முன்னோக்கு

டெரிக் சவன் வழக்கும் அமெரிக்காவில் பொலிஸ் படுகொலை தொற்றுநோயும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த மே மாதம் ஒன்பது நிமிடங்களுக்கும் அதிகமாக ஜோர்ஜ் ஃப்ளோய்டின் கழுத்தை மண்டியிட்டு நெரித்த மின்னெசோட்டாவின் மினெயாபொலிஸ் முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரிக் சவன் மீதான வழக்கின் மூன்றாம் நாள் விசாரணை புதன்கிழமை நிறைவடைந்தது.

கடந்த மூன்று நாட்களாக நடந்த விவாதங்கள், உலகெங்கிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே அறிந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன: ஃப்ளோய்ட் மரணம் இரத்தம் உறைய வைக்கும் விதமான ஒரு கொடூரமான பொலிஸ் படுகொலையாகும். இந்த பெருந்தொற்றுக்கு மத்தியில் நிகழ்ந்த அது, “சட்ட அமலாக்கம்" என்ற பெயரில் அடக்குமுறை மற்றும் வன்முறைக்கான எந்திரத்தின் தன்மையைக் குறிப்பாக சித்திரம் போல எடுத்துக்காட்டியது.

George Floyd (Credit: Offices of Ben Crump Law)

ஃப்ளோய்ட் தன் உயிருக்காக மன்றாடிய போது அதிகாரிகள் அவரை நடைபாதையில் கிடத்தி காலில் நெரித்ததை அவர்கள் கண்டதாக, ஒருவர் பின் ஒருவராக, சாட்சிகள் அதிர்ச்சியோடு, திகில் மற்றும் சீற்றத்தோடு, நினைவு கூர்ந்தனர். இதுவரையில் சாட்சி கூண்டுக்கு வந்த ஏறக்குறைய ஒவ்வொரு சாட்சியும் —வேறுவேறு இன மற்றும் பின்புலம் கொண்டவர்கள்— மே 25, 2020 இல் என்ன நடந்ததென அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக காணொளி காட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட போது அவர்கள் அழுது விட்டனர்.

மினெயாபொலிஸ் தீயணைப்புப் படைவீரர் ஜெனீவ் ஹான்சன், வெள்ளை இனத்தவரான இவர், ஃப்ளோய்டின் நாடித்துடிப்பை பார்க்க அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் மன்றாடியதாக சாட்சியம் அளித்தார். தன்னை ஒரு தீயணைப்புப் படைவீரராக அடையாளம் காட்டிய பின்னரும் கூட, அதிகாரிகள் எவ்வாறு ஃப்ளோய்டுக்கு உதவ அவரை அனுமதிக்கவில்லை என்பதை ஹன்சன் நினைவுகூர்ந்தார். சவன் தொடர்ந்து கால் முட்டியால் ஃப்ளோய்டை நெரித்த பின்னர் அவர் உணர்விழந்துவிட்டதைக் கூறி வேண்டியிருந்த போது ஹான்சன் உதவ முடியாமல் செயலற்று இருந்ததை நினைவுகூர்ந்த போது அழுதுவிட்டார்.

அந்த சம்பவத்தை வீதியிலிருந்து பார்த்ததும் பரபரப்பாக காணொளியில் பதிவு செய்த ஓர் ஆபிரிக்க அமெரிக்க பதின்ம வயது இளம் பெண் டார்னெல்லா ஃப்ரேஜர் நீதி விசாரணைக் குழு உறுப்பினர்களுக்குக் கூறுகையில், “நேரடியாக தலையிடாமலும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியாமலும் இன்னும் எதுவும் செய்ய முடியாமலும் போனதற்காக ஜோர்ஜ் ஃப்ளோய்டிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கோரி" பல இரவுகள் அவர் தூங்கவே இல்லை என்றார்.

அங்கே உடனிருந்து சம்பவங்களைப் பதிவு செய்த மற்றொரு பார்வையாளர் அலெஸ்சா புனாரி கூறுகையில், அவர் தலையிட விரும்பியதாகவும் ஆனால் "அங்கே உயர்மட்ட அதிகாரம்" இருந்ததால் அவரால் தலையிட முடியவில்லை என்று விவரித்த போது அழுதுவிட்டார் — இது குற்றம் நடந்த இடத்திலிருந்து பார்வையாளர்களை அதிகாரிகள் விரட்டி, கைத்தடியைக் கொண்டு அவர்களை அச்சுறுத்தியதைக் குறித்த ஒரு குறிப்பாகும்.

