பிரெஞ்சு இஸ்லாமிய சபைக்கு "கோட்பாடுகளின் சாசனம்" மூலம் மக்ரோன் கட்டளையிடுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த மாதம், இஸ்லாமிய வழிபாட்டுக்கான பிரெஞ்சு சபை (Conseil français du culte musulman - CFCM) பிரெஞ்சு அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட இஸ்லாமியக் "கோட்பாடுகளின் சாசனத்தை" ஏற்றுக்கொண்டது. பிரெஞ்சு அரசாங்கத்தால் கட்டளையிடப்படும் கொள்கைகளை மதிக்க இந்த சாசனம் முஸ்லீம் மத அதிகாரிகளுக்கு உறுதிசெய்கிறது, 2019 இறுதியிலிருந்து முஸ்லிம்கள் "பிரிவினைவாதத்தால்" உந்தப்பட்டு வருகிறார்கள் என இது சுட்டிக்காட்டியுள்ளது.

மத உரிமைகளைப் பாதுகாப்பதாக பாசாங்குத்தனமாகக் கூறும் அதே வேளையில், அரசாங்கத்தின் நடவடிக்கை முஸ்லிம்களை உண்மையான இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மதங்களின் சட்டபூர்வமான நிலைப்பாடு, 1905 மதச்சார்பின்மை சட்டத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று கருதப்பட்டாலும், மக்ரோன் அரசாங்கமானது முஸ்லிம்கள் அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற அவமானகரமான உறுதிமொழியை சுமத்த முயன்றது. ஒப்பிடக்கூடிய அளவிற்கு எதுவும் மற்றய மதங்களிடம் கேட்கப்படவில்லை.

உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் கடந்த டிசம்பரில் Le Figaro பத்திரிகைக்கு தனது முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தினார், "இதுவரை அரசாங்கம் தீவிரமயமாகுதல் மற்றும் பயங்கரவாதத்தில் அக்கறை கொண்டிருந்தது. இப்போது நாம், பயங்கரவாதத்தின் தளத்தையும் தாக்குவோம், அங்கு அறிவுசார் மற்றும் கலாச்சார இடத்தை உருவாக்கும் நபர்கள், பிரித்து தங்கள் மதிப்புகளை திணிக்கிறார்கள்."

இதனால், எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாதவர்களை போலீசார் குறி வைத்து தாக்குவார்கள். அவர்கள் "பிரிவினைவாதத்தை" ஊக்குவிக்கக்கூடும் என்று கூறப்படும் கூற்றுக்களின் அடிப்படையில் அவர்கள் எண்ணங்கள் மற்றும் அறிக்கைகளை இலக்காகக் கொள்ள முடியும். "வளர்க்கும் தளம்" என்று அழைக்கப்படுவது மிகவும் தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது, அது வழிபாட்டு தலங்கள், முஸ்லீம் மத மற்றும் கலாச்சார சங்கங்கள், மற்றும் அவற்றின் ஆதரவாளர்களை உள்ளடக்கியது. இறுதியில் ஒரு "பிரிவினைவாதி" என்பது, போலீஸ் ஏற்றுக்கொள்ளாத எண்ணங்கள் அல்லது பழக்கங்களைக் கொண்டிருப்பதாகும்.

முதன்மையாக முஸ்லிம்களை குறிவைத்து, ஒரு போலி சட்ட வகையினமாக சிந்தனை-குற்றத்தையும், குற்றவுணர்வு என்ற ஒரு அனுமானத்தையும் ஏற்படுத்துவதன் மூலம், முஸ்லிம்களின் உரிமைகளை மட்டுமல்ல, அரசு ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகளையும் அச்சுறுத்துகிறது. இந்த நிலையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு என்பது தொழிலாள வர்க்கத்தின் இன்றியமையாத பணியாகும். தொழிலாளர்களை மத, இன அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சிகளை எதிர்ப்பது தொழிலாள வர்க்கத்தை போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்கு அவசியமாகும்.

"கோட்பாடுகளின் சாசனம்" எதைக் கட்டளையிடுகிறது?

முஸ்லிம்களுக்கு எதிரான சமத்துவக் கொள்கையின் பாதுகாவலராக முதலாளித்துவ அரசை முன்வைக்கும் ஒரு கொடூரமான மோசடி, இந்த கோட்பாடுகளின் சாசனம் முற்றிலும் பரவியுள்ளது, அது அவர்களின் கருத்து சுதந்திரத்தைக் கூட பறிக்க முயற்சிக்கிறது. முஸ்லிம்களின் கருத்துக்களுக்கு போலீஸ் கட்டளையிடுவதோடு அரசியல் ரீதியாக தங்களை வெளிப்படுத்தவும் தடை விதிக்கிறது.

