இந்தியாவில் கோவிட் – 19 நாசம் விளைவித்து வருகையில் தமிழ் நாடு தேர்தல் பேரணிகள் சமூக இடைவெளியை புறக்கணிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரியிலும், மார்ச் 27 முதல் கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் அசாமிலும் நடைபெற உள்ளன.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் முதலாளித்துவக் கட்சிகள் பொது சுகாதாரம் குறித்து அவர்களின் முற்றிலும் இழிவான நிலைப்பாட்டை நிரூபித்துள்ளன. உலக முதலாளித்துவத்தால் பின்பற்றப்படும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கையை அவர்கள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் கட்டுப்படுத்த முடியாத பரவல் அனைத்தையும் அவர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், அவர்கள் சமூக இடைவெளி குறித்த அடிப்படையான நடைமுறைகள் கூட இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களை அணிதிரட்டி தங்கள் தேர்தல் பிரச்சார பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் நாட்டில் கோவிட்-19 சோதனைகள்

கோவிட் 19 வைரஸின் மாறுபட்ட திரிபுகள் உலகம் முழுவதும் வேகமாகப் பரவியதால், 24 ஆம் தேதி இந்தியாவில் 47,262 புதிய நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. மத்திய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, மொத்த தொற்றுக்களில் 85 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் உள்ளன. இந்தியாவில் இதுவரை 11,734,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 160,441 பேர் இறந்துள்ளனர்.

தென் மாநிலமான தமிழகத்தில் மீண்டும் தொற்றுநோய் தோன்றியிருப்பது ஒரே நாளில் 1,437 தொற்றுக்களில் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை அது 865,693 பேருக்கு பரவியுள்ளது, மேலும் 12,618 பேர் இறந்துள்ளனர். 130 கோடி (1,3 பில்லியன்) மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 39,339,817 பேருக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சுமார் 77,000,000 மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் இதுவரை 10,38,900 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் 240,245 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன் மற்றும் 4,179 பேர் இறந்துள்ளனர். சமீபத்திய செய்திகளின்படி, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 56 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் உட்பட 5 பெற்றோர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டுகோட்டை சிறுவர் உயர்நிலைப்பள்ளி மற்றும் மதுக்கூர் அருகிலுள்ள அலதூர் சிறுவர் உயர்நிலைப் பள்ளியிலும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

முதலாளித்துவத்தின் இலாப நோக்கத்திற்காக பொது மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரங்கள் வெளிப்படையாக தியாகம் செய்யப்படுகின்றன. பலியானவர்களில் பெரும்பாலோர் உழைக்கும் மக்கள் ஆவர். இந்தியா, COVID-19 நோய்த்தொற்று பரவலில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, இந்தியாவின் இந்து-மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கமும் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியை கூட கைவிட்டுவிட்டது. பாஜகவின் தலைமையை பின்பற்றி தமிழ்நாட்டில் உள்ள அதன் கூட்டாளியும் பிராந்தியவாதியுமான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அதிமுக) எடப்பாடி கே.பழனிச்சாமியின் அரசாங்கம், மாநிலம் முழுவதும் பள்ளிகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் வணிக நிறுவனங்களை திறந்து வைத்துள்ளது. மேலும், எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை நடத்துகிறது.

தமிழ் நாடு மாநில அரசு எதிர்வரும் மாதங்களில் 5.70 லட்சம் கோடி ரூபா (87.6 பில்லியன் டாலர்) கடனில் மூழ்க உள்ளது. இந்த கடன்கள் ஆளும் உயரடுக்கினரால் விலை உயர்வு மற்றும் சமூக வெட்டுக்கள் மூலம் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படும். மோசமடைந்து வரும் இந்த பொருளாதார சூழ்நிலையில், "வெற்றி நடைபோடும் தமிழகம்" என்ற கருப்பொருளைச் சுற்றி அதிமுக ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முதலமைச்சர் பழனிச்சாமி உரையாற்றி வருகிறார்.

