ஆசிரியர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகையில், சிகாகோ ஆசிரியர் சங்கமும் மாவட்டமும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கைக்கு நெருக்கமாக வருகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை மாலை, சிகாகோ ஆசிரியர் சங்கம் (CTU) மற்றும் சிகாகோ பொதுப் பள்ளிகள் (CPS) ஆகியவை அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பள்ளி மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றுநோயின் மோசமான கட்டத்தில் நேரில் கற்றலைத் தொடங்குவதற்கான கூட்டு முயற்சிகளில் முன்னேற்றம் கண்டதாக அறிவித்தன. சிகாகோ ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் ஆசிரியர்களை தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும், வார இறுதிக்குள் ஆசிரியர்கள் முன் ஒரு உடன்பாட்டை வைப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஒரு அச்சுறுத்தும் அறிக்கையில், சிகாகோ பொதுப் பள்ளிகள் பின்வருமாறு ட்வீட் செய்தது, "இன்று இரவு மேலதிக பேச்சுவார்த்தகளுக்காக சிந்திப்பதற்கான கால அவகாசத்தை வியாழக்கிழமை வரை இறுதியாக நீட்டிப்போம்” (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது). வெள்ளிக்கிழமை ஒரு முன்திட்டமிடப்பட்ட சமூகமளிக்க தேவையில்லாத நாளாக இருப்பதால், வார இறுதியில் ஒரு தற்காலிக உடன்பாட்டை நிராகரித்தால் திங்களன்று கல்வியாளர்களுக்கு எதிராக வேலைநீக்கம், அபராதம் மற்றும் பிற தண்டனை நடவடிக்கைகளை விதிக்க மாவட்ட அரசு நோக்கத்தை கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.

பள்ளிகளை மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிராக ஒரு சிகாகோ ஆசிரியர் தனது வாகனத்தில் எழுதி எதிர்ப்பை காட்டுகின்றார் (மூலம்: CTU Facebook)

ஜனவரி முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால், திரும்பி வர மறுத்த தனிப்பட்ட கல்வியாளர்களைப் வேலைநீக்கம் செய்வதற்கான மாவட்டத்தின் பிரித்து வெற்றிகொள்ளும் மூலோபாயத்தை இது பெரிதும் அதிகரிக்கும். இதனை எதிர்க்க சிகாகோ ஆசிரியர் சங்கம் எதுவும் செய்யவில்லை. ஒரு ஆசிரியர் உலக சோசலிச வலைத் தளத்திடம் பின்வருமாறு கூறினார், “எனது சகாக்கள் இன்னும் தடுக்கப்பட்டிருக்கிறார்கள், நாங்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்தபோது அதற்கான ஊதியம் செலுத்துவதைப் பற்றி எதுவும் கூறாதவேளை, அவர்கள் யாருடைய நேர அட்டைகளையும் அங்கீகரிக்கவில்லை.” மொத்தத்தில், 100 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் அவர்களின் மாணவர்களுக்கு கற்பிப்பதிலிருந்து தடுக்க தங்கள் கூகுள் வகுப்பறை கணக்குகளில் இருந்து தடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சிகாகோ சாமானிய கல்வியாளர்களிடையே, பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஆளும் வர்க்க பிரச்சாரத்திற்கு பெரும் எதிர்ப்பு உள்ளதுடன், இது நிதிய உயரடுக்கின் நலன்களுக்காக மட்டுமே செய்யப்படுகின்றது என்ற பரவலான அங்கீகாரம் உள்ளது. தொற்றுநோய் கட்டுப்படுத்தப்படும்வரை சிகாகோவிலும் அமெரிக்காவிலும் அனைத்து பள்ளிகளையும் அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடுமாறு பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.

சிகாகோ ஆசிரியர்களில் 14 சதவிகிதத்தினர் மட்டுமே திங்களன்று தங்கள் வகுப்பறைகளுக்கு சமூகமளித்தனர். பெரும்பான்மையானவர்கள் ஜனநாயகக் கட்சி மேயர் லோரி லைட்ஃபூட் (Lori Lightfoot) இன் இறுதி எச்சரிக்கையையும், "சட்டவிரோத வேலைநிறுத்தத்தில்" ஈடுபடுவோருக்கு எதிராக "நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற அச்சுறுத்தல்களையும் மீறியிருந்தனர். பெற்றோர்கள் மத்தியிலும் ஆசிரியர்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. அவர்கள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிகழ்வில் செவ்வாய்க்கிழமை சுயாதீனமாக ஒரு சுகவீன விடுமுறையை ஏற்பாடு செய்திருந்தனர்.

