முன்னோக்கு

தொற்றுநோயும், உயிரிழப்புகளை வழமையாக்குவதும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா அந்நாட்டின் வரலாற்றிலேயே பெருந்திரளான மரணங்களின் மிகக் கடுமையான காலகட்டங்களில் ஒன்றின் மத்தியில் உள்ளது. வெறும் ஒரே வாரத்தில் கொரோனா வைரஸால் 16,000 க்கும் அதிகமானவர்கள், அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 2,300 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒப்பீடு மூலமாக கூறுவதானால், 1918 “ஸ்பானிய சளிக்காய்ச்சல்" தொற்றுநோயின் போது, அமெரிக்காவில் இரண்டே ஆண்டுகளில் சுமார் 675,000 பேர் உயிரிழந்தனர், இது சராசரியாக நாளொன்றுக்கு 1,000 நபர்களுக்கும் குறைவாகும். 1995 இல், கொடுமையான எய்ட்ஸ் ஆட்கொல்லி உச்சத்தில் இருந்த நேரம், ஒரேயாண்டில் 41,000 பேர் உயிரிழந்தனர், இது நாளொன்றுக்குத் தோராயமாக 112 பேர் அல்லது தற்போதைய மரண விகிதத்தில் 20 இல் 1 பங்குக்கு நிகராகும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களுடன் கூடிய சவப்பெட்டிகள் ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள கொல்செரோலா சவக்கிடங்கில் அடக்கம் அல்லது தகனம் செய்யக் காத்திருக்கின்றன. (பட கடன்: AP / Creator: Emilio Morenatti)

அடுத்த ஒருசில நாட்களுக்குள், கொரோனா வைரஸால் ஏற்படக்கூடிய மொத்த மரண எண்ணிக்கை 300,000 ஐ கடந்து விடும் அல்லது ஒட்டுமொத்த நாட்டிலும் ஒவ்வொரு 1,000 பேருக்கு அண்மித்து ஒருவர் உயிரிழந்திருப்பார். அமெரிக்காவில் இதய நோய் மற்றும் புற்றுநோயை விஞ்சி இப்போது கொரோனா வைரஸ் தான் மரணத்திற்கான முக்கிய காரணமாக உள்ளது.

ஒரு நாள் மாற்றி ஒரு நாள் இந்தளவிலான மரணங்கள் நடந்து வருகின்ற இத்தகைய நிலைமைகளின் கீழ், ஒரு மாதம் மாற்றி ஒரு மாதம் உத்தியோகபூர்வ விடையிறுப்போ கட்டவிழ்ந்து வரும் இந்த பேரழிவைக் குறைப்பதற்காக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் மரணங்கள் "வழமை" ஆக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில், ஒவ்வொரு நாளும் மரண எண்ணிக்கை அறிவிக்கப்படுகிறது. அங்கே, நேரத்திற்கு நேரம், குறிப்பாக, பெற்றோர்கள் இருவருமே இறந்துவிடும் சம்பவம் அல்லது குடும்பமே அழிந்துவிடும் சம்பவம் போன்ற சில தாங்கொணா துயர சம்பவமும் கூட குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இந்த விசயங்கள் உதறிவிடப்பட்டு, செய்தி அறிவிப்புகள் அடுத்த விசயத்திற்கு நகர்ந்து விடுகின்றன. கடுமை குறையாத இந்த பேரழிவுக்குப் பாரியளவில் உடனடியான விடையிறுப்பு அவசியப்படுகிறது என்பதே அங்கே ஒப்புக் கொள்ளப்படவில்லை. யார் இறக்கிறார்கள், எங்கே, என்ன நிலைமைகளின் கீழ் இறக்கிறார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்தவும் கூட அங்கே எந்த முயற்சியும் இல்லை.

வெள்ளை மாளிகையில் பாசிசவாத சர்வாதிகாரியாக இருக்கக்கூடிய ட்ரம்ப் இந்த மரணங்களை எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல்—இந்தாண்டு ஆரம்பத்தில் அவர் குறிப்பிட்டதைப் போல, "நடைமுறையளவில் யாரும்" பாதிக்கப்படவில்லை என்பதைப் போல கையாள்கிறார். ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த கொள்கையும் நோய் பரவல் மற்றும் மரணங்களைத் தடுக்க எந்தவொரு ஒருங்கிணைந்த விடையிறுப்பையும் தடுப்பதையே அடிப்படையாக கொண்டுள்ளது.

ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜோ பைடெனைப் பொறுத்த வரையில், “இப்போதைக்கும் ஜனவரிக்கும் இடையே நாம் இன்னும் 250,000 பேரை இழக்க நேரிடலாம்,” என்றவர் கடந்த வாரம் சர்வசாதாரணமாக அவதானித்தார். அவர், இந்த பாரிய மரண எண்ணிக்கையை ஏதோ தவிர்க்கவியலாத பிரபஞ்ச நிகழ்வாக சித்தரித்தார். இந்த முன்கணிப்பு நிஜமாவதைத் தடுக்க அங்கே எந்த அவசர நடவடிக்கையும் கோரப்படவில்லை. நேற்று, பைடென் அவரின் கொரோனா வைரஸ் கொள்கையை விவரித்தார், அது பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது மையமிட்டிருந்தது, இதை ஆளும் வர்க்கம் தொழிலாளர்களை வேலைகளில் நிறுத்துவதற்கு அத்தியாவசியமானதாக பார்க்கிறது.

“மனித வாழ்வை" விட "பொருளாதார ஆரோக்கியத்திற்கு" முன்னுரிமை கொடுத்து, அவ்விரண்டையும் ஒப்பிடத்தக்க இயல்நிகழ்வாக கையாள்வதென்ற இந்த முடிவு, வர்க்க நலன்களில் வேரூன்றிய இந்த முடிவில் இருந்து தான், உயிரிழப்புகளை வழமையாக்குவது எழுகிறது. அரசியல் ஸ்தாபகம், செல்வந்த தட்டுக்கள் மற்றும் ஊடகங்களால் இந்த ஒப்பிடுதலும் முன்னுரிமைப்படுத்தலும் நியாயமானதென ஏற்றுக் கொள்ளப்பட்டதும், பாரிய மரணங்கள் தவிர்க்கவியலாதவையாக பார்க்கப்படுகிறது.

இந்த மோசமான கணக்கீட்டில் இருந்து தான், “குணப்படுத்தல் என்பது நோயை விட மோசமானதாக இருந்துவிடக் கூடாது,” என்ற கோஷம் எழுகிறது.

முதலாளித்துவத்தின் கீழ், தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டல் தான், “பொருளாதாரம்" என்று அர்த்தப்படுத்தப்படுகிறது. உயிர்களைப் பாதுகாப்பதற்கு மிகவும் அடிப்படை நடவடிக்கையான "குணப்படுத்தல்" என்பதைப் பொறுத்த வரையில், இலாபத் திரட்சி நிகழ்முறை மீது மோதுவதால், அது ஏற்றுக் கொள்ள முடியாததாக ஆகிவிடுகிறது. தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரி மதிப்பை உறிஞ்சுவதைப் பலவீனப்படுத்துகின்ற, அல்லது இந்த உபரி மதிப்பை முதலாளித்துவவாதிகளிடம் இருந்து அவசர நடவடிக்கைகளுக்கும் மற்றும் சமூக சேவைகளுக்கும் திருப்பி விடும் எதுவொன்றும் நிராகரிக்கப்பட வேண்டும் என்றாகிவிடுகிறது.

ஆகவே இதிலிருந்து தொழிலாளர்கள் உயிரிழக்கட்டும் என்ற தீர்மானம் எட்டப்படுகிறது. முதலாளித்துவத்தின் "கண்மூடித்தனமான தங்குதடையற்ற உத்வேகம், உபரி-உழைப்புக்கான அதன் வெறித்தனமான தாகம்" குறித்து மார்க்ஸ் குறிப்பிடும் போது, அங்கே வெறுமனே இலக்கிய வரிகள் இல்லை. அவை சமூக யதார்த்தத்தின் கொடூரத்தை வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்காவிற்குள்ளும் உலகெங்கிலும் இந்த தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பானது, அதற்கு முந்தைய நிலைமைகளில் இருந்து எழுகிறது. (தாட்சரின் வார்த்தைகளில்) “சமூகம் என்ற ஒன்று கிடையாது,” என்று பிரகடனப்படுத்தி, ரோனால்ட் ரீகன் மற்றும் மார்கரெட் தாட்சர் பதவியேற்று அண்மித்து நான்கு தசாப்தங்கள் ஆகிவிட்டன. தாட்சர் மற்றும் ரீகன் முடுக்கிவிட்ட வலதுசாரி தாராளவாத "சுதந்திர சந்தை" சித்தாந்தம், பில் கிளிண்டன் போன்ற ஜனநாயகக் கட்சியினர் மற்றும் டோனி பிளேயர் போன்ற தொழிற் கட்சியினர் தழுவிய, அரசியல் ஸ்தாபகத்தின் ஒவ்வொரு பாகத்தினது மூலசரக்காக ஆனது. அவர்களின் பிற்போக்குத்தனமான "சுதந்திர சந்தை" முட்டாள்தனங்கள் ஒவ்வொரு நாட்டினது முதலாளித்துவ கொள்கைகளின் அடித்தளமாக உள்ளன.