பொதுக் கூட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் லாரிகளில் கொண்டு வரப்படுகிறார்கள். பொதுமக்களை இப்படி ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தமிழக போக்குவரத்துத் துறை எச்சரித்த பிறகும், இது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் சாதிவாத-பாட்டாளி மக்கள் கட்சியும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.

அதேபோல், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக பரப்புரை செய்து வரும் நாம் தமிழர் கட்சி, தமிழ்நாட்டை தமிழர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்று கோருகிறது, அது மார்ச் 7 அன்று தலைநகர் சென்னையில் ஒரு பெரிய பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. முகக்கவசம் அணிவது போன்ற அடிப்படை COVID-19 விதிகளை அதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மீறினர்.

முன்னணி எதிர்க்கட்சியான பிராந்தியவாத மற்றும் தமிழ்-தேசியவாத திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) திருச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி மார்ச் 7 அன்று ஒரு பெரிய பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது, அதில் “விடியலுக்கான முழக்கம்” என்று அழைப்பு விடுத்தது. எந்தவொரு கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றாமல், 10,000 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் பொதுக் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், இக் கூட்டத்திற்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் (27,609,055 அமெரிக்க டாலர்) செலவிடப்பட்டதாகவும், இதர கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஒரு சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 30,80 000 ரூபாய் (42,500 அமெரிக்க டாலர்) செலவிடப்பட வேண்டும்.

இந்திய கோடீஸ்வரர்கள் திமுக மற்றும் அஇஅதிமுக ஆகியவை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பெரும் தொகையைச் செலவிடுகிறார்கள், அதே சமயம் தங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் ஆதரவும் இருக்கிறது என்று கூறுவதற்காக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களை பாதுகாப்பற்ற முறையில் பணம் கொடுத்து லாரிகளில் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வருகின்றனர்.

இந்த நிகழ்வுகள் இந்திய ஸ்ராலினிச கட்சிகளின் திவால்நிலையை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, அவர்களின் தமிழ்நாட்டு கிளைகள் திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியில் அங்கம் வகிப்பதோடு, அவர்களின் கூட்டாளிகளின் ஒரு பகுதியாக பிரச்சாரம் செய்கின்றன. காங்கிரஸ், இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் சாதிவாத விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய அனைத்துமே முதலாளித்துவத்தின் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி" கொள்கைக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர் என்பதை சமிக்ஞை செய்கின்றனர்.

இந்திய ஸ்ராலினிஸ்டுகளின் நீண்டகால நோக்குநிலை, தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் நோக்குநிலையுடன் காங்கிரஸுடனோ அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ ஆட்சி செய்ய முடியும் என்று தோன்றுகிற ஏதாவது ஒரு முதலாளித்துவக் கட்சியுடனோ கட்டிப்போட முயற்சி செய்வது தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு பேரழிவை உருவாக்குகிறது. தொற்றுநோய்க்கு எதிராக ஒரு விஞ்ஞான பூர்வமான மற்றும் சோசலிசக் கொள்கைக்காக போராடும் ஒரு சுயாதீனமான, சர்வதேச இயக்கத்தை உருவாக்குவதிலிருந்து தொழிலாள வர்க்கத்தைத் தடுப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

திருச்சியில் நடந்த கூட்டத்தில், திமுக தலைவர் எம். கே. ஸ்டாலின், கோவிட் -19 தொற்றுநோய் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதற்கு பதிலாக, அவர் தனது தேர்தல் திட்டத்திலிருந்து ஏழு வெற்று புள்ளிகளைப் படித்தார்: பொருளாதாரம், நீர்வளம், விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் சமூக நீதி. இந்த கூட்டத்தில், அதிமுக கூட்டத்தைப் போலவே, ஆடிப்படையான சமூக இடைவெளி கவனிக்கப்படவில்லை.

Loading