சிகாகோ ஆசிரியர் சங்கம் அவர்கள் போராடுவதாகக் கூறும் ஒவ்வொரு "கோரிக்கையிலும்" சரணடைகிறது. நகரெங்கும் தொற்றுநோய் பரிசோதனை நேர்மறை விகிதம் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வது மிக முக்கியமான திருப்பமாகும். இது எதிர்வரும் வாரத்தில் நடக்கக்கூடும்.

வாரந்தோறும் 1,500 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்ற உடன்படிக்கைக்கு இரு தரப்பினரும் வருகிறார்கள். இது சிகாகோ ஆசிரியர் சங்கத்தின் 23,000 க்கும் மேற்பட்ட கல்வியாளர்களில் ஒரு சிறிய பகுதியே. ஆசிரியர்கள் தடுப்பூசி போடுவதால், சிகாகோ ஆசிரியர் சங்கம் எப்போதும் ஒவ்வொரு கட்டமாக பள்ளிகளை மீண்டும் திறப்பதை ஏற்கெனவே ஊக்குவித்துள்ளது. இந்த முற்றிலும் விஞ்ஞானபூர்வமற்ற கொள்கையானது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பரந்த சமூகத்தை, வெகுஜனங்களை பாதிக்கும். ஏனெனில் பள்ளிகள் தங்கள் சமூகங்கள் முழுவதும் கோவிட்-19 ஐ பரப்புவதற்கான காவிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிகாகோவில் அநாமதேயமாக இருக்க விரும்பிய ஒரு கல்வியாளர் உலக சோசலிச வலைத் தளத்திடம் "சலுகைகள் குமட்டல் தருகின்றன" என்று கூறினார். மற்றொருவர் தடுப்பூசிக் கோரிக்கை கூட யதார்த்தமானதல்ல என்று குறிப்பிட்டு, “ஒரு வலுவான தடுப்பூசி திட்டம் இருப்பதாக மேயர் பொய் கூறுகிறார். தடுப்பூசி போட முடியாததால் நான் மிகவும் அழுத்ததிற்குள் இருக்கிறேன். நான் எங்கு பார்த்தாலும் நேர ஒதுக்கல் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் குழு 1 பி இல் இருக்கிறேன், அதனால் என்னால் ஒரு தடுப்பூசியை பெறக்கூடியதாக இருக்கும், இருந்தும் என்னால் முடியாதுள்ளது. இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது."

மூடிய கதவுகளுக்குப் பின்னால், சிகாகோ பொதுப் பள்ளிகள் அமைப்புடன் சிகாகோ ஆசிரியர் சங்கம் சதித்திட்டம் தீட்டுகிறது என்ற மோசமான மற்றும் கொடிய காட்டிக்கொடுப்பை சாமானிய ஆசிரியர்களும் பள்ளித் தொழிலாளர்களும் அவமதிப்புடன் நிராகரிக்க வேண்டும்! பள்ளிகளை மீண்டும் திறப்பது என்பது விவாதிக்க முடியாதது மற்றும் பெருநகரப்பகுதி முழுவதும் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடையே நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் பேரழிவு உயர்வுக்கு வழிவகுக்கும்.

சிகாகோ ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தொழிலாளர்கள் அனைவருமே சேர்ந்து சிகாகோ கல்வியாளர்களின் சாமானிய பாதுகாப்புக் குழுவை உருவாக்க உதவவும், எந்தவொரு கொடிய உடன்படிக்கை எட்டப்பட்டாலும் அதை எதிர்க்கும் மையமாக செயல்படவும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கம் முழுவதும் உங்கள் போராட்டத்தை விரிவுபடுத்தவும் கேட்டுக்கொள்கிறோம்.

"சிந்திப்பதற்கான கால அவகாச" காலத்தின் 48 வது மணிநேரத்தில் சிகாகோ ஆசிரியர் சங்க (CTU) பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தின் போது பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தெரியவந்தது. சிகாகோ ஆசிரியர் சங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறக்கூடிய ஒரு வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்கும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் கல்வியாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே போராட்டங்களை தூண்டுவதற்கான முயற்சியாக அமையும் என்பதால் இது திங்கள் இரவு தாமதமாக அறிவிக்கப்பட்டது.

இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தைகளைப் பற்றி தொழிற்சங்கம் எதுவும் கூறவில்லை என்பது, நகர அதிகாரிகள் மற்றும் பைடென் நிர்வாகத்துடன் எதிர்வரும் நாட்களில் பள்ளிகளை மீண்டும் திறக்க அவர்கள் சதி செய்து வருவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பற்ற கோரிக்கைகளை இன்னும் கைவிட தயாராகி வருவதைக் குறிக்கிறது. கோவிட்-19 இன் புதிய, கூடுதலாக தொற்றக்கூடிய மற்றும் ஆபத்தான வகைகள் முழு மக்கள்தொகை முழுவதும் பெரும்பாலும் கண்டறியப்படாததிருக்கையிலும் இது நடைபெறுகிறது.

கடந்த இலையுதிர்காலத்தில் இருந்து நடந்த 70 க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தை அமர்வுகளிலிருந்து அனைத்து தகவல்களையும் படியெடுப்புகளையும் உடனடியாக வெளியிடுமாறு சிகாகோ கல்வியாளர்கள் கோரவேண்டும். எதிர்கால பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நேரடியாக பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரபலப்படுத்த வேண்டும். சிகாகோ ஆசிரியர் சங்கத்தினாலும் மற்றும் சிகாகோ பொதுப் பள்ளிகள் அமைப்பினாலும் மறைக்கப்படுவது என்ன, அவர்கள் என்ன கொடிய ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்?

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான உந்துதல் பைடென் நிர்வாகத்துடன் நேரடியாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனை சிகாகோ ஆசிரியர் சங்கம் மற்றும் சிகாகோ பொதுப் பள்ளிகள் அமைப்பு ஆகிய இரண்டும் முழுமையாக ஆதரிக்கின்றன. திங்களன்று, லைட்ஃபூட் Chicago Tribune டம், "நாங்கள் பைடென் நிர்வாகத்துடன் பேசுகிறோம்." 2019 சிகாகோ ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தின்போது, இப்போது செயல்படாதுள்ள சர்வதேச சோசலிச அமைப்பின் (ISO) முன்னாள் முன்னணி நபரான சிகாகோ ஆசிரியர் சங்க தலைவர் ஜெஸ்ஸி ஷார்கி பைடென் பிரச்சாரத்திற்கான விளம்பர ஒளிப்பதிவை அரங்கேற்றினார்.

பல பைடென் நிர்வாக அதிகாரிகள் பகிரங்கமாக பள்ளி மீண்டும் திறக்கப்படுவதை ஊக்குவித்ததோடு, ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடாமல் பள்ளிகளை பாதுகாப்பாக மீண்டும் திறக்க முடியும் என்று வலியுறுத்திய சில மணிநேரங்களுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த அறிவிப்பு வந்தது.

புதன்கிழமை பிற்பகல் ஒரு வெள்ளை மாளிகையின் செய்தியாளர் கூட்டத்தில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) இயக்குனர் டாக்டர் ரோசெல் வலென்ஸ்கி செய்தியாளர்களிடம் பின்வருமாறு கூறினார், “பள்ளிகள் பாதுகாப்பாக மீண்டும் திறக்கப்படலாம் என்று பரிந்துரைப்பதற்கான தகவல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் பாதுகாப்பான மறு திறப்பு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவது தேவை என்று பரிந்துரைக்கவில்லை.” "பள்ளிகளை பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்கு ஆசிரியர்களின் தடுப்பூசிகள் ஒரு முன்நிபந்தனை அல்ல" என்று அவர் மேலும் கூறினார்.

பைடெனின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் தலைவரான ஜெஃப் சியண்ட்ஸ், அதே பத்திரிகையாளர் சந்திப்பில், பள்ளிகள் "மீண்டும் திறக்கப்பட வேண்டும், திறந்திருக்க வேண்டும்" என்று அவர் விரும்புவதில் பைடென் "மிகவும் தெளிவாக" இருந்ததாகக் கூறினார்.

