பள்ளிகளின் பாதுகாப்பற்ற திறப்புக்கு எதிராக சிகாகோ ஆசிரியர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் உள்ள கல்வியாளர்களின் சாமானிய பாதுகாப்புக் குழுக்கள், சிகாகோவில் எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்களுடன் தமது ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக பின்வரும் அறிக்கையை ஏற்றுக்கொண்டன. இந்த தீர்மானத்தை பரப்பவும் அதற்கு ஆதரவளிக்கவும் எமது வாசகர்களை அழைக்கிறோம்.

நாங்கள், ஐரோப்பாவில் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் சாமானிய பாதுகாப்புக் குழுக்கள், சிகாகோவில் கல்வியாளர்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு எங்கள் ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவிக்கிறோம். அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பள்ளி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி வருவதால், ஆசிரியர்கள் உயிரைக் காப்பாற்றுவதற்கும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதைத் தடுப்பதற்கும் ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர்.

இலாபங்களை வாழ்க்கைக்கு முன் வைப்பது மற்றும் பள்ளிகளைத் திறந்து வைப்பது என்ற அமெரிக்காவில் உள்ள அதே கொலைகாரக் கொள்கைகளையே ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் பின்பற்றுகின்றன. இங்கிலாந்தில் போரிஸ் ஜோன்சன், ஜேர்மனியில் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் பெரும் கூட்டணி அரசாங்கம், பிரான்சில் உள்ள மக்ரோன் அரசாங்கம் அல்லது வேறு இடங்களில் இருந்தாலும் கொள்கை ஒரே மாதிரியானது.

சிகாகோ ஆசிரியர்களும் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் (ஆதாரம்: CTU Facebook)

இதற்கான காரணம் எங்களுக்குத் தெளிவாக உள்ளது: குழந்தைகளை தற்காலிகமாக அடைத்து வைத்திருப்பதற்கான இடமாக பள்ளிகள் பயன்படுத்தப்படுகின்றன, மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் குழந்தை காப்பாளர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள், ஆகவே பெற்றோர்கள் வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கப்படுவார்கள், பெருநிறுவனங்கள் தொற்றுநோய் காலம் முழுவதிலும் இலாபங்களை பராமரிக்க முடியும்.

வைரஸ் பரவுவதில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதற்கு விஞ்ஞானிகளின் நிலையான சான்றுகள் மற்றும் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் இது நடக்கிறது. இங்கிலாந்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட புதியதும், வீரியம்கொண்ட தொற்று வகையானதும் ஏற்கனவே உறுதியாக நிறுவப்பட்டு, சர்வதேச அளவில் பரவி வருகின்றது.

இந்த கொள்கைக்கு, தொழிற்சங்கங்கள் எந்த எதிர்ப்பையும் ஏற்பாடு செய்யப்போவதில்லை. மாறாக, அவர்கள் பிரான்சில் உள்ளதைப் போல பள்ளிகளை திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைக்கிறார்கள், அல்லது இங்கிலாந்தைப் போல, பள்ளிகளை தற்காலிகமாக மூடுவதற்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர், அதுவும் பள்ளிகள் திறக்கப்படுவதைத் தடுக்க ஆசிரியர்கள் ஏற்கனவே பாரிய நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கிய பின்னரே இது நிகழ்ந்துள்ளது.

மீண்டும் திறக்கும் கொள்கைக்கு எதிராக ஒரு போராட்டம் இருக்க வேண்டுமானால், அதை கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சுயாதீனமாக ஒழுங்கமைக்க வேண்டும். அதனால்தான் சிகாகோவில் வளரும் போராட்டம் மிக முக்கியமானது. அது சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு முன்னோக்கி செல்லும் பாதையை சுட்டிக்காட்டுகிறது.

ஐரோப்பாவில் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் சாமானிய பாதுகாப்புக் குழுக்கள், இந்த போராட்டத்தை கண்டம் முழுவதும் அறியச் செய்வதற்கும், சர்வதேச அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கான முன்னோடியாக மாற்றுவதற்கும், பள்ளிகளை மூடுவதற்கும், அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவதற்கும், மற்றும் தொற்றுநோயை எதிர்த்து ஒரு விஞ்ஞானபூர்வ லேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாக உறுதியளிக்கிறோம்.

Loading