருளாதார செல்வாக்கு வளர்வதைச் சர்வசாதாரணமாக ஏற்றுக் கொண்டு விடாது. சீனாவைப் பொருளாதாரரீதியிலும் இராஜாங்கரீதியிலும் பலவீனப்படுத்தவும் மற்றும் போருக்குத் தயாரிப்பு செய்யவும் நோக்கம் கொண்ட "ஆசியாவை நோக்கிய முன்னிலை" முனைவைத் தொடங்கிய ஜனாதிபதி ஒபாமாவின் கீழ் பைடென் தான் துணை-ஜனாதிபதியாக இருந்தார். ஜப்பான் போன்ற பிரதான ஆசிய பொருளாதாரங்களை உள்ளடக்கி ஆனால் சீனாவைத் தவிர்த்து ஒரு பிரத்யேக பொருளாதார குழுவாக்கம் உருவாக்குவதன் மூலமாக பெய்ஜிங்கைத் தனிமைப்படுத்தும் ஒரு வழிவகையாக ஒபாமாவால் பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP) முன்நகர்த்தப்பட்டது.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போக்கில், பைடெனும் ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் சீனாவை நோக்கி மிகவும் மென்மையாக இருப்பதாக அவரை தாக்கினர். RCEP உடன்படிக்கை கையெழுத்தானது குறித்து பைடெனிடம் நேற்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கேட்கப்பட்ட போது, அவர் இன்னும் பதவியேற்கவில்லை என்றும் "இப்போதைக்கு ஒரு ஜனாதிபதி தான் இருக்கிறார்" என்பதால் அமெரிக்க வர்த்தகக் கொள்கை குறித்து அவரால் விவாதிக்க முடியாதென பைடென் தெரிவித்தார்.

இருந்த போதினும் சீனாவுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட ஒரு கருத்தாக, பைடென் அறிவிக்கையில், “உலக பொருளாதாரத்தில்… நாம் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளோம்… சீனா மற்றும் ஏனைய நாடுகள் அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதைப் போல முடிவுகளை ஆணையிடுவதற்கு பதிலாக பயணத்தின் விதிகளை நாம் அமைக்கும் விதமாக, இன்னும் 25 சதவீத அல்லது அதற்கு அதிகமான ஏனைய பொருளாதாரங்களுடன் நாம் அணி சேர வேண்டும்,” என்றார்.

பசிபிக் இடையிலான நாடுகளின் கூட்டு பங்காண்மை (TPP) உடன்படிக்கையிலிருந்து ட்ரம்ப் அமெரிக்காவை வெளியேற்றி கொண்ட பின்னர் அது பசிபிக் இடையிலான நாடுகளின் பரந்த வளர்ச்சிக்கான கூட்டு பங்காண்மை உடன்படிக்கை (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) என்று பெயர்மாற்றப்பட்டுள்ள நிலையில், அதில் மீண்டும் இணைய முயல்வாரா என்பதை பைடென் சுட்டிக்காட்டவில்லை. இருப்பினும் ஒபாவின் கீழ் தொடங்கப்பட்டு ட்ரம்பின் கீழ் தீவிரப்படுத்தப்பட்ட சீனாவை நோக்கிய ஆக்ரோஷமான நிலைப்பாட்டை பைடென் நிர்வாகமும் தொடரும் என்பது தெளிவாக உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் வரலாற்று வீழ்ச்சியைத் தடுக்கும் கடும் பிரயத்தன முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், எந்தவொரு சாத்தியமான போட்டியாளருக்கு எதிராகவும், அவற்றில் தலையாயதாக சீனா இருக்கின்ற நிலையில் அதற்கு எதிராக அதன் அந்தஸ்தை மேலுயர்த்திக் கொள்ள, இராணுவம், இராஜாங்கம் மற்றும் பொருளாதாரம் என எல்லா அணுகுமுறைகளையும் பயன்படுத்த அது தயாராகி வருகிறது.

Loading