அரசு தரப்பு புதன்கிழமை உடலில் பொருத்தப்பட்ட கேமராவின் பயங்கர காட்சிகளைக் காண்பித்தது, அதில் ஃப்ளோய்ட் அவர் மிரண்டு போயிருப்பதாக அதிகாரிகளுக்குக் கூறி, தன்னைச் சுட்டுவிட வேண்டாமென கெஞ்சி, அதிகாரிகளிடம் மன்றாடுவதைப் பார்க்க முடிந்தது. அந்த காணொளியில், ஃப்ளோய்ட் இறந்துவிட்டதை ஓர் அதிகாரி வெளிப்படுத்திய பின்னரும் கூட அதிகாரிகள் தொடர்ந்து அவரை நடைபாதையில் கால் முட்டியால் நெரிக்கிறார்கள்.

மினெயாபொலிஸ் பொலிஸ் துறையின் கரங்களில் ஃப்ளோய்ட் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை உலகெங்கிலும் தொழிலாளர்களிடமிருந்து பெருகிய அனுதாபம் மற்றும் கோபத்தைத் தூண்டியது. ஃப்ளோய்ட் படுகொலைக்கு அடுத்த நாள் மின்னிசொடாவில் உள்ளூரில் தொடங்கிய போராட்டங்கள் தவிர்க்கவியலாமல் 60 க்கும் அதிகமான நாடுகளில் 2,000 க்கும் அதிகமான நகரங்களுக்குப் பரவின. அமெரிக்காவில் போராட்டங்களின் ஒரு தருணத்தில் 15 இல் இருந்து 26 மில்லியன் போர் பங்கெடுத்ததாக மதிப்பிடப்பட்டது, இது அமெரிக்க வரலாற்றிலியே மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களாக ஆகியிருந்தன.

அந்த ஆர்ப்பாட்டங்கள் பல வம்சாவழியினர், பல இனத்தவருடன் சர்வதேச தன்மையைக் கொண்டிருந்தன, தொழிலாளர்கள் இன வழிகளில் போராட்டத்தைப் பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளை எதிர்த்து தீவிரமாக போராடினர்.

அந்த போராட்டங்கள் ஃப்ளோய்ட் படுகொலையால் தூண்டிவிடப்பட்டிருந்தாலும், அவற்றை ஆழ்ந்த பிரச்சினைகள் முன்நகர்த்தின. மே மாத இறுதியில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 100,000 ஐ எட்டியது. வோல் ஸ்ட்ரீட்டிற்கு காங்கிரஸ் ட்ரில்லியன்களை வழங்கிய போது, மில்லியன் கணக்கானவர்கள் வேலையில்லாமல் இருந்தனர், வருமானம் இல்லாமல் இருந்தனர், தொழிலாளர்களுக்கு வெறும் மிச்சம்மீதி மட்டுமே வழங்கபட்டன. ஆளும் வர்க்கம், ட்ரம்ப் நிர்வாகத்தின் தலைமையில், அதன் வேலைக்குத் திரும்பச் செய்யும் படுகொலை பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்தது, இந்தவொரு கொள்கையே ஜனாதிபதி ஜோ பைடெனும் தொடர்ந்து கொண்டிருக்கிறார், இன்று இது இறப்பு எண்ணிக்கையை 560,000 க்கு அதிகமாக கொண்டு சென்றுள்ளது.

இராணுவமயமாக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கையோடு பொலிஸை அனுப்பியதன் மூலமாக ஆளும் வர்க்கம் ஆர்ப்பாட்டங்களுக்கு விடையிறுத்தது. ஜனநாயகக் கட்சியினரும் சரி குடியரசுக் கட்சியினரும் சரி மக்களை அச்சுறுத்த பொலிஸ் மற்றும் தேசிய காவல் படையினரை அழைத்தனர். போராட்டங்களின் போது 14,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு, ஊரடங்கை மீறினார்கள் அல்லது சாலைகளை முடக்கினார்கள் என்ற அற்ப குற்றங்களுடன் குற்றஞ்சாட்டப்பட்டனர். பொலிஸ் பத்திரிகையாளர்களின் ஜனநாயக உரிமைகளை வழக்கமாக மீறி, 2020 இல் 128 பேரைக் கைது செய்தனர், இது ஓராண்டில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் முன்பில்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். பொலிஸ் ஒடுக்குமுறையின் போது குறைந்தபட்சம் 19 பேர் உயிரிழந்தனர்.

