எகிப்திய மருத்துவமனைகளின் ஆக்ஸிஜன் கிடைக்காத நிலை, தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலுள்ள கோவிட்-19 நோயாளிகளைக் கொல்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போதிய ஆக்ஸிஜன் விநியோகம் இல்லாமல் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் (ICU) குழப்பமான மற்றும் சோகமான காட்சிகளை அம்பலப்படுத்திய காணொளிப் பதிவுகள் எகிப்து முழுவதும் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் தூண்டியுள்ளன.

சனிக்கிழமையன்று, தலைநகர் கெய்ரோவின் வடகிழக்கில், கார்பியா கவர்னரேட்டில் உள்ள ஜெஃப்டா பொது மருத்துவமனையில் துயரத்தில் இருந்த பார்வையாளர் ஒருவர் பதிவு செய்திருந்த காணொளி, ஆக்ஸிஜன் தீர்ந்து போன ஒரு மருத்துவமனை பிரிவின் பயங்கரமான காட்சியை பகிரங்கப்படுத்தியது. அதாவது இந்த காணொளி, “நான் உன்னை எல்லா இடங்களிலும் அம்பலப்படுத்துவேன்… ஏ இழிந்த அரசாங்கமே!” என்று கூச்சலிட்டவாறே ஒரு பெண்மணி நடைபாதையில் முன்னும் பின்னும் ஓடுவதைக் காட்டியதோடு, நோயாளிகள் தங்களது படுக்கைகளில் கிடந்து சிரமப்படும் மற்றும் மருத்துவக் குழு உறுப்பினர்கள் தரையில் சோர்ந்து விழுந்து கிடக்கும் காட்சிகளையும் பதிவு செய்திருந்தது.

நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காததால் எகிப்தின் அல்-ஹூசைனியா மத்திய மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர்கள் சோர்ந்து போயுள்ளனர் (Photo Credit: Ehab via Twitter)

கார்பியாவின் சுகாதார அமைச்சகத்தின் துணைச் செயலாளர் அப்தெல் நாசர் ஹெமிடா (Abdel Nasser Hemida), ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுவதை மறுத்தார்.

மேலும், சில மணிநேரங்களுக்குப் பின்னர், கெய்ரோவின் வடகிழக்கில் அல்-ஷர்கியா கவர்னரேட்டில் உள்ள எல்-ஹூசைனியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு ஒன்றின் காட்சியை அஹ்மத் மம்தூ படமாக்கியிருந்தார். அவர் தனது அத்தையை பார்ப்பதற்கு மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, ஆக்ஸிஜன் அளவு இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவடைந்ததால், அவரது அத்தை உட்பட பல நோயாளிகள் இறந்து போனதைக் கண்டார், அதாவது நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் வகையில் அவர்களுக்கு போதுமான அழுத்தமோ அல்லது போதுமான ஆக்ஸிஜனோ வழங்கப்படாமல் அப்படியே கைவிடப்பட்டனர்.

இந்த காணொளிப் பதிவுகள், நோயாளிகள் சுவாசிக்கப் போராடியது, அதைக் கண்டு மக்கள் அலறியது மற்றும் மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளைக் காப்பாற்ற தீவிரமாக முயற்சித்தது என அங்கிருந்த மோசமான நிலவரத்தை காட்டியது. “தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அனைவருமே இறந்துவிட்டனர்… ஏனென்றால் அங்கு ஆக்ஸிஜன் இல்லை” என்று தான் கேட்டதை மம்தூ கூறினார்.

ஒரு மூலையில் தரையில் வீழ்ந்து கிடந்த செவிலியரின் புகைப்படத்தில் அவரது தலைக்கவசம் மற்றும் முகக்கவசத்தின் ஊடாக பயத்தில் வெறிக்கும் அவரது கண்களை பார்க்கையில் நெஞ்சம் பதறியது. இது தேசியளவிலான அவமானமாக மாறியுள்ளது. சமூக ஊடகப் பயனாளர் ஒருவர், “இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது!” என்று ட்வீட் செய்திருந்தார். மற்றொரு பயனாளரோ, “எகிப்தின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. எங்களுக்கு உதவுங்கள்” என்று ட்வீட் செய்திருந்தார். பலர் செவிலியருக்கு தங்களது ஆதரவை வழங்கினர், மேலும் அவரை கைவிடக்கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர். மற்றவர்களோ தங்களது சொந்த பாதுகாப்புக்காகவே அச்சங்களைப் பற்றி பேசினர்.

