COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோயால் ஐரோப்பாவில் 500,000 மக்கள் இறந்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

இன்று, ஐரோப்பா கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் மற்றொரு இருண்ட நிலையை எட்டியுள்ளது. ரஷ்யாவையும் அதன் ஐரோப்பிய மொத்தத் தொகையில் உள்ளடக்கியதாக ஐரோப்பா முழுவதும் அரை மில்லியன் மக்கள் வைரஸால் இறந்துள்ளனர் என வேர்ல்டோமீட்டர்கள் புள்ளிவிபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

COVID-19 வைரஸ் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை பெரும்பாலும் மிக அதிகமாக இருக்கலாம். அக்டோபர் 14 ஆம் திகதி Nature என்ற விஞ்ஞான இதழில் 21 நாடுகளில் அதிகப்படியான இறப்புகளை ஆராய்ந்தபோது, ஜனவரி-ஜூன் மாதங்களில் வரலாற்று விதிமுறைகளுக்கு மேலான இறப்புகளின் எண்ணிக்கை COVID-19 வைரஸிக்கு உத்தியோகபூர்வமாக கூறப்பட்ட இறப்புகளை விட 20 சதவீதம் அதிகம் என கண்டறியப்பட்டது. ஐரோப்பா முழுவதிலும் இது உண்மையாக இருந்தால், உண்மையில் பெருந்தொற்று நோயால் மேலும் 100,000 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

300,000 இறப்புகளின் அளவுக் குறியை நவம்பர் 10 ஆம் தேதி தாண்டியது, நவம்பர் இறுதியில் 400,000 அளவுக் குறியை அடைந்தது. அடுத்த 100,000 மரணங்கள் மூன்று வாரங்களில் நிகழ்ந்தன. முன்னைய இருண்ட நிகழ்வுகளைப் போலவே, இதுவும் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளில் சுருக்கமாகக் குறிப்பிடப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக, அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையை அவசரமாக நிவர்த்தி செய்வதற்கும் விஞ்ஞான ரீதியான பதிலை முன்னெடுப்பதற்கும் எந்தவொரு ஐரோப்பிய அரசாங்கமும் தீவிரமான கொள்கையை முன்வைக்கவில்லை. உற்பத்தி, பெருநிறுவன இலாபங்கள் மற்றும் ஐரோப்பிய நிதிய உயரடுக்கின் செல்வத்தை கட்டுப்படுத்தும் எந்த நடவடிக்கையும் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது.

Dr. Rafik Abdou and respiratory therapist Babu Paramban check on a COVID-19 patient at Providence Holy Cross Medical Center, LA, Nov. 19, 2020 [Credit: AP Photo/Jae C. Hong, File]

ஒவ்வொரு நாளும் 3,000 க்கும் அதிகமான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டனில் நேற்று 37,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் 691 பேர் உயிரிழந்தனர். திங்களன்று பிரான்சில் 350 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் மற்றும் இத்தாலியில் 415 இறப்புக்கள் நிகழ்ந்தன. நேற்று, ஜேர்மனிய சுகாதாரத் துறைகள் 19,528 புதிய நோயாளிகள் மற்றும் 731 இறப்புக்கள் பற்றி ரோபர்ட் கோச் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளது. இது ஜேர்மனியில் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமானதாக உள்ளது, 175,314 தொற்றுக்கள் மற்றும் 4,300 க்கும் அதிகமான இறப்புக்களாக இருக்கின்றன.

வைரஸ் இன்னும் வேகமாக பரவி வருகிறது, உண்மையில் துரிதப்படுத்துகிறது. டிசம்பரில், பிரான்சும் பிரிட்டனும் பகுதியான பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்தன, அவைகள் ஒருபோதும் அத்தியாவசியமற்ற உற்பத்தி அல்லது பள்ளிகளை மூடவில்லை, விடுமுறை நாட்களில் பயணிக்க மக்களை ஊக்குவித்தன. சில்லறை விற்பனையாளர்களின் மிகவும் இலாபகரமான காலம் பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்வதற்காக, பிரிட்டனில், ஜோன்சன் அரசாங்கம் 24 மணி நேரமும் விற்பனை மையங்கள் திறந்திருக்கும் என்று அறிவித்தது.

பிரான்சில், தொற்று விகிதம் R இப்போது 1 ஐ விட அதிகமாக உள்ளது, அதாவது வைரஸ் மீண்டும் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை 10,000 க்கும் குறையவில்லை இருப்பினும் மக்ரோன் அரசாங்கம் டிசம்பர் 15 ஆம் திகதி பொது முடக்க நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தது, இப்போது ஒரு நாளைக்கு 15,000 முதல் 20,000 தொற்றுக்கள் உள்ளன - இது கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அனுமதிக்க அறிவித்த எண்ணிக்கையை விட இரு மடங்காக உள்ளது.