சாசனம் அறிவிக்கிறது: “ஒரு மத மற்றும் நெறிமுறைக் கண்ணோட்டத்தில், முஸ்லிம்கள், எமது நாட்டினராக இருந்தாலும், வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி, ஒரு ஒப்பந்தத்தால் பிரான்சுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். இது தேசிய ஒத்திசைவு, பொது ஒழுங்கு மற்றும் குடியரசின் சட்டங்களை மதிக்க அவர்களை கட்டாயப்படுத்துகிறது.” அரசுக்கு இந்த கடமை அவர்களின் சொந்த நம்பிக்கைகளை விட அதிகமாக உள்ளது: "குடிமக்களின் கடமைகளைத் தவிர்ப்பதற்கு எந்தவொரு மத நம்பிக்கையையும் செயல்படுத்த முடியாது."

முஸ்லிம்கள் "தேசிய ஒத்திசைவை" மதிக்க வேண்டும் என்று மக்ரோன் கோருவதன் அர்த்தம் என்ன? ஐரோப்பா முழுவதும், பிரான்சிலும் அரசாங்கம் சமூக சமத்துவமின்மையை தீவிரப்படுத்துகின்ற சிக்கன நடவடிக்கைகளை சுமத்துகிறது. விஞ்ஞானிகளால் கண்டிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களுக்கு எதிராக ஒரு சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை சுமத்துகிறது. இதன் விளைவாக கண்டம் முழுவதும் 600,000 க்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே இறந்துள்ளனர். இந்த கொள்கைகளால் ஏற்படும் தொழிலாள வர்க்கத்தின் வெடிப்புத் தன்மை கொண்ட சீற்றத்திற்கு "மஞ்சள் சீருடை" இயக்கமும் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதுமான ஏராளமான வேலைநிறுத்தங்களும் சாட்சியம் அளிக்கின்றன.

நேட்டோ சக்திகளால் இராணுவ சக்திப் பயன்பாடுகளுக்கு பெரும் தடையை அகற்றிய 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து, பிரான்ஸ் அதன் முந்தைய காலனிகளான முஸ்லிம் நாடுகளை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. ஐவரி கோஸ்ட், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் மாலியில் நடந்த போர்கள், தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பையும் அவநம்பிக்கையையும் தூண்டிவிட்டன. குறிப்பாக இந்த எதிர்ப்பு முஸ்லிம் தொழிலாளர்கள் மத்தியில் வலுவாக உள்ளது.

"கோட்பாடுகளின் சாசனம்" வழிபாட்டுத் தலங்களில் அரசியல் விவாதங்களைத் தடை செய்கிறது, இவ்வாறு அது அறிவிக்கிறது: "அரசியல் சொற்பொழிவுகளை பரப்புவதற்கு அல்லது உலகின் பிற இடங்களில் நடக்கும் மோதல்களை இறக்குமதி செய்வதற்கு வழிபாட்டு தலங்களை நாங்கள் அனுமதிக்க மறுக்கிறோம். நமது மசூதிகளும், வழிபாட்டுத் தலங்களும் தொழுகைக்காகவும், மதிப்புகளை பரப்புவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஆட்சிகளைப் பாதுகாத்து, பிரான்ஸ், நமது நாடு மற்றும் நமது பிரெஞ்சு சக தேசபக்தர்களுக்கு விரோதமான வெளியுறவுக் கொள்கைகளை ஆதரிப்பது போன்ற தேசியவாதப் பேச்சுகளை பரப்புவதற்கு அவைகள் அமைக்கப்படவில்லை."

இந்த புதிய சட்டம், தெளிவாக பயங்கரவாத நடவடிக்கைகளை குறிவைக்கவில்லை. மக்ரோன் இந்த சாசனத்தை இஸ்லாமிய வழிபாட்டுக்கான பிரெஞ்சு சபைக்கு ஆணையிடுவதற்கு முன்னரே சட்டத்தின் மூலம் தண்டனைக்குரியதாக உள்ளது. இது, பிரெஞ்சு அரசின் வெளிநாட்டு அல்லது உள்நாட்டுக் கொள்கைகளை விமர்சிக்கும் அரசியல் விவாதங்களை அது தடை செய்வதோடு தொடர்புபட்டுள்ளது.

