முன்னோக்கு

வாஷிங்டன் சதியும் அதன் இராணுவ ஆதரவாளர்களும்

ஜனவரியில் நூற்று தொன்னூற்று ஒன்பது நிமிடங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு அதிகம் விற்பனையான நாவலை அடிப்படையாகக் கொண்ட அதே பெயரில் வெளிவந்த 1964 ஆம் ஆண்டு திரைப்படமான மேயில் ஏழு நாட்கள் Seven Days in May என்பதில், அமெரிக்காவில் இராணுவ சதி முயற்சிக்கு ஒரு கற்பனையான விபரத்தை வழங்குகிறது. படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ஜோன் எஃப். கென்னடியின் நிர்வாகத்தின் போது அரசிற்குள் நடந்த சதி மற்றும் மோதல்களால் இந்த புத்தகம் உந்துதலளிக்கப்பட்டது. அவர் கொல்லப்படுவதற்கு முன்னர், அந்த நேரத்தில் கூட இராணுவத்தின் மீதான விசுவாசத்தைப் பற்றி போதுமான அக்கறை கொண்டிருந்த கென்னடி, பென்டகனில் எதிர்ப்பை எதிர்த்து படத்தின் தயாரிப்பை ஆதரித்து மற்றும் அதன் இயக்குனர் ஜோன் ஃபிராங்கன்ஹைமர் வெள்ளை மாளிகைக்கு வெளியே காட்சிகளை படமாக்க ஏற்பாடு செய்தார்.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, பென்டகனில் மார்ச் 5 2021,வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் [நன்றி: AP Photo/Alex Brandon]

இப்படத்தின் தற்கால பதிப்பை ஜனவரி மாதத்தில் நூற்று தொண்ணூற்றொன்பது நிமிடங்கள் என்ற தலைப்பில் வெளியிட முடியும். புதன்கிழமை செனட்டிற்கான சாட்சியத்தின்படி, வாஷிங்டனின் டி.சி. தேசிய காவலர் தளபதி வில்லியம் வாக்கர், 2021 ஜனவரி 6 ஆம் தேதி தேசிய காவல்படைப் பிரிவினரை நிலைநிறுத்துவதற்கான உயர் இராணுவத் தளபதிக்கு அவர் விடுத்த ஆரம்பக் கோரிக்கைக்கும் மற்றும் அதன் இறுதி ஒப்புதலுக்கும் இடையேயான நேரத்தின் அளவு இதுவாகும்.

வாக்கர் செனட் விதிகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக் குழுக்களிடம், பாசிச கிளர்ச்சியாளர்கள் காங்கிரஸ் கட்டிடத்தை நெருங்கியதால், பிற்பகல் 1:49 மணிக்கு தேசிய காவலரை பயன்படுத்த மூத்த இராணுவத் தலைவரிடம் ஒப்புதல் கேட்டதாக கூறினார். இருப்பினும், பதில் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்தோபர் மில்லரிடமிருந்து அவர் மாலை 5:08 மணி வரை, அதாவது மூன்று மணித்தியாலம் 19 நிமிடங்கள் கழித்தும் அங்கீகாரம் பெறவில்லை.

199 நிமிடங்கள் தாமதத்திற்கான வெளிப்படையான விளக்கங்கள், ஏதேனும் வழங்கப்பட்டிருந்தால், அது அபத்தமானது. வாக்கரின் வார்த்தைகளில், இராணுவ கட்டளையகத்தால் தனக்கு கூறப்பட்டதாக வாக்கர் பின்வருமாறு சாட்சியம் அளித்தார். “சீருடை அணிந்த காவலர்களை வெளிப்படையாக காட்சியளிப்பதை விரும்பாததால் காங்கிரஸிற்கு அனுப்புவது சிறந்த இராணுவ ஆலோசனையாக இருக்காது”, எதிர்ப்பாளர்களுக்கு "எரியூட்ட" அவர்கள் விரும்பவில்லை என்றும் அவர்கள் கூறினர். இராணுவம் "வெளிப்படையாக காட்சியளிப்பது" பற்றி அக்கறை கொண்டுள்ளது என்பதை யாராவது நம்பலாம் என்பது போல, பொலிஸ் வன்முறை மீதான போராட்டங்களின் போது "வெளிப்படையாக காட்சியளிப்பது" எப்போதாவது ஒரு காரணியாக இருந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த வாக்கர், தேசிய காவலர்கள் பலமுறை "நிமிடங்களுக்குள்" அணிதிரட்டப்பட்ட கோடையில் "இது ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை" என்றார்.

உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கருத்தில் கொள்வோம். மூன்று மணிநேரம் மற்றும் பத்தொன்பது நிமிடங்கள், பென்டகன், கூட்டுப் படைத் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் CNN இனை பார்த்துக்கொண்டிருந்து அல்லது அவர்களின் கட்டளை மையங்களில் இருந்து காங்கிரஸ் மீதான தாக்குதல் அதிகரிப்பதை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். இந்த நபர்கள் அணுசக்தி மற்றும் பிற தாக்குதல்களுக்கு சில நிமிடங்களில் எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்த பயிற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களாகும். இந்த நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருந்த இராணுவ அதிகாரிகளுக்கு ஜனவரி 6 கிளர்ச்சியைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்யாவிட்டாலும் கூட, வாஷிங்டன் டி.சி பகுதியில் கிடைக்கக்கூடிய அனைத்துப் படைகளையும் பற்றி மறுபரிசீலனை செய்வதற்கும் உடனடியாக அவற்றை பயன்படுத்துவதற்குமான ஒரு அவசரக் கூட்டத்தை அழைக்கும் திறன் இருக்கவில்லை என்பதை யாரும் தீவிரமாக நம்ப முடியாது.

இத்தகைய நடவடிக்கைகளை பற்றி இராணுவம் எண்ணற்ற பரீட்சார்த்த காட்சிகளை உருவாக்கி பார்க்கவில்லை என்று நினைப்பது அப்பாவித்தனமாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்காவிற்குள் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்க "உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை" நிறுவப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகின்றன. ஒபாமா நிர்வாகத்தின் கீழ், 2013 இல் போஸ்டன் நெடுந்தூர ஓட்டப்போட்டி குண்டுவெடிப்புக்கு பதிலளித்ததையும் ஒருவர் நினைவுகூர வேண்டும். போஸ்டனையும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளையும் கிட்டத்தட்ட இராணுவச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்காக ஆயிரக்கணக்கானோருக்கு தேசிய காவல்படை துருப்புக்கள் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கவச வாகனங்களுடன் ஆயுதமயமாகியிருந்தன.

மேலும், ஜனவரி 6 நிகழ்வுகள், ஒரு ஆச்சரியத்திற்கு வெகு தொலைவில் இருந்தன. கிளர்ச்சிக்கு பல மாதங்களுக்கு முன்னரே, தொடர்ந்து அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்ததுடன், அந்த நேரத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதி அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதை ஏற்கமாட்டேன் என தெளிவுபடுத்தியிருந்தார். குறிப்பாக ஜனவரி 6 தேதியை குறிவைக்கும் திட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து உளவு அமைப்புகளும் இராணுவமும் நன்கு அறிந்திருந்தன.

மாறாக, ஒரு திட்டவட்டமான அரசியல் மூலோபாயம் செயல்படுத்தப்பட்டதால் செயல்படக்கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, பாசிசக் குழுக்கள் காங்கிரஸ் கட்டிடத்தின் மீது உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன. கலகக்காரர்களுக்குள் இராணுவ ரீதியாக பயிற்சியளிக்கப்பட்ட பிரிவுகள், செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகளிடையே பிணைக் கைதிகளைத் தேடுவதற்கு அவகாசம் வழங்கப்படுவதை அறிந்திருந்தன.

