முன்னோக்கு

முதலாளித்துவம் எதிர் சோசலிசம்: பெரும் தொற்றுநோயும் உலகளாவிய வர்க்கப் போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சுகாதார அமைப்பு (WHO), ஜனவரி 30, 2020 அன்று, கோவிட்-19 வெடித்தது சர்வதேச அக்கறைக்குரிய ஒரு பொது சுகாதார அவசரநிலையை (Public Health Emergency of International Concern – PHEIC) உருவாக்கியது என்று அறிவித்து ஒரு வருடம் ஆகிறது.

உலக சுகாதார அமைப்பின் பொதுநிர்வாகி Tedros Adhanom Ghebreyesus சீனாவுக்கு வெளியே 18 நாடுகளில் 98 தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். "சீனாவில் உள்ள தொற்றுக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை இன்னும் சிறியதாக இருந்தாலும், மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் இப்போது ஒன்றாக செயல்பட வேண்டும்" என்றார்.

ஒரு வருடம் கழித்து, மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 100 மில்லியனைக் கடந்துவிட்டது. மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2,225,000 ஐ எட்டியுள்ளது. தினசரி இறப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் 14,000 க்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.

இலண்டன் டவுனிங் தெருவில் 28 மே 2020 அன்று மருத்துவர்களும் தாதிமாரும் முழந்தாளிட்டிருக்கின்றனர் (AP Photo/Frank Augstein

அமெரிக்காவில், 26,107,110 தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை 440,000 ஐ எட்டியுள்ளது. இந்தியாவில், 10 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்கள் மற்றும் 154,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. பிரேசிலில், 9 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்கள் மற்றும் 223,000 இறப்புகளும், பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 4 மில்லியன் தொற்றுக்கள் மற்றும் 106,000 இறப்புக்களும், இத்தாலியில் 2.5 மில்லியன் தொற்றுக்கள் மற்றும் 88,000 க்கும் மேற்பட்ட இறப்புகளும் பதிவாகியுள்ளன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, நெருக்கடியின் ஆரம்ப கட்டங்களில், தொற்றுநோயை முதலாம் உலகப் போருடன் ஒப்பிடக்கூடிய ஒரு "தூண்டுதல் நிகழ்வு" என்று அடையாளம் கண்டது. இது உலக முதலாளித்துவ அமைப்பின் ஆழமான முரண்பாடுகளை தீவிரப்படுத்தி துரிதப்படுத்தும் என்றும் குறிப்பிட்டது. சுகாதார நெருக்கடி தவிர்க்க முடியாமல் உலகளாவிய சமூக மற்றும் அரசியல் நெருக்கடியாக உருவாகும் எனவும் மருத்துவ நடவடிக்கைகள் மட்டுமே தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராது எனவும் குறிப்பிட்டது.

மாறாக, சமூகத்தின் முக்கிய வர்க்கங்களான முதலாளித்துவ வர்க்கத்தினதும் தொழிலாள வர்க்கத்தினதும் நலன்கள் ஒன்றுடன் ஒன்று சமரசம் செய்யப்படமுடியாமல் எதிரெதிரானதாக இருப்பதால் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் ஒரு வர்க்கப் போராட்டமாக உருவாகும் என்பது தெளிவாகிவிட்டது. இந்த விரோத நிலைப்பாடுகள் முதலாளித்துவ மற்றும் சோசலிச வேலைத்திட்டங்களுக்கு இடையிலான மோதலில் வெளிப்பாட்டைக் காண்கின்றன.

ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாடுகள் முதலாளித்துவ சொத்துக்களைப் பாதுகாப்பதில் இருந்து ஆரம்பிக்கின்றன: அதாவது உற்பத்தி சாதனங்களின் மீதான தனியார் உடமை மற்றும் தேசிய அரசின் புவிசார் மூலோபாய நலன்களை பாதுகாப்பதாகும். தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடுகள் சோசலிசத்தை நோக்கி புறநிலையாக முனைகின்றன. அதாவது இலாப அமைப்பினையும் உழைப்பைச் சுரண்டுவதையும் முடிவிற்கு கொண்டுவந்து மற்றும் மனித தேவைகளின் அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையை விஞ்ஞானரீதியாக திட்டமிட்ட மறுஒழுங்கமைப்பதன் மூலம் பிரதியீடு செய்து, தேசிய அரசு அமைப்பு முறையை மனிதகுலத்தின் உலகளாவிய ஐக்கியத்தினால் இல்லாதொழிப்பதுமாகும்.

நெருக்கடியின் ஒரு வருடகாலத்தில், முதலாளித்துவ மற்றும் சோசலிச வேலைத்திட்டங்களை பிரிக்கும் வர்க்கப் பிளவுகளை தொற்றுநோய் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

1. தொற்றுநோய்க்கான பிரதிபலிப்பு, உயிர்களைக் காப்பாற்றுவதை விட நிதியச் சந்தைகளை காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதலாளித்துவ வேலைத்திட்டம் வலியுறுத்துகிறது.

