முன்னோக்கு

பள்ளிகள் மற்றும் வணிகங்களைத் திறப்பதற்கான ட்ரம்ப்பின் பிரச்சாரத்தை தொடர பைடென் உறுதியளிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் கோவிட்-19 இன் முதல் தொற்று கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர், 400,000 க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

தினசரி இறப்பு எண்ணிக்கை மற்றும் புதிய தொற்றுக்கள் பாரியளவில் உள்ளன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, அடுத்த மூன்று வாரங்களில் 90,000 பேர் இறக்கக்கூடும். இது கூட குறைத்து மதிப்பீடாக இருக்கலாம். கோவிட்-19 இன் புதிய, அதிகமாக தொற்றக்கூடிய வகைகள் 20 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இது தொற்றுநோய் இன்னும் விரைவாக பரவுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றது.

இந்த பேரழிவு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடெனின் பதவியேற்பின் பின்னணியில் நிகழ்கின்றது. அவர் ட்ரம்ப் நிர்வாகம் தொற்றுநோயை தவறாக கையாள்வது தொடர்பான மக்கள் வெறுப்பு மற்றும் சீற்றத்தின் அலைகளின் மத்தியில் புதன்கிழமை பதவியேற்க உள்ளார்.

சமூக விலகலை ஊக்குவிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட செவ்வகங்கள் சான் பிரான்சிஸ்கோவின் சிவிக் மையத்தில் நகரத்தால் அனுமதிக்கப்பட்ட வீடற்றவர்களின் முகாமில் 2020 மே 21 வியாழக்கிழமை வரையப்பட்டுள்ளன.(AP Photo/Noah Berger)

ட்ரம்ப்பை போலல்லாமல், பைடென் “விஞ்ஞானிகளுக்கு செவிசாய்ப்பார்” என்றும் மனித உயிர்களைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் பைடெனுக்கு வக்காலத்துவாங்குபவர்கள் கூறுகின்றனர். பைடெனின் கோவிட்-19 கொள்கை குறித்து நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிற்றுக்கிழமை “அடுத்த ஜனாதிபதிக்கு உண்மையில் ஒரு கோவிட் திட்டம் உள்ளது.” என்று ஒரு தலையங்கத்தை வெளியிட்டது.

“அப்படியானால், இந்த பிரச்சினைகளை கவனமாக எடுத்துக் கொள்ளும் தலைமைத்துவத்திலிருந்து நாடு சில நாட்கள் தள்ளியே உள்ளது என்பதை நம்பலாம். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடென், கொடிய கொரோனா வைரஸிற்கான நாட்டின் பிரதிபலிப்பை மாற்றியமைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார்” என்று அக்கட்டுரை முடிவடைகிறது.

டைம்ஸ் தலையங்கம் கட்டுரையானது எவ்வாறாயினும், பைடென் மற்றும் ஜனநாயகவாதிகள் தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அவசரமாகத் தேவையான நடவடிக்கைகளை எதிர்த்தனர் மற்றும் தொடர்ந்து எதிர்க்கின்றனர் என்ற உண்மையை மறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நேர்மையற்ற கட்டுக்கதையாகும்.

தற்போதைய பேரழிவின் தோற்றத்தை விளக்குவதில், டைம்ஸ் கடந்த ஆண்டு "அதிகாரிகள்" செய்த "வெளிப்படையான தவறுகளை" பற்றி எழுதுகிறது. "வசந்த மற்றும் கோடைகாலங்களில், பிரச்சனையாக இருந்தவை பரிசோதனை மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களாகும்; இந்த குளிர்காலத்தில் இப்பிரச்சனை தடுப்பூசி மற்றும் மரபணு கண்காணிப்பு ஆக உள்ளது".

இல்லை, இவை “தவறுகள்” அல்ல. வோல் ஸ்ட்ரீட்டிற்கு பிணை எடுப்பு கிடைக்கும் வரை நிதிச் சந்தைகளில் பீதியைத் தடுக்கும் நோக்கத்துடன் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் பரிசோதனை உள்கட்டமைப்பை வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளபடி, திரைக்குப் பின்னால் வெள்ளை மாளிகையின் தொற்றுநோயை ஒழுங்கமைத்த ஜாரெட் குஷ்னர், “அதிகமானவர்களைச் சோதிப்பது, அல்லது அதிகமான சுவாசு கருவிகளை வாங்குவது சந்தைகளைத் தூண்டிவிடும், எனவே நாங்கள் அதைச் செய்யக்கூடாது என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்.”

இந்த மூடிமறைப்பு முற்றிலும் இரு கட்சிக்கும் பொருந்தும். தொற்றுநோயின் பெரும் ஆபத்து குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் ஏராளமான நம்பத்தக்க விளக்கங்களைப் பெற்ற போதிலும், காங்கிரசின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களை எச்சரிக்க எதுவும் செய்யவில்லை. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 29 வரை இந்த விஷயத்தில் ஒரு தலையங்கம் கூட எழுத மறுத்து, அதிகரிக்கும் தொற்றுநோயை மூடிமறைத்து டைம்ஸ் தனது பங்கைச் செய்தது.

பரிசோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் ஆகியவற்றின் மோசமான நிலை நாடு முழுவதும் தொற்றுநோயைப் பற்றவைக்க உதவியது என்றாலும், தொடர்ந்து கட்டுப்பாடில்லாமல் வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களையும், இலாபங்களையும் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் முழு அரசியல் ஸ்தாபகமும் நிராகரித்ததாகும். அதிகாரவர்க்கம் குறிப்பாக, மார்ச் மாத இறுதியில் வங்கிகளுக்கு பிணை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் நாடு முழுவதும் உள்ள ஜனநாயகக் கட்சி ஆளுநர்களின் ஆதரவோடு “வேலைக்குத் திரும்பு” என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

உண்மையில், டைம்ஸ் அதன் தலையங்கக் குறிப்புகள் வெளியான அதே நாளில் விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு கட்டுரையில், “தற்போதைய வெடிப்பின் தீவிரத்திற்கான காரணத்தை கடந்த வசந்த காலத்தில் அவசரமாக மீண்டும் திறப்பதிலையே காணலாம்” என எழுதியது.

டைம்ஸ் "வெளிப்படையான தவறுகளை" செய்த "அதிகாரிகளை" பற்றி குறிப்பிடுகையில், டைம்ஸின் பக்கங்களில்தான் அதன் கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மானால், "நோயை விட குணப்படுத்துதல் மோசமாக இருக்க முடியாது" என்ற கோரிக்கை முதலில் எழுப்பப்பட்டது. இது பள்ளிகளையும் வணிகங்களையும் மீண்டும் திறக்கும் இரு கட்சி பிரச்சாரத்தின் முழக்கமாக மாறியது.

வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க இப்போது தேவையான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, டைம்ஸ் “முகமூடிகள், உடல்ரீதியான தூரவிலக்கல், மூடல்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள்” ஆகியவற்றின் தேவையைக் குறிப்பிட்டது. “இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும், சரியாகவும் பயன்படுத்தப்படும்போது அவை பயனளிக்கும், "மற்றும்" பதவிக்கு வரும் நிர்வாகம் இந்த புள்ளியை முடிந்தவரை பலமாக நாட்டில் புகுத்தவேண்டும்" என அது எழுதியது.

ஆனால் மிக அடிப்படையான “சமூக விலக்கல்” நடவடிக்கைகளில் பள்ளிகள் மற்றும் அத்தியாவசிய உற்பத்தி ஆகியவை மூடப்படுதல் அடங்கும். Science இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், சமூக ஒன்றுகூடல்களை 10 பேருக்கு மட்டுப்படுத்துவது தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த முறையாகும். இது பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடுவதன் மூலம் நெருக்கமாகப் பின்பற்றப்படுகிறது, பின்னர் "மிகவும் தேவையற்ற வணிகங்களை" மூடுவதை தொடர்கின்றது” என்று எழுதியது.

பைடென் தனது நிர்வாகம் "விஞ்ஞானத்தின் கருத்துகளைக் கேட்பார்" என்று கூறினாலும், ஜனநாயகக் கட்சியினர் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றிலும் எதிர்க்கின்றனர். "நான் பொருளாதாரத்தை மூடப் போவதில்லை." என்று பைடென் நவம்பரில் கூறினார். "தேசிய மூடல் இல்லை ... மொத்த தேசிய மூடுதல் தேவைப்படும் எந்த சூழ்நிலையும் நான் காணவில்லை." என்றும் அறிவித்தார்.

அதற்கு மாறாக, அவரது கோவிட்-19 திட்டத்தின் மையத்தில் பள்ளிகள் மற்றும் பணியிடங்களை முன்கூட்டியே மீண்டும் திறப்பதற்கான உறுதிமொழி உள்ளது. "முதல் 100 நாட்களின் முடிவில் எங்கள் பள்ளிகளை பாதுகாப்பாக மீண்டும் திறக்க … நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம்" என்று பைடென் வியாழக்கிழமை கூறினார்.

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான உந்துதலின் மைய நோக்கம், பெரிய நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டுவதற்காக தொழிலாளர்களை மீண்டும் பணியிடங்களுக்குள் கொண்டு செல்வதே புதிய நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த வாரம், பைடெனின் தேசிய பொருளாதார கவுன்சிலின் எதிர்வரும் இயக்குனர் பிரையன் டீஸ், "பெற்றோர்கள்… மீண்டும் வேலைக்குச் செல்ல நாங்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும்" என Reuters மாநாட்டில் தெரிவித்தார்.

