ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் 600,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பாவில் 600,000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர் என்று ரஷ்யாவை அதன் எண்ணிக்கையில் உள்ளடக்கி வேர்ல்டோமீட்டர் அட்டவணைப்படுத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரத் தொடக்கத்தில் ஐரோப்பாக் கண்டம் கொடூரமான குறியீட்டை விஞ்சிவிட்டது.

ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் சுமார் 100,000 மக்கள் கண்டத்தில் வைரஸால் இறந்து கொண்டிருக்கிறார்கள். மொத்தம் 300,000 இறப்புகள் நவம்பர் 10 திகதி அளவில் நிகழ்ந்தன; அந்த மாத இறுதியில் 400,000; மேலும் கிறிஸ்துமஸுக்கு மூன்று நாட்களுக்கு முன் 500.000 ஆக இருந்தன.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முகக்கவசம் அணிந்த ஒரு பெண், ரஷ்யாவின் மாஸ்கோவில், ஜனவரி 11, 2021 திங்கள் அன்று சுரங்கப்பாதை இரயிலில் பயணம் செய்கிறார். (AP Photo/Alexander Zemlianichenko)

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் உயிருடன் இருந்த 1,000 பேரில் ஒருவர் கொரோனா வைரஸால் இறந்துள்ளார். மக்கள் தொகையில் ஒரு மில்லியன் மக்களுக்கு, இறந்தவர்களின் எண்ணிக்கை பெல்ஜியத்தில் 1,700 க்கும், ஸ்லோவேனியாவில் 1,477 க்கும், இத்தாலியில் 1,330 க்கும், இங்கிலாந்தில் 1,245 க்கும், ஸ்பெயினில் 1,131 க்கும் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,060 பேர்கள் ஜேர்மனியில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, நாட்டின் இறப்பு எண்ணிக்கை 43,203 ஆக உள்ளது.

இந்த எண்ணிக்கைகள் உண்மையான எண்ணிக்கையில் ஒரு குறிப்பிடத்தக்களவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பெயினில், உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 52,878 ஆகும், ஆனால் வரலாற்று நெறிகளுக்கு மேலாக "அதிகப்படியான இறப்புக்களின்" எண்ணிக்கையாக — பெருந்தொற்று நோய் காரணமாக இறப்புக்கள் பற்றிய ஒரு சிறந்த அளவாக — 83,700 ஆக இருக்கின்றது.

ஆயினும்கூட, பெருந்தொற்று நோய் அதற்கு முந்தைய எதையும் விட மிக பேரழிவுகரமான நிலைக்கு நுழைகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். செப்டம்பரில் இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்ட புதிய, மேலும் மிகவும் தொற்றுடைய திரிபு வகையின் விரைவான பரவலால் இது உந்தப்படுகிறது, மேலும் ஐரோப்பிய அரசாங்கங்களின் குற்றவியல் கொள்கைகளால் நனவுபூர்வமாக வசதி செய்யப்படுகிறது. சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறைகள் நிரம்பிவழிவதாக இருந்தும், பள்ளிகளும் அத்தியாவசியமற்ற பணியிடங்களும் திறந்த நிலையில் வைக்கப்படுகின்றன, வைரஸ் பரவுபவர்களாக அவற்றின் பங்கு இருந்தபோதிலும், எந்தவொரு மரணமும் வணிகத்தின் சீரான மற்றும் இலாபகரமான செயற்பாட்டைத் தடுக்காது என்பதை உறுதிசெய்கிறது.

என்ன தயார் செய்யப்படுகிறது என்பது பற்றிய தெளிவான எச்சரிக்கையை இங்கிலாந்தில் காணலாம். நேற்று 1,564 பேர்கள் இறந்தது புதிய எண்ணிக்கையாக இருந்தது. அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில், இது 24 மணி நேரத்தில் 7,700 க்கும் அதிகமான இறப்புக்களை ஏற்படுத்தும். இதே காலகட்டத்தில் மேலும் 47,525 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வைரஸின் புதிய மரபுவழி திரிபு இப்போது இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. புதிய திரிபு வகை முதன் முதலாக கிறிஸ்துமஸ் தினத்தன்று கண்டறியப்பட்ட அயர்லாந்தில், புதிய தொற்றுக்கள் ஆண்டு தொடக்கத்தில் மில்லியன் மக்களுக்கு 250 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் இருந்து இப்போது 1,200 ஆக உயர்ந்துள்ளது, இது இரண்டு வார இடைவெளியில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

ஐரோப்பா முழுவதும், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அடையாளம் காணப்பட்ட வகைகள் ஒரு டஜன் நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன, இருப்பினும் இது ஏற்கனவே மக்கள் தொகை முழுவதும் எந்த அளவிற்கு தன்னை நிலைநிறுத்தியுள்ளது என்பது தெரியவில்லை.

