இலங்கை பொலிஸ் ஓல்டன் தோட்டத்தில் மேலும் பல தொழிலாளர்களை கைது செய்துள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

திங்கள்கிழமை, மாலை 5 முதல் 8 மணி வரை, இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மஸ்கெலியாவில் உள்ள ஓல்டன் தோட்டத்தில் ஆயுதமேந்திய பொலிசார் மூன்று மணி நேரம் தேடுதல் நடத்தினர். தோட்டத் முகாமையாளர் மீது நடந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இன்னும் பல தொழிலாளர்களை கைது செய்யவே இந்த தேடுதல் நடத்தப்பட்டது.

பெப்ரவரி 17 அன்று, தோட்ட முகாமையாளர் சுபாஷ் நாராயணனை தொழிலாளர்கள் சரீர ரீதியாக தாக்கியதாக கம்பனி நிர்வாகமும் பொலிசாரும் கூறுகின்றனர். இந்த குற்றச்சாட்டை தொழிலாளர்கள் மறுக்கின்றனர்.

ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் முகாமையாளர்கள் நடத்திய ஆத்திரமூட்டும் எதிர்ப்பு போராட்டம் (Photo credit K. Kishanthan)

பெப்ரவரி 18, இலங்கையின் பிரதான தோட்ட தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அலுவலர்களின் உதவியுடன், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி, எட்டு தொழிலாளர்களை பொலிஸ் கைது செய்தது. ஹட்டன் நீதவான் முன் கொண்டுவரப்பட்ட இந்த தொழிலாளர்கள், இரண்டு வாரங்களுக்கு கண்டி சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஓல்டன் தொழிலாளர்களை கைது செய்து, பழிவாங்குவதானது, பெப்ரவரி 2 அன்று தொடங்கிய ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில், கம்பனியும் பொலிசும் கூட்டாக திட்டமிட்டு நடத்தும் ஒரு சதியாகும். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், சம்பள உயர்வு கோருவதோடு நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும் கோருகின்றனர்.

திங்களன்று நடந்த 10 பேர் கொண்ட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையில், பேர்போன விசேட அதிரடிப் படையினரும் இருந்தனர். இன்னொரு பொலிஸ் அதிகாரிகளின் குழு தோட்டத்திற்கு வெளியே வீதியில் காத்திருந்தது.

தோட்டத் முகாமையாளர் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 18 பேரின் பெயர்கள் பொலிசாரிடம் இருந்தன. பொலிஸ் அதிகாரிகள் தோட்டத்தின் ஊடாக நகர்ந்து, ஒவ்வொரு லயன் வீடுகளுக்கும் சென்று, தொழிலாளர்களை மிக மோசமான தூசன வார்த்தைகளில் திட்டினர்.

அவர்கள் யாரைத் தேடுகிறார்கள் என்று தெரியவில்லை என்று தொழிலாளர்கள் பொலிசாரிடம் கூறியபோது, அதிகாரிகள் பழணி அமிர்தலிங்கம் (35), பதினாறு வயது மாணவன் சிவபெருமாள் விக்னேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

எஸ். புவனேஸ்வரி, கனபதி தேவி, ஜி. சதீஸ்வரி, பிரான்சிஸ் திரேசம்மாள், மரிமுத்து தமிசெல்வி, யோகாசக்தி, எம்.கே. சாந்தினி மற்றும் ஆந்திமுத்து விஸ்வகேது ஆகியோரே முன்னர் கைது செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்கள் ஆவர்.

நேற்று, பத்து தொழிலாளர்களும் ஹட்டன் நீதவான் முன் கொண்டுவரப்பட்டனர். அவர்களுக்கு பிணை கொடுப்பதை எதிர்த்த பொலிசார், “விசாரணை” தொடர்ந்து நடைபெறுவதாக அறிவித்தனர். பொலிசார் மிரட்டல்ப்பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளதுடன் மேலும் பலரை கைது செய்ய முயற்சிக்கின்றனர் என்பதே இதன் அர்த்தமாகும்.

நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகே பொலிசார் ஒரு தடையை அமைத்து தொழிலாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுத்தனர். கைது செய்யப்பட்டுள்ள தன் கனவனை பார்ப்பதற்கு தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்று ஒரு பெண் தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்.

நீதிமன்றத்தில், கம்பனிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் தோட்டங்களில் 'பயங்கரவாதம்' தோன்றக்கூடும் என்று ஆத்திரமூட்டும் வகையில் கூறினார். கைது செய்யப்பட்ட ஓல்டன் தொழிலாளர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் நேரு கருணாகரன் இதை நிராகரித்து, தோட்டங்களில் பயங்கரவாதம் இல்லை என்று அறிவித்தார். பொலிசார் மக்களைக் கைது செய்துவிட்டு, பின்னர் தங்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர், என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. ஆனாலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் “சட்டவிரோத ஒன்றுகூடல்” மற்றும் தோட்ட முகாமையாளரை 'கடுமையாக காயப்படுத்தியமை' போன்றவற்றுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். தொழிலாளர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டால், 'கடுமையாக காயப்படுத்தியமைக்காக' அவர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், 'சட்டவிரோத ஒன்று கூடியமைக்காக' ஆறு மாத சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும். ஓல்டன் தோட்டத்தில் தொழிற்சங்கக் கிளை வைத்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸே, 18 பேரின் பெயர் பட்டியலை பொலிசாருக்கு வழங்கியதாக தொழிலாளரகள் கூறுகின்றார்கள்.

பெப்ரவரி 18, எட்டு தொழிலாளர்களை கைது செய்வதற்கான பொலிசாரின் ஆரம்ப முயற்சிகளுக்கு எதிராக வேலைநிறுத்தக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, இ.தொ.கா. பிராந்திய தலைவர்களான கனகராஜ், ராஜாராம் மற்றும் சென்பஹவல்லியும், தொழிலாளர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று பொய்யாகக் கூறி, வாக்குமூலம் கொடுக்க ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்குச் செல்லும்படி அவர்களை வற்புறுத்தினர்.

முன்னரும், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கைது செய்வதில் இ.தொ.கா. தலைமை பொலிசுடன் ஒத்துழைத்தது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் 30 ஆண்டுகால யுத்தத்தின் போது, பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, தோட்ட இளைஞர்களின் பெயர்களை இ.தொ.கா. தலைவர்கள், அரச அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர். நாட்டின் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்றைய நீதிமன்ற விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது, பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் ஹட்டனில் தோட்ட முகாமையாளர்கள் மற்றும் உதவி முகாமையாளர்களின் எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அவர்களில் சுமார் 200 பேர், 'வன்முறைக்கு' முடிவு கட்டுமாறு கோரும் பதாதைகளை ஏந்தி நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

தோட்ட உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லலித் ஒபேசேகர, இதற்கு முன்னர் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷக்கு கடிதம் எழுதி, நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதைத் தடுப்பதற்கு, அவரது தலையீட்டைக் கோரினார். 'தோட்ட வன்முறை' குறித்து இந்த சங்கம் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை தொடர்பு கொண்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓல்டன் வேலைநிறுத்தத்தைப் பற்றி குறிப்பிடுகையில், 'ஆர்.பி.சி. இன் [பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின்] தேயிலை உற்பத்தியை நாசமாக்குவதற்காக தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அல்லாதவர்களைத் தூண்டிவிடும், குண்டர்களால் திட்டமிட்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது' என்று கூறினார்.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான தொடர்ச்சியான பழிவாங்கல் மற்றும் கைதுகள், தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் பொலிசுக்கு பச்சை கொடி காட்டியிருப்பதை குறிக்கிறது.