Egypt Watch அமைப்பின் கருத்துப்படி, பெருந் தொற்றுநோயின் காரணமாக மருத்துவமனைகளின் சூழ்நிலை மோசமடைந்த காரணத்தினாலும், மற்றும் ஆக்ஸிஜன் உட்பட மருத்துவப் பொருட்களை வழங்கக் கோரி மருத்துவர்கள் கூக்குரலிடும் வகையில் சுகாதார அமைச்சகத்தின் முன்னேற்பாடற்ற நிலை இருப்பதாலும், பொது மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகிப்பது தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடி நிகழக்கூடியவையாக இருந்தன. இங்கிலாந்தில் Liverpool FC அணிக்காக விளையாடும் எகிப்திய கால்பந்து வீரரான முகமுது சலா (Mohamed Salah), கார்பியா கவர்னரேட்டில் உள்ள அவரது சொந்த ஊரான நாக்ரிக்கில், “கொரோனா வைரஸ் நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவும்” வகையில் பாஸ்யவுன் மத்திய மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் கொள்கலன் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.

நைல் டெல்டாவில் உள்ள காஃப்ர் அல்-ஷேக்கில் உள்ள ஹமூல் மருத்துவமனையின் மேலாளர், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்காக பேஸ்புக்கில் ஒரு வேண்டுகோள் விடுத்தது, அதிகாரிகளால், விசாரணைக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. இதுவே, நாட்டின் சுகாதார அமைப்புமுறையின் பேரழிவுகர நிலையை எதிர்த்து அல்லது தொற்றுநோயை அரசாங்கம் கையாளும் விதத்தை விமர்சித்து பேசத் துணிந்த மருத்துவ நிபுணர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் நிலையான பதிலிறுப்பாகும்.

“கொரோனா வைரஸ் நோயாளிகளை சேர்த்துக்கொள்ளும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் மருத்துவ தேவைக்கான போதுமான ஆக்ஸிஜன் விநியோகம் மோற்கொள்ளப்பட்டது” என்று சுகாதார அமைச்சர் ஹாலா சயீத் அறிவித்தது, மற்றும் முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood) என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பு “வதந்திகளை” பரப்புவதாக அவர் குற்றம்சாட்டியது உட்பட, ஆக்ஸிஜனை விநியோகிக்க தவறியதால் இறப்புக்கள் நிகழ்ந்தன என்பதை அரசாங்கத்தின் உடனடி பதில் மறுத்தது.

ஷார்கியாவின் ஆளுநரான மம்தூ கோரப் (Mamdouh Ghorab), “இயற்கையாகவே” அவர்கள் நாள்பட்ட நோய்களால் இறந்து விட்டார்களே தவிர, ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாக அல்ல என்று கூறி அரசை பாதுகாத்தார். இவரது இந்த கூற்றை, “அல்-ஹூசைனியா மருத்துவமனை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் அலட்சியமாக இருந்தது மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நெருக்கடியை தவறாக கையாண்டது போன்றதன் விளைவாகவே நோயாளிகள் இறந்தனர்,” என்று கூறி உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரான சயீத் ரஹ்மோ மறுத்தார். மேலும் அவர், “எனக்கு கிடைத்த ஆதாரங்களின் படி, [அழிவுகர நிலை ஏற்படுவதற்கு] குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னர் தான் ஆக்ஸிஜன் குறைவாக விநியோகிக்கப்படுவது குறித்து தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் மருத்துவமனை இயக்குநருக்கு தெரிவித்துள்ளார்,” என்றாலும் அவரது எச்சரிக்கை செவிமடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த சம்பவத்தை படமாக்கியவர்களை கைது செய்யும்படி அல்-ஷார்கியாவின் ஆளுநர் டாக்டர் மம்தூ கோரப் (Dr. Mamdouh Gorab) பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டதை அடுத்து அகமது மம்தூ கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், “கடினமான காலங்களில் வேலை செய்யாதது குறித்து” செவிலியருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன.

