முன்னோக்கு

ஐரோப்பாவில் 300,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மரணங்கள்: மனிதகுலத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் குற்றம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வாரம், கொரோனா வைரஸ் தொடர்ந்து கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால், ஐரோப்பா 300,000 க்கும் மேற்பட்ட COVID-19 இறப்புகளின் மோசமான நிலையை அடைந்துள்ளது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் இப்போது வைரஸின் மீள் எழுச்சியை எதிர்கொள்கிறது, இது மீண்டும் ஒருமுறை சுகாதார அமைப்புகளை மூழ்கடித்து நூறாயிரக்கணக்கானவர்களைக் கொல்ல அச்சுறுத்துகிறது. வைரஸ் கண்டத்தை அடைந்தபோது, இத்தாலி முதன்முதலில் கடுமையாக பாதிக்கப்பட்டது, எட்டு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த காட்சிகளுக்கு ஒத்த காட்சிகள் இப்போது வெளிவருகின்றன. நேற்று, மேலும் 636 பேர் இறந்துள்ளனர், இது முந்தைய நாள் 623 ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்திலிருந்து அதிக எண்ணிக்கையாகும். செவ்வாயன்று நாட்டில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது, மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 43,589 ஆக உள்ளது.

நாட்டின் மருத்துவமனை அமைப்பு சரிவின் விளிம்பில் உள்ளது. புதன்கிழமை வரை, கொரோனா வைரஸ் நோயாளிகள் 21 மாகாணங்களில் ஒன்பதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளைக் கொண்டிருந்தனர், மேலும் லோம்பார்டியில் 75 சதவீதத்தையும், பீட்மொண்டில் 92 சதவீதத்தையும், தெற்கு டிரோலில் 99 சதவீதத்தையும் அடைந்துள்ளது. படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்ஸ்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே வரிசையில் நிற்கின்றன.

Health workers protest to demand more hiring at Evangelismos hospital in Athens, Greece, Thursday, Nov. 12, 2020 (AP Photo/Thanassis Stavrakis)

முதல் அலையின் போது போலல்லாமல், தொற்றுநோய் பெரும்பாலும் வடக்கு பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோது, வைரஸ் ஏற்கனவே ஏழ்மையான தெற்கில் பல பகுதிகளை மூழ்கடித்துவிட்டது. நேப்பல்ஸில், 78 வயதான ஒரு பெண் இந்த வாரம் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஆம்புலன்சில் 26 மணி நேரம் காத்திருந்தார். ஒரு மருத்துவமனை வார்டின் குளியலறையில் ஒரு நோயாளி இறந்து கிடப்பதைக் காட்டும் வீடியோ ஆன்லைனில் பரவலாக பகிரப்பட்டது. வார இறுதியில், நாப்போலி கொட்டுன்னியோ மருத்துவமனையின் செவிலியர்கள், தங்கள் கார்களில் அமர்ந்திருக்கும் நோயாளிகளுக்கு பிராணவாயு சிகிச்சையை வழங்கினர்.

"நாங்கள் தொடர்ந்து செயல்படமுடியாத நிலைக்கு கிட்டவுள்ளோம். நாங்கள் எப்போது வரம்பை எட்டுவோம் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” என்று வரேஸின் சீர்க்கொலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவை நடத்தி வரும் டாக்டர் லூக்கா கப்பேரீனி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார். பலேர்மோவின் மேயரான லெயோலுக்கா ஒர்லாண்டோ, தனது நகரமும் சிசிலியின் மற்ற பகுதிகளும் "அறிவிக்கப்பட்ட படுகொலை" அபாயத்தில் இருப்பதாக எச்சரித்தார்.

பிரான்சில், கடந்த 24 மணி நேரத்தில் 425 பேர் இறந்துள்ளனர். அக்டோபர் தொடக்கத்தில் இருந்து 10,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், மேலும் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 42,960 பேர் இறந்துள்ளனர். ஏப்ரல் 6 ஆம் தேதி 613 என்ற உச்சநிலையிலிருந்து திங்களன்று 551 இறப்புகள் ஒரே நாளில் அதிகமாக உள்ளது. பாரிஸைச் சுற்றியுள்ள Île-de-France பிராந்தியத்தில், 90 சதவீதத்திற்கும் அதிகமான அவசர சிகிச்சை படுக்கைகள் நிரம்பிவிட்டன. Auvergne-Rhône-Alpes இல், நிரப்பப்பட்ட அவசர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கை உத்தியோகபூர்வ திறனில் 146 சதவீதத்தை எட்டியுள்ளது. இப்போது நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கிலாந்து புதன்கிழமை இன்னொரு 525 இறப்புகளைக் கண்டது. அரசாங்கத்தால் கூறப்படும் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000 க்கும் அதிகமாக உள்ளது. உண்மையான எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கானவை. தேசிய புள்ளிவிவரங்களுக்கான பிரிட்டிஷ் அலுவலகம் அக்டோபர் மாத இறுதியில் குறைந்தது 61,000 இறப்புகளை மதிப்பிட்டுள்ளது.

