இராணுவ மோதல்கள் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான பெரும் மோதலுக்கான அபாயத்தை அதிகரிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம், டொன்பாஸ் பிராந்தியத்தில் உக்ரேனிய இராணுவத்திற்கும் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான மோதல் கணிசமாக அதிகரித்துள்ளது. மேற்கத்திய ஊடகங்கள் “ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு” நடவடிக்கை பற்றி கண்டித்தாலும், ரஷ்யாவுடனான சாத்தியமுள்ள போரில் நேட்டோவின் ஆதரவைப் பெற கணிப்பிட்டுள்ள உக்ரேனிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான பெரும் ஆத்திரமூட்டல்களின் பின்னணியில்தான் உண்மையில் இந்த இராணுவ மோதல்கள் நடந்துள்ளன.

ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையிலான பதட்டங்களின் மட்டம், பிப்ரவரி 2014 இல் யானுகோவிச் அரசாங்கத்தை கவிழ்த்த அமெரிக்க-ஜேர்மன்-ஆதரவிலான தீவிர வலதுசாரி சக்திகளின் ஆட்சிக் கவிழ்ப்பு சதி பின்னர் எந்த நேரத்திலும் இல்லாத அளவிற்கு இப்போது பெரியளவில் உள்ளது. ரஷ்யாவை சுற்றி வளைப்பதற்கான ஏகாதிபத்தியத்தின் பல தசாப்த கால மூலோபாயத்தின் ஒரு பகுதியான இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி, கிரெம்ளின் கிரிமியாவை இணைத்துக் கொள்வதற்கும், நாட்டின் கிழக்கில் ஒரு உள்நாட்டு போர் உருவாவதற்கும் தூண்டுதலளித்தது. இப்போர் 13,500 க்கும் மேற்பட்டவர்களை பலி கொண்டது.

Ukraine President Volodymyr Zelensky. (Aaron Chown/Pool Photo via AP)

மார்ச் மாதம் தொடக்கத்தில், “கிரிமியாவை மீட்கும்” நோக்கம் கொண்ட ஒரு மூலோபாயத்திற்கு கியேவ் ஒப்புதலளித்தது. கருங்கடலில் உள்ள தீபகற்பம் முக்கிய புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன், ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் கடற்படைத் தளத்திற்கு அது சொந்தமானது. இதை கைப்பற்றுவதற்கான கியேவின் எந்தவொரு முயற்சியும் ஒரு போரை அறிவிப்பதற்கு சமமானதாகும்.

மார்ச் 25 அன்று, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் செலென்ஸ்கி ஒரு புதிய இராணுவ மூலோபாயத்திற்கு ஒப்புதலளித்தார், இந்த மூலோபாயம் உக்ரேனிய மண்ணில் நடத்தப்படவுள்ள ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஒட்டுமொத்த மக்களும் அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. மேலும் இந்த மூலோபாயம், நேட்டோ ஆதரவு இல்லாமல் அத்தகைய எந்தவொரு போரையும் வெல்ல முடியாது என்பதை ஒப்புக் கொண்டதுடன், இந்த இராணுவக் கூட்டணிக்கு உக்ரேன் 19 தடவைகளுக்கு குறையாமல் திட்டமிட்டது பற்றியும் குறிப்பிடுகின்றது.