தனது நிர்வாகம் முழுவதும் பொலிஸ் வன்முறையை ஊக்குவித்த ட்ரம்ப், ஜூன் 1 இல், நாடெங்கிலும் இராணுவத்தை நிலைநிறுத்தவும், நடைமுறையளவில் இராணுவச் சட்டத்தை அறிவிக்கவும் கிளர்ச்சி தடுப்பு சட்டத்தைச் செயல்படுத்த போவதாக அச்சுறுத்தினார். இந்த விடையிறுப்பு வெறுமனே அல்லது பிரதானமாகவே கூட பொலிஸ் வன்முறைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை மட்டும் இலக்கில் கொண்டிருக்கவில்லை. தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் மனிதபடுகொலை விடையிறுப்பின் மீது அதிகரித்து வந்த சமூக கோபம் குறித்து ஆளும் வர்க்கத்தின் அச்சத்தை அது பிரதிபலித்தது. ஜனவரி 6, 2021 இல் வாஷிங்டன் டி.சி.இல் முயற்சிக்கப்பட்ட பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியில், சர்வாதிகாரத்திற்கான அச்சுறுத்தல் அதன் உச்சபட்ச அரசியல் வெளிப்பாட்டைக் கண்டது.

பொலிஸ் ஒடுக்குமுறையை ஆதரித்த அதே வேளையில், ஜனநாயகக் கட்சியினர் மற்றொரு இணை-பாதையில் செயல்பட்டனர். அவர்கள் ஃப்ளோய்ட் படுகொலை மற்றும் தொற்றுநோய் போன்ற பரந்த பொலிஸ் வன்முறை மீதான மக்கள் சீற்றத்தை இனவாத பிளவைத் தூண்டும் அடிப்படையிலான ஒரு பிரச்சாரத்திற்குள் திருப்பி விட முனைந்தனர். பொலிஸ் படுகொலைகள் ஓர் இனவாத பிரச்சினை என்றும், கமலா ஹாரீஸை ஆபிரிக்க-அமெரிக்க மற்றும் ஆசிய-அமெரிக்க முதல் துணை ஜனாதிபதியாக ஆக்குவதன் மூலமாக அதைத் தீர்க்க முடியும் என்றும் தொழிலாளர்களுக்குக் கூறப்பட்டது. கறுப்பினத்தவரின் உயிரும் மதிப்புடையதே இயக்கம் (Black Lives Matter) பலமாக ஊக்குவிக்கப்பட்டு பிரதான பெருநிறுவனங்களால் அந்த இயக்கத்துடன் இணைந்த அமைப்புகளுக்கு மில்லியன் கணக்கிலான டாலர்கள் பாய்ச்சப்பட்டன.

ஆனால் பொலிஸ் வன்முறை தொற்றுநோய்க்கு குடியரசுக் கட்சியினரைக் காட்டிலும் ஜனநாயகக் கட்சியினர் ஒன்றும் குறைவான குற்றவாளிகள் அல்லர். ஜோர்ஜ் ஃப்ளோய்டுக்கு முன்னர், 2014 இல் மிசோரி ஃபேர்குசனில் மைக்கெல் பிரௌன் சம்பவம் இருந்தது, அப்போது போராட்டங்கள் ஒபாமா நிர்வாகத்தால் மேற்பார்வையிடப்பட்ட இராணுவமயமாக்கப்பட்ட விடையிறுப்பைச் சந்தித்தன. பைடென் நிர்வாகத்திலும் மேற்கொண்டு அட்டூழியங்கள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, சில கேமராவில் சிக்கலாம், பெரும்பாலானவை பதிவு செய்யப்படாமல் போகலாம். வாஷிங்டன் போஸ்ட் இன் ஒரு பகுப்பாய்வின்படி, மக்களைப் பொலிஸ் படுகொலை செய்யும் விகிதம் பைடென் கீழ் கணிசமாக குறைந்துவிடாது என்றுள்ளது.