தசாப்தங்களாக, ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒன்றுபோல சமூக செலவின மற்றும் சுகாதார திட்டங்களை வெட்டியதுடன், முன்பினும் அதிகளவில் மிகப்பெரிய தொகைகளை நிதியியல் சந்தைகளுக்குள் பாய்ச்சின. இந்த நிகழ்முறையில், பெருநிறுவனங்களுக்கு மனித உயிர்கள் மீது உரிமை உண்டு என்று மட்டும் பிரகடனம் செய்யப்படவில்லை, பெருநிறுவனங்கள்—நிதியியல் செல்வந்த தட்டுக்கள்—நலன்கள் மனித உயிர்களுக்கும் மேலாக தூக்கி நிறுத்தப்பட்டன.

மனித வாழ்க்கை வார்த்தையளவில் மட்டுமே பொருளாதார முக்கியத்துவம் கொண்டுள்ள இந்த நிதியியல்மயப்படுத்தப்பட்ட உலகில், உபரி மதிப்பை உருவாக்குவதில் ஈடுபடாதவர்கள் —இவர்களைக் கவனித்துக் கொள்வதற்கான செலவு உழைப்பு சக்தியைச் செலவிடுவதில் இருந்து உருவாக்கப்படும் பெரும் உபரி மதிப்பிலிருந்து கழிவதால்— "மதிப்பற்றவர்களாக" ஆகிவிடுகிறார்கள். எங்கெல்லாம் இலாப-நஷ்ட கணக்கு கணக்கிடப்படுகிறதோ, அங்கே எப்போதுமே மால்தஸின் (Malthus) பூதமும் இருக்கிறது.

இந்த அடிப்படை வர்க்க தர்க்கத்தில் இருந்து தான் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள பின்வரும் இந்த கொள்கை பெருக்கெடுக்கிறது: அதுவாவது, இந்த வைரஸ் அச்சுறுத்தலை குறைத்துக் காட்டுவது, செல்வந்தர்களைப் பாரியளவில் பிணையெடுப்பது, ஆலைகளை மீண்டும் திறப்பதற்கான மற்றும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான பிரச்சாரம் ஆகியவை. இந்த கொள்கையின் அனுமானிக்கத்தக்க விளைவுகள் இப்போது கட்டவிழ்ந்து வருகின்றன.

ஆளும் உயரடுக்கின் அலட்சியத்தைச் சுற்றி அங்கே வேறு சில காரணிகளும் உள்ளன. கொரொனா வைரஸ் தொற்றுநோயானது பிரதானமாக வயதானவர்களையும் தொழிலாள வர்க்கத்தையும் தாக்கும் ஒரு நோயாகும். பகிர்ந்து கொள்ளத்தக்க பல தலைமுறையினர் வாழும் குடும்பங்களில், பெரும்பாலும் சமூக இடைவெளிக்கான சாத்தியக்கூறு இல்லாதவர்கள் வாழும் தொழிலாள வர்க்கத்தைப் பொருத்தமற்ற விகிதாச்சாரத்தில் பாதித்து, ஆலைகளிலும் ஆட்கள் ஒன்றுகூடும் இடங்களிலும் தான் கோவிட்-19 வேகமாக பரவுகிறது.

அமெரிக்காவில் உயிரிழந்தவர்களில் 80 சதவீதத்தினர் ஓய்வு பெறும் வயதான 66 வயதுக்கும் குறைந்தவர்கள். அந்நாட்டின் கோவிட்-19 நோயாளிகளில் வெறும் ஐந்து சதவீதத்தினருக்கு மருத்துவமனைகளில் இந்நோய் ஏற்பட்டுள்ளது என்றாலும், 40 சதவீத உயிரிழப்புகளை, அல்லது 100,000 க்கும் அதிகமானவர்களின் உயிரிழப்புகளை இந்த இடங்களே கணக்கில் கொண்டுள்ளன.

ஆனால் ஆளும் வர்க்கத்திற்குள்ளும், மற்றும் வெள்ளை மாளிகைக்குள்ளேயே கூட, இந்த வைரஸ் பரவிய போதும் விடையிறுப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை.

இந்த தொற்றுநோயை நிறுத்துவதும் உயிர்களைக் காப்பாற்றுவதும், இந்த பேரழிவை உருவாக்கி உள்ள இந்த சமூக ஒழுங்கமைப்பிலிருந்து விடுபடுவதில் இருந்து பிரிக்கவியலாததாகும். தடுத்திருக்கக்கூடிய காரணமற்ற இந்த நூறாயிரக் கணக்கான உயிர்களின் தியாகம், முதலாளித்துவ அமைப்புமுறையின் பிற்போக்குத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற தன்மைக்கும், அதை சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கான அவசியத்திற்கும் மிகப்பெரிய சாட்சியமாக உள்ளது.

Loading