சமீபத்திய ஒரு நேர்காணலில், உக்ரேனிய ஆயுதப்படைகளின் தளபதி கேர்னல் ஜெனரல் ருஸ்லான் கோம்சக் (Colonel General Ruslan Khomchak), கிழக்கு உக்ரேனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள டொன்பாஸை மீண்டும் கைப்பற்றுவதற்கு சாத்தியமுள்ள தாக்குதல் பற்றி விவாதித்தார். இத்தகைய தாக்குதலுக்கு பெரும் பொதுமக்கள் உயிரிழப்பு தேவைப்படும் என்பதை கோம்சக் ஒப்புக்கொண்டு, செலென்ஸ்கிக்கு எந்தவொரு “கட்டளையிடவும் அல்லது முடிவெடுக்கவும் அனைத்து அதிகாரமும் உண்டு” என்று வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், உக்ரேனில் ஒரு வெறித்தனமான ரஷ்ய எதிர்ப்பு சூழ்நிலை தூண்டப்பட்டு வருகிறது. கடந்த மாதங்களில், செலென்ஸ்கி உக்ரேனிய தன்னலக் குழுவின் ரஷ்ய சார்பு கன்னையின் முக்கிய இடங்களையும் தொலைக்காட்சி சேவைகளையும் தகர்க்கச் செய்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரான, கிரெம்ளினுடன் நெருங்கிய உறவைக் கொண்ட கோடீஸ்வரரான விக்டர் மெட்வெட்சுக் (Viktor Medvedchuk) தடைசெய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை, சுயாதீன சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் மிகைல் வோலிண்ட்சேவ் (Mikhail Volyntsev), உக்ரேனிய பாராளுமன்றத்தில் (Rada) பேசுகையில், உக்ரேனின் மின் விநியோக அமைப்பின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டினார்.

இந்த வாரம், கிரிமியாவிலும் கிழக்கு உக்ரேனிலும் ரஷ்ய துருப்புக்கள் காலாட்படை போர் வாகனங்களையும் மற்றும் பீரங்கி-எதிர்ப்பு ஏவுகணைகளையும் ஈடுபடுத்தும் கணிசமான நகர்வுகளை நிகழ்த்தியது பற்றிய தகவல்கள் வெளியாகின. உக்ரேனின் எல்லையில் பெலாருஷ்ய துருப்புக்கள் அணிதிரட்டப்பட்டு வருவது பற்றியும் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

புதன்கிழமை, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) “போருக்கு வழிவகுக்கும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உக்ரேன் எடுக்கக்கூடும்” என்று எச்சரித்துள்ளார். போருக்கான நிலைமைகளை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாக அமெரிக்கா உக்ரேனை பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டி, “மேற்கத்திய நாடுகள் எங்களுடன் போரை தவிர எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாரிப்பு செய்யவில்லை” என்றும் குறிப்பிட்டார். மேலும் அதே நாளில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆகியோருடன் உக்ரேனின் நிலைமை குறித்து அவர் விவாதித்தார்.

வெள்ளிக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் தான் பதவியேற்றதன் பின்னர் முதல் முறையாக ஜெலென்ஸ்கியுடன் பேசினார். ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனுக்கு “உறுதியான ஆதரவை” வழங்க பைடென் உறுதியளித்தார். கடந்த வாரம் முழுவதும், அமெரிக்க மற்றும் உக்ரேனிய அரசாங்கங்களுக்கு இடையில் குறைந்தது மூன்று உயர்மட்ட தொலைபேசி அழைப்புக்கள் நிகழ்ந்தன, அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், கூட்டுத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லே மற்றும் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஆஸ்டின் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்த நெருக்கடியை பைடென் நிர்வாகத்திற்கான ஒரு “பரிசோதனை” என்று விவரித்தது.

கருங்கடல் பிராந்தியத்தின் வரைபடம் [Photo by Norman Einstein / CC BY-NC-SA 4.0]

பதவிக்கு வந்ததிலிருந்து, பைடென் நிர்வாகம் ரஷ்யாவை நோக்கி மிகுந்த ஆக்கிரோஷமான போக்கை அதுவும் தொடரும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஜனாதிபதியாக அவரது முதன்மை வெளியுறவு கொள்கைகளில் ஒன்றாக, சிரியா-ஈராக் எல்லையில் ஈரானிய ஆதரவு பெற்ற ஈராக்கிய இராணுவ நிலைககளின் மீது குண்டுவீசினார். இது ஈரானை மட்டுமல்லாது, ரஷ்யாவிற்கும் எதிராக குறிவைக்கப்பட்டது. கடந்த வாரம் நேட்டோ உச்சிமாநாட்டில், நேட்டோ சக்திகள் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான அணுவாயுத போருக்கு தயார் செய்ய “நேட்டோ 2030” முயற்சியை தொடங்கின. உச்சிமாநாட்டிற்கு சற்று முன்னரான ஒரு நேர்காணலில் பைடென், மற்றொரு நாட்டின் தலைவரான புட்டினை ஒரு “ஆத்மா இல்லாத கொலைகாரன்” என்று பயங்கரமாக தாக்கி அழைத்தமை இராஜதந்திர நெருக்கடியைத் தூண்டியது. வளர்ந்து வரும் போர் அபாயம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவற்றின் கூட்டாளிகளின் அதிகரித்தளவிலான பொறுப்பற்ற நகர்வுகளுக்கு அடிப்படையாக, கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் கணிசமாக முடுக்கிவிடப்பட்டுள்ள உலக முதலாளித்துவ அமைப்பின் ஆழ்ந்த நெருக்கடி உள்ளது.