2004 மற்றும் 2010 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள் மற்றும் அனைத்து பொது இடங்களிலும் முக்காடு அல்லது முகமறைப்புக்கள் மீதான தடை உட்பட, முஸ்லிம்களின் தனிப்பட்ட வாழ்வில் அரசாங்கம் தொடர்ந்து தலையிட்டு, ஒரு வெறிபிடித்த இஸ்லாமிய வெறுப்பு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் அதிக நீள பாவாடைகளை அணிவதற்காக வெளியேற்றியது, முகமறைப்புக்கள் அணிந்த பெண்களின் கணவர்களை போலீசார் அடித்துத் துவைத்தமை போன்ற பிற்போக்கான சம்பவங்களானது முஸ்லிம் தொழிலாளர்களிடையே அரசு-அனுமதிக்கப்பட்ட இனவாதம் அவர்களை இலக்காகக் கொண்டது என்ற ஒரு உணர்விற்கு பங்களிப்பு செய்திருக்கிறது.

"கோட்பாடுகளின் சாசனம்" அரசு இனவாதம் பற்றி எதுவும் குறிப்பிடுவதை தடைசெய்கிறது. இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கைகள், "ஒரு அதிதீவிரவாத சிறுபான்மையினரின் வேலையாக இருக்கின்றன, அதை அரசு அல்லது பிரெஞ்சு மக்களுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது என்று அது வலியுறுத்துகிறது. இதன் விளைவாக, அரசு இனவெறி என சொல்லப்படும் கண்டனங்கள், பாதிப்பு பற்றிய அனைத்து தோரணைகள் போல, அவதூறுக்குரியதாக இருக்கின்றன."

இஸ்லாமிய அதிகாரிகள் "சில முஸ்லீம் கலாச்சார நடைமுறைகள் இஸ்லாத்தின் கீழ் வரவில்லை" என்று பின்பற்றுபவர்களுக்கு நினைவூட்டுவார்கள் என்று "சாசனம்" கூறுகிறது. இந்த தெளிவற்ற மற்றும் பொருத்தமற்ற அறிக்கை, பள்ளிகளில் தலைக்கவசங்களை தடைசெய்யும் சட்டம் போன்ற அரசாங்கக் கொள்கைகளைப் பாதுகாக்க இஸ்லாமிய வழிபாட்டுக்கான பிரெஞ்சு சபை (CFCM) தேவைப்படுகிறது.

இறுதி பகுப்பாய்வில், இது "சாசனத்தின்" பிற்போக்குத்தனமான அரசியல் உள்ளடக்கத்தையும், பாகுபாட்டையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. பிரெஞ்சு அரசு முஸ்லிம்களுக்கு ஒரு சிறப்பு சிறுபான்மை அந்தஸ்தை உருவாக்குகிறது, அவர்களுக்கு எந்தவொரு கூட்டு விமர்சனமும் தடைசெய்யப்பட்டுள்ளது. உண்மையில், அரசு இனவெறியை முஸ்லிம்கள் “அவதூறு” என்று கருதுவது பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய வரலாற்றால் தெரிவிக்கப்படும் பிரெஞ்சு அரசியல் மற்றும் மத வாழ்க்கை பற்றிய விவாதத்தை குற்றமாக்குவதற்கு ஒப்பாகும்.

பிரெஞ்சு ஏகாதிபத்தியம் இன்னும் அதிக-அல்லது குறைந்த அரசு இனவாதத்தின் நீண்ட இரத்தக்களரி பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 1830களில் அல்ஜீரியாவைக் கைப்பற்றியதற்கும் இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கும் இடையில், காலனிகளில் முஸ்லிம்கள் மீது பாரபட்சமான சுதேச சட்டவிதியை அது திணித்தது. ஐரோப்பாவில் யூதர்களை மரண முகாம்களுக்கு நாடு கடத்துவதற்கான கொள்கையை பின்பற்றிய விச்சி ஒத்துழைப்பு ஆட்சிக்கு எதிரான தொழிலாளர் எழுச்சிக்கு பின்னர்தான் 1946ல் இந்தச் சட்டவிதி ஒழிக்கப்பட்டது.

