முன்னோக்கு

ட்ரம்ப்பின் சதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தயார்செய்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வாஷிங்டனில் ஜனவரி 6 ம் தேதி பாசிச கிளர்ச்சியின் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர், ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்பு தினத்தை இலக்காகக் கொண்டு அமெரிக்கா முழுவதும் பாசிச வன்முறை அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.

அச்சுறுத்தல் தீவிரமானது என்று அரசு கூறுகிறது. பதவியேற்புக்கு முன்னதாக அடுத்த வார இறுதியில் வாஷிங்டனில் 10 முதல் 15,000 துருப்புக்கள் அணிதிரட்டப்படுவதாக தேசிய காவல்படையின் தலைவர் திங்களன்று அறிவித்தார்.

ABC News நேற்று வெளியிட்ட FBI இன் உள்சுற்று அறிக்கையின் படி, வாஷிங்டன் டி.சி உட்பட 50 மாநில தலைநகரங்களிலும் தீவிர வலதுசாரி குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுத ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. "ஜனவரி 16 அன்று வாஷிங்டன் டி.சி.க்கு செல்ல விரும்பும் அடையாளம் காணப்பட்ட ஆயுதக் குழு பற்றிய தகவல்களை FBI பெற்றது" என்று உள்சுற்று அறிக்கை கூறுகிறது. "25 வது திருத்தத்தின் மூலம் POTUS [ட்ரம்ப்பை] அகற்ற காங்கிரஸ் முயன்றால், ஒரு பெரிய எழுச்சி ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

"Yahoo News ஆல் பெறப்பட்ட மற்றொரு FBI அறிக்கை, ஜனவரி 17 அன்று மிச்சிகன், மினசோட்டா மற்றும் பிற மாநிலங்களில் குறிப்பிட்ட திட்டங்களை அடையாளம் காட்டுகிறது. மிச்சிகனில், தீவிர வலதுசாரி “Boogaloo” இயக்கத்தின் உறுப்பினர்கள் “ஒரு தூண்டுதல் மூலம் பெட்ரோல் அடிப்படையிலான சாதனத்தைப் பயன்படுத்துவது” பற்றி விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த அக்டோபரில் வெளிச்சத்துக்கு வந்த மாநில ஆளுநரை கடத்தி படுகொலை செய்வதற்கான பாசிச சதித்திட்டத்தின் மையமாக மிச்சிகன் இருந்தது.

தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் அனைத்து முற்போக்கான சக்திகளும் இந்த அச்சுறுத்தல்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜோர்ஜ் ஃபுளொய்ட்டின் மரணத்திற்கு எதிரான பிட்ஸ்பேர்க் ஆரப்பாட்டம் (AP Photo/Gene J. Puskar)

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் அல்லது நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களிலும் உள்ள அரசாங்க கட்டிடங்கள் மற்றும் பிற மூலோபாய தளங்களை கைப்பற்ற அரசியல் குற்றவாளி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் செனட் மற்றும் காங்கிரஸில் உள்ள அவரது குடியரசுக் கட்சி கூட்டாளிகளால் தூண்டப்பட்ட தீவிர வலதுசாரி கும்பல்களின் முயற்சிகளுக்கு தொழிலாள வர்க்கம் ஒரு பொது வேலைநிறுத்தத்துடன் பதிலளிக்க வேண்டும்.

ஜனவரி 6 கிளர்ச்சிக்கு குடியரசுக் கட்சிக்குள்ளேயும் மற்றும் இராணுவ-பொலிஸ் அமைப்பின் முக்கியமான பிரிவுகளினுள்ளும் உயர்மட்ட ஆதரவு இருந்தமை பற்றி அதிகரித்துவரும் ஆதாரங்களுக்கு மத்தியில் பதவியேற்பு நாளில் வன்முறை அச்சுறுத்தல் வருகிறது. அமெரிக்க காங்கிரஸ் கட்டிடத்தை முற்றுகையிடுவது காங்கிரஸ் காவல்துறையை கிட்டத்தட்ட இயங்காமல் செய்ததாலும், பென்டகனில் உள்ள ட்ரம்ப் விசுவாசிகளின் கட்டளைப்படி, தேசிய காவல்படையினரை நிலைநிறுத்துவதை தாமதப்படுத்தியதாலும் உதவியளிக்கப்பட்டது.

பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் உறுப்பினரான ஜனநாயகக் கட்சி பிரதிநிதி ஜேசன் குரோ, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க இராணுவ செயலாளர் ரியான் மெக்கார்த்தியுடன் அவர் நடத்திய ஒரு தொலைபேசி அழைப்பை பற்றி அறிவித்தார். மெக்கார்த்தி, குரோவுக்கு "நீண்ட துப்பாக்கிகள், எரிபொருள் குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் கைவிலங்குகள் [கேபிடல் மீதான தாக்குதலுக்குப் பின்னர்] மீட்கப்பட்டமை ஒரு பெரிய பேரழிவு சிறிய இடைவெளியில் தவிர்க்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

"கிளர்ச்சியில் கடமையிலும் மற்றும் இருப்பிலுள்ள இராணுவ உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற அறிக்கைகள் குறித்து தான் கடுமையான கவலைகளை எழுப்பினார்" என்றும், "பதவியேற்புக்காக நிலைநிறுத்தப்பட்ட துருப்புக்கள் ... உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் காட்டுபவர்களாக இருக்ககூடாது" என்றும் குரோ வலியுறுத்தினார்.

வாஷிங்டனில் நடந்த நிகழ்வுகளின் தீவிரத்தை பெரிதுபடுத்தக் கூடாது என்றும், ஒரு சதித்திட்டம் என்று குறிப்பிடுவது தவறு என்றும் பல்வேறு போலி-இடது போக்குகளால் கூறப்படும் கூற்றுக்கள் ஆபத்தான மனநிறைவைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் இணைந்திருக்கும் ஜாக்கோபின் பத்திரிகை, "சமூக ஊடக இடுகைகள் மற்றும் தாராளவாத பத்திரிகைகள் உடனடியாக இந்த வன்முறையை ஒரு சதி என குணாதிசயப்படுத்தியதற்கு" எதிராக விவாதிக்கின்றது.

பாசிச வன்முறையின் ஆபத்து மிகக் குறைவு, ஏனெனில் ஆளும் வர்க்கம் ஜனநாயகத்தை ஆதரிக்கிறது என ஜாக்கோபின் கூறுகின்றது. அது பின்னர் இவ்வாறு எழுதுகிறது: “காங்கிரஸைக் கைப்பற்றுவது பெருநிறுவன உயரடுக்கினரிடையேயும், அரசு நிறுவனங்களிடையேயும், தீவிர வலதுசாரி சர்வாதிகாரத்திற்கான ஆதரவு பற்றாக்குறையாக இருந்ததை வெளிப்படுத்தியுள்ளது. தலைநகரம், தாராளவாத ஜனநாயகத்திற்கு இன்னும் உறுதியுடன் உள்ளதுடன், இது அமெரிக்க வரலாறு முழுவதும் அதன் நலன்களைப் பாதுகாக்க உதவியது”.

இத்தகைய கருத்துக்கள் அரசியல் முட்டாள்தனம் மற்றும் ஜாக்கோபின் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்-நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற அடுக்குகளை குணாதிசயப்படுத்தும் மனநிறைவு இரண்டையும் பிரதிபலிக்கின்றன. ஜாக்கோபினின் கருத்துப்படி, ட்ரம்ப்பின் சர்வாதிகார நடவடிக்கைகள், ஆளும் தன்னலக்குழுவின் வர்க்க நலன்களிலிருந்தும், ஜனநாயகத்திற்கான புறநிலை அடிப்படையை அரித்துவிட்ட பாரிய சமூக சமத்துவமின்மையிலிருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. சமூக துருவமுனைப்படுத்தலிருந்து எழும் அழுத்தங்கள் தொற்றுநோயால் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவில் 385,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