நான்சி பிராந்திய மருத்துவமனையின் மருத்துவ ஆணையத்தின் தலைவரான கிறிஸ்தியான் ரபோ, ஜனவரி 4 ஆம் திகதி தொடங்கி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், மூன்றாவது அலையை எதிர்பார்க்கிறேன் என்றார். "இன்றுடன் ஒப்பிடும்போது அவசர சிகிச்சைப் பிரிவில் மேலும் 500 நோயாளிகள் இருக்கக்கூடும்" என்று அவர் நேற்று Europe1 இடம் கூறினார். பல மருத்துவமனைகள் ஏற்கனவே கொள்ளளவுத் திறனை நெருங்குகின்றன. "இந்த வார இறுதியில், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை எடுத்துச் செல்வதற்கு, COVID க்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையின் சில பகுதிகளை மறுஒழுங்மைக்க வேண்டியிருந்தது," என்றும் அவர் கூறினார்.

பிரிட்டனில், வைரஸ் கட்டுப்பாட்டை மீறி வருகிறது, ஒரு நாளைக்கு 30,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் உள்ளன. தென்கிழக்கு இங்கிலாந்தில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் ஏற்படுத்தியுள்ள 70 சதவிகிதத்திற்கு அதிகமான பெருந்தொற்று நோயான புதிய மரபுவழி திரிபு ஏற்படுவதன் மூலம் அதன் பரவல் துரிதப்படுத்தப்படுகிறது. இத்தாலி, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் அதற்கு அப்பாலும் இந்த மரபுவழி திரிபு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய மரபுவழி திரிபு மதிப்பாய்வின் விஞ்ஞான மதிப்பீடுகள் R விகிதத்தை 0.4 முதல் 0.9 வரை எங்கும் அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிடுகிறது. 10,000 தினசரி தொற்றுக்கள் உள்ள ஒரு பகுதியில், இது ஒவ்வொரு நாளும் 4,000 முதல் 9,000 புதிய தொற்றுக்களைக் குறிக்கும். புதிய மரபுவழி திரிபு மிகவும் ஆபத்தானதா என்பது குறித்து தெரியவில்லை, ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு மருத்துவமனைகளை விரைவாக மூழ்கடித்து அதன் மூலம் இறப்புகளை பெருமளவில் அதிகரிக்கும்.

விஞ்ஞானிகள் ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான தொற்றுக்களை அனுமதிக்கும் உத்தியோகபூர்வ கொள்கையை எதிர்க்கின்றனர். டிசம்பர் 18 திகதியன்று, லான்ஸெட் சஞ்சிகையானது ஐரோப்பாவில் மருத்துவ விஞ்ஞானிகளால் ஒரு அறிக்கையை வெளியிட்டது, "SARS-CoV-2 வைரஸ் தொற்றுக்களை விரைவான மற்றும் நிலையான குறைப்பிற்கு ஒரு அனைத்து-ஐரோப்பிய அர்ப்பணிப்பை கோருகிறது" என்று அதில் கூறியது.

தற்போதைய கொள்கையை கேள்விக்குட்படுத்துகையில், விஞ்ஞானிகள் "குறைந்தளவு தொற்று எண்ணிக்கைகள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன" என்றும் "உயர்ந்தளவு தொற்று எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ளும்போது கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஒரு மோசமான மூலோபாயமாகும், இது மற்றொரு அலைக்கு வழிவகுக்கும்" என்றும் அறிவிக்கிறது. தொற்று எண்ணிக்கைகள் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் மக்களுக்கு 10 க்கும் குறைவான தொற்றுக்கள் கொண்டுவரப்படும் வரை உடனடியாக பொது முடக்க நடவடிக்கைகளை அவர்கள் பரிந்துரைக்கின்றனர். பிரான்சில் தற்போதைய நிலைகளில் ஒரு மில்லியன் மக்களுக்கு சுமார் 30 ஆக இருக்கின்றன.

இந்த அறிக்கையானது ஒரு ஒருங்கிணைந்த, கண்டம் முழுவதும் விடையிறுப்பைக் கோர வேண்டும், ஏனெனில் “ஒரு நாடு மட்டும் COVID-19 தொற்றுக்களின் எண்ணிக்கையை குறைவாக வைத்திருக்க முடியாது; எனவே கூட்டு நடவடிக்கை மற்றும் நாடுகளிடையே பொதுவான குறிக்கோள்கள் அவசியம்” என்று கோருகிறது.

எவ்வாறாயினும், விடுமுறைக்குப் பின்னர் வணிகங்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கங்கள் போட்டியிடுகின்றன. ஜனவரி 4 ஆம் திகதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று மக்ரோன் அரசாங்கம் வலியுறுத்துகிறது. பிரிட்டனிலும் ஜேர்மனியிலும் பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அரசாங்கங்கள் பள்ளிகளை ஒரு குழந்தை பராமரிப்பு சேவை நிலையமாக பயன்படுத்துகின்றன, எனவே பெற்றோர்கள் வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கப்படுவார்கள், மேலும் இது மேலும் பல்லாயிரக்கணக்கான மரணங்களுக்கு வழிவகுக்கும் என்பதை நனவுடன் அறிந்திருக்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் முன்மாதிரியாக, திறம்பட, சுவீடனின் அரசாங்கம் வெளிப்படையாக "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" (“herd immunity”) கொள்கையை பின்பற்றியது, அது பேரழிவிற்கு வழிவகுத்தது. 1918 ஆண்டில் ஸ்பானிஷ் புளூ காய்ச்சலுக்குப் பின்னர் இது சுவீடனில் நடந்த மிக மோசமான நவம்பர் ஆகும். வெறும் 10 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில், இது 8,000 க்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