பள்ளிகள் மற்றும் வணிகங்களை மீண்டும் திறப்பதற்கான உந்துதலைத் தாண்டி, பைடெனின் கோவிட்-19 க்கான முக்கிய திட்டமாக இருப்பது “மத்திய அரசின் உத்தியோகத்தர்கள் மற்றும் மத்திய அரசின் உடமைகளிலும், மாநிலங்களுக்கு இடையேயான இரயில் மற்றும் விமான பயணங்களில்” ஒரு முகமறைப்பு அணியவேண்டும் என்ற ஆணையாகும். இது முற்றிலும் போலியான மற்றும் அர்த்தமற்ற நடவடிக்கையாகும். இது அமெரிக்க தொழிலாளர் தொகுப்பில் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே பொருந்தும்.

1,400 டாலர் “உதவி காசோலைகளை” ($ 2,000 இலிருந்து குறைக்கப்பட்டது) விரைவாக ஆதரிப்பதாக பைடெனின் உறுதிமொழியைப் பொறுத்தவரை, இது உண்மையில் அவசியமானவற்றிலிருந்து திசைதிருப்பப்படும் ஒன்றாகும். அதாவது அத்தியாவசியமற்ற தொழில்களில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு வருமானமானது, தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கு வரும் வரை அவர்கள் வீட்டிலேயே இருக்க அத்தியாவசியமானதாகும்.

டைம்ஸ், அதன் சிறப்பியல்பான நேர்மையற்ற தன்மையுடன், பள்ளிகள் மற்றும் வணிகங்களை மூடுவதற்கான அழைப்புகளை பைடென் நிராகரிப்பதை வெறுமனே புறக்கணித்தாலும், தொற்றுநோய் குறித்த ஜனநாயகக் கட்சியினரின் கொள்கை குறித்த நேரடி விளக்கத்தை இந்த மாதம் நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ வழங்கினார். அவர் மூடுதலை ஏற்றுக்கொள்ள முடியாதவை, ஏனெனில் "அதற்கான செலவு மிக அதிகமாக உள்ளது" என்றார்.

"தடுப்பூசி குறிப்பிடத்தக்க மக்களை அடையும்வரை நாங்கள் மூடியிருக்க முடியாது," என்று குவோமோ கூறினார். “அதற்கான செலவு மிக அதிகம். பின்னர் திறக்க எங்களுக்கு எதுவும் மிச்சமிருக்காது. நாம் பொருளாதாரத்தை மீண்டும் திறக்க வேண்டும்” என்றார்.

உலகின் பில்லியனர் தலைநகரான நியூயோர்க் நகரத்தைக் கொண்ட ஆளுநரிடமிருந்து வரும் இந்த கூற்று அபத்தமானது. கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, அமெரிக்காவின் பில்லியனர்களின் செல்வம் தொற்றுநோய்க்குப் பின்னர் 1 டிரில்லியன் டாலரால் அதிகரித்து 4 டிரில்லியன் டாலராகியுள்ளது.

அமெரிக்காவின் 10 செல்வந்த பில்லியனர்களின் நிகர மதிப்பு ஒன்றிணைந்து 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகும். இது, 150 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட நாடுகளின் வருடாந்த பொருளாதார உற்பத்தியை விட அதிகமானது. 400,000 க்கும் அதிகமான மக்களின் மரணங்களுக்கு வழிவகுத்த நிதிய தன்னலக்குழுவின் செல்வவூட்டலுக்கு இது மனித வாழ்க்கையை அடிபணியச் செய்கிறது. நூறாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால், அதற்கு நேர்மாறான கொள்கை முன்னெடுக்கப்பட வேண்டும்: நிதிய தன்னலக்குழுவின் சுயநல அக்கறைகள் மனித உயிரைப் பாதுகாப்பதற்கான வழியில் குறுக்கே நிற்க முடியாது!

சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து அத்தியாவசிய வணிகங்களையும் பள்ளிகளையும் உடனடியாக மூடுமாறு கோருகிறது. அதனுடன் இணைந்து இழந்த ஊதியங்கள் மற்றும் சிறு வணிக வருமானத்திற்கான முழு இழப்பீடும் பணக்காரர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பரந்த தொகையை அபகரிப்பதன் மூலம் செலுத்தப்பட வேண்டும். கோவிட்-19 க்கு சிகிச்சையளிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், அழிப்பதற்கும் மற்றும் எதிர்காலத்தில் தொற்று நோய்களின் அச்சுறுத்தலிலிருந்து சமூகம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் சுகாதார கட்டமைப்பில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துதல் உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளை அமல்படுத்த அவசர நடவடிக்கைக் குழுக்களை ஒழுங்கமைக்குமாறு அனைத்து தொழிலாளர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. இந்த போராட்டமானது, சமுதாயத்தை கட்டுப்படுத்துவது இலாபத்தின் அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கமா அல்லது சமூகத் தேவையின் அடிப்படையில் தொழிலாள வர்க்கமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

சமூகத்தின் மிக அடிப்படையான தேவைகளுக்கு முதலாளித்துவம் பொருத்தமற்றது என்ற அடிப்படை யதார்த்தத்தை தொற்றுநோய் நிரூபித்திருக்கிறது. இந்த திவாலான மற்றும் படுகொலை அமைப்புமுறைக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும்.

Loading