தற்போதைய சூழலில், இந்த உண்மைகள் வெறும் உயர்கல்வி சார்ந்த வரலாற்று குறிப்புகள் அல்ல. நாஜி ஒத்துழைப்பை ஆதரிக்கும் "பிரெஞ்சு அல்ஜீரியா" இன் நவ-பாசிச கட்சிவாதிகள், சமகால அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இன வெறுப்பைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதி-வலது கல்வியாளர் எரிக் சிமோர் போன்ற அவர்களின் பாதுகாவலர்கள், செய்தி ஊடகத்திலும், வணிகத்திலும் பரந்த தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றைப் பற்றி மெளனம் சாதிக்கும் முயற்சி ஒரு திட்டவட்டமான சர்வதேச சூழலில் நடைபெறுகிறது. 1930களின் பின்பு இந்தப் பெருந்தொற்று நோய் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை மட்டும் தூண்டிவிடவில்லை. அது ஆளும் வர்க்கத்தை மதிப்பிழக்கச் செய்துள்ளது. நிதியப் பிரபுத்துவம் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்" என்ற அதனுடைய கொள்கையால் அம்பலப்படுத்தப்பட்டு, தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கண்டு திகிலுற்று, அதிவலது சர்வாதிகாரத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருகிறது.

ஜனவரி 6 ம் தேதி வாஷிங்டனில் நவ-நாஜிப் படைகள் தலைமையில் ட்ரம்ப் மேற்கொண்ட சதி, பாசிசவாதத்தின் அழுகிப்போன உலக ஏகாதிபத்தியத்தின் இதயத்தானத்தை வெளிப்படுத்தியது. இந்த அரசியல் பூகம்பத்தின் பின்அதிர்வுகள் ஐரோப்பா முழுவதும் பரவத் தொடங்கி விட்டன, அங்கு ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நவ-பாசிசக் கட்சிகள் ஏற்கனவே ஆளும் உயரடுக்கின் பரந்த பிரிவுகளால் ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

இந்த சர்வதேசச் சூழலுக்கு வெளியே “சாசனத்தை” மதிப்பீடு செய்வது சாத்தியமற்றது. ஜேர்மனியில், தீவிர வலது மீண்டும் பாராளுமன்றத்தில் உள்ளது, மற்றும் ஆளும் பெரும் கூட்டணியால் பாதுகாக்கப்பட்ட அதிவலது பேராசிரியர்கள் ஹிட்லர் "தீயவர் அல்ல" என்று அறிவிக்கிறார்கள். ஸ்பெயினில், தங்களை பாசிஸ்டுகள் என்று பெருமை பேசும் அதிகாரிகள் ஸ்பெயின் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களுக்கு "26 மில்லியன்" மக்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று அறிவித்து பதிலளித்துள்ளனர்.

குடியரசின் பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் பாசிசக் கொள்கைகள்

பிரான்சில் ஜனநாயக உரிமைகள் மீதான பாசிச தாக்குதலின் தனித்தன்மை என்னவென்றால், அது குடியரசின் பாதுகாப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகிறது.

இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு எதிரான மசோதாவின் கட்டமைப்பிற்குள் "கோட்பாடுகளின் சாசனம்" ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் "குடியரசின் கொள்கைகளுக்கான மரியாதையை உறுதிப்படுத்தும் மசோதா" என்று மறுபெயரிடப்பட்டது. இந்தச் சட்டம் ஜனவரி 18 திங்கள் முதல் தேசிய சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்து, "இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு" எதிரான ஒரு போராட்டத்திற்கான முழக்கத்தின் பின்னால் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் ஒன்றுபட்டுள்ளது.

அது வலதுசாரி குடியரசுக் கட்சி (LR) தலைமையில் ஒரு பல கட்சி செனட் விசாரணைக் குழுவில் ஒன்றுபட்டது, "இஸ்லாமிய தீவிரமயமாதல்: ஒன்றாக எதிர்கொள்ளல் மற்றும் போராடுதல்" என்று அதற்கு தலைப்பு கொடுக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவானது ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உட்பட செனட்டின் அனைத்து அரசியல் குழுக்களின் பிரதிநிதிகளையும் கொண்டிருந்தது.