ஸ்பெயினில், 1.4 மில்லியனுக்கும் அதிகமான வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, மேலும் 40,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், கடந்த 24 மணி நேரத்தில் 356 பேரின் இறப்பு பதிவாகியுள்ளது. PLOS ONE இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தொற்றுநோய் காரணமாக 2019-2020 முதல் ஸ்பெயினில் பிறக்கும் போது சராசரி ஆயுட்காலம் 0.9 ஆண்டுகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில், PLOS ONE இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, தொற்றுநோய் காரணமாக 2019-2020 முதல் பிறப்பவர்களின் சராசரி ஆயுட்காலம் 0.9 ஆண்டுகள் குறைகிறது என தெரிவிக்கிறது. அஸ்டூரியாஸ், முர்சியா மற்றும் அண்டலூசியா ஆகிய மூன்று பிராந்தியங்களில், தினசரி இறப்பு எண்ணிக்கை ஏப்ரல் உச்சத்தை தாண்டிவிட்டது.

நெருக்கடியைக் கையாள்வதில் ஒரு முன்மாதிரியாக முதலாளித்துவ ஊடகங்களால் நீண்ட காலமாக பாராட்டப்பட்ட ஜேர்மனியில், அதிகரித்தவகையில் நிலைமை கட்டுப்பாட்டை மீறி வருகிறது. கட்டுப்பாட்டை திறந்த கொள்கையின் விளைவாக, பள்ளிகள் வைரஸை இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறியுள்ளன. தற்போது 300,000 க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் சுமார் 30,000 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர் மற்றும் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை (வியாழக்கிழமை 21,866) மற்றும் தீவிர சிகிச்சை தொற்றுக்கள் (3,186) வசந்த காலத்தில் முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளன. 1,800 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கள் உயிருக்கு போராடும் செயற்கை சுவாசக் கருவிகள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளனர். சில நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் தீவிர சிகிச்சை படுக்கைகள் எஞ்சியிருக்காததோடு மேலும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பல சிறிய நாடுகளில், மொத்த மக்கள்தொகையில் ஒரு பகுதியாக இறந்தவர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் மிக அதிகம். சுமார் 8.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில், கடந்த 24 மணி நேரத்தில் 94 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவின் அளவுள்ள ஒரு நாட்டில், இது ஒரு நாளில் 3,000 க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு சமமாகும்.

கண்டத்தில் வைரஸின் முதல் உச்சநிலை ஏற்பட்டு எட்டு மாதங்களின் பின்னர் இந்த நிலைமை எவ்வாறு ஏற்பட அனுமதிக்கப்பட்டது? இத்தாலி மற்றும் ஸ்பெயினில் வெடித்த திடீர் வேலைநிறுத்தங்களால் மார்ச் மாதத்தில் முதல் பூட்டுதல்கள் நடந்தன, ஆயிரக்கணக்கானோர் இறந்துகொண்டிருந்தபோது அவர்களின் அலட்சியத்தால் மக்கள் கிளர்ச்சி ஏற்படுமோ என்ற அச்சத்தில், வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டன.

பின்னர், ஐரோப்பிய ஆளும் வர்க்கம் ஒரு கொள்கையை வேண்டுமென்றே பின்பற்றியது, இது நூறாயிரக்கணக்கான மரணங்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் அறிந்திருந்தது. இந்த மரணங்கள் தவிர்க்க முடியாதவை அல்ல. அவை முதலாளித்துவ வர்க்கத்தாலும் அதன் அரசியல் பிரதிநிதிகளாலும் நிகழ்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும்.

பெருநிறுவன பிணையெடுப்புகளில் இரண்டு ட்ரில்லியன் யூரோக்களை கொட்டி பூட்டுதல்கள் வழங்கிய சந்தர்ப்பத்தை ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்தியது. பூட்டுதல் நடவடிக்கைகள், வைரஸின் பரவலை பெருமளவில் குறைத்தபோதிலும், ஆளும் உயரடுக்கு உற்பத்தியை நிறுத்தி, பெருநிறுவன இலாபங்களைக் குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முடிவு செய்தன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், அரசாங்கங்கள் முன்கூட்டியே அவசியமற்ற பணியிடங்களை மீண்டும் திறந்து, தொடர்ச்சியான இலாபப் பாய்ச்சலை உருவாக்க பல்லாயிரக்கணக்கான மக்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தின. இது வைரஸ் தொடர்ந்து பரவுவதை உறுதி செய்தது.