அரசியல் நெருக்கடியையும் மற்றும் ட்ரம்ப்பின் சதித்திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளையும் மெத்தனமாக குறைத்து மதிப்பிடுவதன் மற்றொரு அம்சம், வார இறுதியில் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை மூடுவதற்கான பதிலாக இருந்தது. தற்போதைய சூழ்நிலைகளில் ஜனநாயக உரிமைகளுக்கான முக்கிய அச்சுறுத்தலாக இந்த நடவடிக்கையைப் பார்ப்பது, இப்போது என்ன நடக்கிறது என்பதை முழுமையாக குறைத்து மதிப்பிடுவதை வெளிப்படுத்துகிறது.

ஒரு அதிருப்தியான முற்போக்கான மற்றும் இடதுசாரி இயக்கத்தின் பிரதிநிதியாக கூட இருக்கட்டும், ட்ரம்ப் வெறுமனே ஒரு தனிநபர் அல்ல. அமெரிக்காவின் ஆயுதப் படைகளின் தளபதியாக உள்ள அவர் ஜனாதிபதியாக இருக்கும் வரை, ஒரு அணுசக்தி போரை நடத்தும் சக்தி உட்பட, அவர் வசம் அதிகமான அதிகாரங்களைக் கொண்டுள்ளார். ட்விட்டர் மற்றும் சமூக ஊடகங்களுக்கான (இதனால் அவர் நாடு முழுவதும் தனது பாசிச பின்தொடர்பவர்களை அணிதிரட்டவும் தூண்டவும் முடியும்) அவரது தடையற்ற அணுகலை வலியுறுத்துவது, ஒரு முக்கியமான பேச்சு சுதந்திர பிரச்சினை என்பது முட்டாள்த்தனமானது, இல்லையென்றால் அரசியல்ரீதியாக பொறுப்பற்றதாகும். அவரது ட்விட்டர் கணக்கை மூடுவது அனுமதிக்கப்படமுடியாது என்றால், அவர் உடனடியாக வெள்ளை மாளிகையில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என்று கோருவது இரட்டிப்பாக அனுமதிக்கப்பட முடியாததாகும்! போலி-இடதுகளின் அரசியல்ரீதியாக திவாலான இழிந்தவர்கள் ட்ரம்பின் உரிமைகள் குறித்து குறைவாக கவலைப்பட வேண்டும், மேலும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

பைடென் நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட், உளவு அமைப்புகள் மற்றும் இராணுவத்தின் வலதுசாரி அரசாங்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு பிற்போக்குத்தனமான முதலாளித்துவ அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான பணி தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பே தவிர, பாசிச சக்திகளை அணிதிரட்டும் ஒரு வலதுசாரி சர்வாதிகாரியின் பொறுப்பல்ல.

தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக இந்த நெருக்கடியில் தலையிட்டு, பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை அதன் சொந்த முறைகள் மற்றும் அதன் சொந்த வேலைத்திட்டத்தின் மூலம் நடத்த வேண்டும்.

ஆளும் வர்க்கத்தின் எந்தப்பிரிவின் மீதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பை வைக்க முடியாது. ட்ரம்ப்பின் பாசிச வன்முறையைத் தூண்டுவது உள்நாட்டுப் போரை கட்டவிழ்த்து விடுகிறது என்பதை ஆளும் வர்க்கத்திற்குள் இருக்கும் ட்ரம்ப்பின் எதிரிகள் நன்கு அறிவார்கள். எவ்வாறாயினும், ட்ரம்ப்பிற்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதில் அவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர், ஏனெனில் இது அவர்கள் மிகவும் துல்லியமாக அஞ்சும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தின் வளர்ச்சி பற்றி கவலைப்படுகின்றனர்.

