இலங்கையில் புரவி சூறாவளியால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த மொழிபெயர்ப்பின மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

டிசம்பர் 4 அன்று, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 2 அன்று தீவு முழுவதும் பரவிய சூறாவளியால் 12 மாவட்டங்களில் 21,152 குடும்பங்களைச் சேர்ந்த 70,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 மாவட்டங்களில் 59 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு 2,966 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

போரினால் நாசமாக்கப்பட்ட வடக்கு மாவட்டங்கள் மற்றும் கிழக்கில் திருகோணமலை மாவட்டமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாகும். வடக்கு மாகாணத்தில் 20,717 குடும்பங்களைச் சேர்ந்த 68,630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். 57 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு 2,758 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 58 இடங்களில் அமைக்கப்ட்டுள்ள முகாம்களில் 2,899 குடும்பங்களைச் சேர்ந்த 10,604 பேர் தஞ்சமடைந்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரில் மூழ்கியுள்ள யாழ்ப்பாண நகரம்

சூறாவளி சேதத்தை "குறைத்தல்" மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு "நிவாரணம் வழங்கல்" என்ற போர்வையில் இராஜபக்ஷ அரசாங்கம் முப்படைகளையும் பொலிஸையும் மிகுந்த விழிப்புடன் வைத்திருந்தது.

சேதமடைந்த வீடுகளுக்கு "இழப்பீடு" வழங்கப்படும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத் ரணசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டவை அல்ல. ஒன்று வாக்குறுதிகள் குப்பையில் போடப்படும். அல்லது அழிந்து போன வீட்டை புதிதாக கட்டுவதற்கு கொடுக்கப்படும் இழப்பீடு போதுமானதாக இருக்காது. கொரோனா தொற்றுநோய் மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ள நிலையில் இந்த மக்கள் சூறாவளியால் பேரழிவிற்கு ஆளாகியுள்ளனர்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் வார்டுகளில் நீர் உட்புகுந்துள்ளது.

சூறாவளி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் இயற்கை பேரழிவுகளாக இருந்த போதிலும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் முதலாளித்துவ அரசாங்கங்கள் உழைக்கும் மக்களை மோசமாக புறக்கணிப்பதால், இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டசின் கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

காணாமல் போன ஒருவரின் சடலம்

* 2011 ஜனவரியில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்த கனமழை மற்றும் வெள்ளத்தால் நாட்டின் 12 மாவட்டங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். 350,000 பேர் இடம்பெயர்ந்ததுடன் 23 பேர் நிலச்சரிவில் இறந்தனர்.

* 2016 மே மாதம் ஏற்பட்ட ரோனு சூறாவளியால் பல்லாயிரக் கணக்கானோர் வீடற்றவர்களாக ஆனதுடன் 150 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

* 2017 ஜூனில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், 717,522 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 150,000 பெண்கள், 7,600 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சுமார் 180,000 குழந்தைகளும் அடங்குவர். 300 பேர் மரணித்தனர். 2,300 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன், 12,500 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.

இந்த பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானவர்களுக்கு இன்னும் வாழ்வதற்கு ஒரு பொருத்தமான வீடு அல்லது வருமானம் கிடைத்திருக்கவில்லை.

டிசம்பர் 1 அன்று, வடக்கு மற்றும் கிழக்கு இராணுவத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுடன் ஆகியோருடன் ஒருங்கிணைந்து, புரவி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் அறிவித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பலர் தங்களுக்கு அத்தகைய நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை என்று உலக சோசலிச வலைத்தளத்திடம் கூறினார்கள்.

காரை நகரில் உள்ள தனது சிறிய வீட்டின் முன் பிரபாகரன்.

யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்துறையைச் சேர்ந்த 36 வயதான குடும்பஸ்தர் சபேசன் இவ்வாறு கூறினார்: “எனது சிறிய வீட்டின் கூரை புயலினால் தூக்கி வீசப்பட்டுவிட்டது.. நாங்கள் இனி இந்த வீட்டில் வாழ முடியாது. எங்கள் குடும்பம் இப்போது தனித்தனியாக வாழவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. நான், என் மனைவியையும் குழந்தைகளையும் அவளுடைய தாயின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, என் வீட்டிலேயே தங்கியிருக்கிறேன். கொரோனா தொற்றுநோயால் எனது வருமானத்தை இழந்தேன். எங்கள் குடும்பம் போரினாலும் பாதிக்கப்பட்டது. ஒரு அரசாங்கமும் உதவவில்லை. அந்த நேரத்தில் நான் கிராம அலுவலரிடம் ஒரு தற்காலிக வீட்டைக் கேட்டேன், அதை அவர் மறுத்துவிட்டார். பின்னர் இந்த வீட்டைக் கட்ட என் உறவினர்களிடமிருந்து கடன் வாங்கினேன். இதற்கு ரூபா 250,000 செலவாகியது. இப்போது ஒரு புதிய வீட்டைக் கட்ட என்னால் முடியாது,” என்றார்.

அவர், இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் குறித்து கோபமாகவும் அதிருப்தியுடனும் பேசினார். கொரோனா தொற்றுநோய் மற்றும் சூறாவளியால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அரசாங்கம் உதவி எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறினார். "இந்த பேரழிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களைக் கூட நாங்கள் காணவில்லை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்களோ, தாங்கள்தான் ஊர்கவாவற்துறை பகுதியில் பெரியவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் இவர்கள் யாரும் எங்களுக்கு உதவுவது இல்லை. தேர்தல் காலத்தில் மட்டுமே அவர்களை காண முடியும். அதன் பின்னர் அவர்கள் வருவதில்லை. ஏழைக் குடும்பங்களும், விதவைகளும் குடிசைகளில் வசிக்கிறார்கள், அவர்களுக்கு உதவிக்கு யாரும் வருவதில்லை,” என்றார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேலனை பகுதியில் ஆம்பிகை நகரில் வசிக்கும் ரூபன் இவ்வாறு கூறினார்: "இந்த கிராமத்தில் 40 குடும்பங்கள் வெளியேறி ஒரு கோவிலில் தங்கவைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இன்னும் அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு எங்கள் மீனவர் சங்கமே உணவளித்தது. நாங்கள் மீனவர்கள், புயல் காரணமாக ஒரு வாரம் கடலுக்கு செல்லவில்லை. எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை, இப்போது நாங்கள் ஒவ்வொரு நாளும் உறவினர்களிடமிருந்தும் கடைகளில் இருந்தும் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம்."

பொம்மைவெளி மற்றும் காக்கைதீவு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள கிராம அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு அரசாங்க பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டனர். புயலால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து, அரசாங்க கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக் மட்டும், சமைத்த உணவை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது. ஏனையவர்களுக்கு உணவு வழங்குவதாக கூறவில்லை. சமைத்த உணவு கொடுக்க அரசாங்கத்திடம் நிதி வழங்கப்பட வேண்டும். அதுவரை நாங்கள் எங்காவது பணம் தேடி மக்களுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும். அரசாங்கம் காசு கொடுத்த பின்னரே அந்த கடனை செலுத்த முடியும்,” என அவர் கூறினார்.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், இடம்பெயர்ந்த மக்களை பெருமளவில் இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு அனுப்புவது மிகவும் ஆபத்தானது என்றும், வைரஸ் தங்களுக்கும் தொற்றும் வாய்ப்புள்ளது என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டுகால இனவாத போரில், வடக்கு மற்றும் கிழக்கில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, யுத்தம் முடிவடைந்த 2009 மே மாதத்தில் மட்டும் சுமார் 40,000 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இன்னும் இராணுவ ஆட்சியின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோரின் நிலம் மற்றும் வீட்டுவசதி உட்பட அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. வளர்ந்து வரும் மக்கள் கோபத்திற்கு மத்தியில், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறையைத் தூண்டுவதை இராஜபக்ஷ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.

Loading