இலங்கையில் "நீதிமன்ற அவமதிப்பின்" பேரில் ரஞ்சன் ராமநாயக்க சிறைவைப்பு: அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த “உயர்நீதிமன்றம்' அவரை குற்றவாளியாக தீர்மானித்து, அவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது. இந்த தண்டனை காரணமாக ராமநாயக்கவின் குடியுரிமை இரத்துச் செய்யப்படுவதுடன் சிறைவாசம் அனுபவித்த பின்னரான ஏழு ஆண்டுகள் வரை, அவருக்கு வாக்களிக்கும் உரிமையும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உரிமையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

2017 ஆகஸ்ட் 21, அலரி மாளிகை அருகில் பிரசித்தமான ஊடகம் ஒன்றிற்கு அவர் கருத்து தெரிவித்த போது, நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, ஆர். சுனில் பெரேரா என்ற ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியே இராமநாயக்க மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சிசிர ஜே. டி அப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் பி. பத்மான் சூரசேன ஆகியோர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு வழங்கிய தீர்ப்பின் படி, ராமநாயக்க ஊடகத்திடம் கூறியது பின்வருமாறு: “இலங்கையில் பெரும்பான்மையான கரப்டட் (ஊழல் நிறைந்த) நீதிபதிகள் மற்றும் கரப்டட் (ஊழல்) லோயர்களே (வழக்கறிஞர்கள்) உள்ளனர். சுமார் 95 சதவீதமானவர்கள். அவர்கள் பணத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்கள் எப்போதும் கொலைகாரர்களை, ஊழல் காரர்களை, குடுகாரர்களை (போதைப் பொருள் பாவனையாளர்கள்) பணத்திற்காக பாதுகாக்கின்றார்கள்.” வெறுமனே அந்த கருத்தையும் அதை ஒருபோதும் திரும்பப் பெறமாட்டேன் என்றும் அவர் பல தடவை கூறியதன் அடிப்படையில் மட்டுமே, உயர் நீதிமன்றம் மேற்கண்ட கடுமையான தண்டனையை ராமநாயக்கக்கு வழங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (படம்: விக்கிபீடியா)

முதலில் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியினது (ஐ.தே.க.) பாராளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் அதில் இருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தியினது பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து ராமநாயக்க ஆற்றிய மற்றும் தொடர்ந்து வகிக்கும் பிற்போக்கு அரசியல் பாத்திரத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எந்த சலுகையும் அளிக்கவில்லை.

எவ்வாறாயினும், இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் ஊழலுக்கும் எதிராக வாய்ச்சவடால் 'விமர்சனங்களை' செய்த ராமநாயக்க போன்ற முதலாளித்துவ பிரதிநிதிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், தொழிலாள வர்க்கத்துக்கு பாரதூரமான உள்ளர்த்தங்கள் உள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு விமர்சனத்தையும் அச்சுறுத்தி தடுப்பதே இதன் நோக்கமாக உள்ள அதே வேளை, இதன் இறுதி இலக்கு, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கி வரும் தொழிலாள வர்க்கமே ஆகும்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர்.) மூலம், ஜனவரி 18 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ராமநாயகவுக்கு எதிரான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் சர்வதேச சட்டம் மீறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது: “ஐ.சி.சி.பி.ஆர். மற்றும் அதன் மாற்று வரைவின் மூலம், ஸ்தாபிக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் தரங்களின் படி, நீதிமன்ற அவமதிப்பு சம்பந்தமாக நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுவது, பொதுச் சட்ட விதிகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சட்ட விதிகளை பாரதூமாக மீறுவதாகும்.'

இருப்பினும், நீதித்துறை ஊழல் நிறைந்தது என்பது மீண்டும், மீண்டும் பொதுமக்களுக்கு முன் அம்பலப்படுத்தப்பட்டு வந்துள்ள விடயமாகும். நீதித்துறையின் மிக உயர்ந்த பதவியான பிரதம நீதியரசர் பதிவியில் இருந்த காலத்தில் சரத் என். டி சில்வா மற்றும் மொகான் பீரிஸ் போன்றவர்கள் ஆற்றிய வகிபாகங்கள் இது சம்பந்தமாக பேர் போனவை ஆகும்.

