தொற்றுநோய்க்கு சுகாதார ஊழியர்களை பலியிடும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கண்டி தேசிய மருத்துவமனையின் சுகாதார ஊழியர்களை கொடூரமாக ஆபத்தில் தள்ளி, கொரோனா நோயாளிகளுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு இன்றியமையாத மனித மற்றும் பௌதீக வளங்கள் இன்றி பராமரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அந்த பிரிவில் கடமையில் உள்ள சுகாதார ஊழியர்கள் உலக சோசலிச வலைத்தளத்திற்கு (WSWS) தெரிவித்தனர்.

கடினமான சேவைகளில் பிளிந்தெடுக்கப்படும் ஊழியர்கள் குழாம், மேலதிக வார்டில் பணியாற்ற நிர்ப்பந்திப்பதன் மூலம் அவர்கள் கடுமையான உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சுகாதார ஊழியர்கள் அதே போல் கவலைக்கிடமான கொரோனா நோயாளிகளையும் ஆபத்தில் தள்ளுவதற்கு அரசாங்கமும் மருத்துவமனை நிர்வாகமும் செயல்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்போதே சிறுவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, கொரோனா பிரிவிற்கு இணைக்கப்பட்டிருந்த தாதிமார்கள் குழு அங்கு வேலை செய்ய முடியாது என்று முடிவு செய்துள்ளனர். மேலும், இருதய அறுவை சிகிச்சை பிரிவில் பணிபுரிந்த மயக்க மருந்து நிபுணர்கள், சேவையில் இருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

ஜனவரி 6 அன்று கண்டி மருத்துவமனை ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (WSWS Media)

ஒரு மாதத்திற்குள் நிரந்தர ஊழியர்கள் குழு மற்றும் பிற பௌதீக வளங்கள் வழங்கப்படாவிட்டால், அவர்கள் சேவைகளை விட்டு வெளியேறுவதாக நிர்வாகிகளுக்கு அறிவிக்கும் கடிதமொன்றில் கையெழுத்துபெற்று வருவதாக, மருத்துவ பணியாளர் ஒருவர் உலகசோசலிசவலைத்தளத்திடம் இடம் கூறினார்.

2020 மார்சில், கண்டி தேசிய மருத்துவமனையில் கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கான உள்ளக தீவிர சிகிச்சை பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டது. சிறுவர் மற்றும் இருதய அலகுகள் உள்ளிட்ட அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் இருந்து இதற்குத் தேவையான ஊழியர்கள் குழு தற்காலிக அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்களுடன் எந்த கலந்துரையாடலும் இல்லாமல், அங்கு பணிபுரியும் சுகாதார ஊழியர்கள், ரகசியமாக இந்த பிரிவு கொரோனா நோயாளிகளுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

ஆரம்பத்தில், மருத்துவமனை அதிகாரிகள், இந்த பிரிவில் ஒரு படுக்கை மட்டுமே பராமரிக்கப்படும் என்றும், கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அந்த நோயாளிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தெல்தெனிய அல்லது பெனிதெனிய மையங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் ஊழியர்களுக்கு உறுதியளித்தனர். ஆனால் இது ஒரு அப்பட்டமான பொய்யும் மோசடியுமாகும். எந்த வசதிகளும் இல்லாத நிலையில், முழு ஊழியர் குழாமினதும் எதிர்ப்பின் மத்தியில், இந்த அலகுக்குள் நான்கு படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு, கவலைக்கிடமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான தீவிர சிகிச்சை பிரிவாக ஆக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்களுக்கு, தற்காலிகமாக இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்கள் குழு ஆட்சேபனை தெரிவித்த போதிலும், ஆஸ்பத்திரி நிர்வாகம் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு பணிபுரியும் மருத்துவமனையின் மருத்துவர்கள் நிரந்தர பணியாளர்கள் குழுவை ஸ்தாபிக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு எந்த பதிலும் வரவில்லை என்று அங்கு வேலை செய்யும் ஒரு வைத்தியர் எமது வலைத் தளத்திடம் கூறினார்.

அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரவுக்கு அவசியமான மனித வளங்கள் மட்டுமன்றி, பௌதீக வளங்களும் மிகவும் குறைவாகவே உள்ளன என்றும் அவர் கூறினார். ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், அவர்கள் பொது கழிப்பறையைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் ஒரு கொரோனா நோயாளி இந்த பிரிவில் திடீரென இறந்த போதிலும், அவருக்கு சிகிச்சையளித்த எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலை மேற்கொள்ள அதிகாரிகள் தவறியதால், முழு ஊழியர்கள் குழாமுக்கும் அதே போல் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளும் கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தெல்தெனிய கோவிட் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவை பராமரிக்க தேவையான மருத்து நிபுணர்களை வழங்க இயலாமையாலேயே இதுபோன்ற ஒரு அலகு ஆபத்தான முறையில் மேலோட்டமாக பராமரிக்கப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு பிரதன காரணம், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் பல தசாப்தங்களாக சுகாதாரத் துறையில் முன்னெடுக்கப்பட்ட பாரிய வெட்டுக்களே ஆகும்.

கண்டி வைத்தியசாலையில் உடற்பயிற்சி சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், சுகாதாரப் பணியாளர்கள் தொற்றுநோய்க்கு உள்ளாவதை குறைப்பதற்காக இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சேவையாற்றினாலும், ஜனவரி 1 முதல் அனைத்து ஊழியர்களுக்கும் அன்றாடம் தவறாமல் பணியாற்றுமாறு மருத்துவமனை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர், என்று கூறினார். சில மாதங்களுக்கு முன்பு, தொண்டை காது மூக்கு கிளினிக்கின் 19 ஊழியர்கள், கொரோனா நோய்க்கு உள்ளாகியதாகவும், இரண்டு குழுக்களாக அங்கு பணிபுரிந்ததால் ஒரு குழுவினர் நோயினால் பாதிக்கப்படுவதைத் தடுத்துக்கொள்ளக் கூடியதாக இருந்ததால், அந்த கிளினிக்கின் நடவடிக்கைகளை விரைவில் மீண்டும் தொடங்க முடிந்தது, என்று அவர் மேலும் கூறினார்.

முழு மருத்துவமனை ஊழியர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட, சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், சுகாதாரப் பணியாளர்களுக்கு புறமுதுக காட்டி, அதிகாரிகளுக்கும் அரசாங்கத்துக்கும் சேவை செய்து, ஊழியர்களை பலாத்காரமாக வேலையில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

கண்டி மருத்துவமனையில் இந்த சூழ்நிலை சம்பந்தமான தொழிற்சங்கங்களின் செயற்பாடு, நாட்டினுள் மட்டுமன்றி சர்வதேச அளவில் தொழிற்சங்கங்கள் ஆற்றும் துரோக ghத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் 24 வது உடற்பயிற்சி வார்ட்டில் 14 ஊழியர்களுக்கு தொற்று நோய் பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்ட பின்னர் அது மூடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் வைத்தியர் ஒருவர், வெளிக்கள பயிற்சி பெரும் மருத்துவர் ஒருவருக்கும், இரண்டு செவிலியர்களுக்கும், இரண்டு உதவி பணியாளர்களுக்கும் ஒன்பது உள்நோயாளிகளுக்கும் வைரஸ் தொற்றியுள்ளதாக சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

தொற்றுநோய் வேகமாக பரவி வருகின்ற நிலையில், கணிசமான அளவு சுகாதார ஊழியர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், சுகாதார அமைச்சு இந்த புள்ளிவிவரங்களை இதுவரை மூடி மறைத்து வருவதாக பல சுகாதார ஊழியர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்துள்ளனர். தாங்கள் பணிபுரியும் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகள் தங்களிடம் மூடிமறைப்பதாக கண்டி, பேராதனை மற்றும் கம்பளை மருத்துவமனைகளில் உள்ள சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு, கம்பளை மருத்துவமனையில் ஒரு வெளிநோயாளர் பிரவின் ஒரு வைத்தியர், சிறுவர் மருத்துவர் மற்றும் ஒரு செவிலியரும் வைரஸால் பாதிக்கப்பட்டனர். அப்போது சுமார் 60 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகுதான் தனது மருத்துவமனையின் மற்றொரு தாதி இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொண்டதாக ஒரு தாதி தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் மோசமானவை என்றும், சிலருக்கு தூசி நிறைந்த பழைய மூடிக்கிடந்த உத்தியோகபூர்வ வாசஸ்தளங்களும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். உட்கார ஒரு நாற்காலி கூட இருக்கவில்லை.

