முன்னோக்கு

பிரேசிலில் 300,000 உயிரிழப்புகள்: மனிதகுலத்திற்கு எதிரான ஒரு முதலாளித்துவக் குற்றம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரேசில் 300,000 கோவிட்-19 இறப்புகளின் கொடூரமான மைல்கல்லைப் புதன்கிழமை கடந்தது. அந்நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் பிராந்தியங்களிலும், பிரேசிலிய மக்கள், அதன் ஆளும் உயரடுக்கினது குற்றகரமான அலட்சியத்தின் விளைவாக, உயிர்கள் கொடூரமாக வீணடிக்கப்படுவதைக் கண்கூடாக பார்க்கிறார்கள்.

Residents place roses on mattresses symbolizing COVID-19 victims, during a protest against the Government's handling of the COVID-19 pandemic. (AP Photo/Silvia Izquierdo)

2021 ஆம் ஆண்டின் முழுமையாக மூன்று மாதங்களை இன்னும் நாங்கள் முடிக்கவில்லை, ஆனால் இந்த குறுகிய காலத்தில் 100,000 க்கும் அதிகமான பிரேசிலியர்கள் கோவிட்-19 க்கு தங்கள் உயிரை இழந்துள்ளனர். இந்தாண்டு தொடங்கியதிலிருந்தே நோய்தொற்றின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது, நாள்தோறும் நோய்தொற்றின் சராசரி எண்ணிக்கை 36,000 இல் இருந்து 77,000 க்கும் அதிகமாக உள்ளது. வியாழக்கிழமை முன்பில்லாதளவுக்கு 100,158 நோய்தொற்றுக்கள் பதிவான நிலையில், அவை இன்னும் அதிகரித்து கொண்டிருக்கின்றன.

அந்நாடு முழுவதும் வைரஸின் கட்டுக்கடங்காத அதிகரிப்பு பிரேசில் "வரலாற்றிலேயே மிகப் பெரிய சுகாதார மற்றும் மருத்துவமனை பொறிவை" தூண்டிவிட்டுள்ளதாக பொது சுகாதார நிறுவனமான ஃப்யோக்ரூஸ் (Fiocruz) குறிப்பிடுகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைக்காக காத்திருக்கின்றனர், பரானாவில் இது மொத்தம் சுமார் 900 பேருக்குத் தான் உள்ளது, கிரேட்டர் சாவோ பாலோவில் 750 பேருக்கும், மினாஸ் ஜெராய்ஸில் 700 பேருக்கும், ரியோ டி ஜெனிரோவில் 500 பேருக்கும், சீராவில் 500 பேருக்கும், கோயஸில் 400 பேருக்கும் மற்றும் நடைமுறையளவில் பிரேசிலில் ஒவ்வொரு மாநிலத்திலும் இன்னும் ஒரு சில நூறு படுக்கைகளே உள்ளன.

யாருக்குச் சிகிச்சை வழங்குவது, யாரை இறக்க விடுவது என்பதை தேர்வு செய்ய ஏற்கனவே மருத்துவர்கள் நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் மூச்சுத்திணறலுக்கான மருத்துவக் கருவிகள் உட்பட மருத்துவமனை கருவிகளின் பற்றாக்குறையானது, மருத்துவமனை படுக்கை கிடைத்தவர்களையும் கூட கவனிப்பதில் கடுமையாக சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்ற உடனடி அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ளன.

வரவிருக்கும் வாரங்களில் ஏற்படவிருப்பது பேரச்சமூட்டுகிறது. உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஏப்ரல் மாதத்திற்குள் பிரேசில் நாளொன்றுக்கு சராசரியாக 4,000 முதல் 5,000 இறப்புகளை எட்டும் என்று ஃப்யோக்ரூஸ் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் கொரோனா வைரஸுக்கு எல்லைகளைக் கடக்க கடவுச்சீட்டோ அல்லது நுழைவனுமதியோ தேவையில்லை என்பதால், பிரேசிலின் பேரழிவு அதன் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தாக்கத்தை கொண்டுள்ளது. பிரேசிலில் அதிகரித்து வரும் தொற்றுநோய் அதன் அண்டைநாடுகளான தென் அமெரிக்க நாடுகளுக்கும் பேரழிவுகரமான அச்சுறுத்தலை முன்நிறுத்துவதாக ஒருங்கிணைந்த-அமெரிக்க சுகாதார அமைப்பு (PAHO) புதன்கிழமை எச்சரித்தது.