இதற்கு மாறாக, பின்லாந்து மற்றும் நோர்வே முறையே 511 மற்றும் 405 இறப்புகளைக் கண்டன, இதனால் தனிநபர் அடிப்படையில், சுவீடன் அதன் அண்டை நாடுகளின் இறப்பு விகிதத்தை விட எட்டு மடங்கு அதிகமாகும். அத்தகைய கொள்கையை ஐரோப்பாவின் மட்டத்தில் செயல்படுத்தப்பட்டிருந்தால், முடிவுகள் பேரழிவாகத்தான் இருந்திருக்கும்.

விஞ்ஞானிகள் அனைவரும் 2021 ஆண்டின் ஆரம்பத்தில் வைரஸின் ஒரு புதிய எழுச்சி குறித்து எச்சரிக்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும், முதலாளித்துவ அரசாங்கங்கள் வேண்டுமென்றே இலாபங்களை உயிர்களுக்கு மேலாக முன்னிலைப்படுத்துகின்றன. 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆரம்ப பொது முடக்கங்களுக்குப் பின்னர், இறப்புகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், உற்பத்தியில் எந்தவொரு கட்டுப்பாடுகளையும் மீண்டும் அனுமதிக்க முடியாது என்று அவர்கள் அறிவித்தனர். கொள்கையை ஆணையிடுவதற்கு முதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால், இதன் விளைவாக ஏற்கனவே நிகழ்ந்ததை எளிதில் கிரகிக்கக்கூடிய பேரழிவாகத்தான் இருக்கும்.

தொழிலாள வர்க்கமானது சுயாதீனமாக தலையிட்டு பெருந்தொற்று நோய்க்கு விஞ்ஞான ரீதியான விடையிறுப்பிற்காக போராட வேண்டும். அனைத்து பள்ளிகளையும், அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் உடனடியாக மூட வேண்டும் என்று சோசலிச சமத்துவ கட்சிகள் (SEP) வலியுறுத்துகின்றன. பொது முடக்க காலம் முழுவதும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு ஏற்புடையதான வாழ்க்கைக்கான ஊதியம் வழங்கப்பட்டு, இழந்த அனைத்து நேரங்களுக்கும் தொழிலாளர்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். சிறு வணிகங்களுக்கு முழுமையாக இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும், மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்பதையும், தொற்றுநோய்க்கு பின்னர் அவர்கள் மீண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்த போதுமான ஆதார வளங்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஒரு தடுப்பூசி ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருகிறது, மற்றும் சில மாதங்களில் எண்ணற்ற எண்ணிக்கையிலான உயிர்களைக் காப்பாற்றுவதற்கு, தொற்றுநோயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை உறுதிசெய்வது மிகவும் அவசியமானதாகும்.

அத்தகைய நடவடிக்கைகளுக்கு பணம் இல்லை என்று கூறுவது வெளிப்படையான பொய்களாக இருக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டிரில்லியன் கணக்கான யூரோக்கள் பெருநிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் பிணையெடுப்புகளில் வழங்கப்பட்டுள்ளன. செல்வந்தர்களுக்கு பிணையெடுப்பது ஒரு விடயமாக இருக்கும்போது, இதற்கான செலவு மிக அதிகம் இல்லை என்று அரசாங்கங்கள் அறிவிக்கின்றன. ஆனால், அதே நேரம் தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றும் விடயம் என்றால், அங்கே செலவு செய்வதற்கு எதுவும் இல்லை என்கின்றன.

எனவே, பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் என்பது, பொருளாதார வாழ்வில் முதலாளித்துவ வர்க்கம் கடைப்பிடிக்கும் அதிகாரத்திற்கு எதிரான போராட்டமாகும். சோசலிச சமத்துவக் கட்சி (SEP), ஒவ்வொரு பணியிடத்திலும் பள்ளியிலும் சுயாதீனமான சாமானியக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கிறது, அது ஒரு பணி நிறுத்தத்திற்கும், இந்த வைரஸிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரும் ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு போராடவேண்டும். முதலாளித்துவ மரணக் கொள்கைக்கு விடையிறுப்பு, சோசலிசம் மற்றும் உண்மையான சமத்துவத்தின் அடிப்படையில் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையை மறுசீரமைப்பதாகும்.

லான்செட் மருத்துவ விஞ்ஞானிகள் வலியுறுத்தியது போல, அத்தகைய கொள்கையை தனியொரு நாட்டின் மட்டத்தில் செயல்படுத்த முடியாது. ஐரோப்பா முழுவதிலுமுள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுவான கொள்கைக்கு கண்டம் முழுவதிலுமுள்ள ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தினால் விடையிறுக்கப்பட வேண்டும், அது ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமாகும்.

Loading