முன்னோக்கு

முதலாளித்துவத்தின் மரண குளிர்காலம்

நூறாயிரக் கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை அவசியம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் முன்பில்லாத அளவில் ஒரு துயரம் கட்டவிழ்ந்து வருகிறது. நேற்று 2,918 பேர் உள்ளடங்கலாக, கடந்த வாரத்தில் மட்டும் 13,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர், இது இந்த தொற்றுநோய் தொடங்கியதற்குப் பிந்தைய நாளாந்த மரண எண்ணிக்கையில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். நேற்று மற்றொரு அதிக எண்ணிக்கையாக, 218,000 க்கும் அதிகமானவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டிருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்தது.

அமெரிக்காவில் அதிர்ச்சியூட்டும் அளவில் 283,000 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய விகிதத்தின்படி பார்த்தால், இம்மாத இறுதிக்குள் 400,000 பேர் உயிரிழப்பார்கள், ஜனவரி மாத இறுதிக்குள் 450,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள். மதிப்பிடப்படும் உயிரிழப்புகளில் அதிகரிப்பைக் கணக்கில் எடுக்காவிட்டாலும் கூட, பெப்ரவரி மாத மத்தியில் அரை மில்லியன் உயிரிழப்புகளின் வரம்பு எட்டிவிடும். நோய் கட்டுப்பாடு மையங்களின் இயக்குனர் ரோபர்ட் ரெட்ஃபீல்ட் இவ்வாரம் கூறுகையில் வரவிருக்கும் மாதங்கள் "இந்த தேசத்தின் பொது சுகாதார வரலாற்றில் மிகவும் கஷ்ட காலமாக இருக்கப் போகிறது,” என்றார்.

ஓர் அசாதாரண அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஜோ பைடென் புதன்கிழமை கூறுகையில், “இங்கே நான் யாரையும் பயமுறுத்த விரும்பவில்லை, ஆனால் உண்மைகளைப் புரிந்துகொள்ளுங்கள் — இப்போதைக்கும் ஜனவரிக்கும் இடையே நாம் இன்னும் 250,000 பேரை இழக்கக்கூடும்,” என்றார்.

இந்த உயிரிழப்புகள் தவிர்க்கவியலாதவை, இதுவொரு பிரபஞ்ச நிகழ்வாக இருப்பதால் சர்வசாதாரணமாக இதை தடுத்துவிட முடியாது என்பது போன்ற உள்நோக்கத்துடன் பைடென் அறிக்கை அளித்தார். ஒரு கால் மில்லியன் மக்களின் மரணங்களைத் தடுக்க அவர் எந்த அவசர நடவடிக்கைகளும் முன்மொழியவில்லை. அதற்கு பதிலாக அவர், “நாம் இனியும் அடைப்பு செய்ய வேண்டியதில்லை,” என்ற பிரகடனத்துடன் அவர் கருத்தைத் தொடர்ந்தார். இந்த கருத்துக்கள், “நான் பொருளாதாரத்தை அடைக்கப் போவதில்லை, என்றைக்கும்” என்று அவர் கடந்த மாதம் கூறிய அவரது அறிக்கையையே எதிரொலித்தது.

கூலி இழப்புகளுக்கு முழு இழப்பீடு அளித்து, அத்தியாவசியமல்லாத உற்பத்தியை நிறுத்துவதன் மூலமாகவும் அமெரிக்காவில் பள்ளிகளை மூடுவதன் மூலமாகவும் இந்த பாரிய பெரும்பான்மை உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த ஜனாதிபதிக்கு முழுமையாக தெரியும். பைடெனின் கோவிட்-19 பணிக்குழுவின் மிக முக்கிய உறுப்பினர் டாக்டர். மிக்கெல் ஓஸ்டெர்ஹோல்ம் கடந்த மாதம் தேசியளவிலான அவசர அடைப்புக்கு அழைப்புவிடுத்தார், இந்த நிலைப்பாடு பைடெனின் இடைக்கால பதவி மாற்றக் குழுவால் உடனடியாக மறுக்கப்பட்டது.

அண்மித்து ஓராண்டாக தொற்றுநோய் இருந்தும், பொது சுகாதார நடவடிக்கைகளின் விளைவு விவாதத்திலேயே இல்லை. வணிகங்கள் மற்றும் பள்ளிகளை மூடிய ஒவ்வொரு நாட்டிலும் நோய்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் குறைந்திருந்தன. கட்டுப்பாடுகளைத் தளர்த்திய ஒவ்வொரு நாட்டிலும் இது அதிகரித்திருந்தது. இப்போதும் கூட, அத்தியாவசியமல்லாத உற்பத்தி மற்றும் பள்ளிகளை தேசியளவில் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டால், சந்தேகத்திற்கிடமின்றி அது நூறாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றும்.

