குழப்பமான தடுப்பூசி விநியோகத்திற்கு மத்தியில் ஐரோப்பா எங்கிலும் கோவிட்-19 நோய்தொற்று தீவிரமாக பரவி வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பா முழுவதுமாக கொரோனா வைரஸ் இறப்புக்கள் அதிகரித்து வருகின்றன, மார்ச் நடுப்பகுதியில் கோவிட்-19 இறப்புக்கள் 900,000 ஐ கடந்து விட்டது, நோய்தொற்றுக்கள் 39 மில்லியனுக்கு அதிகமாக உள்ளது. 126,615 என்றளவிற்கு ஐரோப்பாவின் உச்சபட்ச உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை பிரிட்டன் கொண்டுள்ளது, இதனையடுத்து இத்தாலி 108,350, ரஷ்யா 96,413, பிரான்ஸ் 95,114, ஜேர்மனி 76,139, ஸ்பெயின் 75,199, மற்றும் போலந்து 51,932 என்ற எண்ணிக்கைகளில் கோவிட்-19 இறப்புக்களை பதிவு செய்துள்ளன. இந்த புள்ளிவிபரங்கள் பெரிதும் குறைத்துக் கணக்கிடப்பட்டுள்ளன, ஏனெனில் அதிகப்படியான இறப்புக்களின் புள்ளிவிபரங்கள் கணிசமாக அதிகமான எண்ணிக்கையைக் காட்டுகின்றன.

பிப்ரவரி நடுப்பகுதியிலிருந்து, அநேகமாக கண்டத்தின் அனைத்து நாடுகளும் நாளாந்த நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் விரைவான அதிகரிப்பை எதிர்கொண்டன. கடந்த வாரம் மட்டும் ஐரோப்பாவில் அண்ணளவாக 25,000 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகினர், இது இந்த மாதத்தின் உச்சபட்ச ஏழுநாள் மொத்த இறப்பு எண்ணிக்கையாகும். ஏப்ரல் இறுதிக்குள் 1 மில்லியன் கொரோனா இறப்புக்களை எதிர்கொள்ளவிருக்கும் போக்கு ஐரோப்பாவில் நிலவுகிறது, அதனால் இந்த மைல்கல்லை எட்டிய முதல் கண்டமாக ஐரோப்பா இருக்கும்.

ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனும் ஜூலை 17 ப்ரூசெல்ஸ்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர் [Crdit: Stephanie Lecocq/Pool via AP]

1 மில்லியனை நோக்கி அதிகரித்து வரும் இந்த இறப்பு எண்ணிக்கை ஒட்டுமொத்த ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மீதான ஒரு மோசமான குற்றச்சாட்டாகும். வெளிப்படையாகவோ அல்லது வேறேதேனும் வழியிலோ ஐரோப்பா முழுவதிலுமுள்ள அரசாங்கங்கள் அதே “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை” எனும் மூலோபாயத்தை பின்பற்றி வருகின்றன, அதாவது இதன் மூலம் பெருவணிகங்களுக்கான இலாபங்களை தொடர்ந்து பெருக்கும் வகையில் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளுக்கும் மற்றும் அலுவலகங்களுக்கும், மற்றும் குழந்தைகள் பள்ளிகளுக்கும் மீண்டும் திரும்ப கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஐரோப்பாவின் மக்கள்தொகையில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையிலும், உயிர் காக்கும் பூட்டுதல் நடவடிக்கைகளை ஆளும் உயரடுக்குகள் பிடிவாதமாக நிராகரிக்கின்ற நிலையிலும், நூறாயிரக்கணக்கானோர் தேவையில்லாமல் இறக்க நேரிடும்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று, போலந்தும் ஹங்கேரியும் முறையே 35,145 மற்றும் 11,265 என்ற அளவிற்கு அவற்றின் முன்நிகழ்ந்திராத உச்சபட்ச ஒரு நாள் கோவிட்-19 நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை பதிவு செய்தன. சனிக்கிழமை, உக்ரேனில் 29,458 மற்றும் சேர்பியாவில் 9,722 நாளாந்த புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகின.

உக்ரேனிலும் ஹங்கேரியிலும் கடந்த வாரம் ஏழு நாள் மொத்த இறப்புக்கள் முறையே 2,057 மற்றும் 1,710 என பதிவாகின. 7 மில்லியனுக்கும் குறைந்த மக்கள்தொகை கொண்ட சேர்பியா சனியன்று 76 இறப்புக்களை பதிவு செய்தது.

பிரான்சில், நாடு முழுவதிலுமுள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழியும் நிலையில், குறிப்பாக அதுவும் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் அநேகமாக 90 சதவிகித தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU) தற்போது நிரம்பியுள்ளன. திங்களன்று, ஏப்ரல் 2020 க்கு பின்னர் அதிகபட்சமாக 4,974 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பிரான்சில் 28,322 கொரோனா வைரஸ் நோயாளிகள் தற்போது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Institutue of Health and Medical Research-Inserm) தொற்றுநோயியல் நிபுணரான Eric D’Ortenzio, “குறைந்தது ஒரு மாதத்திற்கு” பூட்டுதல் நீடிக்க வேண்டும் என்று Le Parisien செய்தியிதழுக்கு தெரிவித்ததன் படி, பிரான்சில் மருத்துவர்கள் கடுமையான முழு அடைப்புக்கு கோரிக்கை வைக்கின்றனர். மேலும் மற்றொரு தொற்றுநோயியல் நிபுணர் அதே செய்தியிதழில் பிரான்ஸ் “மார்ச் 2021 இல் தொடங்கி குறைந்தது ஆறு வாரங்களாவது கடுமையான முழு அடைப்பை செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். ஜனாதிபதி மக்ரோன் இன்று இரவு மேலதிக கட்டுப்பாடுகளை விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்ற பேரழிவுகர கதை ஐரோப்பா எங்கிலும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வருகிறது. கிரேக்க தலைநகரம் ஏதென்ஸில் மார்ச் நடுப்பகுதியில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 95 சதவிகித அளவிற்கு நிரம்பி வழிந்தன.

போலந்து சுகாதார அமைப்பு அதன் எல்லையை கடந்து சேவை செய்தது, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிப் போன நிலையில் தாழ்வாரங்களில் படுக்கைகள் அமைக்கப்படும் நிலை உருவானது. மார்ச் 21 அன்று, போலந்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை உச்சபட்சமாக 23,583 ஐ எட்டியது. இந்நிலையில், பிரதமர் Mateusz Morawiecki கடந்த புதன் கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் தனது அரசாங்கம் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் மேலதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று கூறினார்.

ஹங்கேரியில், பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததன் பின்னரான உச்சபட்ச எண்ணிக்கையாக கிட்டத்தட்ட 12,000 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். “மருத்துவமனைகளில் பெரும்பாலான பிரிவுகள் கோவிட்-19 பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன, தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அதிவேகமாக அளவுக்கு மீறி நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன, அறுவைச் சிகிச்சை அறைகள் மூடப்பட்டு, அவற்றிலுள்ள செயற்கை சுவாச வசதிகள் உயிருக்குப் போராடும் கோவிட்-19 நோயாளிகளை காப்பாற்ற பயன்படுத்தப்படுகின்றன,” என்று ஹங்கேரிய மருத்துவர்கள் அரங்கம் எழுதியது. மேலும், “எங்களுக்கு கிடைக்கக்கூடிய சுகாதாரப் பணியாளர்களின் சேவை போதாத நிலையில், மருத்துவமனைகள் தன்னார்வலர்களின் உதவியை எதிர்நோக்கியுள்ளன” என்றும் குறிப்பிட்டது.

பல்கேரியா, செக் குடியரசு மற்றும் எஸ்தோனியா ஆகிய நாடுகளும் மார்ச் கடைசியில் நோயாளிகளின் உச்சபட்ச மருத்துவமனை சேர்க்கைகளை எதிர்கொண்டன. மார்ச் 21 அன்று அண்ணளவாக 31,000 கொரோனா வைரஸ் நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த ஒரு கடுமையான நிலையை இத்தாலியும் எதிர்கொண்டது.

