முன்னோக்கு

பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில் ட்ரம்ப் பாசிசவாத வெறுப்பூட்டலைத் தீவிரப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புளோரிடாவில் நடந்த பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில் (CPAC) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய நிறைவுரை, அமெரிக்க அரசியலில் ஓர் அப்பட்டமான பாசிசப் போக்கை மேலுயர்த்துவதில் ஒரு கூடுதல் கட்டத்தைக் குறிக்கிறது.

அந்த முன்னாள் ஜனாதிபதி, "தீவிரப்படல் மற்றும் சோசலிசம், சொல்லப்போனால், மொத்தத்தில் கம்யூனிசத்திற்கு வழிவகுக்கிறது, அவற்றின் கடுந்தாக்குதல்" என்று அவர் எதை குறிப்பிட்டாரோ அதற்கு எதிராக சீறினார். அவற்றுக்கு எதிராக "ஒரேயடியாக மொத்தமாக… போராடுவது" அவசியம் என்றவர் குறிப்பிட்டார். வரவிருக்கும் பைடென் நிர்வாக கொள்கைகளுடன் அவற்றை அபத்தமாக தொடர்புபடுத்திய அவர், அவரது புலம்பெயர்வு கொள்கைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளைத் திரும்ப பெறுவதற்காக பைடென் நிர்வாகத்தைக் கண்டித்தார்.

எவ்வாறாயினும், ட்ரம்ப் உரை முக்கியமாக குடியரசுக் கட்சியிலிருந்து வரும் எந்தவொரு எதிர்ப்பையும் அகற்ற வேண்டியதன் அவசியம் மீது ஒருமுனைப்பட்டிருந்தது. காங்கிரஸ் சபை மீது பாசிசவாத ட்ரம்ப் ஆதரவாளர்களின் ஜனவரி 6 தாக்குதலுக்கான குற்றச்சாட்டுக்களில், அவர் மீது பதவிநீக்க குற்றவிசாரணை நடத்தவோ, அல்லது செனட்டில் அவரைக் குற்றவாளியாக தீர்ப்பளிக்கவோ பிரதிநிதிகள் சபையில் வாக்களித்த காங்கிரஸ் சபை குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் தனது உரையின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

"அவர்கள் எல்லோரையும் தொலைத்து ஒழிக்க வேண்டும்" என்று அறிவித்த அந்த முன்னாள் ஜனாதிபதி, அடுத்தாண்டு குடியரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் இந்த "துரோகிகளை" சவால் செய்வதாக அறிவித்துள்ள பல ட்ரம்ப் விசுவாசிகள் அல்லது பல முன்னாள் உதவியாளர்களைப் பாராட்டினார்.

திருடப்பட்ட 2020 தேர்தல் குறித்து ட்ரம்ப் தனது பொய்களை மீண்டும் மீண்டும் கூறிய போது, CPAC மாநாட்டு பார்வையாளர்கள் “நீங்கள் தான் வென்றீர்கள்" என்ற கோஷங்களுடன் விடையிறுத்தனர். 2020 தேர்தல் ட்ரம்பிடம் இருந்து திருடப்பட்டது என்ற பொய் வாதத்தை ஏற்றுக் கொள்வது குடியரசுக் கட்சி வேட்பாளர்களாக ஆவதற்கும் மற்றும் கட்சி நிர்வாகிகளாக மேலுயர்வதற்கும் ஒரு வெள்ளோட்ட பரிசோதனையாக ஆகியுள்ளது என்பது இப்போது தெளிவாகிவிட்டது. இது, தோல்வியடைந்த அந்த ஜனாதிபதியின் பொற்சிலை அம்மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டதிலேயே அடையாளப்படுத்தப்பட்டவாறு, குடியரசுக் கட்சியை ட்ரம்பின் தனிப்பட்ட எதேச்சதிகார அமைப்பாக மாற்றுவதற்கான முயற்சியில் இதுவொரு முக்கிய அம்சமாக உள்ளது.

குடியரசுக் கட்சியில் செல்வாக்கு செலுத்துவதே தனது விருப்பமான நடவடிக்கை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மூன்றாவதாக ஒரு கட்சியைத் தொடங்கக்கூடும் என்ற பரிந்துரைகளை நிராகரித்து தனது உரையைத் தொடங்கினார். ட்ரம்ப் வெளிப்படுத்த இருந்த பாசிசவாத முத்திரையை மறைப்பதற்கான முயற்சி எதுவும் அங்கே இருக்கவில்லை: CPAC மாநாட்டின் அந்த அரங்கமே கூட, யூதர்களை ஹிட்லர் நிர்மூலமாக்கியதில் ஒரு முக்கிய கருவியாக இருந்த வாஃபென் SS இராணுவத்தின் இரண்டு படைப்பிரிவுகள் ஏற்றுக் கொண்ட ஒரு அடையாள முத்திரையான, ஓதலா ரூன் (Othala Rune) வடிவில் கட்டமைக்கப்பட்டிருந்தது.