இந்த காரணத்தினாலேயே, ஜனநாயகக் கட்சியினர் பாசிச சதித்திட்டத்தை தூண்டுவதில் ட்ரம்ப்பின் பங்கைப் பரந்த அரசியல் உள்ளடக்கத்தில் இருந்து அகற்ற முயல்கின்றனர். குறிப்பாக, ஜனநாயகக் கட்சியின் தலைவராக பைடென், குடியரசுக் கட்சியின் அமைப்பை பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார். அதன் தலைவர்களோ தேர்தல் திருடப்பட்டதாக ட்ரம்ப்பின் கூற்றுக்களை நியாயப்படுத்துவதற்கு சதித்திட்டத்திற்கு தேவையான அரசியல் மூடிமறைப்பை வழங்கினர்.

சதி முயற்சிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட ஒரே ஒரு பொது அறிக்கையில், பைடென் வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஒரு "வலுவான" குடியரசுக் கட்சிக்கு தான் உறுதிபூண்டிருப்பதாகக் கூறினார். அவர் செனட் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானலை புகழ்ந்துரைத்தார். சதித்திட்டத்தின் பிற்பகலில் பைடெனின் வெற்றியை காங்கிரஸ் அங்கீகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த மெக்கனலின் அறிக்கையைப் பற்றி தான் "மிகவும் பெருமைப்படுவதாக" கூறினார்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதிநிதிகள் சபையில் பதவிவிலக்கல் குற்றச்சாட்டுகளை நிறைவேற்ற ஜனநாயகக் கட்சியினரின் நடவடிக்கை, புதன்கிழமை முற்பகுதியில் நிகழக்கூடும். பதவிவிலக்கல் குற்றச்சாட்டு எந்தவொரு நடைமுறை விளைவையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த அனைத்து வகையான எச்சரிக்கைகளுடன் அக்குற்றச்சாட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பைடெனின் நெருங்கிய கூட்டாளியான ஜேம்ஸ் கிளைபர்ன் தலைமையிலான உயர்மட்ட ஜனநாயக கட்சியினர், செனட்டிற்கு எந்தவொரு பதவிவிலக்கல் குற்றச்சாட்டுகளையும் அனுப்புவதற்கு காத்திருக்குமாறு சபையை கேட்டுக் கொள்கின்றனர். இதன் பொருள் ட்ரம்பின் பதவியில் மீதமுள்ள நாட்களில் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

காங்கிரஸ் உடனடியாக செனட்டிற்கு குற்றச்சாட்டுகளை அனுப்பினால், பைடெனால் பாராட்டப்பட்ட ட்ரம்ப்பின் உதவியாளரான மெக்கனெல், பதவியேற்புக்கு முந்தைய நாள் ஜனவரி 19 வரை ஒரு விசாரணையையும் கூட்ட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும், ட்ரம்ப்பின் தனிப்பட்ட பங்கு எவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், இது தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் இராணுவ மற்றும் பொலிஸ் அமைப்பில் உள்ள பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். ட்ரம்பின் சதித்திட்டத்தை அரசியல்ரீதியாக ஊக்குவித்ததற்காக உடனடியாக கைது செய்யப்படுவதை தவிர்த்தது மட்டுமல்லாது, செனட்டர்கள் டெட் குரூஸ் மற்றும் ஜோஷ் ஹவ்லி ஆகியோரின் இராஜிநாமாவைக் கூட பைடென் குறிப்பாக நிராகரித்தார். இதைவிட ருடால்ப் கியுலியானி, ட்ரம்ப்பின் மகன்கள் மற்றும் ட்ரம்ப்பின் வழக்கறிஞர்கள் அல்லது நேரடியாக தூண்டுதலில் ஈடுபட்ட எவரையும் உடனடியாக கைது செய்ய அழைப்பு விடுக்கப்படவுமில்லை.

