தெற்கு அமெரிக்க எல்லையில் நிரம்பி வழிகின்ற முகாம்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பெரும்பாலும் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளடங்கிய 4,100 புலம்பெயர்ந்தோர்கள், 250 பேர் மட்டுமே தங்கவைக்கக்கூடிய டெக்சாஸின் டோனாவில் உள்நாட்டு பாதுகாப்பு துறை (DHS) வைத்திருக்கும் ஒரு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். பைடென் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட செய்தியாளர்களின் சமீபத்திய வருகையால் அம்பலப்படுத்தப்பட்ட இந்த நிலைமைகளை மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று மட்டுமே விவரிக்க முடியும்.

தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு இடையில் அங்குலங்கள் மட்டுமே இடைவெளி உள்ள, மெல்லிய போர்வைகளின் கீழ் பக்கவாட்டில் படுத்துக் கொண்டிருக்கும் படங்களை முகாமுக்குள் எடுக்கப்பட்ட ஒளிப்பதிவில் காணலாம். தலா 500 குழந்தைகளைக் கொண்ட எட்டு "நிலையங்களில்" குழந்தைகள் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஊடுருவி பார்க்கக்கூடிய பிளாஸ்டிக் தடுப்புகளால் வரிசையாக கூண்டுகளில் கூட்டமாக உள்ளனர். இந்த தடுப்பு மையங்களின் அளவு சுமார் 3,200 சதுர அடி மட்டுமே உள்ளதுடன் சில மெத்தைகள் கடினமான தளங்களில் விரிக்கப்பட்ட கூடாரங்களாக அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சராசரி ஒற்றை குடும்ப வீடு 2,301 சதுர அடி இருக்கவேண்டும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நிலையம் கூறுகிறது

அமெரிக்க பிரதிநிதி Henry Cuellar கடந்த மாதம் வெளியிட்ட டெக்சாஸில் குடியேறியவர்கள் நிரம்பிவழியும் முகாமின் வெளிக்கசிந்த புகைப்படம் (Axios)

14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள், உள்வாங்கும் கட்டிடத்திற்கு அனுப்பப்பட்டு, கைரேகை மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டு பின்னர் வேறு அறைக்கு மாற்றப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு குடிவரவு நீதிமன்றத்தில் ஆஜராக அறிவித்தல் வழங்கப்படுகிறது. அறிகுறிகள் காணப்பட்ட நபர்களைத் தவிர முகாம்களில் கோவிட்-19 இற்கான சோதனை எதுவும் செய்யப்படவில்லை.

முகாம்களில் உள்ள மோசமான நிலைமைகளை விளக்கி, அமெரிக்க வயதுவந்த சிறைகளில் வழக்கமாக நடைமுறையில் உள்ளதைப் போல, சுய-தீங்கேற்படுத்துவதை தடுக்கும் பொருட்டு சிறைக் கைதிகளிடமிருந்து சிறை அதிகாரிகளால் அனைத்து காலணிகளின் நாடாக்களும் அகற்றப்பட்டன. புலம்பெயர்ந்தவர்களுக்கான வக்கீல்கள், சவர்க்காரம் அல்லது போதுமான உணவு இல்லை என்று கூறியுள்ளனர். அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் அமைக்கப்பட்ட முகாம்களிலிருந்து வெளிவரும் கொடூரமான படங்கள் நாடுகடத்தப்படுவதை அதிகரிப்பதற்கான பைடென் நிர்வாகத்தின் தயாரிப்புகளை தொடர்ந்து வந்துள்ளன. இது பொது சுகாதார கவலைகளை காரணம் காட்டி புலம்பெயர்ந்தோரை எல்லைக்கு தெற்கே பின்னுக்குத் தள்ள “Title 42” விதிகளைப் பயன்படுத்துகின்றது. ஒரு உள்நாட்டு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் Axios வலைத் தளத்திடம், உள்நாட்டு பாதுகாப்புத் துறை "மெக்ஸிகோவில் உள்ள எங்கள் கூட்டாளிகளுடன் அவர்களின் திறனை அதிகரிக்க வேலை செய்கிறது" என்று கூறினார். உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் மார்ச் 21 அன்று "எல்லை மூடப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.

பைடென் நிர்வாக வேளையில், இருக்கும் முகாம்களுக்குள் இருந்து முதல் படங்கள் மார்ச் 22 அன்று டெக்சாஸ் பிரதிநிதி ஹென்றி குல்லர் டோனா முகாமுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து கசிந்தன. அண்மையில் தான் பைடென் நிர்வாகம் புலபம்பெயர்ந்தவர்கள் தவறான நடத்தப்படுதல் மற்றும் பாரிய தடுத்துவைத்தல் தொடர்பான அதிகரித்துவரும் பொதுமக்கள் ஆத்திரத்தை தொடர்ந்து செய்தியாளர்களை ஒரு முகாமுக்குள் அனுமதித்தது.

NBC யின் “Meet the Press” நிகழ்ச்சி நடாத்தும் சக் டோட் நேரடியாக மயோர்காஸிடம் உள்நாட்டு பாதுகாப்புத் துறையால் அதன் முகாம்களுக்கு செய்தித்துறை அணுகுவதில் ஒரு தடை ஏதும் இருக்கிறதா என்று கேட்டபோது, மயோர்காஸ் அதை மறுத்து, “நாங்கள் அதற்கான அணுகலை வழங்குவதிலும் பணியாற்றி வருகிறோம். எனவே அமெரிக்க பொதுமக்கள் பாதுகாப்பான வழியில், ஆபத்து இல்லாமல் எங்கள் செயல்பாடுகள் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியும். நாங்கள் அதைச் செய்கிறோம்" என்றார்.