இந்த பரவல் பற்றி அதிகாரிகள் கண்காணிக்கத் தவறியதற்கு பிரான்ஸ் ஒரு தெளிவான உதாரணம் கொடுக்கிறது. இங்கிலாந்து திரிபு வகை முதல் தொற்று டிசம்பர் இறுதியில் தூர் (Tours) இல் கண்டறியப்பட்டது. ஜனவரி இரண்டாம் வார இறுதியில், கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை பற்றிய செய்தி ஊடகத் தகவல்கள் 10 முதல் 20 வரை அத்தகைய தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டன. ஜனவரி 12 அன்று, சுகாதார மந்திரி ஒலிவியே வெரான் தேசிய சட்டமன்றத்தின் முன் பேசுகையில், "பிரான்சில் நடத்தப்பட்ட 100,000 பரிசோதனைகளில் தோராயமாக ஒரு சதவீதத்திற்கு" இந்த புதிய திரிபு பங்களித்துள்ளது என்று தெரிவித்தார்.

இருப்பினும் இது ஒரு குறிப்பிடத்தக்க குறைமதிப்பாக தோன்றுகிறது, மேலும் இருப்பிடத்திற்கு ஏற்ப பெரிதும் மாறுபடுகிறது. பாரிசுக்கு அருகிலுள்ள Saint Denis இல் உள்ள மருத்துவ ஆய்வகத்தின் பிராந்திய இயக்குனர் Patrice HŽrisson செவ்வாயன்றுLe Parisien இடம் கூறினார், "10 முதல் 15 சதவிகிதம் பேர் சந்தேகத்திற்குரிய ஆங்கில திரிபு வகைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்."

பரிசோதனை ஆய்வக பயோகுரூப்பின் உயிரியலாளர் லாரன்ட் க்பேயர் தினசரி பத்திரிகைக்குத் தெரிவித்ததாவது, “வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 826 உறுதிபடுத்தப்பட்ட தொற்று PCR சோதனைகளில், Ile-de-France உள்ள எங்கள் ஆய்வகங்களில், ஆங்கில திரிபுகளின் 74 சந்தேகத்திற்கிடமான தொற்றுக்களை நாங்கள் கண்டறிந்தோம்,” இது 10 சதவீதவிகித்திற்கு சற்று குறைவானது.

இம்பீரியல் கல்லூரி லண்டனிலும், பிரான்சிலுள்ள லில் இலும் மரபமைப்பியல் பேராசிரியரான Philippe Froguel திங்களன்று பைனான்சியல் டைம்ஸிடம் இந்த திரிபு வகை பிரான்சில் நன்கு வேரூன்றியிருக்கலாம் என்று கூறினார். பிப்ரவரிக்குள், "ஒரு நாளைக்கு 50,000-60,000 புதிய தொற்றுக்கள் மற்றும் ஏராளமான இறப்புக்கள் கொண்ட ஐக்கிய இராச்சியம் போலவே அதே நிலையில் நாம் இருக்க வேண்டும் என்று நான் அஞ்சுகிறேன்." என்று கூறினார்.

பெல்ஜியத்திலும் இந்த திரிபு வகை கண்டறியப்பட்டுள்ளது, இது தலைநகர் பிரஸ்ஸல்ஸில் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த வியாழக்கிழமை வரை ஏழு நாள் தொற்றுக்கள் மொத்தத்தில் 76 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஸ்பெயினின் வாலென்சியாவில், இங்கிலாந்திற்கு எந்த தொடர்புகளும் இல்லாத இரண்டு நோயாளிகள் கடந்த வாரம் திரிபு வகை தொற்றுள்ளதாக பரிசோதிக்கப்பட்டனர், இது சமூகப் பரவல் நடைபெறுகிறது என்பதை நிரூபிக்கிறது. "இது சமூக பரவல் உள்ளது என்பது தெளிவாக உள்ளது, ஆனால் எந்த மட்டத்தில் எங்களுக்கு தெரியாது," என்று பெர்னான்டோ கோன்சாலேஸ் கண்டலாஸ், வாலென்சியாவிலுள்ள ஒரு மரபியல் ஆராய்ச்சியாளர், FT இடம்கூறினார்.