பொலிஸ் மற்றும் ஆர்.பி.சி.இன் கூற்றுக்களுக்கு மாறாக, அனைத்து தோட்டத் தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான இரக்கமற்ற தாக்குதலே உண்மையான வன்முறை ஆகும். தொழிலாளர்கள் கௌரவமான ஊதியம் மற்றும் சமூக நிலைமைகளுக்காக போராடுகையில், கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களை இன்னும் அதிகமாக சுரண்ட வேண்டும் என்று கோருகின்றன.

2015 முதல், தொழிலாளர்கள் 1,000 ரூபாய் (5.12 அமெரிக்க டொலர்) தினசரி ஊதியம் கோருவதை தோட்டக் கம்பனிகள் கடுமையாக எதிர்த்து வருவதுடன், தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தினதும் உதவியுடன், இதுவரை அற்ப அதிகரிப்புக்கு மட்டுமே கம்பனிகள் ஒப்புக் கொண்டுள்ளன. உண்மையில், தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியம், இப்போது வெறும் 700 ரூபாய் (3.5 டொலர்) மட்டுமே.

திங்களன்று, இராஜபக்ஷ அரசாங்கம், தோட்டத் தொழிலாளர்களின் கோபத்தைத் திசைதிருப்பும் முயற்சியில், 100 ரூபாய் கொடுப்பனவுடன் 900 ரூபாய் தினசரி அடிப்படை ஊதியத்தை முடிவு செய்தது. இந்த அற்பத் தொகையைக் கூட தோட்டக் கம்னிகள் நிராகரிக்கின்றன.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடலுக்கு இ.தொ.கா. நேரடி உடந்தையாக இருக்கின்ற அதே வேளை, ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்கள் இந்த கம்பனி-பொலிஸ் கூட்டுத் தாக்குதல் குறித்து முற்றிலும் மௌனம் காக்கின்றன. தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் அவற்றுள் அடங்கும். இந்த தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்புக்கான தொழிலாளர்களின் போராட்டங்களை நாசப்படுத்துவதற்கும் வேலைச் சுமையை அதிகரிக்கும் கம்பனிகளின் திட்டங்களை ஆதரிப்பதிலும் இ.தொ.கா. உடன் ஒன்றிணைந்துள்ளன.

இ.தொ.கா. இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளியாகும். அதன் தலைவர் ஜீவன் தொண்டமான் தோட்ட உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராவார். ஏனைய பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் முந்தைய அரசாங்கங்களில் அமைச்சர்களாக இருந்தனர்.

திங்களன்று, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கைது செய்யப்பட்ட ஓல்டன் தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் அவர்களைப் பாதுகாக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் வருமாறு வேண்டுகோள் விடுத்தது.

அது கூறியதாவது: “இ.தொ.கா.வின் உதவி மற்றும் உடந்தையுடன் நடத்தப்படும் இந்த கம்பனி-பொலிஸ் சதி திட்டத்தை, ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் மீதுமான ஒரு கடுமையான தாக்குதலாக தொழிலாளர்கள் கருத வேண்டும். எந்தவொரு தோட்டத் தொழிற்சங்கமும் இந்த கைதுகளை கண்டிக்கவுமில்லை அல்லது தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கவுமில்லை. தோட்டக் கம்பனிகளின் இந்த கொடூரமான ஜனநாயக-விரோத தாக்குதலானது, கௌரவமான சம்பளம், தொழில்கள் மற்றும் ஏனைய சமூக உரிமைகளுக்காக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் போராட்ட இயக்கத்தை முறியடிக்கும் முயற்சியாகும்.”

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான சமீபத்திய தாக்குதல், சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகிறது. ஓல்டன் தோட்டத்தில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும் ஏனைய அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கான எங்கள் பிரச்சாரத்தில் இணைந்துகொள்ளுமாறு இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு பரந்த போராட்டத்தின் பகுதியாக இது முன்னோக்கி நகர்த்தப்பட வேண்டும்.

Loading