இதற்கிடையில், அவசரகால நிலையை அறிவிக்க ட்ரம்ப் தயாராக இருந்தார். இது காங்கிரஸை மூட பயன்படுத்தப்பட்டிருக்கும். இது ஜோ பைடெனின் தேர்தல் வெற்றியை முறையாக உறுதிப்படுத்துவதை காலவரையின்றி தாமதப்படுத்தியிருக்கும். இந்த தாமதமானது குடியரசுக் கட்சியில் ட்ரம்பின் கூட்டுசதிகாரர்களின் ஆதரவைக் கொண்டிருந்தது. குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டமன்றங்களுக்கு சர்ச்சைக்குரிய மாநிலத் தேர்தல்களை திருப்பி அனுப்புவது சம்பந்தப்பட்ட ஒரு "சமரசம்" தொடர்பாக ஜனநாயகக் கட்சியினருடன் கலந்துரையாடல்கள் நடந்திருக்கும். இதன் விளைவாக ட்ரம்பின் ஜனாதிபதி பதவி தொடர்ந்திருக்கும். ஜனநாயகக் கட்சியினர் 2000 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் மூலம் தேர்தலின் திருட்டை ஏற்றுக்கொண்டபோது இந்த வகையான "சமரசத்தை" செய்திருந்தனர்.

இறுதியில், கிளர்ச்சி அதன் நோக்கங்களை அடையத் தவறிவிட்டது என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரே ஜனவரி 6 ம் தேதி இராணுவம் தலையிட்டது. மேலும் எந்தவொரு தாமதமும் திரைக்குப் பின்னால் செயற்படுவோரின் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கும். வாஷிங்டன் டி.சி. தேசிய காவலர்களை பயன்படுத்துமாறு அனுமதிக்கப்பட்டு அரை மணித்தியாலத்திற்கு பின்னர் மாலை 5.40 அளவில் 154 ஆவது தேசிய காவல்படை துருப்புக்கள் காங்கிரஸ் வளாகத்திற்கு வந்தன. இந்த நிலைநிறுத்தலில் பாதுகாப்புத்துறை மற்றும் இராணுவத்தினுள் உயர்மட்ட நபர்கள் பின்னணியில் இருந்தனர், அவர்களில் சிலர் சமீபத்தில் ட்ரம்பால் நியமிக்கப்பட்டனர். தேர்தலின் ஆறு நாட்களுக்குப் பின்னர், நவம்பர் 9, 2020 அன்று பாதுகாப்பு செயலாளராக ட்ரம்பால் நியமிக்கப்பட்ட மில்லரும் இதில் அடங்குவார். முன்னாள் அமெரிக்க சிறப்புப் படைகள் “Green Beret” இன் மில்லர் முன்பு தேசிய பயங்கரவாத எதிர்ப்பின் இயக்குநராக இருந்துள்ளார்.

மதியம் 1:49 மணிக்கு அமெரிக்க இராணுவத்தின் உயர் தளபதிகளுக்கு வாக்கரின் அழைப்பு சென்றது. இந்த அழைப்பில் இருந்தவர்களில் லெப்டினன்ட் ஜெனரல் வால்டர் பியாட் என்பவரும் இராணுவப் பணியாளர்களின் இயக்குநராக இருக்கிறார். பியாட் முன்னர் Fort Drum இல் அமெரிக்க இராணுவத்தின் 10 வது மலைப் பிரிவின் கட்டளைப்பிரிவு ஜெனரலாகவும், ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவத்தின் துணை தளபதி ஜெனரலாகவும் இருந்தவராவர்.