தொற்றுநோய்க்கான பதில், நிதியச் சந்தைகளை காப்பாற்றுவதை விட உயிர்களைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சோசலிச வேலைத்திட்டம் வலியுறுத்துகிறது.

2. தொற்றுநோய் தொடர்பான கொள்கை, இலாப நலன்களால் இயக்கப்பட வேண்டும் என்று முதலாளித்துவ வேலைத்திட்டம் வலியுறுத்துகிறது.

சோசலிச வேலைத்திட்டம், மருத்துவக் கொள்கை விஞ்ஞானத்தால் வழிநடத்தப்பட வேண்டும் என்று முன்மொழிகிறது.

3. முதலாளித்துவ வேலைத்திட்டம், "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்" என்ற ஒரு திட்டத்தை ஆதரிக்கிறது. இதன் மூலம் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் போது வைரஸ் முடிந்தவரை குறைந்த கட்டுப்பாடுகளுடன் பரவ அனுமதிக்கிறது.

வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான எண்ணிக்கையிலான நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும் வரை வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் சோசலிச வேலைத்திட்டம் அழைப்புவிடுகிறது.

4. முதலாளித்துவ வேலைத்திட்டம், அதன் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்” என்ற மூலோபாயத்திற்கு ஏற்ப, தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களையும் வணிகத்திற்காக திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தடுப்பூசி போடப்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்கள் வேலைகளுக்கு திரும்பும் வரை அனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களும் மூடப்பட வேண்டும் என்று சோசலிச வேலைத்திட்டம் வலியுறுத்துகிறது.

5. முதலாளித்துவ வேலைத்திட்டம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறிய ஆபத்துள்ளதாக பொய் கூறி பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோருகிறது.

பள்ளிகள் வைரஸ் பரவுவதற்கான முக்கிய ஆதாரமாக இருக்கின்றன என்பதற்கான விஞ்ஞஞானபூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் சோசலிச வேலைத்திட்டம், தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று கோருகிறது.

6. முதலாளித்துவ வேலைத்திட்டம், பாரிய மக்கள் மீதான தொற்றுநோயின் பொருளாதார தாக்கத்தை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டு சமூக செலவினங்களைக் கட்டுப்படுத்த முயல்கிறது. அதே நேரத்தில் மத்திய வங்கிகள் நிதிச் சந்தைகளுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் வரம்பற்ற ஆதரவை வழங்க வேண்டும் என்று கோருகின்றன.

சோசலிச வேலைத்திட்டம், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு நெருக்கடியின் காலத்தில் முழு வருமான இழப்பீடு கோருகிறது. இந்த முக்கியமான சமூக மீட்புத் திட்டத்திற்கான வளங்கள் CARES சட்டத்தின் விதிகளின் கீழ் பெரிய நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட்ட டிரில்லியன் கணக்கான டாலர்களை உடனடியாக மீட்டெடுப்பதன் மூலமும், பெடரல் ரிசர்வ் ஆதரவின் விளைவாக நிதிய சந்தைகளுக்கு கிடைத்த வரம்பற்ற டாலர்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மற்றும் பில்லியன் கணக்கான வருமானத்தை ஈட்டிய தொற்றுநோய் மூலம் இலாபங்களை பெற்றவர்களிடம் இருந்து அபகரிப்பதன் மூலமும் பெறப்படும்.

7. முதலாளித்துவ வேலைத்திட்டம், தடுப்பூசி தொடர்பான தேசியவாத கொள்கையை ஊக்குவித்து, உலகம் முழுவதும் தடுப்பூசிகளின் சமமான விநியோகத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் எதிர்க்கிறது.

சோசலிச வேலைத்திட்டம், கொரோனா வைரஸை விஞ்ஞான ரீதியாக வழிநடாத்தப்படும் சர்வதேச மூலோபாயத்தின் மூலம் மட்டுமே ஒழிக்க முடியும் என்பதை உணர்ந்து, உலகளவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான பிரதிபலிப்பில் உள்ள வெவ்வேறு வர்க்க நலன்கள் பெருகியளவில் கூர்மையான அரசியல் பிளவுகளுக்கு பின்னால் உள்ளன. ஆளும் வர்க்கம், அதன் இலாப நோக்க திட்டத்திற்கான சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் திட்டத்திற்கு எதிராக எழும் எதிர்ப்பிற்கு பயந்து, பாசிச அமைப்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தொற்றுநோய்க்கு அதன் சொந்த பிரதிபலிப்பை அபிவிருத்தி செய்வதில், தொழிலாள வர்க்கம், வர்க்க ஒற்றுமை, போர்க்குணமிக்க வர்க்க நடவடிக்கை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சர்வதேச சோசலிச மற்றும் புரட்சிகர அரசியல் மூலோபாயத்தின் தேவையை அங்கீகரிக்கிறது.

அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்திருக்கும் உலகெங்கிலும் உள்ள கட்சிகளும் அமைப்புகளும் போராடிய கொள்கைகள் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புறநிலை நலன்களை வெளிப்படுத்துவதுடன் முன்னெடுக்கின்றன. சோசலிச வேலைத்திட்டத்தை ஆதரிக்கும் அனைவரும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Loading