CPAC மாநாடு ஏற்பாட்டாளர்களிடம் அந்த பிரச்சினை எழுப்பப்பட்ட போது, பாசிசவாதியால் நாஜி-எதிர்ப்பு போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்ட, வேர்ஜினியா, சார்லட்வில் 2017 “வலது ஐக்கிய" பேரணியில் அணிவகுத்தவர்கள் உள்ளடங்கலாக, அமெரிக்காவில் நவ-நாஜி மற்றும் வெள்ளை மேலாதிக்கவாத குழுக்கள் பயன்படுத்தும் அந்த அடையாள முத்திரையுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் மறுத்தார்கள்.

சந்தேகத்திற்கிடமின்றி CPAC மாநாட்டு பார்வையாளர்களில் பாசிசவாத குழுக்களின் உறுப்பினர்கள் இருந்தனர், அவர்கள் அந்த அடையாளக் குறியீட்டைப் பாராட்டியதுடன், ஒரு முக்கிய நவ-நாஜியான Proud Boys அமைப்பின் தலைவர் என்ரிக் டாரியோ கூட்டத்துடன் கலந்து நின்று அவர் இரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்ததைச் செய்தியாளர்களால் காண முடிந்தது.

ட்ரம்பின் இந்த CPAC உரை, ஜனவரி 6 இல் வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடிய ஒரு கூட்டத்திற்கு அவர் அளித்த வசைபாடலுக்குப் பின்னர், பொதுவெளியில் அவர் அளித்த முதல் பிரதான உரையாக இருந்தது. அந்த கூட்டம் அப்போது பென்சில்வேனியா வீதியில் அணிவகுத்து வந்து நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பலவந்தமாக நுழைந்து, தேர்தலில் பைடென் வெற்றியையும் ட்ரம்பின் தோல்வியையும் செல்லுபடியாக்கிய தேர்வுக் குழு வாக்குகளைச் சம்பிரதாயமாக எண்ணுவதைத் தற்காலிகமாக நிறுத்தியது. அதேயளவுக்கு வெறிப்பிடித்த அந்த பார்வையாளர்களிடையே ட்ரம்ப் ஜனவரி 6 இன் அதே தொனியில் அதே கருத்துருவை மீண்டும் பலமாக வலியுறுத்தினார்.

அவர் இப்போது தூற்றும் இந்த குடியரசுக் கட்சி ஸ்தாபகம் தான், திருடப்பட்ட தேர்தல் குறித்த ட்ரம்பின் பொய் கூற்றுக்களை நியாயப்படுத்துவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது. போட்டி நிறைந்த முக்கிய மாநிலங்களின் வாக்குகளை எண்ணுவதற்கும் அங்கீகரிப்பதற்கும் எதிராக டஜன் கணக்கான ஆதாரமற்ற சட்ட வழக்குகளைத் தாக்கல் செய்தன் மூலம் ட்ரம்ப் வெறுமனே அவர் சட்ட உரிமைகளைத் தான் பயன்படுத்துகிறார் என்று வாதிட்டு, அப்போது செனட் சபையின் பெரும்பான்மை அணி தலைவராக இருந்த மிட்ச் மெக்கொன்னல், நவம்பர் 3 இல் ட்ரம்ப் படுமோசமாக தோற்கவில்லை என்ற பாசாங்குத்தனத்தை ஆதரித்தார்.

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை இரண்டிலும் பெருவாரியான பெரும்பான்மை குடியரசுக் கட்சியினருடன் இணைந்து, மெக்கொன்னலும், டிசம்பர் தேர்வுக்குழு வாக்கெடுப்புக்குப் பின்னரும் பைடென் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒப்புக் கொள்ள மறுத்தார். பிரதிநிதிகள் சபையில், குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையினர், அந்த கும்பலின் ஜனவரி 6 தாக்குதலுக்குப் பின்னரும் கூட பைடெனுக்கான தேர்வுக் குழு வாக்குகளைத் தொடர்ந்து சவால் விடுத்தனர்.

அமெரிக்க அரசியலில் அதிகரித்தளவில் பாசிசவாத போக்கு மேலுயர்வதானது முதலாளித்துவத்தின் யதார்த்தத்தில் வேரூன்றியுள்ளது. அதிர்ச்சியூட்டும் அளவிலான சமத்துவமின்மை ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்குப் பொருந்தாது. கடந்தாண்டு, பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பதற்கு வழி வகுத்தது, இத்துடன் வைரஸ் பரவல் மீது எந்த கட்டுப்பாடுகளும் கூடாது என்று நிதியியல் தன்னலக் குழுக்களின் கோரிக்கையை அமலாக்க பாசிசவாத கும்பலகள் அணித்திரட்டப்பட்டிருந்தன.

ஜனநாயக உரிமைகளுக்கான தீவிர ஆபத்தை ஒவ்வொரு கட்டத்திலும் மூடிமறைத்து, தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதே வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சி வகிக்கும் பாத்திரமாக உள்ளது. இன மற்றும் பாலின அடையாளத்தின் அரசியலை ஊக்குவிப்பதுடன் சேர்ந்து, பைடென் நிர்வாகத்தின் இராணுவவாத மற்றும் வலதுசாரி அரசியல், ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் சமூக மனக்குறைகளைப் பிற்போக்கு நோக்கங்களுக்கு சுரண்டுவதற்கு வாய்ப்பளிக்கிறது.