இந்த அழைப்பில் இராணுவ நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் பயிற்சிக்கான துணைத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் ஃபிளின் இருந்தார். சார்லஸ் ஃபிளின், ட்ரம்ப் தனது தேர்தல் தோல்விக்கு பதிலளிக்கும் விதமாக இராணுவச் சட்டத்தை அறிவிக்குமாறு வலியுறுத்திய ட்ரம்பின் உயர்மட்ட சதிகாரரான லெப்டினன்ட் ஜெனரல் மைக்கல் ஃபிளின்னின் தம்பி ஆவார். அவர் பங்கேற்றதை ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு முன்னர், சார்லஸ் ஃபிளின் அழைப்பில் இருந்தது பற்றி இராணுவம் ஆரம்பத்தில் பொய் சொன்னது. ஜனவரி 25 அன்று, பாசிச கிளர்ச்சியின் மூன்று வாரங்களுக்குப் பின்னர், ஹொனலுலுவில் உள்ள அமெரிக்க இராணுவ பசிபிக் கட்டளை பிரிவிற்கு ஃபிளின் மாற்றப்படுவதாக பாதுகாப்புத் துறை அறிவித்தது.

இராணுவத்திற்குள் நடந்த விவாதங்களின் முழு விபரமும் இன்னும் வெளிவரவில்லை. எவ்வாறாயினும், மதியம் 2:30 மணியளவில் மில்லர் மற்றும் இராணுவ செயலாளர் ரியான் மெக்கார்த்தியுடன் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி சம்பந்தப்பட்ட இராணுவத்தின் பிரதிபலிப்பு பற்றி விவாதிக்க ஒரு சந்திப்பாவது நடைபெற்றது. அதாவது, தேசிய காவலர் தயார்ப்படுத்தலுக்கான ஆரம்ப வேண்டுகோளுக்கு சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர். உத்தியோகபூர்வ பாதுகாப்புத் துறையின் காலவரிசைப்படி, மில்லி ஜனவரி 6 ஆம் தேதி காலையில் மில்லரைச் சந்தித்து, பாதுகாப்புத் துறையின் சாத்தியமான திட்டங்களை மறுஆய்வு செய்தார்.

கூட்டாட்சி காவல்துறையினரின் அமைதியான எதிர்ப்பாளர்கள் மீது வன்முறைத் தாக்குதலுக்குப் பின்னர், ஜூன் 1 ஆம் தேதி ட்ரம்புடன் லாஃபாயெட் பூங்காவில் நடந்த புகைப்பட காட்சியில் கலந்துகொண்டதுடன் மற்றும் நாடு முழுவதும் இராணுவத்தை நிலைநிறுத்த கிளர்ச்சி சட்டத்தை செயல்படுத்த ட்ரம்பின் ரோஸ் கார்டன் உரையில் மிரட்டிய பின்னரும் அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரியாக இருப்பதை நினைவு கூரவேண்டும். அதாவது, சதித்திட்டத்தை நடத்துவதற்கான முதல் முயற்சியின் போது ட்ரம்புடன் மில்லி அணிவகுத்தார்.

ஜனவரி 6 உயர்மட்ட திட்டமிலுக்கான மேலதிக அடையாளமாக, ஒன்று ஜனவரி 4 ஆம் திகதி மற்றும் இன்னொன்று ஜனவரி 5 ஆம் திகதியும் பாதுகாப்புத் துறையிலிருந்து இரண்டு குறிப்புகளைப் பெற்றதாக வாக்கர் சாட்சியம் அளித்தார். இது தெளிவான அங்கீகாரமின்றி படைகளை நிலைநிறுத்துவதற்கான அவரது தகமையை மட்டுப்படுத்தியது. முதல் குறிப்பு, "எனது பாதுகாவலர்களை பாதுகாக்க கூட இராணுவ செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளரிடமிருந்து அங்கீகாரம் பெற வேண்டும்" என்று இருந்ததாக அவர் சாட்சியமளித்தார்.

வாக்கர் ஆவணப்படுத்திய நிகழ்வுகள் வேறு எந்த நாட்டிலும் நிகழ்ந்திருந்தால், அவை ஒரு இராணுவ சதித்திட்டமாக கருதப்படும். இருப்பினும், வாக்கரின் சாட்சியம் பெரும்பாலும் ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டும், குறைத்து மதிப்பிடப்பட்டும் காட்டப்பட்டது.