சுனாமி பேரழிவு காலத்தில் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் இருந்த 'ஹெல்பிங் ஹம்பந்தொட்ட' திட்டத்தின் கீழ் நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இருந்து, அவரை விடுவித்தமையை பற்றி தான் வருந்துவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். டி சில்வா 2012 அக்டோபரில் அறிவித்தார். “இராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்தமைக்கு நான் பொறுப்பு என்று பல புகார்கள் உள்ளன. உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு காரணமாக, மஹிந்த இராஜபக்ஷவுக்கு ஜனாதிபதியாக ஆவதற்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.

தனக்கு முன் விசாரிக்கப்பட்ட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனைவிமார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, லெனின் ரத்நாயக்க என்ற நீதவானுக்கு புகலிடம் வழங்கியமை தொடர்பாகவும் பிரதம நீதியரசர் சரத் என் டி சில்வா பேர் போனவராவார்.

2015 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே தன்னை சந்திக்க வந்த மொகான் பீரிஸ், தன்னை பிரதம நீதியரசராக தொடர்ந்தும் வைத்திருந்தால் 'விருப்பமான எல்லா விதத்திலும் செயற்படத் தயாராக உள்ளேன்' என்று கூறியதாக, மைத்ரிபால சிறிசேன பகிரங்கமாகக் தெரிவித்துள்ளார். பீரிஸ் அதை இன்றுவரை சவால் செய்யவில்லை.

மேல் குறிப்பிடப்பட்டுள்ளவை இதுபோன்ற சில சம்பவங்கள் மட்டுமே.

முதலாளித்துவ அரசியலமைப்புகளின் மூலம் 'மக்களின் இறையாண்மை' மற்றும் 'பேச்சு சுதந்திரமும்' உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளன என்ற ஆழமான பொய்யை இந்த வழக்குத் தீர்ப்பானது ஆழமாக வெளிப்படுத்துகிறது. முதலாளித்துவ அரசின் முக்கிய கருவியான நீதித்துறையை விமர்சிக்கும் உரிமை, அந்த அரசியலமைப்பின் மேலமே பறிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்குள் அல்லது அதற்கு வெளியில் நீதிமன்றத்துக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனம் 'நீதிமன்ற அவமதிப்பு' என்று அர்த்தப்படுத்தி, விமர்சகரை தண்டிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாகவே வழங்கப்பட்டுள்ளது.

ராமநாயக்கவுக்கு எதிரான தீர்ப்பை அறிவிக்கும் போது, உயர்நீதிமன்றம். அரசியலமைப்பின் 105 (3) வது பிரிவைப் பயன்படுத்தி ராமநாயக்கவை குற்றத்திற்கு ஆளாக்குகின்றது. “......நீதிமன்றத்திலோ அல்லது ஏனைய இடத்திலோ நீதிமன்றத்தை அவமதிப்பது சம்பந்தமாக உயர் நீதிமன்றம் அல்லது மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் ஏற்புடையதாக கருதப்படும் பட்சத்தில், சிறையில் அடைத்தல் அல்லது அபராதம் விதிப்பது மூலம், அல்லது சிறைத்தண்டனை மற்றும் அபராதம் இரண்டிலுமே தண்டனை விதிக்கும் அதிகாரம் உட்பட, அத்தகைய நீதிமன்றத்திற்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன.”

நிலையான இராணுவம், பொலிஸ், அதிகாரத்துவம், மதகுருமார்கள், நீதித்துறை மற்றும் ஒருவேளை பாராளுமன்றம் ஒன்றை, அதன் மையத்தில் ஒருங்கிணைத்துக்கொண்டுள்ள அரசானது, மிகவும் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு கருவியாகும். அரசியலமைப்பு என்பது அந்த அரசை, தொழிலாள வர்க்க தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் சட்ட கட்டமைப்பாகும்.