தொற்றுநோய் பரவும் நிலையில், ஊழியர்கள் தொற்றுநோய்க்கு உள்ளாவதை தடுக்க குறைந்தபட்ச நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த எந்தவொரு சாதகமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படாத நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் கடுமையாக சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

பேராதனை மருத்துவமனையின் கதிரியக்கவியல் பிரிவின் கனிஷ்ட ஊழியர் ஒருவருக்கு டிசம்பர் 25 அன்று கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், சுமார் 40 பேர் பணியாற்றும் இந்த இடத்தில் பத்து ஊழியர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பத்து பேர் மட்டுமே பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதே வேளை, மீதமுள்ள ஊழியர்கள் எழுமாறாகவே பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அங்கு பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

அந்த அலகில் உள்ள ஸ்கேன் அறை மிகவும் சிறியது என்றும், சேவையில் கடுமையான சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஒரே நேரத்தில் வைத்தியர்கள் உட்பட குறைந்தது ஒன்பது ஊழியர்கள் அங்கு உள்ளனர் என்றும், இது மிகவும் குறைந்த காற்றோட்டம் உள்ள இந்த அறைக்குள் ஒரு கொவிட் நோயாளி நுழைந்தால் அனைத்து நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இருப்பினும், ஒரு நாளுக்கேனும் இந்த அலகை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிடவில்லை, அதே நேரம் எந்தவொரு தொற்றுநீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

துறைமுகத்தில் தொற்றுநோய் பரவிய போது, அத்தியாவசிய சேவை உத்தரவுகளை பிறப்பித்து, தொழிலாளர்களை வேலைக்கு அழைத்த அரசாங்கம், பெருவணிக நலன்களுக்கு முன்னுரிமை அளித்தது. அதே பலாத்காரத்துக்கே சுகாதார ஊழியர்களும் உள்ளாக்கப்படுகின்றனர். சுதந்திர வர்த்தக வலயங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அலட்சியம் செய்து, முதலாளித்துவ ஆதாயத்திற்காக தொழிற்சாலைகளை திறந்து இயக்குவதற்கு அனுமதி கொடுத்துள்ள அரசாங்கம், இப்போது தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை இலகுவாக்குவதற்காக பாடசாலைகளை திறந்து விட தயாராகி வருகிறது.

சுகாதாரத் தொழிலாளர்கள் தாங்கள் இணைந்துள்ள தொழிற்சங்கங்களிடம் இருந்து ஏதேனும் ஆதரவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வைத்திருந்தால், அது முழுக்க முழுக்க ஒரு மாயையே என்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் விடுத்த எச்சரிக்கைகள், மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் காலம் கடத்தாமல், தொழிலாளர்கள் தங்கள் வேலைத்தளங்களில் சுயாதீன தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை தராதர வேறுபாடுகள் இன்றி அமைத்துக்கொள்வதன் மூலம், அரசாங்கத்தின் இந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கு முடிவெடுக்க வேண்டும் என்று சோ.ச.க. மற்றும் சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை குழுவும் வலியுறுத்தி வருகின்றன. கல்வி, துறைமுகம் போன்ற பிற துறைகளிலும் உள்ள தொழிலாளர் பிரிவினருடனும், சர்வதேச தொழிலாள வர்க்கத்துடனும் கைகோர்த்துக்கொண்டு, அனைத்துலக சோசலிச முன்னோக்குடன் அணிதிரள வேண்டிய அவசரத் தேவை உள்ளது. அந்த வேலைத் திட்டத்தைப் பற்றி கலந்துரையாட சுகாதார ஊழியர் நடவடிக்கை குழுவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதார சேவைகளை வலுப்படுத்தவும், சுகாதார ஊழியர்களின் தேவைகளை வென்றெடுப்பதற்குமான போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள். https://www.facebook.com/groups/316687252788852" https://www.facebook.com/groups/316687252788852

Loading