உக்ரேனில், சமூக மற்றும் அரசியல் நெருக்கடி குறிப்பாக கூர்மையாக உள்ளது. தொற்றுநோய் காலத்தின் ஒரு வருடத்திற்கும் மேலாக, கொரோனா வைரஸ் வறிய மக்கள் மத்தியில் முழு கட்டுப்பாடற்று பரவி நாசப்படுத்தி வருகிறது. ஏப்ரல் 1 அன்று, 421 பேர் கொரோனாவால் இறந்தனர், மேலும் நாளாந்த புதிய நோய்தொற்றுக்கள் இரண்டாவது உச்சபட்ச எண்ணிக்கையை அடைந்தது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரப்படி 33,200 பேர் வைரஸால் இறந்துள்ளனர், ஆனால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம். மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழியும்போது, மற்றும் சிலருக்கு விலங்குகளுக்கான மருந்துகள் வழங்கப்படும் நிலையில், உக்ரேன் சுகாதார அமைச்சகத்திற்கான ஒரு ஆலோசகர், கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் “வீட்டிலேயே இறக்க” தயாராக இருக்கும்படி பரிந்துரைத்தார்.

ரஷ்யாவிற்கு எதிரான போருக்குத் தயாராகும் பொருட்டு, உக்ரேனின் தீவிர வலதுசாரி மற்றும் இராணுவத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை பாய்ச்சிய அதே ஏகாதிபத்திய சக்திகள் கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் தொடர்புபட்ட எந்தவொரு உதவியையும் வழங்க மறுத்துவிட்டன. ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசியை ஏற்றுக் கொள்வது “புவிசார் அரசியல் அடியாக” இருக்கும் என்று வாதிட்டு, செலென்ஸ்கி அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டது. இதன் விளைவாக, 44 மில்லியன் மக்கள்தொகையில் 220,000 பேர் மட்டுமே முதல் அளவு தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர் என்பதுடன், மார்ச் 30 வரை இரண்டு பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்களது வேலைகளை இழந்துவிட்டனர், அதேவேளை பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் அல்லது குறிப்பிடத்தக்க வருமான இழப்பை எதிர்கொண்டனர். கிழக்கு உக்ரேனில் உள்ள போர் மண்டலத்தில், UNICEF இன் கருத்துப்படி, மில்லியன் கணக்கானவர்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை, அதிலும் சில கிராமங்களுக்கு ஒட்டுமொத்தமாக தண்ணீர் கிடைக்கவில்லை. உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களைப் போலவே, உக்ரேனிய அரசாங்கமும், சமூக துயரங்களைத் தீர்க்க எதையும் செய்யாமல், தொழிலாள வர்க்கத்தின் மீது மேலதிக சமூகத் தாக்குதல்களைத் தொடுக்க இந்த நெருக்கடியைப் பயன்படுத்துகிறது.