ஜனவரி 6 ம் தேதி பாசிச சதி அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. மேலும் இதிலிருந்து படிப்பினைகள் எடுக்கப்பட வேண்டும். இது அமெரிக்க முதலாளித்துவ சமுதாயத்தின் பரந்த நிலைமுறிவின் வெளிப்பாடு ஆகும். தற்போதுள்ள பொருளாதார ஒழுங்கின் ஆழ்ந்த நெருக்கடியின் அடிப்படையில் எழும் ஒரு சமூக இயக்கம்தான் இது என்பதை அங்கீகரிக்காமல், பாசிச அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட முடியாது. பாசிசத்தின் ஊடக, ஆளும் உயரடுக்கினர், பாரிய சமூக அதிருப்தியை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு பிற்போக்குத்தன இயக்கமாக திசைதிருப்ப முற்படுகிறார்கள்.

பாசிசத்திற்கான அரசியல் மாற்று மருந்தானது சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியாகும். மேலும், இந்த போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் எந்த அளவிற்கு முன்வருகிறதோ, அந்தளவிற்கு அது ஜனநாயகக் கட்சிக்கும் பைடென் நிர்வாகத்திற்கும் எதிரான போராட்டத்தில் அளவிடமுடியாத அளவிற்கு பலப்படுத்தப்படும்.

சோசலிச சமத்துவக் கட்சி ஜனவரி 20 இனதும், அதைத் தொடர்ந்த பாசிச வன்முறைகளுக்கு ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகளுடன் பதிலளிக்குமாறு தொழிலாளர்களை அழைக்கிறது. தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களிலும், குடியிருப்புகளிலும், நகரங்களிலும், தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் அணிதிரட்டுவதற்கும் ஐக்கியப்படுத்துவதற்கும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலைப்பின்னல் உருவாக்கப்பட வேண்டும்.

பாசிச சதி என்பது நிதி தன்னலக்குழுவின் நலன்கள் பற்றியது என்பதை காட்டிலும் "வெள்ளையினத்தவராக இருப்பதன்" வெளிப்பாடு என்ற ஜனநாயகக் கட்சியினரின் கூற்றுக்கள் உட்பட, அரசியல் நிலைமையினுள் இனமோதல் மற்றும் பிளவுகளை புகுத்தும் அனைத்து முயற்சிகளையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். இவ்வாறான கட்டுக்கதைகள் பாசிஸ்டுகளுக்கு அரசியல் வெடிமருந்துகளை மட்டுமே வழங்குகிறது. நாடு முழுவதும், அனைத்து இனங்களையும் இனக்குழுக்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் தோளோடு தோள்நின்று உழைக்கிறார்கள். அவர்கள் ஒரு பொதுவான சமூக, பொருளாதார நெருக்கடியையும், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் பொதுவான எதிரிகளையும் எதிர்கொள்கின்றனர்.

ஜனநாயக உரிமைகளை அழிக்கும் ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளுக்கான வெகுஜன எதிர்ப்பு ஜனவரி 6 ஆட்சி சதி பற்றிய ஒரு முழுமையான, திறந்த மற்றும் பொது விசாரணைக்கான கோரிக்கையுடன் இணைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கையை ஒழுங்குபடுத்துவதற்கும் அரசியல் மூடிமறைப்பை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட அனைவரையும் பதவியில் இருந்து நீக்கி, கைது செய்து வழக்குத் தொடர வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய படையினர் மற்றும் காவல்துறையினரால் பாதுகாக்கப்பட்ட பைடென் ஜனவரி 20 அன்று பதவியேற்று வெள்ளை மாளிகையில் நுழைந்தாலும், நெருக்கடி கடந்துவிடாது. அமெரிக்க ஜனநாயகம் அதன் மரண வேதனையில் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் கூட்டை உருவாக்கி சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவதை தவிர இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற முற்போக்கான வழி எதுவும் இருக்க முடியாது.

இந்த இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அவசியத்தை இப்போது உணர்ந்தவர்கள் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய வேண்டும்.

Loading