ஏற்கனவே ஜூலை மாதம், உலக சுகாதார அமைப்பு வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதை ஐரோப்பா முழுவதும் காணலாம் என்று எச்சரித்தது. இருப்பினும், எதுவும் செய்யப்படவில்லை.

பிரெஞ்சு பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ் ஆளும் உயரடுக்கின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக வெளிப்படுத்தினார், அதே மாதத்தில் ஒரு பூட்டுதல் “தொற்றுநோய் பரவுவதை நிறுத்துகிறது, ஆனால் சமூக, பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால் அது ஒரு பேரழிவு” என்று அறிவித்தார்.

அக்டோபர் மாத தொடக்கத்தில், சுகாதாரப் பாதுகாப்பு முறை வீழ்ச்சியை நெருங்கிக் கொண்டிருப்பதாக மருத்துவ அதிகாரிகள் பகிரங்கமாக எச்சரித்ததால், அரசாங்கங்கள் பகுதியளவிலான பூட்டுதல்களைச் செய்தன, ஆனால் அவசியமற்ற வணிகங்களைத் திறந்த நிலையில் வைத்திருந்தன. பள்ளிகளும் திறந்திருக்கின்றன; பொதுக் கல்வி முறை குழந்தை பராமரிப்பு சேவையாகப் பயன்படுத்தப்படுகிறது, எங்கும் 35 மாணவர்கள் வகுப்பறைகளில் நெரிசலில் சிக்கியுள்ளனர், எனவே பெற்றோர்கள் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட முடியும்.

இந்த வாரம், இத்தாலிய மருத்துவர்கள் சங்கம் இத்தாலி முழுவதும் முழு பூட்டுதலைக் கோரியது. எவ்வாறாயினும், புதன்கிழமை லா ஸ்ராம்பாவிற்கு பிரதமர் யூசெப்பே கொந்தே பதிலளிக்கையில், "ஒரு பொதுவான பூட்டுதல் முதல் தேர்வாக இருக்கக்கூடாது - செலவுகள் மிக அதிகமாக இருக்கும்" என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு பூட்டுதல் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றாலும், “செலவுகள்” அதாவது பெருநிறுவன உயரடுக்கின் இலாபங்களின் தாக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆளும் உயரடுக்கைப் பொறுத்தவரை, வயதானவர்களும் பலவீனமானவர்களும் இறந்துவிட்டால், ஓய்வூதியம் மற்றும் சுகாதாரத்துறையில் மேலும் வெட்டுக்களை அனுமதிக்க இது ஒரு நேர்மறையான நன்மையாகக் கருதப்பட வேண்டும்.

தொற்றுநோய்க்கான பதிலை முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் விட முடியாது. அதன் இலாப நோக்கு மற்றும் கொலைகார கொள்கைக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் நெருக்கடிக்கு விஞ்ஞான ரீதியான பதிலுக்காக போராட தலையிட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சிகள் ஐரோப்பா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு பள்ளி மற்றும் பணியிடங்களிலும், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான சாமானிய மற்றும் பாதுகாப்புக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கின்றன, தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கத்தை மீண்டும் திறக்கும் கொள்கைகளை செயல்படுத்த உதவியுள்ளன. இந்த குழுக்கள், பள்ளிகளையும் அத்தியாவசியமற்ற உற்பத்திகளையும் மூடுவதற்கு கட்டாயப்படுத்தும், மற்றும் தொழிலாளர்கள் வீட்டில் தங்கவைக்க அனுமதிக்கும் வகையில் ஐரோப்பா முழுவதும் பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்வதற்கான வழிவகைகளை வழங்கும்.

மாணவர்களுக்கு இணையவழி கற்றலை பராமரிக்கத் தேவையான வளங்கள் உட்பட, தொற்றுநோய் காலம் முழுவதும் அனைவருக்கும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க பாரிய வளங்களை முதலீடு செய்ய வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளுக்கு "பணம் இல்லை" என்ற கூற்று ஒரு அப்பட்டமான பொய்யாகும். தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து ட்ரில்லியன் கணக்கான யூரோக்கள் வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு பிணையெடுப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளன. வளங்கள் உள்ளன, ஆனால் அவை ஒரு பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் ஏகபோகமாக உள்ளன.

பணக்காரர்களின் செல்வங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும், மற்றும் பெரிய நிறுவனங்கள் பொது பயன்பாடுகளாக மாற்றப்பட வேண்டும், தனியார் இலாபத்தை அல்ல, சமூக தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையை சோசலிச மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதன் பொருள், ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கையில் எடுக்க, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை கட்டியெழுப்ப போராடவேண்டும்.

Loading