நியூ யோர்க் டைம்ஸ் தனது வியாழக்கிழமை அச்சு பதிப்பில் தனது 17 ஆம் பக்கத்தில் விசாரணைகள் குறித்த அறிக்கையை புதைத்தது. செய்தித்தாளின் தலையங்கப் பக்கம் அம்பலம்படுத்தல்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஜனநாயகக் கட்சியின் பிரதான குரலான டைம்ஸ் பத்திரிகை, அமெரிக்காவில் அரசியலமைப்பு ஆட்சியை அகற்றுவதற்கான முயற்சியை எடுத்துக் காட்டிலும் அதன் அபத்தமான பாலியல் சூனிய வேட்டைக்கு அதிக நேரத்தை ஒதுக்குகிறது.

வாஷிங்டன் போஸ்ட் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. அதில் "ஏன் என்பதற்கான நல்ல விளக்கம் இல்லாததால், அந்த நிகழ்வில் இருந்த அதிகாரிகளிடமிருந்து வெறித்தனமான மற்றும் தொடர்ச்சியான வேண்டுகோள்கள் மற்றும் தொலைக்காட்சியில் குழப்பத்தை நேரடியாக ஒளிபரப்பியதானாலும், பாதுகாப்புத் துறை உதவி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது." என்றது. "ஜனவரி 6 நிகழ்வுகளை விசாரிக்க காங்கிரஸ் இரு கட்சி ஆணையத்தை நியமிக்கவேண்டும்" என்ற ஒரு பணிவான அழைப்போடு அது முடிந்தது.

ஜனவரி 6 நிகழ்வுகள் குறித்து ஜனநாயகக் கட்சி சட்டமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியாலும் கூட்டு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது சதியில் ஈடுபட்ட கட்சியை உள்ளடக்கியுள்ளதால் எந்தவொரு விசாரணையும் இருக்காது என்பற்கே உத்தரவாதம் அளிக்கிறது,

அவர்கள் பொதுமக்களை மயக்கமுற செய்ய முற்படுகையில், ஜனநாயகக் கட்சியினர் பாசிச குழுக்களின் ஆர்ப்பாட்டங்களின் சாத்தியம் குறித்த அறிக்கைகளால் வியாழக்கிழமை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் அமர்வுகளை இரத்து செய்வதற்கான அசாதாரண நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்கிடையில், பைடென் காங்கிரசின் இரு அவைகளுக்குமான தனது பாரம்பரிய வருடாந்திர உரையை தாமதப்படுத்தியுள்ளார். இது வழக்கமாக பிப்ரவரியில் ஒரு புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் நிகழ்கிறது. அவர்கள் அக்கறைகொள்வது முக்கியமாக இக்கட்டத்தில் எவ்வித முக்கியத்துவமும் அற்ற வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இல்லை, ஆனால் மாநிலத்தின் மிக உயர்ந்த மட்டங்களுக்குள் நடந்து வரும் சதித்திட்டங்களை பற்றியாகும்.

ஜனநாயகக் கட்சியின் அனுசரணையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணையும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சக்திகளை அம்பலப்படுத்த உதவாது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சியினர் இவ்வெளிப்படுத்தல்களின் அரசியல் மற்றும் சமூக விளைவுகளை கண்டு அச்சமடைந்துள்ளனர்.

ஜனவரி 6 ஆம் தேதி நூற்று தொண்ணூற்றொன்பது நிமிடங்கள் ஒரு எச்சரிக்கையாகும். அந்த நிகழ்வு எவ்வாறு தீவிரமானதாக உள்ளதோ, அதற்கான பிரதிபலிப்பும் குறைந்த முக்கியத்துவம் உடையதல்ல. ஜனநாயக உரிமைகளை ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினரிடமோ அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகளிடமோ ஒப்படைக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தை அடுத்த கட்டத்திற்கு தயார் செய்யாது விட்டுவிட முடியாது. முதலாளித்துவ அமைப்பை எதிர்த்து, அதன் சொந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அது தன்னை சுயாதீனமாக ஒழுங்கமைக்க வேண்டும்.

Loading