இதற்கிடையில், தடுப்பூசி விநியோகம் இன்னும் பனிப்பாறை உருகும் வேகத்தில் தொடர்கிறது. மார்ச் 28 நிலவரப்படி, ஐரோப்பாவில் 100 பேருக்கு 15.79 விகித அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தன, அதாவது மொத்தம் 118.2 மில்லியன் அளவு (dose) தடுப்பூசிகள் தான் போடப்பட்டிருந்தன. Our World in Data என்ற இணையவழி விஞ்ஞான இதழின் கருத்துப்படி, ஐரோப்பா அமெரிக்காவுக்கு பின்னால் உள்ளது, அதாவது அங்கு 100 பேருக்கு 42.9 விகித அளவிற்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

செல்வந்த நாடுகள் தடுப்பூசிகளை பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில், கண்டம் முழுவதும் தடுப்பூசிகளின் விநியோகம் சமமற்றதாக உள்ளது. ஐரோப்பாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான அல்பானியாவில், மக்கள்தொகையில் 0.2 சதவீதம் பேர் மட்டுமே ஒரு அளவு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த உக்ரேன், மாண்டினீக்ரோ, பல்கேரியா, லாத்வியா மற்றும் குரோஷியா போன்ற ஏனைய மிகவறிய நாடுகள் அனைத்திலும் 2 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களுக்கே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரிட்டன் அதன் மக்கள்தொகையில் 45 சதவிகிதம் பேருக்கு முதல் அளவு தடுப்பூசியை போட்டிருந்தாலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கால் பகுதி மக்களுக்குக் கூட தடுப்பூசியைப் போடவில்லை.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சாராத நாடுகளுக்கு, குறிப்பாக இங்கிலாந்துக்கு இடையில் தடுப்பூசி விநியோகம் குறித்த தேசியவாத மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், ஐக்கிய இராச்சியம் போன்ற கூட்டணியை தாண்டி, அதிகளவு தடுப்பூசி போடப்பட்டுள்ள நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுவதை தடை செய்வதற்கான திட்டம் பற்றி விவாதித்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய-பிரிட்டன் தகராறு பெரும்பாலும் பிரிட்டன்-சுவீடன் கூட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராசெனேகாவைச் சுற்றி வருகிறது. மிகப்பெரிய மருந்து தயாரிப்பாளரான அஸ்ட்ராசெனேகா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதியளித்திருந்ததை விட கணிசமான அளவு குறைவாக தடுப்பூசிகளை விநியோகித்ததையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் தனது ஒப்பந்தத்தை மதிக்கத் தவறியதாக அதனை குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையில், டச்சு பகுதியிலுள்ள அஸ்ட்ராசெனேகா பிரிவு தயாரிக்கும் தடுப்பூசிகள் அல்லது தடுப்பூசிகளின் கூறுகள் இங்கிலாந்திற்கு விநியோகிக்கப்படுவதைத் தடுக்க வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை இங்கிலாந்து அரசாங்கங்கம் கோரியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சிமாநாடு கோவிட்-19 தடுப்பூசி ஏற்றுமதியைத் தடுக்கும் திட்டத்தில் பின்வாங்கிய அதேவேளை, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் தடுப்பூசி தேசியவாதத்திற்கு ஒப்புதல் அளித்தனர். உச்சிமாநாட்டை தொடர்ந்து, மேர்க்கெல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் “எங்கள் சொந்த மக்களுக்கு வழங்க வேண்டும்” என்று கூறினார்.

“அமெரிக்கா மற்றும் பிரிட்டனை போலல்லாமல், உலகின் ஒரு பகுதியாகவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான நாங்கள் எங்களுக்கு மட்டும் தடுப்பூசிகளை விநியோகித்துக் கொள்ளாமல், உலகின் பரந்த பல பகுதிகளுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்கிறோம்,” என்று மேலும் கூறினார்.

மக்ரோன் இன்னும் வெளிப்படையாக செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்: “ஒவ்வொரு நாளும், [பிரிட்டனின்] அனைத்து பத்திரிகைகளையும் படிக்கும் போது, ஐரோப்பிய ஒன்றியம் சுயநலமாக இருப்பதாகக் கூறி எங்களுக்கு எதிராக அவர்கள் வழக்கு தொடுக்கின்றனர். இது பொய்யானது!”