ஆரம்பகட்ட பூட்டுதல் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் கோவிட்-19 தொற்றுநோய் இந்நாட்டில் மீண்டும் வெடித்தெழுகிறது. எகிப்து, 145,000 நோய்தொற்றுக்களும், மற்றும் அண்ணளவாக 8,000 இறப்புக்களும் ஏற்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக பதிவு செய்துள்ள போதிலும், இந்த புள்ளிவிபரங்கள் 98 மில்லியன் அளவிற்கு அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில் மொத்தமாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. கிழக்கு மத்தியதரைக் கடலுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) சுகாதார அவசரகால திட்டத்தின் இயக்குநரான ரிக் பிரெனன் (Rick Brennan), அரசாங்கத்தின் பரிசோதனைத் திட்டம் கடுமையான நோயறிகுறி தொகுப்புகளைக் கொண்டவர்களை மட்டுமே முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்வதால், இந்த புள்ளிவிபரங்களை ஒரு மேம்போக்கான மதிப்பீடாக மட்டுமே கருதி நிராகரித்தார்.

எகிப்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபர அமைப்பான பொது தகவல்திரட்டல் மற்றும் புள்ளிவிபரங்களுக்கான மத்திய முகமையின் (Central Agency for Public Mobilisation and Statistics) கருத்துப்படி, கோவிட்-19 தொற்றுநோயின் முதல்கட்ட எழுச்சி அலை உச்சம் கண்ட காலமான கடந்த ஆண்டின் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் மொத்தம் 60,000 இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன, அதாவது முந்தைய ஆண்டுகளின் இதே காலகட்டத்தின் சராசரி இறப்பு விகிதங்களை விட இது மிக அதிகமாகும். டிசம்பர் 21 அன்று, சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை விவகார அமைச்சகத்தின் விஞ்ஞான குழுவின் உறுப்பினரான முகமது அல்-நாடி (Mohamed al-Nady), நோய்தொற்றுக்களின் உண்மையான எண்ணிக்கை உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை விட 10 மடங்கு அதிகம் என்று மதிப்பிட்டார்.

நோய்தொற்றுக்களின் அதிகரிப்பு எகிப்தின் நீண்டகால ஆதரவற்ற பொது மருத்துவமனைகளை நோயாளிகளால் மூழ்கடித்தது, இவற்றால் சாதாரண நிலைமைகளைக் கூட சமாளிக்க முடியவில்லை. மருத்துவமனைகளின் பற்றாக்குறை நிலை சிகிச்சை தேவைப்படும் பலரைத் திருப்பி விடவும், மருத்துவப் பொருட்களின் விநியோகத்தை குறைக்கவும் வழிவகுத்தது, அத்துடன் சமீபத்திய அறிக்கை ஒன்று சுகாதார அமைப்புமுறை முற்றிலும் சீர்குலைந்த நிலையில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், மற்றவர்களைப் பொறுத்தவரை அவர்களிடம் பணம் இருந்தாலோ அல்லது உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற வசதிகள் இருந்தாலோ அவர்கள் தனியார் மருத்துவத் துறைக்கு திரும்புவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

உலகில் சுகாதாரப் பணியாளர்களிடையேயான சில உச்சபட்ச கோவிட்-19 இறப்புக்களை எகிப்து கொண்டுள்ளது. அரசாங்கம் இது தொடர்புபட்ட புள்ளிவிபரங்களை சேகரிக்கவில்லை என்றாலும், எகிப்திய மருத்துவ ஆலோசனைக் குழு (Egyptian Medical Syndicate), இந்த ஆண்டில் இறந்த 18 பேர் உட்பட, மொத்தம் 282 க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் இந்த நோய்தொற்றால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், தற்போது கூட நூற்றுக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள் இந்த நோய்தொற்று பாதிப்பில் உள்ளனர்.