இருப்பினும் ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அவசியமான மிக அடிப்படையான நடவடிக்கைகளை எடுக்கவும் கூட மறுக்கிறது. வணிகங்கள் மற்றும் பள்ளிகளை மூடுவதற்குப் பதிலாக, மிச்சமீதி கட்டுப்பாடுகளையும் நீக்கி வருவதுடன், நியூ யோர்க் நகரில் செய்ததைப் போல, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களுக்கு நிதி உதவிகள் வழங்குவதற்குப் பதிலாக, காங்கிரஸ் சபை வேலைவாய்ப்பற்றோருக்கான மிக அடிப்படை உதவியைக் கூட வழங்க மறுக்கிறது.

இந்த வைரஸ் பரவல் மீதான எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான கோரிக்கையை மையத்தில் கொண்டுள்ள அவரின் பாசிசவாத சூழ்ச்சிகளை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதியாக ட்ரம்ப் அவரால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வதற்கு பதவியைப் பயன்படுத்தி வருகிறார். தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து வெள்ளை மாளிகையின் அந்த குண்டர் குறிப்பிடவும் கூட இல்லை. வரவிருக்கும் ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சியின் நடைமுறை தலைவருமான பைடெனிடம் அடிப்படையில் வித்தியாசமாக முன்மொழிவதற்கு எதுவும் இல்லை.

இந்த தொற்றுநோய் தொடங்கியதில் இருந்தே, அரசாங்க கொள்கைகள் அனைத்துமே பெருநிறுவனங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் செல்வந்தர்களது இலாப நலன்களுக்கு அணிபணியச் செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் சமூக அவலங்களில் இருந்து பணக்காரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கையில் ஒவ்வொரு நாளும் சந்தைகள் புதிய உயரங்களுக்கு அதிகரித்து வருவதுடன் சேர்ந்து, ட்ரில்லியன் கணக்கான தொகை வோல் ஸ்ட்ரீட்டுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.

2,977 பேர் கொல்லப்பட்ட செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்கள் சுமார் 6 ட்ரில்லியன் செலவில் போர்களைத் தொடங்கவும், ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான தாக்குதல்களைத் திணிக்கவும், இவை அனைத்தும் தேசிய அவசரகாலநிலை என்பதன் அடிப்படையில் செய்ய, பயன்படுத்தப்பட்டன. இப்போதோ ஒவ்வொரு நாளும் 9/11 சம்பவத்திற்கு இணையான ஒன்று நடந்து வருகிறது, இந்தளவுக்கு பாரியளவிலான மரணம் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தால் நடைமுறையளவில் தவிர்க்கவியலாததாக கையாளப்படுகிறது. பெருமந்த நிலைமைக்குப் பிந்தைய இந்த மிகப்பெரிய சமூக நெருக்கடிக்கு மத்தியில், பாரிய வறுமையைக் குறைக்க எதுவும் செய்யக்கூடியதாக இல்லை என்று கூறப்படுகிறது.

அவசரகால நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்! தடுப்பூசிகள் கொண்டு வருவது வேகமாக நடந்து வருகின்றன என்றாலும், ஆளும் வர்க்கம் இந்த தொற்றுநோய்க்கு எந்த விதத்தில் விடையிறுத்துள்ளதோ அதை விட வேறுவிதத்தில் அதை சிறப்பாக கையாளும் என்று நம்புவதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை. சிறந்த சூழ்நிலைகளிலும் கூட, ஒரு தடுப்பூசி பரவலாக கிடைப்பதற்கு முன்னதாக இப்போதைய விகிதத்தில் நூறாயிரக் கணக்கானவர்கள் உயிரிழக்க நேரிடும்.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினாலும் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஆளும் வர்க்கம் அவசியமான நடவடிக்கைகள் எடுக்க மறுக்கிறது. ஆகவே தான் இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான இயக்கம் —அண்டைப்பகுதிகளிலும், ஆலைகள் மற்றும் வேலையிடங்களிலும்— தொழிலாள வர்க்கத்தால் தொடங்கப்பட வேண்டும். விசயங்களைத் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த கரங்களில் எடுக்க வேண்டியது அவசியம்.

சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

அத்தியாவசியமல்லாத வேலையிடங்களில் எல்லா உற்பத்தியையும் மற்றும் பள்ளிகளையும் உடனடியாக மூட வேண்டும். பொது சுகாதார வல்லுனர்கள் சரியாக எச்சரித்துள்ளவாறு, இந்த தொற்றுநோயின் போது பயணம் மேற்கொள்வது பாரிய அபாயங்களை முன்நிறுத்துகிறது, அமெரிக்காவின் விமான நிலையங்களைப் போலவே அதன் ஆலைகளும் பள்ளிகளும் அதேயளவுக்கு அபாயகரமாக உள்ளன என்பதே உண்மை. இருப்பினும் வேலையிடங்கள் மற்றும் பள்ளிகளில் இந்நோய்தொற்று வெடிப்பு குறித்து திட்டமிட்டு மூடிமறைக்கப்படுகின்றன மற்றும் அலட்சியப்படுத்தப்படுகின்றன.