சர்வதேச அளவிலான கோவாக்ஸ் தடுப்பூசி விநியோகத் திட்டத்தில் (Covax vaccine distribution scheme) ஐரோப்பிய ஒன்றியம் பங்கேற்று வருவதாகவும், 21 மில்லியன் தடுப்பூசி அளவை, அதற்கு பதிலாக எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும் வலதுசாரி Le Figaro செய்தியிதழ் புகார் கூறியதை குறிப்பிட்டு, மக்ரோன் இவ்வாறு அறிவித்தார்: “இது அப்பாவித் தனத்திற்கு முடிவாக இருக்கட்டும்… ஐரோப்பிய ஆணையம் விதித்த தடுப்பூசி ஏற்றுமதி கட்டுப்பாட்டு வழிமுறைகளை நான் ஆதரிக்கிறேன். மேலும், சில மருந்து நிறுவனங்கள் ஐரோப்பியர்களுக்கு தாம் வழங்கிய உறுதியளிப்புக்களை மதிக்காத வரை, அனைத்து ஏற்றுமதிகளையும் நாங்கள் தடுக்க வேண்டும் என்ற உண்மையையும் நான் ஆதரிக்கிறேன்.”

தடுப்பூசிகள் கிடைப்பதில் பற்றாக்குறை ஒருபுறமிருக்க, ஐரோப்பா முழுவதுமான ஆளும் வர்க்கங்கள், உயிர்களை பலி கொடுப்பது பற்றி எந்தவித அக்கறையுமின்றி, பெரியளவில் சுற்றுலா இலாபங்களை உறுதிப்படுத்த, இந்த கோடையில் பூட்டுதல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அழைப்பு விடுக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய ஆணையத்தின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் தியெர்ரி பிரெட்டன், ஜூன் நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு வழங்கப்படவுள்ள “தடுப்பூசி கடவுச்சீட்டு” பற்றி தெரிவித்தார். இந்த சீட்டு வைத்திருப்பவர்கள் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டவர் அல்லது முன்னரே அதிலிருந்து மீட்கப்பட்டவர் என சான்றளித்து அவர்களை சுதந்திரமாக எங்கும் பயணிக்க அனுமதிக்கும்.

“இது சுற்றுலா பருவத்திற்கு சிறந்த விலை கொடுப்பாக இருக்கும், அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடக்கூடியதாக, நாம் இருக்கும் இந்த சூழல் இறுதியாக அவ்வளவு மோசமாக இருக்கவில்லை என்றே நான் நம்புகிறேன்,” என்று பிரெட்டன் கூறினார்.

ஜேர்மனியில், மேர்க்கெலின் பணிக்குழு தலைவர் Helge Braun செய்தியிதழ்களின் குழுவான Funke க்கு தெரிவிக்கையில், ஈஸ்டருக்காக சுற்றுலா அனுமதிக்கப்படுவது குறித்து அவர் “மிகவும் சந்தேகம்” கொண்டிருந்தாலும், “Whitsun [மே 23] இல் இருந்து பயணம் மற்றும் ஓய்வு பற்றி நாம் மிகவும் நிதானமாக பேசலாம்” என்றார். தடுப்பூசிகள் தொடர்ந்து போடப்பட்டு, புதிய திரிபு வகைகளும் தோன்றாத பட்சத்தில், கோடைகாலத்திற்குள் முழு இயல்பு நிலைக்கு ஜேர்மன் திரும்ப முடியும் என்று Braun வலியுறுத்தினார்.

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுற்றுலா வருவாய் 75 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ள ஸ்பெயினில், உள்நாட்டிற்குள் மக்கள் இயக்கங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் உயரடுக்கு விடுமுறை கொண்டாட்டக்காரர்களுக்கு நாட்டைத் திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறது. கடந்த வாரம், மலாகா மேயர் பிரான்சிஸ்கோ டூ லா டோரே சுற்றுலா இலாப நலன்களுக்காக தங்களை “தியாகம்” செய்யுமாறு ஸ்பானியர்களுக்கு அழைப்பு விடுத்தார்: “வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களுக்கும் நமது பொருளாதாரத்தை ஊக்குவிப்பவர்களுக்கும் பாதுகாப்பான இடத்தை உறுதி செய்ய நாம் நமது சொந்த இயக்கத்தை தியாகம் செய்வோம்.”

ஸ்பெயினில் நிலவும் மக்களின் பரவலான கோபத்திற்கு மத்தியில், அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச கொரோனா வைரஸ் கால பயண கட்டுப்பாடுகளுக்கு இடையில் “ஒத்திசைவை” ஏற்படுத்த மாட்ரிட்டுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் ஐரோப்பிய ஆணையத்திற்கு ஏற்பட்டது.

Loading