பிரேசிலின் வடக்குப் பகுதியை எல்லையாக கொண்ட வெனிசுவேலா, பெரு மற்றும் பொலிவியா பகுதிகளில் சமீபத்திய நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளன. பிரேசிலின் தெற்கு எல்லையில், பராகுவே மருத்துவமனை பொறிவை முகங்கொடுத்து வருகிறது, மேலும் தொற்றுநோயின் முதல் அலையின் போது விதிவிலக்காக குறைந்த எண்ணிக்கையைக் கொண்டிருந்த உருகுவே, நோய்த்தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகளின் வேகமான தீவிரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலியர்கள் உள்நுழைவதன் மீது எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை விதித்து தங்கள் மக்களைத் தடுத்து வைப்பதற்கான இந்த நாடுகளின் அரசாங்கங்களின் முயற்சிகள், பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை ஆழமாக எல்லை கடந்து ஒருங்கிணைந்திருப்பதால் தீவிரமாக பலவீனப்பட்டு விடுகின்றன. அதற்கும் மேலாக, பிரேசிலில் நோயாளிகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியான, மிகவும் தொற்றக்கூடிய கோவிட்-19 இன் பிரேசிலிய உருமாறிய புதிய வகை P.1 ஏற்கனவே அண்டைநாடுகளுக்கும், அத்துடன் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

பிரேசிலில் தொற்றுநோய் பரவல் மீது எந்தவொரு கட்டுப்பாட்டையும் செலுத்தத் தவறியமை இந்த அபாயகரமான திரிபின் ஒரு வேகமான மறுபெருக்கத்திற்கு மட்டும் வழிவகுக்கவில்லை, மாறாக கோவிட்-19 இன் ஏனைய உருமாற்றங்கள், இன்னும் அதிகமாக தொற்றக்கூடிய மற்றும் பயங்கரமான SARS-CoV-3 வைரஸான ஒரு புதிய வைரஸே கூட உருவாவதற்கான திறந்தவெளி ஆய்வுக்கூடமாக அந்நாட்டை மாற்றி வருகிறது.

ஃப்யோக்ரூஸ் கோவிட்-19 மரபணு கண்காணிப்பு வலையமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், ஐந்து வெவ்வேறு பிரேசிலிய மாநிலங்களிலிருந்து 11 SARS-CoV-2 இன் வரிசைகளுடன் தொடர்புடைய உருமாறிய வைரஸ்களை அடையாளம் கண்டனர். அந்த விஞ்ஞானிகள் பின்வரும் முடிவுக்கு வருகிறார்கள்: "பிரேசிலில் தொடர்ந்து பரவி வரும் SARS-CoV-2 தொற்றானது, கவலைப்படுத்திய அவற்றின் முன்னோடி வகைகளை விட நடுநிலைப்படுத்துவதை மிகவும் எதிர்க்கக்கூடிய புதிய வைரஸ் வழிதோன்றல்களை உருவாக்கி வருகின்றன என்பதை இந்த கண்டுபிடிப்புகள் ஆதரிக்கின்றன."

இந்த நோயின் இந்த பேரழிவுகரமான பரிணாமத்தால் பிரேசிலிய மற்றும் உலக மக்களுக்கு முன்நிற்கும் அச்சுறுத்தலான அபாயங்கள், பிரேசிலின் பாசிசவாத ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோவினால் மிகவும் கொடூர அவமதிப்புடன் கையாளப்படுகின்றன. அவரது அரசாங்கத்தின் கொலைகார கொள்கையான சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையின் முடிவான விளைவுகள் வரையில் அதை தொடர்ந்து பின்தொடர்ந்து வரும் அவர், பிரேசிலியர்கள் பாரிய உயிரிழப்புகள் குறித்து "சிணுங்குவதை" நிறுத்தி விட்டு வேலைக்குத் திரும்ப வேண்டுமென கோருகிறார்.

இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் பிரேசிலிய முதலாளித்துவத்தின் பொருளாதார நலனுடன் மோதக்கூடாது என்பதை உறுதிப்படுத்த போல்சொனாரோ போராடி வருகிறார். அவரது சர்வாதிகார மிரட்டல்களை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், "வேலை செய்வதற்கான மக்கள் உரிமைக்கு" உத்தரவாதம் அளிப்பதற்காக, எந்தவொரு சமூக அடைப்பு உத்தரவுக்கும் எதிராக அவரது அரசாங்கமும் அவரது இராணுவமும் "கடுமையான நடவடிக்கைகளை" தயார் செய்து வருவதாக எச்சரித்தார்.

பெரிதும் நோய்தொற்று உள்ள வேலையிடங்களுக்குள் தொழிலாளர்களை வேலை செய்ய நிர்பந்திக்க, எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் பெருந்திரளான மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அளப்பரிய பொருளாதார அழுத்தங்களைச் சார்ந்துள்ளார். வேலையின்மையின் வெடிப்பு, உணவு விலைகளின் உயர்வு மற்றும் அரசின் அவசர உதவிகளைக் குறைத்தல் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினர் மீதும் முன்னோடியில்லாத அளவில் சமூக விரக்தியைத் திணித்து வருகின்றன.

கெட்டெலியோ வர்காஸ் அறக்கட்டளை (FGV) ஆராய்ச்சியாளர் டானியல் ட்யூக் கருத்துப்படி, கடந்த ஆண்டில், 22 மில்லியனுக்கும் அதிகமான பிரேசிலியர்கள் வறுமையில் விழுந்தனர். பிரேசிலியர்களில் பத்து பேரில் மூன்று பேர் ஏதோவொரு விதத்தில் உணவுப் பாதுகாப்பின்மையில் வாழ்கின்றனர். பிரேசிலின் நகர்ப்புற மையங்களின் வறிய தொழிலாள வர்க்க அண்டைபகுதியான ஃப்வேலாஸில், 68 சதவீதத்தினர் உணவுக்குப் பணமின்றி உள்ளனர், இது ஃப்வேலாஸ் யுனைடெட் சென்டரின் (CUFA) கருத்துக்கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தொற்றுநோய் ஏற்படுத்தி உள்ள தாங்கொணா பொருளாதார கஷ்டங்கள் மற்றும் அளப்பரிய துன்பங்களும் சேர்ந்த நிலைமை பிரேசிலில் சமூக எதிர்ப்பின் ஒரு வெடிப்பார்ந்த அதிகரிப்புக்கு எரியூட்டி வருகிறது. சமீபத்திய நாட்களில், ஆசிரியர்கள், எண்ணெய்த்துறை தொழிலாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள், பயன்பாட்டு விநியோக தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளிடையே வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடித்துள்ளன. தொழிலாளர்கள் வேலையிட பாதுகாப்பும், வாழத்தகுந்த கூலிகள் மற்றும் அரசியல் மாற்றத்தை கோருகின்றனர்.

அடிமட்டத்திலிருந்து வரும் இந்த அச்சுறுத்தலை உணர்ந்துள்ள முதலாளித்துவ உயரடுக்கின் பிரிவுகள், சமூகத்தின் மீதான அவர்களது வர்க்க மேலாதிக்கம் மீது கேள்வி எழுப்பி போல்சொனாரோவின் கொள்கைகள் ஒரு சமூக மற்றும் பொருளாதார வெடிப்பைத் தூண்டுமென அஞ்சுகின்றன.

இந்த தொற்றுநோயை போல்சொனாரோ கையாளம் விதத்தை விமர்சித்து பொருளாதார வல்லுநர்களும் வணிகர்களும் பிரசுரித்த ஒரு “பகிரங்க கடிதத்தில்” அந்த நிலைப்பாடு வெளிப்பட்டது. முன்னாள் அமைச்சர்களும் மத்திய வங்கியின் முன்னாள் தலைவர்களும், பிரேசிலின் மிகப்பெரிய இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் தலைவரும் மற்றும் தெற்கு அரைக்கோளத்தின் மிகப்பெரிய நிதி நிறுவனமான Itaú வங்கி பொதுக்குழுவின் தலைவரும் அதில் கையொப்பமிட்டவர்களில் உள்ளடங்குவர். அவர்களுடன் போலி-இடது கட்சியான சோசலிசம் மற்றும் சுதந்திரக் கட்சியின் (PSOL) பொருளாதார வேலைத்திட்டத்தின் ஆசிரியரும் இணைந்துள்ளார்.

