முன்னோக்கு

பிரான்சின் முஸ்லீம்-விரோத “பாதுகாப்பு” சட்டம்: ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு நேரடி தாக்குதல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் இப்போது நிறைவேற்றப்படவுள்ள “பிரிவினைவாத எதிர்ப்பு” சட்டம் பிரான்சின் அரசியல் ஆட்சியில் ஒரு கடுமையான, சர்வாதிகார மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதன் ஷரத்து 51 ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நிறுவப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளை கிழித்தெறிகின்றன.

A police officer looks at demonstrators during a protest against a proposed security law in Paris, Saturday, Jan.16, 2021. (AP Photo/Christophe Ena)

வாஷிங்டனில் டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்த ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு வெறும் ஒரு சில வாரங்களில், பிரான்சில் ஜனநாயக உரிமைகள் மீதான இந்த நேரடி தாக்குதல் சர்வதேச அளவில் தொழிலாளர்களால் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். COVID-19 ஆல் இரண்டு மில்லியன் பேர் உயிரிழப்பதற்கு இட்டுச் சென்றுள்ள ஒரு கொலைகார சுகாதாரக் கொள்கையால், முதலாளித்துவத்தின் மீது அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பையும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே வளர்ந்து வரும் கோபத்தையும் எதிர்கொண்டு, நிதியப் பிரபுத்துவம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கம், இஸ்லாமியவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கான "பிரிவினைவாத" ஆதரவை ஒழிப்பதற்கும், அரசுக்கு விசுவாசமாக இருக்க செய்வதற்கும், முஸ்லீம் தலைமறைப்புகள் மீதான அதன் வலதுசாரி தடைகளை நிர்பந்திப்பதற்கும் ஓர் ஆயுதமாக அதன் சட்டத்தை முன்வைக்கிறது. அரசு மற்றும் திருச்சபையைப் பிரித்து நிறுவிய 1905 மதச்சார்பின்மைச் சட்டத்தைத் திருத்தி எழுதும் —உண்மையில் கிழித்தெறியும்— இந்த “பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டம்” மத அமைப்புகளை ஒழுங்கமைப்பதன் மீதும் மற்றும் நிதியுதவி வழங்குவதன் மீதும் அரசின் பரந்த கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன், வழிபாட்டு தலங்களை மூடுவதற்கும் எதேச்சதிகார அதிகாரங்களை வழங்குகிறது.

இந்த அச்சுறுத்தலை பயன்படுத்தி, அவர் ஏற்கனவே, முஸ்லிம்களை "தேசிய நல்லிணக்கம்" மற்றும் "பொது ஒழுங்கிற்கு" கீழ்ப்படிய கட்டாயப்படுத்தும் விதத்தில், பிரெஞ்சு முஸ்லீம் கவுன்சில் மீது அவமானகரமான ஒரு புதிய சாசனத்தை விதித்துள்ளார். இது, முஸ்லீம்களை நடைமுறையளவில் விசுவாச உறுதிமொழிக்கு உட்படுத்தும் ஒரு தனி வகை குடிமக்களாக திறம்பட நிறுவுகிறது. 20 ஆம் நூற்றாண்டில், பாசிச ஆட்சிகள் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் கொலைகாரக் கொள்கைகளைச் சுமத்துவதற்கும் யூத-விரோத வெறுப்புகளை தூண்டியதை இங்கே நினைவுகூராமல் இருப்பது சாத்தியமில்லை.

அதற்கும் மேலாக, இந்தச் சட்டம், முஸ்லிம்கள் அல்லது பிற மத நம்பிக்கையாளர்களது உரிமைகள் மீதான ஒரு தாக்குதல் தானே என்று பார்ப்பது தவறானதாக இருக்கும். ஷரத்து 8 பாசிசவகைப்பட்ட கோட்பாட்டை விதிக்கிறது — அதாவது, 1901 சட்ட விதிமுறைகளின் கீழ் உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போன்ற அமைப்புகள் அவற்றின் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினர்களின் செயல்களுக்கும் ஒட்டுமொத்தமாக அவற்றைப் பொறுப்பாக்கும்.

இது கலாச்சார மற்றும் அரசியல் அமைப்புகளின் மீது எதேச்சதிகாரமாக தடைகளை விதிக்க வழி வகுக்கிறது. ஓர் அமைப்பின் தனி உறுப்பினர் செய்யும் எந்தவொரு அத்துமீறலுக்காகவும், ஒட்டுமொத்த அமைப்பையும் குற்றவாளியாக அறிவிக்கவும், அதைத் தடைசெய்யவும், அதன் உறுப்பினர்களை தண்டிக்கவும் பொலிஸ் அந்நடவடிக்கையை மேற்கோள் காட்ட முடியும். இது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலாக உள்ளது.

ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ளதைப் போல, ஆளும் வர்க்கம் நேரடியாக பாசிசவாத சக்திகளை வளர்த்து வருகிறது. இந்த சட்டத்தின் வரைவை மேற்பார்வையிட்ட 38 வயதான உள்துறை மந்திரி ஜெரால்ட் டர்மனின், அவரது பாசிச அனுதாபங்கள் குறித்து எந்த இரகசியமும் வைக்க இல்லை. கட்சிகளைத் தடை செய்ய இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு, டர்மனின் பதில் உரைக்கையில், அதிவலது அக்ஸியோன் பிரான்ஸேஸ் (Action française – AF) குடியரசைத் தூக்கியெறிந்து, அதற்கு பதிலாக 1789 பிரெஞ்சு புரட்சிக்கு முன்னர் போல அதை ஒரு முழுமையான முடியாட்சியாக மாற்ற முற்பட்டாலும் கூட, அதன் மீது வழக்குத் தொடர மாட்டேன் என்றவர் பதிலளித்தார். டர்மனின் 2008 இல் அவர்கள் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்ததை பின்னர் AF உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர், அதன் பின்னர் அவர் குடியரசு கட்சியிலும் பின்னர் மக்ரோன் கட்சியிலும் இணைந்தார்.

இப்போது மக்ரோனால் இலக்கு வைக்கப்பட்ட இந்த 1901 மற்றும் 1905 சட்டங்கள், யூத-எதிர்ப்புவாதம், முடியாட்சி மற்றும் இறுதியாக பிரான்சில் கம்யூனிச-எதிர்ப்பு மற்றும் பாசிசவாதத்திற்கு மிகவும் ஈவிரக்கமற்ற புத்திஜீவித அரசியல் ஆதரவாளர்களாக இருந்த அக்ஸியோன் பிரான்ஸேஸ் க்கு எதிரான ஒரு போராட்டத்தில் நிறுவப்பட்டவை ஆகும்.

யூத அதிகாரி கேப்டன் ஆல்ஃபிரட் ட்ரேஃபுஸ், 1894 இல், தேவாலயத்தின் ஆதரவுடன் இராணுவத்தால் பொய்யான உளவுபார்ப்பு குற்றச்சாட்டுகளில் தவறாக தண்டிக்கப்பட்ட பின்னர், அவரைச் சிறையில் வைத்திருப்பதற்காக 1898 இல் அக்ஸியோன் பிரான்ஸேஸ் நிறுவப்பட்டது. ட்ரேஃபுஸை அப்பாவி என நிலைநாட்டும் போராட்டத்தில், ஜோன் ஜோரஸ் தலைமையிலான சோசலிச இயக்கம் முக்கிய பங்கு வகித்தது. ட்ரேஃபுஸ் விவகாரத்தில் அக்ஸியோன் பிரான்ஸேஸின் பெருந்தோல்வியானது, அமைப்பு சுதந்திரம் மற்றும் மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் விதத்தில், 1901 மற்றும் 1905 சட்டங்களை நிறைவேற்றுவதற்கு தயாரிப்பாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது, அக்ஸியோன் பிரான்ஸேஸ் நாஜி-ஒத்துழைப்பு விச்சி ஆட்சியின் அரசியல் தளமாக இருந்தது. 1940 இல் ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தான் அதிகாரத்திற்கு வந்ததை அக்ஸியோன் பிரான்ஸேஸ் தலைவர் சார்ல்ஸ் மோராஸ் "எதிர்பாரா தெய்வீக நிகழ்வு" என்று பாராட்டினார். போருக்குப் பின்னர், பெத்தானும் மோராஸூம் தேசத்துரோக குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்ட போது, மோராஸ் அதை “ட்ரேஃபுஸின் பழிவாங்கல்” என்று கடுமையாகக் குறிப்பிட்டார்.

இந்த "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டத்தைக் கொண்டு, மக்ரோன் நிர்வாகம் மோராஸின் பழிவாங்கலை வடிவமைத்து வருகிறது. அது, 2017 தேர்தல்களின் போது, நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு மக்ரோன் தான் "ஜனநாயக" மாற்றாக இருக்கிறார் என்பதாக காட்டி, அதன் பாசாங்குகளைக் கைவிட்டிருந்தது.

2018 இல், சமூக சமத்துவமின்மைக்கு எதிரான பெருந்திரளான மக்களின் “மஞ்சள் சீருடை” போராட்டங்களுக்கு மத்தியில், மக்ரோன் பெத்தனை ஒரு “மாவீரர்” என்று பாராட்டினார். இப்போதோ, COVID-19 தொடர்பாக வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவுக்காக மருத்துவ சமூகத்தின் கோரிக்கைகளையும் மற்றும் வெகுஜன பொது உணர்வையும் நிராகரித்து, மக்ரோன் அதிவலது நிலைப்பாட்டை பின்தொடர்கிறார். கடந்த வாரம், டார்மனின், சிறப்பு நேர தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், இஸ்லாமியம் தொடர்பாக "மென்மையாக" இருப்பதாக வலதிலிருந்து லு பென்னைத் தாக்கி, "ஊட்டச்சத்துகள்" எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.