மீண்டும் திறக்கும் பிரச்சாரத்துடன் தொடர்புடைய பெருந்தொற்று நோய் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவை இந்த தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளன. டஜன் கணக்கான மசூதிகள் மற்றும் முஸ்லீம் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன மற்றும் மனித உரிமைகள் அமைப்பான Barakacity மற்றும் பிரான்சில் முஸ்லிம் வெறுப்புகளுக்கு எதிரான கூட்டமைப்பு (Collectif contre l'islamophobie en France - CCIF) ஆகியவை கலைக்கப்பட்டன. இந்த நிறுவப்பட்ட அமைப்புகள் முற்றிலும் சட்டபூர்வ கட்டமைப்பிற்குள் இயங்கின.

குடியரசின் பாதுகாப்பு என்ற போர்வையில், மதசார்பின்மை குறித்த 1905 சட்டத்தை மீறுவதை மக்ரோன் நோக்கமாகக் கொண்டுள்ளார். டிரேஃபுஸ் (Dreyfus) விவகாரத்தைத் தொடர்ந்து சோசலிச இயக்கத்தின் செல்வாக்கின் கீழ் இந்த சட்டம் இயற்றப்பட்டது -— யூத கேப்டன் ஆல்ஃபிரட் டிரேஃபுஸ் சோடிப்பு வழக்கை உருவாக்கி சிறையில் அடைக்க முயன்ற யூத-விரோத சக்திகளின் தோல்வியாக இருந்தது. 1905 சட்டத்தை இலக்கு வைத்து, மக்ரோன், இரண்டாம் உலகப் போரின்போது ஆக்கிரமிப்புக் காலத்திற்கு வெளியே, ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக பிரான்சில் இருந்த தேவாலயத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவுகளையும் கருத்து சுதந்திரம் மற்றும் தேவாலயத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவுகளுக்கான சட்ட கட்டமைப்பையும் அச்சுறுத்துகிறார்.

சில வாரங்களுக்குள் முக்கிய ஆவணங்களை உருவாக்க இஸ்லாமிய வழிபாட்டுக்கான பிரெஞ்சு சபையை (CFCM) மக்ரோன் கட்டாயப்படுத்தினார், உள்ளடக்கம் பெரும்பாலும் அதிகாரிகளால் ஆணையிடப்பட்டது. தேசிய இமாம்கள் கவுன்சிலை உருவாக்க ஒரு கட்டுப்படுத்தப்படுகிற மற்றும் துரிதப்படுத்தப்பட்ட கால அட்டவணையை அவர் விரும்புகிறார், இது சாசனத்தில் ஈடுபட நிர்பந்திக்கப்படும் அதிகாரிகள் "சான்றளிக்க" வேண்டும்.

ஒப்பிடும் ஒரு புள்ளியைக் கண்டுபிடிக்க, பல ஊடக பண்டிதர்கள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தையும், 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர், பிரெஞ்சு யூத மதத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவத்தை முதலாம் நெப்போலியன் உருவாக்கியதையும் குறிப்பிடுகின்றனர்.

சாம்ராஜ்யத்தின் கீழ், 1806 முதல் 1808 வரை, நெப்போலியன் 1791 செப்டம்பர் 27 ஆம் தேதி விடுதலை சட்டத்தை அடுத்து, அரசியலமைப்புச் சட்டமன்றத்தில் யூதத்துவத்தை மறுசீரமைத்தார், இது யூதர்களுக்கு பிரெஞ்சு குடியுரிமையை வழங்க அனுமதித்தது. முதலாம் நெப்போலியனின் சீர்திருத்தங்கள் யூத வழிபாட்டை ஒழுங்கமைக்கவும் சட்டப்பூர்வமாக்கவும் பிரான்சின் மத்திய யூத அமைப்பை (Central Jewish Consistory of France) உருவாக்க வழிவகுத்தன.

உண்மையில், நெப்போலியனின் பணியின் செயலுக்கும் மக்ரோனின் செயலுக்கும் இடையே எந்த ஒப்பீடும் இருக்க முடியாது. யூதர்களுக்கு எதிரான அவரது எதேச்சதிகாரமும், தப்பெண்ணங்களும் இருந்தபோதிலும், நெப்போலியன் மத அமைப்பையும் யூத மக்களை ஒருங்கிணைப்பதையும் அனுமதித்தார். இதில், அவர் நிலப்பிரபுத்துவத்தின் சில பகுதிகளையும் அழித்தொழிக்கும் புரட்சியால் உந்துதல் பெற்ற பாதைகளைப் பின்பற்றினார்.