புதன்கிழமை, கல்விச் செயலாளராக பைடெனின் பரிந்துரை செய்யப்பட்ட மிகுவல் கார்டோனா, "அவரது செனட் உறுதிப்படுத்தல் விசாரணையில் இலகுவாக தெரிவு செய்யப்பட்டார்" என்று Politico கூறுகிறது. தனது ஆரம்ப சாட்சியத்தில், கார்டோனா தனது முதல் உறுதிமொழியாக, "பள்ளிகளை பாதுகாப்பாக மீண்டும் திறக்க நாங்கள் பணியாற்றுவோம், இதனால் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு திரும்ப முடியும்" என்றார்.

"பள்ளிகளை பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று உறுதியளித்த அவரது மீண்டும் திறப்பு சார்பு அறிக்கைகளுக்கு, கார்டோனா அங்கிருந்த அனைத்து செனட்டர்களிடமிருந்தும் இரு கட்சி ஆதரவைப் பெற்றார். செனட் குடியரசுக் கட்சியினர் இப்போது இந்த வார இறுதியில் புதிய நிவாரண மசோதாவில் திருத்தம் செய்ய முன்வருகின்றனர். இது நேரில் கற்றலைத் தொடங்குபவர்களுடன் மத்திய அரசின் நிதிவழங்கலை இணைக்கும்.

சிகாகோவில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான உந்துதல், நாடு தழுவிய மற்றும் சர்வதேச பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த கொலைகாரக் கொள்கை ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பைத் தூண்டுகிறது. மேலும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் உயிர்களைக் காப்பாற்றவும் ஒரு பரந்த போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளை ஈர்க்கும் திறனைக் கொண்டுள்ளது.

சிகாகோவுக்கு அப்பால், அமெரிக்கா முழுவதும் கல்வியாளர்கள், வாஷிங்டன் டி.சி. மற்றும் பிட்ஸ்பேர்க்கிற்கு வெளியே உள்ள கீஸ்டோன் ஓக்ஸ் பள்ளி மாவட்டம் உள்ளிட்ட பள்ளிகளை மூட வேலைநிறுத்த நடவடிக்கையை கோருகின்றனர். ஜனநாயகக் கட்சி தலைமையிலான வாஷிங்டன் டி.சி, மேயர் முரியல் பவுசர் தலைமையில், வாஷிங்டன் ஆசிரியர் சங்கத்திற்கு (WTU) எதிராக தற்காலிக தடை உத்தரவுக்காக அவசர பிரேரணையை தாக்கல் செய்தது. ஆசிரியர்கள் “வேலைநிறுத்தத்தில் அல்லது பிற வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதைத் தடுக்க” தடை விதிக்கக் கோரி அல்லது அதைப்பற்றி விவாதிக்க கோருகின்றது.

நியூ ஜேர்சியிலுள்ள மொண்ட்கிளேரில், நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் ஜனவரி 25 முதல் நேரில் கற்றலுக்கு திரும்ப மறுத்துவிட்டனர். புதன்கிழமை தொழிற்சங்கத்திற்கு எதிராக இதேபோன்ற குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய மொண்ட்கிளேர் கல்வி வாரியம் தூண்டியது.

சான் பிரான்சிஸ்கோவில், பள்ளிகளை மீண்டும் திறக்கும் முயற்சியில் நகர அரசு தனது சொந்த பள்ளி மாவட்டத்தில் வழக்குத் தொடர்கிறது. ஜனநாயகக் கட்சி மேயர் லண்டன் ப்ரீட் சமீபத்திய வாரங்களில் தொலைநிலைக் கற்றலுக்கு எதிராக அதிக குரல் கொடுத்து வருகிறார்.

நைஜீரியா, மெக்ஸிகோ, கனடா, பிரேசில், ஆர்ஜென்டினா, சாவோ டோமே, பிரான்ஸ், கோட் டி ஐவரி, கேமரூன் மற்றும் பிற நாடுகள் உட்பட உலகம் முழுவதும் கல்வியாளர்களிடையே வேலைநிறுத்தங்கள் நடக்கின்றன அல்லது திட்டமிடப்பட்டுள்ளன.

கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பணி அவர்களின் போராட்டங்களை சர்வதேச அளவிலும், தொற்றுநோயால் பேரழிவிற்குள்ளானதும் அதே கொடிய வேலை நிலைமைகளை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினருடனும் ஒன்றிணைப்பதாகும். பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ கட்சிகளிடமிருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே கல்வியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் உலக அளவில் ஒன்றிணைந்து ஆளும் உயரடுக்கினரால் கோரப்படும் துன்பங்களையும் மரணத்தையும் முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

Loading