முதலாளித்துவ முறைமை நெருக்கடிக்குச் செல்லும்போது, தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் தொடுக்கப்படுகின்ற தாக்குதல்கள் ஆழமடைகின்றன. அதன்படி, மூலதனத்திற்கும் கூலி உழைப்புக்கும் இடையிலான மோதல், அல்லது வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிறது. இந்த வரலாற்று உண்மையை உறுதிப்படுத்தும் வகையில், 2008 இல் உலக நிதி அமைப்பின் வீழ்ச்சியால் கட்டவிழ்த்து விடப்பட்ட பூகோள முதலாளித்துவ நெருக்கடி, உலகளாவிய தொற்றுநோயால் தீவிரமாக்கப்பட்டு, இலங்கை உட்பட உலகெங்கிலும் தொடர்ச்சியான வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கின்றன.

இதற்கு பிரதிபலிக்கும் ஆளும் வர்க்கங்கள், ஒப்பீட்டளவில் வர்க்கப் போராட்டம் தீவிரமாக இல்லாத காலங்களில் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாத, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள கொடூரமான சட்ட விதிகளை மேலும் மேலும் பயன்படுத்துவதுடன், தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கு புதிய திருத்தங்களை அரசியலமைப்புக்குள் கொண்டுவந்து, சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி விரைவாக மாறுகின்றன. சர்வதேச அளவிலும், இலங்கையில் கோடாபய இராஜபக்ஷ ஆட்சியின் மூலம், தொழிலாள வர்க்கம் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களும் இதையே அனுபவித்து வருகின்றனர்.

வரம்பற்ற நிறைவேற்று அதிகாரங்களை தனது கைகளில் குவித்துக்கொண்டிருக்கும் இராஜபக்ஷ, 20வது திருத்தத்தின் கீழ், பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரைக்கும் பெயரளவு அதிகாரத்தை பாராளுமன்ற ஆணைக்குழுவிற்கு கொடுத்திருந்தாலும், உண்மையில் அவர்கள் ஜனாதிபதியின் விருப்பப்படியே நியமிக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளும் அடுத்தடுத்து பல்வேறு ஊழல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு வருவதோடு, அவரது அரசியல் எதிரிகள் மற்றும் அவருக்கு கீழ்ப்படியாத அரசாங்க அதிகாரிகள், தொடர்ந்து வேட்டையாடப்படுகிறார்கள்.

ராமநாயக்கவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மறுநாள், ஜனவரி 13 அன்று, இராஜபக்ஷ அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக நீண்டகாலமாக விசாரிக்கப்பட்டு வந்த படுகொலை வழக்கு, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் கைவிடப்பட்டது. 2005 இல், பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக் கொன்றதாக சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக, சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு கூறுகின்றது: 'அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்களுக்கு வரலாற்று துஷ்பிரயோகங்களுக்கு விலக்களிப்பு கொடுப்பதை தொடரக் கூடாது. பொறுப்புணர்வு இல்லாமல், இலங்கை இந்த இருண்ட அத்தியாயத்தின் பக்கத்தை ஒருபோதும் திருப்ப முடியாது. அதிகாரிகள் உடனடியாக ஒரு முழுமையான, பயனுள்ள மற்றும் பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணையை முன்னெடுக்க வேண்டி இருப்பதோடு, ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு பொறுப்பானவர்களை நீதிக்கு முன் கொண்டு வர வேண்டும்.”

பல தமிழ் மற்றும் முஸ்லீம் கலைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை ஜனநாயக-விரோதமாகவும் சட்டவிரோதமாகவும் கைது செய்து, நீண்டகாலமாக அவர்களை தடுத்து வைத்திருப்பதானது சட்டத்தை தனது கைகளில் எடுத்துக்கொண்டு இராஜபக்ஷ முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் மற்றொரு முக்கிய அங்கமாகும். தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத ஆத்திரமூட்டல்களைத் தூண்டிவிட்டு, தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிரிப்பதே இதன் நோக்கம் ஆகும்.

