இலங்கை போகம்பர சிறைச்சாலை கைதியொருவர் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நவம்பர் 18 அன்று அதிகாலை போகம்பர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு கைதி அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு கைதி காயமடைந்தார். பொலிஸ் அல்லது சிறைக் காவலில் அல்லது விளக்கமறியலில் இருக்கும்போது நடத்தப்பட்ட தொடர்ச்சியான படுகொலைகளில் இது சமீபத்தியது ஆகும். அந்த கொலைகளில் பலவற்றில், பொலிஸ் உட்பட அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள், வழக்கமாக கூறிவரும், "தப்பி ஓட முயற்சிக்கும் போது சுடப்பட்டார்" என்பதையே இந்த சம்பவத்திற்கும் காரணமாக மேற்கோள் காட்டினர்.

நவம்பர் 18 தாக்குதலானது, இலங்கையின் சிறைச்சாலை கட்டமைப்பில் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவிவந்த நிலைமையில், தங்களுக்கு வழங்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு தரமற்றதாக இருப்பது குறித்து கைதிகள் மத்தியில் அதிகரித்து வந்த போராட்டங்களுக்கு மத்தியிலேயே நடந்துள்ளது. நவம்பர் 12 அன்று, கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி, விரைவான பி.சி.ஆர். சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தங்களை சுகாதார வசதிகள் உறுதிசெய்யப்பட்ட இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரினர்.

இதுவரை 500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் தீவு முழுவதும் உள்ள சிறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த கைதிகளில் நூற்றுக்கு 1.5 சதவீதம் என்ற கணிசமான எண்ணிக்கையாகும். சிறைகளில் காணப்படும் அதிக நெரிசல் மற்றும் மிக கீழ்மட்டத்திலான சுகாதார வசதிகள் காரணமாக, தாங்கள் நோய்க்கு ஆளாக நேரிடும் என்று கைதிகளுக்கு ஒரு நியாயமான பயம் உள்ளது.

கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கத்தின் தலைவரான சேனக பெரேரா, உலகசோசலிசவலைத்தளத்திடம் பேசும் போது சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் துன்பகராமன நிலைமை தொற்று நோய்க்கு மத்தியில் அதிகரித்துள்ளது எவ்வாறு என்று தெளிவுபடுத்தினார்: "இலங்கை சிறைச்சாலைகளின் நிலைமைகள் எந்தவகையிலும் மனிதர்கள் வாழ்வதற்குப் பொருத்தமானது அல்ல. அதிக நெரிசல் காரணமாக, தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதன் விளைவாக, கைதிகள் தமக்கு நோய் தொற்றும் என்ற அச்சத்தில் மிகவும் குழப்பமடைந்துள்ளனர். உயிரை காப்பாற்றிக்கொள்வதற்கு மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. அதே போல், பல்வேறு நிர்வாக குறைபாடுகள் காரணமாக, வழக்கு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதால், பல ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களும் உள்ளனர். இவை அனைத்தும் கைதிகள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.”

தனது அமைப்பு, மார்ச் மாதத்திலேயே சிறைச்சாலைகளில் நோய் பரவுவதைத் தடுக்க, ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்ததாகவும், ஆனால் அவற்றை புறக்கணித்ததால் இன்று இத்தகைய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது, என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டின் அனைத்து சிறைச்சாலையிலும் அடைக்கக் கூடிய கைதிகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 22 சிறைகளில் 12,000 கைதிகள் மட்டுமே தடுத்து வைக்க இடம் இருந்தாலும், அரசாங்க தரவுகளின்படி, தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 20,000 பேர் பிணை இல்லாமல் விளக்கமறியல் காவலில் உள்ள அதே நேரம், இன்னும் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் சிறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு, குறைந்தபட்ச அபராதத்தை கூட செலுத்த முடியாமையினால் பலர் சிறைகளில் உள்ளனர்.

கைதிகளைப் பார்க்க வெளியாட்கள் அனுமதிக்கப்படாததால், அவர்களுக்கு தமது உறவினர்களிடமிருந்து கிடைக்கும் உணவு கிடைப்பதில்லை. சிறைச்சாலைகளில் இருந்து கிடைக்கும் பற்றாக்குறையான மற்றும் ஆரோக்கியமற்ற உணவில் தங்கியிருப்பதற்கு கைதிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதோடு இந்த உணவுகள் எந்த வகையிலும் நோயை எதிர்க்கும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க பொருத்தமானவை அல்ல.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மிகக் குறைவான நிதியையே ஒதுக்கியுள்ளது. தினசரி அடாயளம் காணப்படும் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை சுமார் 500 ஆக இருந்தாலும், தினசரி பி.சி.ஆர். பரிசோதனைகள் சுமார் 10,000 என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் தினசரி பரிசோதனை விகிதத்தை விட மிகக் குறைவு ஆகும். மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறையுடன் இயங்குவதுடன், அரசாங்கம் மருத்துவமனை வசதிகளை விரிவாக்குவதை கைவிட்டு, வசதிகளற்ற இடைநிலை சிகிச்சை மையங்களை அமைக்கத் தொடங்கியுள்ளது. வயதானவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வைரஸ் தொற்றுவதன் காரணமாக மரணிக்கும் விகிதம் வெளிப்படையாக தெரியுமளவு அதிகரித்து வருகிறது. இது ஒரு பேரழிவுகரமான எதிர்காலத்தின் அறிகுறிகளை காட்டியுள்ளது.

சிறைச்சாலைகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு பதிலாக, அரசாங்கம் அவர்களின் போராட்டங்களை விஷமத்தனமாக நசுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம், இதேபோன்ற போராட்டத்தின் போது, அனுராதபுரம் சிறையில் இருந்த கைதிகள் இதுபோன்ற எதிர்ப்பைக் காட்டிய போது, இரண்டு கைதிகள் சிறைக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கைதிகள் அல்லது விளக்கமறியலில் இருப்பவர்கள் வேண்டுமென்றே கொல்லப்பட்ட பின்னர், பொலிஸ் அல்லது சிறை அதிகாரிகள் முன்வைக்கின்ற காரணங்கள், இட்டுக்கட்டப்பட்டவை என்று பரவலாக மக்களால் ஒப்புக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்படுகின்றமை இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் அதிகரித்து வருவது குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணையமும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஜூன் முதல் இதுபோன்ற எட்டு படுகொலைகள் நடந்திருப்பதாக கூறும் இந்த ஆணைக்குழு, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கோரி, சட்டமா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளது.

வரலாற்றில் இலங்கையில் சிறை கைதிகளின் போராட்டங்கள் கடுமையாக நசுக்கப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. பொலிஸ் மற்றும் இராணுவத்தைப் பயன்படுத்தி பல முறை கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைச்சாலையை கட்டுப்படுத்த ஒரு விசேட பொலிஸ் செயலணியை ஸ்தாபிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அகுனகொலபெலச சிறையில் இருந்த கைதிகள், கடந்த ஜனவரி மாதம் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

2011 இல், அனுராதபுரம் சிறைச்சாலையில், தரமற்ற உணவு வழங்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய கைதிகள் மீது பாதுகாப்பு காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு கைதி கொல்லப்பட்டதுடன் 20 கைதிகள் காயமடைந்தனர். 2012 இல் வெலிகடை சிறைச்சாலையில் பாய்ந்த கலகம் அடக்கும் பொலிசார், பட்டியலின் படி 27 கைதிகளை சுட்டுக் கொன்றமை, அவற்றில் மிகவும் பேர்போன மற்றும் திட்டமிட்ட தாக்குதலாகும்.

சிறைகளில் ஆத்திரமூட்டல்களை உருவாக்கி, அவசியமான கைதிகளை பட்டியலின்படி தேர்ந்தெடுத்து கொலை செய்வது, இலங்கை முதலாளித்துவ அரச இயந்திரம் நீண்ட காலமாக, குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான உள்நாட்டுப் போரின்போது அபிவிருத்தி செய்த மிகவும் அடக்குமுறை உபாயங்களில் ஒன்றாகும். 1983 இல், வெலிக்கடையில் 53 அரசியல் கைதிகளும், 1997 இல் களுத்துறை சிறையில் மூன்று பேரும், 2000 இல் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் 26 பேருமாக தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.

சிறைகளில் காணப்படும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஒடுக்குமுறையானது, அது கட்டியெழுப்பி வரும் சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும். பொலிஸ்-இராணுவ ஒடுக்குமுறையை வலுப்படுத்துவதற்கே இராஜபக்ஷ தொற்றுநோய் எதிர்ப்பு பொறிமுறையை எனப்படுவதை பயன்படுத்தி வருகிறார்.

தொற்றுநோய் ஒழிப்பு பிரிவின் தளபதியாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நியமிக்கப்படட்டமை இதில் ஒரு பிரதான படியாக இருக்கும் அதே வேளை, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸ் சுற்றிவளைப்பு சோதனை வழிமுறைகளே முன்னெடுக்கப்படுகின்றன. தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறிக்கொண்டு அண்மையில் தொடங்கப்பட்ட "ட்ரோன் நடவடிக்கை" என்பது, வெகுஜனங்களுக்கு எதிரான ஒரு பொது உளவுபார்ப்பு பொறிமுறையாகும்.

தொற்றுநோய்க்கு மத்தியில் இத்தகைய ஜனநாயக விரோதக் கொள்கைகளை செயல்படுத்துவது இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாத ஒரு உலகளாவிய நிகழ்வுப் போக்கு ஆகும். தொற்றுநோயின் ஆபத்து உச்சத்தில் இருக்கும் போது, உலகின் ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும், உயிர்களை காப்பாற்ற சுகாதார சேவையை விரிவுபடுத்தாமல், அதற்கு மாறாக வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் காப்பாற்ற விரைந்தன.

இப்போது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், ஒரு கொலைகார "சமூக நோய் எதிர்ப்பு சக்தி" எனப்படும் கொள்கையை பின்பற்றி, அதாவது அனைத்து மக்களையும் தொற்றுக்கு உள்ளாக்கி, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை மட்டும் காப்பாற்றி, மற்றவர்களை மரணிக்க அனுமதிப்பதானது முதலாளித்துவ இலாபத்திற்காக பொதுஜன உயிர்களை பலிகொடுப்பதாகும். இதற்கு எதிராக தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து தலைதூக்கும் எதிர்ப்புக்கு முகம்கொடுக்க, அவர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தை தீவிரமாக நம்பியுள்ளனர்.

Loading