மதச்சார்பற்ற மற்றும் முஸ்லீம் சகோதரத்துவ அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள், மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் உட்பட, 60,000 க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களை ஜெனரல் அப்தெல் பத்தா எல்-சிசியின் இரத்தக்களரியான ஆட்சி, எகிப்தின் மோசமான நெரிசலான மற்றும் பாழடைந்து போன சிறையில் அடைத்துள்ளது, இங்கு இவர்கள் பெரும்பாலும் விசாரணை எதுவுமின்றி பல ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்படுகின்றனர்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு முறையான பரிசோதனை செய்யப்படாதது மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாதது குறித்து கவலைகளை எழுப்பியதற்காக குறைந்தது ஆறு மருத்துவர்களும் மருந்தாளுநர்களும் இன்னும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) கூறுகிறது. இது குறித்து, அவர்கள் மீது “தவறான செய்திகளைப் பரப்பியதாக”, “சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தியதாக”, மற்றும் “சட்டவிரோதமான அமைப்பில் சேர்ந்துள்ளதாக” குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை அரசாங்கம் சிறையில் அடைத்துள்ளது அல்லது நாடுகடத்தியுள்ளது, எடுத்துக்காட்டாக, எகிப்தில் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டதை விட அதிகமாக கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கள் உள்ளன என்று கூறும் ஒரு விஞ்ஞான ஆய்வை மேற்கோள் காட்டிய ராய்ட்டர்ஸ் நிருபரும் கார்டியன் பத்திரிகையாளருமான ரூத் மைக்கேல்சன் (Ruth Michaelson) நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டார்.

கடந்த மாதம் தொடங்கப்படவிருந்த அரசாங்கத்தின் நோய்தடுப்புத் தட்டத்தின் தாமதம் குறித்து அங்கு கோபம் அதிகரித்து வருகிறது. சர்வதேச முன்முயற்சித் திட்டமான COVAX மூலமாகவும், மற்றும் Oxford-AstraZeneca நிறுவனத்திடமிருந்தும் 20 மில்லியன் தடுப்பூசிகளை சேகரிக்க இது முயற்சித்து வருகிறது, அதேவேளை ரஷ்யா தனது Sputnik-V வகை தடுப்பூசிகளில் 25 மில்லியன் தடுப்பூசிகளை எகிப்துக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், மக்கள்தொகையில் கால் பகுதியினருக்கும் குறைவானவர்களுக்கே இது போதுமானதாகும்.

எல்-சிசி, உலகெங்கிலும் உள்ள அவரது சக பதவியாளர்களைப் போல, பெருநிறுவனங்கள் இலாபமீட்டும் திறனை பாதிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க மறுத்துவிட்டார், அதற்கு மாறாக இயக்க சுதந்திரம் மற்றும் சமூக நடவடிக்கைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளையே அவர் எடுத்தார்.

எகிப்தின் மருத்துவ அமைப்புமுறையின் சீர்குலைவு என்பது நாட்டை நெருக்கிக் கொண்டிருக்கும் கடுமையான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியில் நடக்கிறது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஆட்சி செயல்படுத்திய மட்டுப்படுத்தப்பட்ட பூட்டுதல் நடவடிக்கைகளால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது, அதாவது வறுமையில் ஆழ்ந்த மில்லியன் கணக்கான மக்கள் வாழ்வாதாரத்திற்கான வழிகளை இழந்த நிலையில், ஏராளமானோருக்கு அரசாங்கம் வழங்கும் சிறிய வகை நிதியுதவியுடன் இதுவும் சேர்ந்து கொண்டுள்ளது.

வெடிக்கும் சமூக பதட்டங்களும் பொருளாதார நெருக்கடியும் எகிப்தை உலுக்கியதானது, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதும் நிகழ்வதான முதலாளித்துவ ஆட்சியின் பரந்த முறிவின் ஒரு பகுதியாக உள்ளது. முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடியும், மற்றும் மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் சமூக பேரழிவை எதிர்கொள்வதில் அது கண்ட முழுமையான தோல்வியும், ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் மட்டுமே சமூக சமத்துவத்திற்கான மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

Loading