எதேச்சதிகாரத்தை நோக்கிய இந்த திருப்பம், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு விடையிறுப்பதில் ஆளும் வர்க்கத்தின் மரணக் கொள்கையுடன் பிணைந்துள்ளது. WSWS விளங்கப்படுத்தி உள்ளதைப் போல, COVID-19 தொற்றுநோய் உலக வரலாற்றில் ஒரு தூண்டுதல் நிகழ்வாகும். அதன் கொலைகாரக் கொள்கையைச் செயல்படுத்த, சர்வதேச அளவில் ஆளும் வர்க்கம் பாசிச சக்திகளை வளர்த்து வருவதுடன், சர்வாதிகார ஆட்சி முறைகளுக்குத் திரும்பி வருகிறது.

ஐரோப்பா எங்கிலும், இதே போன்ற செயல்முறைகள் தான் நடந்து வருகின்றன. ஸ்பெயினில், கடந்தாண்டு ஒரு சமூக அடைப்பு கொள்கையை ஏற்க நிர்பந்தித்த வேலை நிறுத்தங்களுக்கு இராணுவம் சதித்திட்டங்களைத் தீட்டியும், 1936 பாசிசவாத ஆட்சி கவிழ்ப்பு தலைவரும் சர்வாதிகாரியுமான பிரான்சிஸ்கோ பிராங்கோவுக்கு மறுவாழ்வளித்தும் எதிர்வினையாற்றியது. இத்தாலியில், வங்கியாளர் மரியோ திராஹி "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கை அரசாங்கத்தை உருவாக்கி வருகிறார், இதில் அதிவலது லீகா கட்சி மற்றும் முன்னாள் ஸ்ராலினிச ஜனநாயகக் கட்சி இரண்டுமே உள்ளடங்கும். ஜேர்மன் முதலாளித்துவம் நாஜிகளுக்கு மறுவாழ்வளிப்பதற்கான பிரச்சாரங்களையும் மற்றும் மீள்ஆயுதமயப்படுத்துவதற்குமான அதன் அழைப்புகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் போராடும் சர்வதேச தொழிலாள வர்க்கமே, வரலாற்று ரீதியில் பாசிசத்திற்கு எதிராக அணிதிரட்டப்பட்ட சக்தியும், இன்று மீண்டும் அணித்திரட்டப்பட வேண்டிய சக்தியும் ஆகும். வங்கிகளது இலாப நலன்களால் உந்தப்பட்டு, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான பாசிசவாத தாக்குதல்களை ஜெயிக்க வேண்டுமானால், அதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை கைமாற்றுவதற்கான ஓர் இயக்கத்தைக் கட்டமைப்பது அவசியமாகும். அத்தகைய ஒரு போராட்டத்தை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவற்றின் பிற்போக்குத்தனமான அரசியல் கூட்டாளிகளின் கைகளில் விட முடியாது.

பிரான்சில், 2017 இல் மறைமுகமாக மக்ரோனை ஆதரித்த, செல்வ செழிப்பான நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது கட்சிகள், மக்ரோனின் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையையும் மற்றும் இந்த “பிரிவினைவாத எதிர்ப்பு” சட்டத்தையும் ஆதரிக்கின்றன. ஆரம்பத்தில் இந்த சட்டத்தை "பயனற்றது மற்றும் ஆபத்தானது" என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான "அலங்கோலமான கலவை" என்றும் அழைத்த ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியும் இப்போது நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்களின் ஷரத்துகள் மீது வாக்களித்துள்ளன. மக்ரோனுடன் பிணைந்து, ஐரோப்பிய ஒன்றிய தொற்றுநோய் பிணையெடுப்புகளால் நிதி வழங்கப்பட்டு, அவை, கூர்மையாக வலதை நோக்கி நகர்ந்து வருகின்றன.

2017 தேர்தல்களில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste) செய்த மதிப்பீட்டை மக்ரோன் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் நிரூபித்துள்ளன. மக்ரோனுக்கும் லு பென்னுக்கும் இடையில் இரண்டாவது சுற்றை எதிர்கொண்ட போது, லு பென்னுக்கு மாற்றீடு மக்ரோன் அல்ல என்றும் எந்த வேட்பாளர் ஜெயித்தாலும் அவருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் அரசியல் ரீதியில் சுயாதீனமான ஓர் இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, அது தேர்தல்களைச் செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தது.

“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கை மற்றும் பாசிச கொள்கைகளுக்கு எதிராக, பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste) சோசலிச போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்குள் அதன் மாபெரும் மரபைப் புதுப்பிக்க போராடி வருகிறது.

Loading