ஒரு வாரத்திற்கு பின்னர் அசோசியேட்டட் பிரஸ்ஸின் இரண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் CBS இல் இருந்து ஒரு தொலைக்காட்சி குழுவினர் இந்த முகாம்களை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயோர்காஸ் உள்நாட்டு பாதுகாப்புத் துறை "நடவடிக்கைகளை" நிருபர்கள் பாதிப்பதாக கூறும்போது, அவர் வறுமை, போர் மற்றும் சர்வாதிகாரத்திலிருந்து தப்பி ஓடும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் முறையாக சிறையில் அடைக்கப்பட்டு நாடுகடத்தப்படுவதை அம்பலப்படுத்துவதைப் பற்றி அவர் பேசுகிறார். அவற்றில் பெரும்பாலானவை தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் மூலம் தொடரப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளின் நேரடி விளைவாக உருவாகியவையாகும்.

அமெரிக்க பிரதிநிதி Henry Cuellar கடந்த மாதம் வெளியிட்ட டெக்சாஸில் குடியேறியவர்கள் நிரம்பிவழியும் தடுப்பு மையங்களிலிருந்து கசிந்த புகைப்படம் . (Axios)

மார்ச் 31 நிலவரப்படி, அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (CBP) 5,100 பெற்றோர்கள் இல்லாத சிறார்களை வைத்திருக்கிறது. இது மார்ச் 11 அன்று வைத்திருந்த 3,200 ஐ விடவும், ட்ரம்ப் நிர்வாகத்தின் 2019 புலம்பெயர்ந்த குழந்தைகள் மீதான ஒடுக்குமுறையின் உச்சத்தை விட 25 சதவீதம் அதிகமாகும். மார்ச் 9 ம் தேதி ஒரு உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரி CNN இடம் டோனா வசதியிடம் ஏற்கனவே "கணிசமாக நெரிசலானது" என்றும் "குழந்தைகளின் எண்ணிக்கை ஆபத்தானதும் கவலைக்குரியதும் மற்றும் அனைவருக்கும் நல்லதல்ல" என்றும் கூறினார்.

தடுப்பு மையங்கள் சட்டப்படி 72 மணிநேரமே குழந்தைகளை தடுத்து வைக்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதன் பின்னர் அவர்கள் அகதிகள் மீள்குடியேற்ற அலுவலகத்தின் காவலுக்கு மாற்றப்பட வேண்டும். ஆயினும்கூட, நடைமுறையில், இந்த மையங்கள் குழந்தைகளை சட்டத்தை அப்பட்டமாக மீறி நீண்டகாலமாக வைத்திருக்கின்றன. இந்த காலகட்டத்தை தாண்டி குறைந்தது 5,000 குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (BBC) தெரிவித்துள்ளது.

பெப்ரவரியில் மட்டும் கிட்டத்தட்ட 100,000 புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டனர். கோவிட்-19 தொடர்பான சுகாதார கவலைகளை மேற்கோளிட்டு 70,000 பேர் பைடென் நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்டனர். தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வெளிப்படையான எச்சரிக்கைகளுக்கு எதிராக, முகாம்களில் கூட்டம் அதிகமாக இருப்பதைப் போலவே, பள்ளிகளை திறக்க கட்டாயப்படுத்திய நிர்வாகத்தின் முடிவைப்போல, புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கு கோவிட்-19 குறித்த அக்கறை காரணம் எனக்கூறுவது அப்பட்டமாக மோசடியாகும்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) அதிகாரிகள், புலம்பெயர்ந்தோர் தடுப்பு முகாம்கள் 100 சதவிகித கொள்தகமையுடன் திறந்திருக்க முடியும் என்று கூறியுள்ளனர். பள்ளிகளை மீண்டும் திறக்கும் பிரச்சாரத்திற்கு அவர்கள் ஒப்புதல் அளித்ததைப் போலவே, அவர்கள் எந்த சமூக தொற்று எந்த மட்டத்தில் இருந்தாலும் மீண்டும் திறக்கப்படலாம் என்று கூறியுள்ளனர். ”இது அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்ட பொய்யும் மற்றும் பகுத்தறிவற்ற மற்றும் படுகொலை கொள்கைக்கு விஞ்ஞான ரீதியான மூடுதிரையை கொடுக்கும் முயற்சியாகும். உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று வெடிப்புகளுக்கு பள்ளிகள் முக்கிய இடமாக மாறியுள்ளன. மேலும் கோவிட்-19 ஐ பரப்புவதில் தடுப்பு மையங்கள் நிச்சயமாக இதேபோன்ற பங்கைக் கொண்டுள்ளன.

எண்ணெய் தொழில் தொழிலாளர்களுக்கு ஒரு தங்குமிடமாக இருந்த டெக்சாஸ் வசதியான டோனா, ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் ஒரு புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையமாக மாற்றப்பட்டது மற்றும் பொது அழுத்தம் மற்றும் எதிர்ப்புக்களுக்கு பின்னர் செயலிழக்கவைக்கப்பட்டது. எல்லையில் தடுப்புக்காவல்கள் அதிகரித்ததை தொடர்ந்து பைடென் நிர்வாகத்தால் இது சமீபத்தில் மீண்டும் இயக்கப்பட்டது.

எந்த மனிதாபிமான கணிப்பீடுகளின் படியும் இந்த வதை முகாம்கள் மூடப்பட வேண்டும் மற்றும் அகதிகளுக்கு பொது சுகாதாரம், அவர்களின் சொந்த நல்வாழ்வு மற்றும் மனித கௌரவம் ஆகியவற்றைப் பாதுகாக்க போதுமான இருப்பிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

Loading