2013 இல் Mappingpoliceviolence.org வலைத் தளம் தரவுகளைச் சேமித்து வைக்க தொடங்கியதிலிருந்து, பொலிஸ் ஒவ்வொரு ஆண்டும் 1,000 க்கும் அதிகமானவர்களை படுகொலை செய்துள்ளது. சராசரியாக, அமெரிக்க பொலிஸ் ஒவ்வொரு நாளும் 3 நபர்களுக்கும் அதிகமானவர்களைக் கொல்கிறது. ஏற்கனவே 2021 இல், பொலிஸ் 200 க்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளது.

இந்த தொற்றுநோய்க்கு மத்தியிலும் கூட, 2020 இல், பொலிஸ் 1,127 பேரைக் கொன்றது. அவர்களில் 457 பேர் வெள்ளை இனத்தவர்கள். ஆண்டுக்கு ஆண்டு, பொலிஸால் கொல்லப்படுபவர்களின் மிகப்பெரிய பங்கில் வெள்ளையின மக்களும் வருகின்றனர். இனவாதம் ஒரு பாத்திரம் வகிக்கின்ற அதேவேளையில், மிகவும் பின்தங்கிய மற்றும் பாசிசவாத உணர்வுகள் பொலிஸ் துறைக்குள் ஊக்குவிக்கப்படுகின்ற அதேவேளையில், விகிதாச்சார பொருத்தமின்றி படுகொலை செய்யப்படும் சிறுபான்மையினர் எண்ணிக்கையானது பிரதானமாக மிகவும் பலவீனமான வறிய சமூகங்களையே பொலிஸ் சுற்றி சுற்றி வருவதன் விளைவாகும்.

அமெரிக்காவில் பொலிஸ் வன்முறை பரவல், அதன் அடிவேரில், ஒரு இனப்பிரச்சினை அல்ல, ஒரு வர்க்கப் பிரச்சினையாகும். அது முன்னோடியில்லாத சமூக சமத்துவமின்மை மட்டங்களால் குணாம்சப்பட்ட ஒரு சமூகத்தின் கேடுகெட்ட விளைபொருளாகும். செல்வந்தர்களின் கரங்களில் செல்வவள திரட்சி கடந்தாண்டு அதிகரிக்க மட்டுமே செய்துள்ளது.

பொலிஸ் வன்முறைக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் இன அடிப்படையில் நடத்த முடியாது. கடந்தாண்டின் போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையையும் பலத்தையும் எடுத்துக்காட்டின. செயற்கை தடைகளை நிராகரித்து தொழிலாளர்களை அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டமே முன்னோக்கிய ஒரே வழியாகும். சவின் வழக்கில் சாட்சியளித்தவர்களின் உணர்ச்சிப்பூர்வமான விடையிறுப்பு அவர்களின் இனத்தால் தீர்மானிக்கப்படவில்லை, மாறாக அவர்களின் மனிதாபிமானத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பொலிஸால் கொல்லப்படும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் மீதான அனுதாபத்தாலும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஃப்ளோய்ட் கொல்லப்பட்ட சில நாட்களில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) எழுதியதைப் போல, “ஜோர்ஜ் ஃப்ளோடின் மரணத்திற்கு எவ்வாறு பழிவாங்குவது? முன்னோக்கி செல்லும் பாதை என்ன? பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டமானது பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், பாரிய வேலையின்மை, சமூக சமத்துவமின்மை மற்றும் பாரிய வறுமைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும். இது முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான சோசலிசத்திற்கான போராட்டமாகும்.”

ஃப்ளோய்ட் கொல்லப்பட்டு பத்து மாதங்களுக்குப் பின்னர், பொலிஸ் வன்முறை அலை தொடர்கையில், இந்த தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு அதன் கொடூரமான விளைவுகளை உண்டாக்கி உள்ள நிலையில், உலகெங்கிலுமான தொழிலாளர்கள் சமத்துவமின்மை, சர்வாதிகாரம் மற்றும் போர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் நுழைந்து வருகையில், அதுபோன்றவொரு போராட்டத்திற்கான அவசியம் முன்னெப்போதையும் விட அவசர தேவையாக உள்ளது.

Loading