“மத்திய அரசின் திறமையான நடவடிக்கையால் அந்த தொற்றுநோய் கட்டுப்படுத்தப்படாத வரை” பொருளாதார மந்தநிலையைக் “கடந்து செல்ல முடியாது” என்று அக்கடிதம் குறிப்பிட்டது. ஒரு சமூக வெடிப்பைக் கட்டுப்படுத்த தேவையான தொகையில் அரசு மிக குறைந்தபட்ச தொகையையே செலவிடுகிறது என்ற அதன் பரிந்துரையை மீண்டும் மீண்டும் அது வலியுறுத்தியது.

தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து விநியோகப்பதைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அதன் முதலும் முக்கியமுமான கோரிக்கையாக உள்ளது. இதுவரை மக்கள்தொகையில் 6 சதவீதம் பேர் மட்டுமே முதல்கட்ட தடுப்பூசி பெற்றுள்ளனர். “தடுப்பூசிக்கான செலவுக்கும் பலனுக்குமான விகிதம், கொள்முதல் செய்து பயன்படுத்துவதன் மீது செலவிடப்படும் ஒவ்வொரு நிஜமான செலவைப் பொறுத்த வரையில் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது,” என்று அக்கடிதம் வாதிடுகிறது. அடுத்து அது முகக்கவசங்களை இலவசமாக வினியோகிக்க அறிவுறுத்துவதுடன், அவற்றை பயன்படுத்துமாறு அரசு ஊக்குவிக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது, இது "கோவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதன் ஆதாயங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் செலவு குறைவாக" இருக்குமென மீளஉறுதிப்படுத்துகிறது.

“சமூக அடைப்பின் தேவை மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்” என்று அறிவிக்கும் அதேவேளையில், அந்தக் கடிதம் “உள்ளடக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன்” மற்றும் அதன் கால அவகாசம் குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்துகிறது. "வைரஸ் பரவலையும் மற்றும் பொருளாதார பாதிப்புகளையும் குறைத்து பலன்களை அதிகரிக்கும் விதத்தில் இருக்கும் ஒரு சிறந்த கலவையான நடவடிக்கைகளை" அது வலியுறுத்துகிறது. நிதி உதவிகள் மெல்லியதாக மற்றும் மக்களில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவுகள் மீது ஒருமுனைப்பட்டதாக இருக்க வேண்டுமென இதே நடைமுறை நிதி உதவிக்கும் முன்வைக்கப்படுகிறது.

சாவோ பாலோவில் பள்ளிகளை மீண்டும் திறந்ததன் குற்றகரமான அனுபவம் "பள்ளிகளில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே நோய்தொற்று ஏற்படுகிறது" என்பதற்கான ஆதாரம் என்று வாதிட்டு, பள்ளி அடைப்புகள் மீதும் அக்கடிதம் ஒரு கடுமையான தாக்குதலைத் தொடுக்கிறது, ஆனால் அங்கே பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதில் ஆயிரக் கணக்கான கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டதுடன் டஜன் கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

ஆளும் வர்க்கத்திற்குள் போல்சொனாரோவுக்கான இந்த எதிர்ப்பு ஒரு முழுமையான மோசடியாகும். என்ன முன்மொழியப்பட்டுள்ளதோ அதில் எதுவுமே இந்த தொற்றுநோயை திறம்பட கட்டுப்படுத்த உத்தரவாதம் அளிக்கவில்லை. போல்சொனாரோவின் கொள்கைகளுடன் மேலோட்டமான கருத்து வேறுபாடுகளை முன்வைக்கும் இந்த திட்டம், அதேயளவுக்கு விஞ்ஞானப்பூர்வ தீர்மானங்கள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்கும் நலன்களுக்கு விரோதமாக நிறுவப்பட்டுள்ளது.