பைடென் இந்த பதவி மாற்ற காலம் நெடுகிலும், "ஒரு வலுவான குடியரசுக் கட்சி, ஒரு வலுவான எதிர்க்கட்சி" என்ற அவர் விருப்பத்தை அறிவித்தார். காங்கிரஸ் சபையின் குடியரசுக் கட்சியினரில் பெரும்பான்மையினர் ஜனவரி 6 பாசிசவாத தாக்குதல்காரர்கள் பக்கம் தரப்பெடுத்து, பைடென் ஜெயித்த ஜோர்ஜியா மற்றும் பென்சில்வேனியாவின் தேர்வுக் குழு வாக்குகளை ஏற்க மறுத்து வாக்களித்த பின்னரும் கூட, ஜனநாயகக் கட்சி எந்தவொரு அரசியல் பதிலடி கொடுப்பதிலிருந்தும் விலகி நின்றது. ஒரேயொரு குடியரசுக் கட்சிக்காரரை, அதாவது QAnon சதி தத்துவ ஆதரவாளர் மார்ஜோரி டெய்லர் கிரீனை கமிட்டி பொறுப்புகளில் இருந்து கண்துடைப்புக்காக நீக்கியதுடன் அது தன்னை மட்டுப்படுத்திக் கொண்டது.

ட்ரம்ப் மீதான செனட் சபையின் பதவிநீக்க குற்றவிசாரணை, வேண்டுமென்றே திட்டமிட்டு, காங்கிரஸ் சபை குடியரசுக் கட்சி உறுப்பினர்களை உடந்தையாக்கும் எந்தவொரு குற்றச்சாட்டையும் தவிர்க்கும் விதத்தில், ஜனநாயகக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு ட்ரம்பின் ஆதரவை உறுதிப்படுத்த தயாராக இருந்த பிரதிநிதிகள் சபையின் ஒரு குடியரசுக் கட்சியாளரிடம் இருந்து சாட்சியம் பெறுவதென அந்த விசாரணையில் வாக்களித்த பின்னர், அதிலிருந்து பின்வாங்கி, ஜனநாயகக் கட்சியினர் ஒரேயொரு சாட்சியிடம் கூட விசாரிக்காமல் அந்த விசாரணையை முடித்துக் கொள்ள முடிவெடுத்தனர்.

இதே போல பைடென் நிர்வாகத்தின் சட்டமன்ற திட்டநிரல், அதாவது கொரோனா வைரஸ் பொருளாதார நிவாரண சட்டமசோதாவில் இருந்து ஒரு மணிநேரத்திற்கு 15 டாலர் குறைந்தபட்ச கூலியைக் கைவிடுவது போன்ற பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை மொத்தத்தில் கண்டு கொள்ளாமல் விடும் நோக்கில், “இரண்டு கட்சிகளின் ஒருமனதான சம்மதத்தை" அதாவது குடியரசுக் கட்சியினரின் வாக்குகளைப் பெறும் ஒரு முயற்சியை உத்தேசித்துள்ளது.

CPAC காட்சிப்படுத்தல் தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாகும். அமெரிக்க ஜனநாயகம் மீதான ஒரு முன்னணி தாக்குதலில் உச்சக்கட்டத்தை அடைந்த ஜனவரி 6 சம்பவங்களில் காட்சிக்கு வந்த சக்திகள், ட்ரம்பால் தொடர்ந்து அணித்திரட்டப்பட்டு முடுக்கிவிடப்பட உள்ளன. அமெரிக்க அரசியலில் ஒரு மத்திய பாத்திரம் வகிக்க விட்டு வைக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் உடந்தையாய் இருப்பதற்கு தான் நன்றி கூற வேண்டும்.

ஒரு பாசிசவாத இயக்கத்தை உருவாக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவின் முயற்சி பலத்திலிருந்து அல்ல, பலவீனத்திலிருந்து எழுகிறது. நிதிய உயரடுக்கு அதன் அரசியல் கட்சிகள் இரண்டையும் பயன்படுத்தி, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதன் மேற்பார்வையில் இருக்கும் அனைத்து சக்திகளையும் நிலைநிறுத்த செயல்பட்டு வருகிறது.

ஓராண்டு காலமாக இந்த பெருந்தொற்றால் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார இடப்பெயர்வு மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றால் பாரியளவில் தொழிலாள வர்க்கம் தீவிரமயமாகி இருப்பதைக் கண்டு அமெரிக்க ஆளும் வர்க்கம் பீதியடைந்துள்ளது. பாசிசவாதத்தின் மீளெழுச்சிக்கு எதிராகவும், எதேச்சதிகாரம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதற்கு எதிராகவும் போராட, இந்த புறநிலை இயக்கத்தை நனவுபூர்வமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான சோசலிச இயக்கமாக மாற்றுவது அவசியமாகும்.

Loading