உக்ரேனிய தன்னலக்குழுவின் பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்கள் பாரிய வர்க்க பதட்டங்களை வெளிப்புறமாக திசைதிருப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை என்றாலும், இந்த மோதலுக்குப் பின்னால் உள்ள முக்கிய உந்து சக்தியாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று வீழ்ச்சியும், இராணுவ வழிமுறைகள் கொண்டு அவற்றை ஈடுசெய்ய முனையும் அதன் முயற்சிகளும் உள்ளன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பரந்த வளங்களின் மீது முழு கட்டுப்பாட்டைக் கொண்டுவர நோக்கம் கொண்டு, அமெரிக்காவும் நேட்டோவும் 1991 முதல் ரஷ்யாவை முறையாக சுற்றி வளைத்துள்ளன என்பதுடன், அதன் எல்லைகளில் ஏராளமான சதித்திட்டங்களுக்கும் திட்டமிட்டன. அவற்றில் இரண்டு 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் உக்ரேனில் நிகழ்த்தப்பட்டன.

அமெரிக்க அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கும் மிக முக்கிய சிந்தனைக் குழாம்களில் ஒன்றான, RAND Corporation தயாரித்த 2019 ஆண்டு ஆவணம், ரஷ்யா அதன் எல்லைப் பகுதி மோதல்களில் தன்னை இராணுவ ரீதியாக “பெரிதும் விரிவுபடுத்திக் கொள்ள” நிர்ப்பந்திக்கும் ஒரு மூலோபாயம் பற்றி மேலோட்டமாக குறிப்பிட்டது. இந்த மூலோபாயத்தின் நோக்கம் புட்டினின் ஆட்சியை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவீனப்படுத்துவது உள்ளது. அதேவேளை அமெரிக்கா அதன் முக்கிய மூலோபாய போட்டியாளரான சீனா மீது நேரடி கவனம் செலுத்தவும் இது உதவுகிறது. மேலும், கிழக்கு உக்ரேனில் இராணுவ மோதல் என்பது அந்த மூலோபாயத்தின் மையப் பகுதியாகவுள்ளது.

இந்த அறிக்கை, “உக்ரேனிய இராணுவம் ஏற்கனவே டொன்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யாவை இரத்தம் சிந்த வைத்துள்ளது. அதேபோல் உக்கிரேனையும் ரஷ்யா இரத்தம் சிந்த வைத்துள்ளது. அதிகளவு அமெரிக்க இராணுவ உபகரணங்களும் ஆலோசனைகளும் வழங்கப்படுவது, மோதலில் ரஷ்யா நேரடியாக ஈடுபடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அதற்கான விலை கொடுப்பையும் அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டது. அத்தகையதொரு மூலோபாயம் அமெரிக்காவிற்கும் ஒரு கணிசமான செலவை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன் மிகுந்த ஆபத்தானது என்றும், ஆயினும் கூட இந்த மூலோபாயத்தை அமெரிக்கா துல்லியமாக பின்பற்றி வருகிறது என அது மேலும் குறிப்பிட்டது.

கடந்த ஏழு ஆண்டுகளில், அமெரிக்கா உக்ரேனிய இராணுவத்திற்காக நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. மேலும் உக்ரேனிய இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதில் அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். RAND Corporation அது முன்மொழிந்த அனைத்து மூலோபாயங்களும் கட்டுப்படுத்த முடியாத இராணுவ மோதலை விளைவிக்கும் அபாயத்தை உள்ளடக்கியது என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது அணுவாயுதங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட அபாயங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் கையிலெடுக்க தயாராக உள்ளது என்பதாகும்.

1917 இன் சோசலிச அக்டோபர் புரட்சி ஸ்ராலினிசத்தால் காட்டிக் கொடுப்பில் இருந்து எழுந்த சோவியத் அதிகாரத்துவத்தால் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பேரழிவுகர விளைவுகளை தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கிறது. இது அந்த நேரத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு ICFI எழுதியது போல, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு சோசலிசத்தின் முடிவையோ அல்லது “முதலாளித்துவத்தின் வெற்றியையோ” குறிக்கவில்லை என்றும் மாறாக, சூறையாடலுக்கான ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் சமூகப் புரட்சிக்கான புதிய காலத்தைத் திறந்து வைத்துள்ளது என எழுதியது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த மதிப்பீடு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய முக்கியமானது என்னவென்றால், இந்த வரலாற்று படிப்பினைகளின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதாகும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Loading