புதனன்று ஐரோப்பிய ஒன்றிய சுகாதார ஆணையர் ஸ்டெல்லா கிரிகைட்ஸ் புதிய மரபுவழி திரிபு பற்றி ஐரோப்பா "மெத்தனமாக இருக்க முடியாது" என்று அறிவித்தார். "அதை நாம் கையை மீறி வெளியே விட முடியாது. எனவே, மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்தல் பகுதியில் உறுப்பு நாடுகளுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். இதற்கு வழி இல்லை" என்றார்.

ஆயினும்கூட ஐரோப்பிய அரசாங்கங்கள் இந்த வைரஸின் "கையை மீறி" பரவ அனுமதித்தது மட்டும் இல்லாமல், அவை இந்த வைரஸ் இன்னும் கட்டுப்பாடற்ற பரவலை அனுமதிக்கும் கொள்கைகளை நனவுடன் பின்தொடர்வதை கொண்டிருக்கின்றன. பெற்றோர்கள் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் பள்ளிகளைத் திறந்திருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இங்கிலாந்தில் உள்ளதைப் போல பள்ளிகள் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவது, அல்லது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைகளுக்கு பரந்த மக்களின் எதிர்ப்பு என்ற அரசாங்கத்தின் அச்சம் தான் இதற்குக் காரணம்.

பிரான்சில், புதிய திரிபு வைரஸ் குறிப்பாக இளைஞர்களிடையே தொற்றுவதாகத் தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்தாலும் கூட, பள்ளிகள் திறந்தே உள்ளன. சமூக ஊடகங்களில், பிரெஞ்சு ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் ஒரு உறுதி செய்யப்பட்ட தொற்றுக்கள் இருந்தாலும் கூட, அவர்கள் குழந்தைகளை பரிசோதனைக்காக வீட்டிற்கு அனுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளனர். "அவர்கள் பரிசோதனை பெற ஒரு தொடர்பு தொற்று இருந்தால் நாங்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்ப முடியாது," என்று லெய்டி “ஸ்டைலோஸ் ரூஜஸ்” பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். "எங்களுக்கு 11 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆபத்தான தொடர்புகளாக கருதப்படுவதில்லை" என்று ஜூசிலோ கூறினார்.

நேற்று போர்த்துகீசிய அரசாங்கம் ஒரு பொது முடக்கத்தை அறிவித்தது, அது ஏப்ரல் மாதம் திணிக்கப்பட்டதைப் போலவே இருக்கும் என்று கூறியது, தவிர அனைத்து பள்ளிகளும் திறந்திருக்கும்.

கடந்த வாரம், வெஸ்ட்பாலியன் நகரமான காமென் நகரில், ஒரு பகல் நேர பராமரிப்பு மையத்தில் ஏற்பட்ட நோய் வெடிப்பைத் தொடர்ந்து 44 வயதான ஒரு கல்வியாளர் இறந்துள்ளார். ராபர்ட் கோச் நிலையத்தின்படி, ஐந்து கல்வியாளர்கள் டிசம்பர் முதல் ஜேர்மனியில் கொரோனா வைரஸினால் இறந்துள்ளனர்.

ஐரோப்பா முழுவதிலுமுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் கைகளில் விடப்பட்டால், இதன் விளைவாக மேலும் நூறாயிரக்கணக்கான தேவையற்ற மரணங்கள் ஏற்படும். அவர்களின் மரணக் கொள்கையானது ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் எதிர்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்கள் மூடப்பட வேண்டும், அனைவருக்கும் வாழ்க்கைக்கான ஊதியமும், சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சிகளானது பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் சுயாதீனமான சாமானியக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கிறது, பெருந்தொற்று நோய்க்கு விஞ்ஞானரீதியான விடையிறுப்பை செயற்படுத்துவதற்காக ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்க வேண்டும். முதலாளித்துவ உயரடுக்கின் படுகொலைக் கொள்கை முதலாளித்துவத்தின் சமூக ஒழுங்கின் திவால்தன்மையை எடுத்துக்காட்டியுள்ளது, மற்றும் இது சமூகத் தேவையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்படுவதும், தனியார் இலாபத்திற்கு அல்லாமல் அது ஒரு திட்டமிட்ட சோசலிச சமூகத்தை சர்வதேச அளவில் மாற்றீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது.

Loading