இதற்கு மாறாக, மக்ரோனால் தயாரிக்கப்பட்ட நடவடிக்கைகளின் தீங்கிழைக்கும் நோக்கத்தையும், முஸ்லீம்களை துன்புறுத்துவதை சட்டபூர்வமாக்குவதையும் ஒருவர் அங்கீகரிக்க முடியாது.

மக்ரோனின் நடவடிக்கையின் முன்னோடிகள் 1789 பிரெஞ்சு புரட்சியில் இல்லை, ஆனால் அதன் எதிப்பாளர்களிடம் இருக்கிறது. தனது தேர்தலின் இரவில் நவ-பாசிச வாக்குகளை வரவேற்பதற்கு முன்பு, 1793 இல் லூயிஸ் XVI தூக்கிலிடப்பட்டதை மக்ரோன் ஏற்கனவே விமர்சித்திருந்தார், பிரான்சில் ஒரு அரசர் இல்லை என்பதற்கான குறைபாடு இருக்கிறது என்று அறிவித்தார். Action Française (ஒரு பிரெஞ்சு தீவிர வலதுசாரி முடியாட்சி அரசியல் இயக்கம்) இன் தலைவரான யூத-எதிர்ப்பு முடியாட்சிவாதி மற்றும் நாஜி ஒத்துழைப்பாளர் சார்லஸ் மோராஸ் (Charles Maurras) இன் எழுத்துக்களை மீண்டும் வெளியிட அவரது அரசாங்கம் முயன்றது, மேலும் அவர் "மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கலகப் பிரிவு போலீஸை கட்டவிழ்த்துவிட்டதோடு, அவர் பெத்தானை ஒரு "சிறந்த சிப்பாய்" என்று அழைத்தார்.

2019 இல் Dreyfus விவகாரம் பற்றிய ரோமன் போலன்ஸ்கியின் J’Accuse திரைப்படத்திற்கு எதிரான ஊடக பிரச்சாரத்தை அரசாங்கம் ஆதரித்தது தற்செயல் நிகழ்வு அல்ல. இத்திரைப்படமானது, ட்ரேஃபுசார்ட்ஸ் எதிர்ப்புவாதிகள், மோராசியன் இனவெறி, மற்றும், பெத்தான் அதிகாரத்திற்கு வந்தமை பிரெஞ்சு தோல்வி என்று அழைத்தவரும், 1940 இல் நாஜி ஒத்துழைப்பு "தெய்வீக ஆச்சரியம்" என்று அழைத்த மோராசின் செல்வாக்கை இத்திரைப்படமானது எதிர்க்கிறது.

பிரெஞ்சு அரசின் முஸ்லீம்-விரோத பிரச்சாரமானது "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையுடன் மட்டுமல்லாமல், ஏகாதிபத்திய போர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் சமூக உரிமைகள் மீதும், வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் உட்பட ஒரு வன்முறையான தாக்குதல் கொள்கையுடன் கைகோர்த்து செல்கிறது.

"பிரிவினைவாத எதிர்ப்பு" (“anti-separatist”) சட்டமானது "பொது பாதுகாப்பு சட்டத்துடன்" (“global security law”) இணைக்கப்பட்டுள்ளது, இது காவல்துறையினர் தொடர்பாக வீடியோக்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்கும். பாரிஸில் ஒரு இசை தயாரிப்பாளரான ஜோர்ஜ் செக்லெர் தனது ஸ்ரூடியோவில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டபடி, இது காவல்துறையினர் யாரையும் தாக்கவும், அவர்கள் தற்காப்புக்காக செயல்படுவதாகக் கூறவும் அனுமதிக்கும். இந்த சட்டம் மனித உரிமைகளுக்கு முரணானது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு பாசிச பொலிஸ் அரசை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் போராட்டம் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் வரலாறும் ஐரோப்பாவில் யூதர்களின் பாசிச இனப்படுகொலையும், தீவிர வலதுசாரி சக்திகள் இன, மத வெறுப்புகளையும் பிளவுகளையும் உக்கிரம் கொள்ள அனுமதித்தால், தொழிலாள வர்க்கம் கொடுக்கும் கொடூரமான விலை பற்றிய ஒரு நிரந்தர எச்சரிக்கையாக இருக்கிறது. "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கை மற்றும் ஆளும் வர்க்கத்தின் பாசிசத்திற்கான நகர்வு கொள்கைக்கு எதிரான ஒரு போராட்டத்தில், ஒரு சோசலிச முன்னோக்கில், தொழிற்சங்க எந்திரங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்துவதும், மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்ற வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.

Loading