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இராஜபக்ஷ காட்டிய குற்றவியல் அலட்சியம் காரணமாக, அது பேரழிவுகரமாக பரவி வருகின்ற நிலைமையின் கீழும், பெரும் முதலாளிகளின் இலாப நலன்களுக்காக தங்கள் உயிர்களை மதிக்காது வேலைக்கு செல்ல நிர்ப்பந்திப்பதற்கு மற்றும் சிறுவர்களை பாடசாலைக்கு செல்லும்படி கட்டாயப்படுத்தியதற்கு எதிராகவும், தாங்கமுடியாத வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராகவும், என்றாவது ஒரு நாள் பொங்கி வெடிக்கும் சீற்றம் வெகுஜனங்கள் மத்தியில் வளர்ச்சியடைகின்றது. இதை உணர்ந்துள்ள இராஜபக்ஷ, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்காக இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்கிறார்.

போலி-இடது மற்றும் தாராளவாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் கூறுவது போல், இது வெறுமனே இராஜபக்ஷவின் கெட்ட எண்ணம் அல்லது 'இயலாமை' அல்ல. இராஜபக்ஷ என்பவர், வரலாற்று ரீதியாக சீரழிந்த முதலாளித்துவத்தின் ஒரு தனிநபர் உருவம் மட்டுமே. நீதித்துறையின் ஊழல், அதே சரிவின் அறிகுறியாகும். முழு முதலாளித்துவ முறைமையும் வரலாற்று ரீதியாக மரணித்துக்ககொண்டிருப்பதன் காரணமாகவே, உலகெங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள், முதலாளித்துவ நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் உச்சத்தில் அமர்ந்துகொண்டிருக்கும் அனைவரும், இந்த அறிகுறிகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வெளிப்படுத்துகிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரை, உலகெங்கிலும் உள்ள ஆட்சியாளர்களால், இந்த வரலாற்று நிகழ்வுப் போக்கே வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்க அரசியலமைப்பை அப்பட்டமாக மீறி, பாசிச குண்டர்களைத் தூண்டிவிடும் ட்ரம்பின் வலதுசாரி நடவடிக்கைகளுக்கு எதிராக, அடுத்த ஜனாதிபதி ஜோ பிடென் எந்தவொரு அடிப்படை மற்றும் சக்திவாய்ந்த சவாலையும் செய்யவில்லை. ஏனெனில், அவரும் வரலாற்று ரீதியாக இதேபோன்ற வகிபாகத்தை ஆற்ற நியமிக்கப்பட்டவராவார்.

இதேபோல், காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் “அரை இறையாண்மைக்கு குழிபறித்து, முஸ்லிம் மக்களின் குடியுரிமைகளையும் மிதித்து, இந்து பேரினவாத மோடி ஆட்சி செய்த ஜனநாயக-விரோத அரசியலமைப்பு திருத்தங்களையும், அதே போல், கோடிக்கணக்கான ஏழை விவசாயிகளை இராட்சத விவசாயக நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கின்ற மோடியின் 'புதிய விவசாய சட்டங்களையும்' எதிர்த்து, இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரியக் கட்சியான காங்கிரஸ் கட்சி எந்தவொரு முற்போக்கான நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தவறிவிட்டது.

பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்று தேய்ந்து போன, இலங்கை முதலாளித்துவத்தின் பாரம்பரியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், அதில் இருந்து முளைத்த ஐக்கிய மக்கள் சக்தியும், அதேபோல், முதலாளித்துவ சட்டத்தின் சீரழிவு சம்பந்தமாக இடைவிடாது புலம்பித் தள்ளும் மற்றொரு முதலாளித்துவக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.), தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவ கட்சிகளும், மற்றும் போலி-இடது கட்சிகளும், இராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை எந்தவகையிலும் சவால் செய்ய இலாயக்கற்றுள்ளன. ஏனெனில், அவை அனைத்தும் முதலாளித்துவ அரசு மற்றும் முதலாளித்துவ முறைமையின் பாதுகாவலர்களாகும்.

தொழிலாள வர்க்கம், ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை தன்னைச் சூழ அணிதிரட்டிக்கொண்டு, முதலாளித்துவ அரசுகளையும் முதலாளித்துவ அமைப்பையும் தூக்கிவீசுவதை இலக்காகக் கொண்ட, சர்வதேச சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராடுவதன் மூலம் மட்டுமே, சமூக சமத்துவம், நீதி மற்றும் ஜனநாயகத்தையும் உத்தரவாதம் செய்யமுடியும். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த முன்நோக்குக்காகப் போராடுகிறது.

Loading