இந்த இன்றியமையா வேலைத்திட்டம், தேசிய ஆளுநர்களின் பேரவையில் (National Governors Forum) அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் கட்சிக்கும் (PT) பிரேசிலிய பாரம்பரிய கட்சியான சமூக ஜனநாயகக் கட்சிக்கும் (PSDB) இடையிலான, முதலாளித்துவ ஊடகங்களில் பரவலாக கொண்டாடப்படும் இற்றுப்போன கூட்டணியில் அதன் அரசியல் வெளிப்பாட்டைக் காண்கிறது. அந்த அமைப்பில் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஆளுநர்கள் அவர்கள் மாநிலங்களில் எல்லா பொருளாதார நடவடிக்கைகளையும் திறந்து விட்டுள்ளதுடன், கொலைகார நடவடிக்கையாக பள்ளிகளை மீண்டும் திறப்பதையும் ஊக்குவிக்கின்றனர். போல்சொனாரோ செய்வதைப் போல, முகக்கவசம் அணிவதன் மீதும் தடுப்பூசி மீதும் அவர்கள் தாக்குவதில்லை என்ற ஒரேயொரு வித்தியாசத்துடன், பிரேசிலில் கோவிட்-19 பேரழிவுக்கு அவர்களும் அதேயளவுக்கு குற்றகரமாக பொறுப்பாகிறார்கள்.

இதுவும், அடிப்படையில், தொழிற்சங்கங்களின் வேலைத்திட்டமாகும், அவை தொழிலாளர்களுக்கான ஆபத்துக்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கான அபாயங்களைப் பொருட்படுத்தாமல் பெருநிறுவனங்களைச் செயல்படுவதற்காக அவற்றின் அங்கங்களாக செயல்பட்டன. தொழில்கள் மற்றும் பள்ளிகளை மூடுவதற்கான தொழிலாளர்களின் போராட்டங்களைத் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு நாசப்படுத்தியுள்ளன. அந்த "பகிரங்க கடிதத்திற்குப்" பின்னால் உள்ள முதலாளித்துவ அணிகளைப் போலவே, இந்த அமைப்புகளும், அவற்றின் உறுப்பினர்களைத் தூண்டிவிட பதட்டத்தோடு விடையிறுத்து, முதலாளித்துவ சுரண்டல் மீண்டும் வழமைக்கு திரும்புவதற்காக அவற்றின் தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகள் இடுவதை அதிகரிக்குமாறு கோரின.

இந்த தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட பேரழிவை எதிர்த்துப் போராடுவதற்கு, தீவிரமாக வேறொரு திசையைச் சுட்டிக்காட்டும் ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க வேலைத்திட்டம் தேவைப்படுகிறது.

மனித உயிர்களுக்கு எதிராக இலாபங்களை எடைபோடும் செலவுக்கும்-பயனுக்குமான பகுப்பாய்வை அடிப்படையாக கொண்டாட ஒரு பகுதியான சமூக அடைப்புக்குப் பதிலாக, தொழிலாள வர்க்கம் சமுதாயத்திற்கு அத்தியாவசியமல்லாத அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த போராட வேண்டும். மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவத்துறை வல்லுனர்களின் உதவியோடு செயல்படுத்தப்பட வேண்டும். முழு சம்பளம்—பட்டினிக் கிடத்தும் கொடுப்பனவுகள் அல்ல—உழைக்கும் மக்களின் எல்லா குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

பிரேசிலில் உழைக்கும் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, மாறாக இப்புவியிலுள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளின் உயிர்களையும் பாதுகாக்க இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியமாகும்.

கோவிட்-19 தொற்றுநோயின் உலகளாவிய தன்மை முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை நிரூபிக்கிறது. இலாபங்களை விட மனித உயிர்களை முன்னுக்கு நிறுத்தும் வகையில் உலக பொருளாதாரத்தை விஞ்ஞானபூர்வமாக ஒழுங்கமைப்பதற்காக மற்றும் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்துவதற்காக, உற்பத்தி கருவிகளின் தனிச்சொத்துடைமையை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் நிதிய தன்னலக்குழுவின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்வது உள்ளடங்கலாக, சோசலிச நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் மற்றும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் பிரேசில் தொழிலாளர்களின் போராட்டங்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading