43 அகதிகள் லிபிய கடற்கரை பகுதியில் மூழ்கினர்: இவர்கள் ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் கொள்கையின் பலியாட்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 19 அன்று குறைந்தது 43 அகதிகள் ஐரோப்பாவிற்கு தப்பிச்செல்ல மத்தியதரைக் கடலை கடக்க முயற்சிக்கையில் லிபிய கடற்கரைப் பகுதியில் நீரில் மூழ்கினர். அவர்களில் 10 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. அவர்கள் லிபிய கடலோர காவல்படையினரால் லிபியாவுக்கு திருப்பியனுப்பப் பட்டனர். ஐரோப்பிய ஒன்றியம் (EU) பொறுப்பேற்றுக் கொள்கின்ற இத்தகைய பாரிய மத்தியதரைக்கடல் மரணங்கள் இன்னும் அடுத்த ஆண்டிலும் தொடரும்.

50 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற ஒரு சிறு இரப்பர் படகு (dinghy) கடினமான கடல் பகுதியில் இயந்திரக் கோளாறால் பாதிக்கப்பட்டது, இது அதிகாலையில் திரிப்போலிக்கு மேற்கேயுள்ள துறைமுக நகரமான சவியாவிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் கடலில் கவிழ்ந்தது. ஐவரி கோஸ்ட், நைஜீரியா, கானா மற்றும் காம்பியாவிலிருந்து வந்தவர்களில் உயிர்தப்பியவர்கள், மூழ்கிய படகில் சென்றவர்கள் அனைவரும் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று கூறினர்.

உள்நாட்டுப் போர், வறுமை மற்றும் துயரத்திலிருந்து தப்பியோடும் மக்களின் இந்த அர்த்தமற்ற மரணங்களுக்கு பேர்லின், ரோம், பாரிஸ், வியன்னா மற்றும் தி ஹேக் அரசாங்கங்கள் தான் முக்கிய பொறுப்பாக உள்ளன. ஏனென்றால், ஐரோப்பிய ஆணையத்துடனான நெருங்கிய ஒத்துழைப்பில், ஐரோப்பாவிற்குச் செல்லும் அனைத்து சட்டரீதியான வழிகளையும் அவை தடுத்து வைத்துள்ளன.

அக்டோபர் 30, 2015 அன்று, துருக்கியில் இருந்து சிரிய மற்றும் ஈராக் அகதிகள் லெஸ்போஸ் தீவிலுள்ள ஸ்கலா சிகாமினியாஸூக்கு வருகிறார்கள், அங்கு அவர்கள் ஸ்பானிய தன்னார்வ தொண்டு நிறுவனமான Proactiva Open Arms இன் தன்னார்வலர்களால் மீட்கப்படுகின்றனர் (Source: Ggia, CC BY-SA 4.0)

அகதிகள் இவ்வாறு சிறிய, கடலில் பயணிக்க தகுதியில்லாத இரப்பர் படகுகளில் கடலை கடக்கும் கட்டாயத்திற்கு ஆளாகும் நேரத்தில், ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்களது அதிகாரத்தை கொண்டு மத்திய மத்தியதரைக்கடலில் அனைத்து மீட்புப் பணிகளையும் தடுத்து நிறுத்த மிகுந்த வெறுக்கத்தக்க குற்றவியல் தன்மை கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்கின்றன. மிகக் குறிப்பாக கூறுவதானால், அவர்களது கைகள் கடந்த எட்டு ஆண்டுகளாக மத்தியதரைக் கடலில் மூழ்கிப் போன 20,000 பேரின் இரத்தத்தால் நனைந்து போயுள்ளன.

கினியாவைச் சேர்ந்த அகதியான சோலிமானே இன் அனுபவம், மத்தியதரைக் கடல் துயரங்களை உணரச் செய்கிறது. ஐரோப்பாவிற்கு செல்லும் வாய்ப்பை எதிர்நோக்கி கடந்த மார்ச் மாதம் லிபியாவில் சோலிமானே காத்திருக்கையில், Infomigrants செய்தி வலைத் தளம் அவரை பேட்டி கண்டது. கடந்த வாரம் படகு மூழ்கிப் போன சோக சம்பவத்தில் பலியானவர்களில் இந்த 18 வயது நபரும் ஒருவராவார்.

தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவரான அவரது நண்பர் மவுசா, அவர்கள் புறப்பட்டு சில மணிநேரங்களில் கடலின் நிலை விரைந்து கடுமையாக மாறியது என்று Infomigrants க்கு தெரிவித்தார். பின்னர் படகு கவிழ்ந்தது, நீந்தத் தெரியாத சோலிமானே கடலில் தூக்கி வீசப்பட்டார். அப்போது மவுசாவால் அவரைப் பிடித்து படகிற்குள் இழுக்க முடிந்தது. இரண்டாவது அலை தாக்கியபோது வெளியிலிருந்து படகை பற்றியபடி சோலிமானே இன்னமும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

“நான் சோர்ந்துவிட்டேன். என்னால் இனிமேல் பிடிக்க முடியவில்லை,” என்பதே நீரில் மூழ்குவதற்கு முன்னர் சோலிமானே உதிர்த்த கடைசி வார்த்தைகளாகும். “அதன் பின்னர் மீண்டும் அவர் மேலெழும்பவில்லை,” என்று லிபியாவில் வாழும் கினியாவைச் சேர்ந்த சில்லாவும் முணுமுணுத்தார்.

2018 இல் லிபியாவிற்கு வந்து சேர்ந்த பின்னர், அங்கு தான் எதிர்கொண்ட அவலநிலையைப் பற்றி கடந்த மார்ச் மாதம் Infomigrants வலைத் தளத்திற்கு சோலிமானே தெரிவித்தார். லிபிய கடலோர காவல்படையினரால் அவரது படகு தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து இரண்டு முறை பொலிசாரால் அவர் தடுத்து வைக்கப்பட்டார்.

லிபியக் கடலோர காவல்படைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தான் நிதியளிக்கிறது, தேவையான சாதனங்களை வழங்குகிறது, மற்றும் பயிற்சியளிக்கிறது. சாராம்சம் என்னவென்றால், இது உள்நாட்டு போராளிகளை உள்ளடக்கியது, அவர்கள் புலம்பெயர்ந்தவர்களை துஷ்பிரயோகம் செய்வதோடு, பெரும்பாலும் அவர்களை அடிமைகளாக விற்கின்றனர்.

சோலிமானேவும் Tajourah மற்றும் Zouara தடுப்பு முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்த அனைத்து கைதிகளையும் போல சித்திரவதைப்படுத்தப்பட்டார். அவருக்கு வேலை தருவதாக பொய் கூறி அங்கு அவரை அழைத்து வந்த நபர்கள் அவரை துஷ்பிரயோகம் செய்து, அவர் மீது கத்திகளால் பலத்த காயங்களை ஏற்படுத்தினர்.

அவரது தாயார் கடந்த கோடையில் கினியாவில் இறந்தார், ஆனால் சோலிமானே லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் தாயாரது இறுதிச்சடங்கில் கூட அவர் கலந்து கொள்ள முடியவில்லை. அதன் பின்னர், கடந்த செவ்வாயன்று, ஐரோப்பாவிற்குச் சென்று வேலை தேடி, புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கலாம் என்ற நம்பிக்கையில், நான்காவது மற்றும் கடைசி முறையாக ஒரு சிறிய இரப்பர் படகில் ஏறினார். இந்த ஆண்டில் மத்தியதரைக் கடலில் நிகழ்ந்ததான இந்த முதல் கப்பல் விபத்தில் அவர் இறந்துபோனார்.

கடலில் அவசரகால மீட்பு

“கடற்படை அவசரகால மீட்பில் எங்களுக்கு ஒரு பெரிய இடைவெளி உள்ளது, ஏனென்றால் அனைத்து உயிர்காக்கும் படகுகளும் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அல்லது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதால் அவர்களால் படகுகளை செலுத்த முடியாது,” என்று மத்தியதரைக் கடலின் நிலைமைகள் பற்றி Alarmphone உதவி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மத்தியதரைக் கடலில் தற்போது படகை இயக்கக்கூடிய ஒரே உதவி அமைப்பாக SOS Mediterranee மட்டும் தான் உள்ளது. ஐந்தரை மாத கால இடைவெளிக்குப் பின்னர் ஜனவரி 11 ஆம் தேதி கடலுக்குத் திரும்பிய அவர்களது Ocean Viking மீட்புக் கப்பல், முதல் 48 மணிநேரத்தில் மட்டும் 374 அகதிகளை கடுங்குளிர் நீர்ப்பரப்பிலிருந்து மீட்டது. என்றாலும், மற்றொரு கப்பல் விபத்து நடந்த இடத்திற்கு Ocean Viking மீட்புக் கப்பல் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்த நிலையில், லிபிய கடலோர காவல்படையினர் 80 அகதிகளை தடுத்து வைத்து அவர்களை லிபியாவிற்கு திருப்பியனுப்பியதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது.

லிபிய கடலோர காவல்படையினர் இந்த ஆண்டு ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட அகதிகளை வலுக்கட்டாயமாக லிபியாவிற்கு திருப்பியனுப்பி, அங்கு அவர்களை தடுத்துவைத்துள்ளனர் என்பதாக ஜெனீவாவை தளமாகக் கொண்ட புலம்பெயர்வு குறித்த சர்வதேச அமைப்பு (International Organization for Migration-IOM) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. எந்தவொரு அகதியும் லிபியாவிற்கு திருப்பியனுப்பப்படக் கூடாது என்ற அதன் கோரிக்கையை IOM மீண்டும் விடுத்தது.

புலம்பெயர்வு குறித்த சர்வதேச அமைப்பும் (IOM) மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையமும் (UN High Commission for Refugees-UNHCR) வழங்கிய கூட்டறிக்கை, கடந்த ஆண்டு மத்தியதரைக் கடலில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை மதிப்பீடுகளை விட மிக அதிகமாக இருந்தது, ஏனென்றால் நீண்ட காலமாக கடற்படை மீட்பு நடவடிக்கைகள் வெளிப்படையாக கண்காணிக்கப்படுவதில்லை என அதன் அச்சத்தை வெளிப்படுத்தியது.

ஐரோப்பிய ஒன்றியம் 2019 இல் அவசரகால மீட்புப் பணிகளில் இருந்து விலகியது. கடந்த ஆண்டு, இது இராணுவம் சாராத பொதுமக்களின் அவசரகால மீட்புப் பணிகளை குற்றம்சாட்டியது, அவர்களைத் துன்புறுத்தியது, வேண்டுமென்றே அவர்களை சேவையிலிருந்து விலக்கியது. லிபிய கடலோர காவல்படை என்றழைக்கப்படும் கடற்படை அவசரகால மீட்புப் பணிகளுக்கு மட்டுமே பொறுப்பாகும், இது தனது, அகதிகளைத் தடுக்கும் மிருகத்தனமான கொள்கையை வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்காக மோசமான செயலில் ஈடுபடுகிறது.

ஆனால், IOM உம் மற்றும் UNHCR உம், ஐரோப்பிய அரசாங்கங்கள் பிரகடனப்படுத்த விரும்புவது போல, லிபியா, அகதிகளுக்கான பாதுகாப்பான அடைக்கல பூமி அல்ல என்று வலியுறுத்துகின்றன. அங்கு, “புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்து தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டு, மிகக் கொடூரமான சூழ்நிலைகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் கடத்தல்காரர்கள் மற்றும் கடத்தல்காரர்களால் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், மீட்கும் பணத்திற்காக தடுத்து வைக்கப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள், மேலும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள்,” என்றும் கூட்டறிக்கை குறிப்பிட்டது.

காணாமற்போன புலம்பெயர்ந்தோர் திட்டத்தின் படி, லிபியாவிலிருந்து மத்தியதரைக் கடல் மார்க்கத்தில் கடந்த ஆண்டு உத்தியோகபூர்வமாக 977 பேர் உயிரிழந்துள்ளதால், இது அகதிகளின் உயிரைப் பலிகொள்ளும் உலகின் மிகக் கொடூரமான கடல் மார்க்கமாக உள்ளது.

2020 ஆம் ஆண்டில் 27,435 பேர் லிபியாவிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக AlarmPhone தன்னார்வ அமைப்பு மதிப்பிடுகிறது. அதன்படி, 75 படகுகளில் 5,375 பேர் சிறிய இத்தாலிய தீவான லம்பேடுசாவிற்கு செல்ல நேரிட்டது. 2,281 பேர் மால்டாவுக்கு செல்ல நேரிட்டது. 3,700 பேர் இராணுவம் சாராத பொதுமக்கள் கப்பல்களால் கடலில் மீட்கப்பட்டு இத்தாலிக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் 11,891 அகதிகள் லிபிய கடலோர காவல்படையினரால் கடலில் பிடிக்கப்பட்டு லிபியாவின் சித்திரவதை முகாம்களுக்கு திருப்பியனுப்பப்பட்டனர். மொத்தத்தில், தோராயமாக 200,000 அகதிகள் திகிலூட்டும் சூழ்நிலையில் லிபியாவில் தொடர்ந்து வாழ வேண்டியுள்ளது, இது ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஏராளமான தடுப்பு முகாம்களில் நிலவும் குறிப்பிடத்தக்க சதவிகிதமாகும்.

கடந்த ஏப்ரல் மாதம், அனைத்து அகதிகளையும் தமது நாட்டில் தரையிறங்க விடாமல் தடுக்க, அனைத்து இத்தாலிய துறைமுகங்களையும் “பாதுகாப்பற்றது” என்று அறிவிக்க கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தை இத்தாலிய அரசாங்கம் பற்றிக்கொண்டது. இராணுவம் சாராத பொதுமக்கள் மீட்புக் கப்பல் குழுவினர் குற்றவாளிகளாக்கப்பட்டனர், மேலும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டனர்.

அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் லிபிய கடலோர காவல்படையினர் அகதிகளை சட்டவிரோதமாக திருப்பியனுப்புவதை மட்டுமல்லாமல், அவர்களை கடலில் சட்டவிரோதமாக “மூழ்கடிப்பதையும்” கூட ஆதரித்தது. இது புகலிடம் கோரி விண்ணப்பிக்க அகதிகளுக்கு வாய்ப்பளிக்காமல் அப்படியே திருப்பிவிடப்படும் செயலாக உள்ளது.

அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள மால்ட்டா அரசாங்கம் ஒரு சிவிலியன் மீன்பிடி படகை கூட பயன்படுத்தியது. இதன் விளைவாக 11 அகதிகள் இறந்தனர். இதேபோன்ற சட்டவிரோத “மூழ்கடிப்புக்கள்” கிரேக்க அரசாங்கத்தால் ஏஜியன் கடலிலும், மற்றும் குரோஷியாவால் அதன் பொஸ்னிய-ஹெர்சகோவினா எல்லையிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

குரோஷியா, பொஸ்னியா மற்றும் கிரீஸ்

குரோஷிய எல்லை ரோந்துப்படையினர் குறிப்பாக அகதிகளுக்கு எதிராக கொடூரமான மிருகத்தனத்தைப் பயன்படுத்துகின்றனர். எல்லைப்புற வன்முறை கண்காணிப்பு வலையமைப்பு (Border Violence Monitoring Network), குரோஷிய எல்லையில் 12,000 மக்களை பாதிக்கும் “மூழ்கடிப்புக்கள்” நிகழ்ந்திருப்பதாக கணக்கிட்டுள்ளது. அகதிகள் பெரும்பாலும் எல்லைப்புற காவலர்களின் தடியடி மற்றும் சவுக்கடி கொண்டு துரத்தப்படுகின்றனர். அவர்கள் அடித்து கொள்ளையடிக்கப்படுகிறார்கள், மேலும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் எல்லை பரிபாலனத்திற்கான கணிசமான நிதி ஒதுக்கீடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகிறது. இந்த நோக்கத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு 6.8 யூரோ பில்லியன் நிதியை வழங்கியது.

ஜேர்மனிய உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹோஃபர் 2020 ஜனவரியில், சூடான செய்திகளைத் தேடும் கேமராக்கள் ஒப்படைக்கப்பட்டபோது, “நாங்கள் குரோஷியாவின் பங்காளியாக நிற்கிறோம்” என்று உறுதிப்படுத்தினார். பின்னர் ஜேர்மன் அரசாங்கம் குரோஷிய எல்லைக் காவலர்களுக்கு 20 வாகனங்களை டிசம்பரில் வழங்கியது. குரோஷிய உள்துறை அமைச்சர் டேவர் போசினோவிக் மில்லியன் கணக்கான யூரோக்கள் வழங்கி உதவியதற்கு நன்றியை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், குரோஷிய எல்லைக் காவலர்களின் நடவடிக்கைகள் குறித்து ஜேர்மன் அரசாங்கத்திற்கு விரிவாக அறிவிக்கப்படும் என்றும் சூளுரைத்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளின் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து ஜேர்மன் அரசாங்கத்திற்கு முற்றிலும் அறிவிக்கப்படவில்லை, என்றாலும் அவற்றையும் அது வலுவாக ஆதரிக்கிறது.

அகதிகளை தடுத்து வைப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றவியல் அணுகுமுறை, குறிப்பாக கிரேக்க தீவுகளிலும் பொஸ்னியாவிலும் உள்ள முகாம்களால் தெளிவுபடுத்தப்படுகிறது. லெஸ்போஸ் தீவில், காரா டெப்பே முகாமில் 7,000 அகதிகளின் இருப்பிடமாக இருந்த கூடாரங்கள் சேற்றில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு போதுமான உணவு அல்லது மின்சாரம், சூடான தண்ணீர் அல்லது சுகாதார சேவைகள் என எதுவும் கிடைப்பதில்லை. இது தவிர, பிரதான நிலப்பகுதிக்கு அகதிகளை நகர்த்தவும் கிரேக்க அரசாங்கம் மறுக்கிறது.

செப்டம்பர் 2020 இல் மோரியா அகதிகள் முகாம் எரிந்து போனதைத் தொடர்ந்து, ஜேர்மன் அரசாங்கம் குறைந்தது 1,500 அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கான தனது நோக்கத்தை உரக்க அறிவித்தது. உண்மையில், சிறிய குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் முகாமின் மனிதாபிமானமற்ற நிலைமைகளில் செய்வதறியாது தொடர்ந்து தவிக்கின்ற போதிலும், இன்றுவரை 291 அகதிகள் மட்டுமே ஜேர்மனிக்கு தப்பியோடியுள்ளனர்.

குரோஷிய-பொஸ்னிய எல்லைப் பகுதியிலும் இதனையொத்த படுமோசமான நிலை உள்ளது, குறிப்பாக டிசம்பர் 23 அன்று லிபா முகாமில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர். கிட்டத்தட்ட எந்தவித பாதுகாப்புமில்லாமல் பொஸ்னிய குளிர்காலத்தின் கடும் குளிரை துணிச்சலாக எதிர்கொண்ட 9,000 பேர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். இவர்களில் 5,600 அகதிகளுக்கு மட்டும் அவசர முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் பொருள், 3,000 க்கும் மேற்பட்ட அகதிகள் இடிபாடுகள், தற்காலிக கூடாரங்கள் அல்லது திறந்தவெளிகளில் தான் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பொஸ்னியாவிலும் மற்றும் மத்தியதரைக் கடலிலும் நிகழ்த்தப்படும் இந்த மனிதாபிமானமற்ற பேரழிவுகர விளையாட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றவியல் மற்றும் இழிந்த கொள்கைகளின் விளைவாகும். “இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது: ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் உறுதியானதாகவும், ஒத்திசைவானதாகவும் இருந்தன, அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் தேவையான அனைத்து நிதி ஆதாரங்களையும் வழங்கியது,” என்று கடந்த வாரம் ஜேர்மனிய நாளேடான டி வெல்ற் மேற்கோள் காட்டிய பொஸ்னியாவின் நிலைமை குறித்த ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் இரகசியக் கட்டுரை பற்றி குறிப்பிட்டது.

லிபியா மற்றும் பொஸ்னிய-ஹெர்சகோவினாவில் உள்ள நடைமுறை எப்போதும் ஒரேமாதிரியாக உள்ளது: குற்றவியல் கும்பல்களுக்கும் ஊழல் நிறைந்த உயரடுக்கினருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்களை வாரியிறைக்கிறது, இதனால் அவர்கள் மோசமான வேலைகளைச் செய்கிறார்கள் என்பதோடு, அகதிகள் தங்களது எல்லைகளைத் தாண்டவிடாமல் விலக்கி வைக்கிறார்கள். “காரணத்தோடு தான் உதவி வழங்கப்பட வேண்டும்,” என்ற ஜேர்மன் உள்துறை அமைச்சர் சீஹோஃபரின் மந்திரத்தைப் பின்பற்றி, ஐரோப்பிய ஒன்றியம் அப்பாவி போல இந்த விவகாரத்தை கை கழுவியதோடு, பூமியில் அகதிகளின் நிலைமைகளுக்கு அது பொறுப்பல்ல என்றும் கூறுகிறது.

இதை நிராகரிப்பது குறித்து அகதிகள் உதவி அமைப்பான ProAsyl விளக்கமளித்தபடி, இந்த நாடுகள் செயல்பாட்டிலுள்ள அடைக்கலம் வழங்கும் அமைப்புமுறையையோ அல்லது அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கான சிறந்த கட்டமைப்பையோ கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக, அகதிகள் தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளும்படி முற்றிலும் கைவிடப்படுகிறார்கள், மற்றும் மிக மோசமான நிலைமைகளில் தடுத்து வைக்கப்படுகிறார்கள், மற்றும் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள்.

Loading