வேலைக்குத் திரும்புவது சாத்தியமாகும் வரையில் ஒரு கண்ணியமான வாழ்க்கை தரத்திற்கு உத்தரவாதம் அளிக்க போதுமான தொகை, எல்லா குடும்பங்களுக்கும் மாதாந்திர வருமானமாக வழங்கப்பட வேண்டும். சிறு வணிகங்கள் அவற்றின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் வரையில் அதன் பணியாளர்களுக்கான கூலிகள் மற்றும் சம்பளங்களைச் சமாளிக்கவும் மற்றும் நிறுவனங்களின் பொருளாதார தாங்கும்திறனைச் சமாளிக்கவும் போதுமான ஒரு தொகை அவற்றுக்கு நிவாரண நிதியாக வழங்கப்பட வேண்டும்.

தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் இலவச வினியோகத்தைத் துரிதப்படுத்தவும், பரிசோதனை மற்றும் நோய்தொற்றின் தடம் அறிவது உட்பட பொது சுகாதார உள்கட்டமைப்பை விரிவாக்கவும் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற அவசரகால நடவடிக்கைகளுக்குப் பணம் இல்லை என்ற வாதம் ஒரு பொய்யாகும். கொள்கை ஆய்வுகளுக்கான பயிலகத்தின் ஒரு சமீபத்திய ஆய்வின்படி, வெறும் 10 பில்லியனர்களின் ஒரு குழு இந்த தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் செல்வவளத்தில் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த செல்வந்த தன்னலக்குழுக்களின் செல்வவளம், ஆலைகளிலும் பண்டகச் சாலைகளிலும் ஒவ்வொரு நாளும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்படுகிறது.

இருகட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட CARES சட்டத்தின் பாகமாக வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட எல்லா நிதியும் மீண்டும் திரும்பப் பெறப்பட வேண்டும், அவசர சமூக தேவையைப் பூர்த்தி செய்ய செல்வந்தர்கள் மீது பாரியளவில் வரி விதிக்கப்பட வேண்டும். எல்லா மிகப்பெரிய நிதியியல் மற்றும் பெருநிறுவன அமைப்புகளும் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் பொது நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும், அவற்றின் செயல்பாடுகள் இந்த தொற்றுநோயைத் தடுப்பதை நோக்கி திருப்பி விடப்பட வேண்டும்.

ஆலைகள் எங்கிலும் கோவிட்-19 பரவி வரும் நிலையில், வேலைநிறுத்தங்கள் மற்றும் வெளிநடப்புகளை இப்போதே தொடங்குவதற்கான தயாரிப்புகள் உடனடியாக அவசியமாகும். அத்தியாவசியமல்லாத உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்ற, வெளிநடப்புகள் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகள் உள்ளடங்கலாக அவசியமான நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க, பெருநிறுவன கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான தொழிலாளர்களின் சாமானிய குழுக்களை உருவாக்குவதற்கான போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்துள்ளது. இத்தகைய குழுக்கள் ஒவ்வொரு வேலையிடத்திலும் ஆலையிலும் விரிவாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.

அமெரிக்காவில் தொழிலாளர்களினது தாக்குதல் இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும். அமெரிக்காவில் ஆளும் வர்க்கத்தின் குற்றகரமான கொள்கை ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்டு வருகின்ற மிக அதிதீவிர கொள்கையின் ஒரு வெளிப்பாடாகும். இந்த தொற்றுநோய் ஓர் உலகளாவிய நெருக்கடியாகும், இதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஓர் உலகளாவிய விடையிறுப்பு அவசியப்படுகிறது.

நூறாயிரக் கணக்கான மக்களின் நலன்கள் மற்றும் உயிர்களை, இப்போதிருக்கும் அரசியல் கட்சிகள் மூலமாகவோ முதலாளித்துவ வர்க்கத்தின் அமைப்புரீதியிலான கட்டமைப்புகள் மூலமாகவோ பாதுகாக்க முடியாது. இதற்கு, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணித்திரட்டுவது அவசியமாகிறது.

முதலாளித்துவ ஒழுங்கமைப்பு, முதலாளித்துவ வர்க்கத்தைச் செழிப்பாக்குவதற்காக இன்னும் கால் மில்லியன் உயிர்களை தியாகம் செய்ய கோரியவாறு, சமூகத்துடன் தன்னை போரில் நிறுத்தி உள்ளது. இந்த தியாகத்தை ஏற்க முடியாது, முதலாளித்துவம் தான் மறைந்துபோகச் செய்யப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக, அது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வ வளத்தைப் பறிமுதல் செய்து, ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டமைக்க, சோசலிச சமத்துவக் கட்சி இந்த தொற்றுநோயைத் தடுக்கவும் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்குமான போராட்டத்திற்குத் தலைமை கொடுத்து வருகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்குமாறு நாங்கள் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

Loading