முன்னோக்கு

கொரோனா தொற்றுநோயின் உண்மையான எண்ணிக்கை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவில், இந்நோயால் 570,000 க்கும் அதிகமான உயிர்கள் பலியாகி உள்ளன. உலகளவில், இந்த எண்ணிக்கை 2,890,000 ஐ தாண்டுகிறது. இன்னும் அதிகளவில் தொற்றக்கூடிய புதிய வைரஸ் வகைகளின் தொடர்ச்சியான பரவல் கடந்தாண்டின் இலையுதிர்கால அதிகரிப்பையே விஞ்ச அச்சுறுத்துகின்ற நிலையில், புதிய நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கைகள் சர்வதேச அளவில் அதிகரித்து வருகின்றன.

COVID-19 patient Efrain Molina, center, gets a fist bump from nurse leader Edgar Ramirez at Providence Holy Cross Medical Center in the Mission Hills section of Los Angeles, Tuesday, Dec. 22, 2020. (AP Photo/Jae C. Hong)_

அனைத்திற்கும் மேலாக, இந்த நோயால் ஏற்பட்ட உயிரிழப்புகளாக காட்டப்படும் உண்மையான எண்ணிக்கையும் அதன் விளைவுகளும் யதார்த்தத்தில் இன்னும் மிக அதிகமாகும். 2020 இல் "அதிகப்படியான இறப்புகளின்" எண்ணிக்கை, அதாவது அதற்கு முந்தைய ஆண்டுகளின் சராசரியின் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமான இறப்புகள் என்பது, 503,000 ஐ தாண்டியது, அதாவது உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் இறப்புகளை விட 42 சதவீதம் அதிகமாக இருந்ததை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் சமீபத்தில் வெளிப்படுத்தின.

ஆனால் இந்த பாரிய உயிரிழப்பு எண்ணிக்கையுமே கூட தொற்றுநோயினது யதார்த்தத்தின் ஒரு பிரதிபலிப்பு மட்டுமே ஆகும். மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், பத்து மில்லியன் கணக்கானவர்கள், ஒரு பகுத்தறிவார்ந்த சமூகமாக இருந்திருந்தால் தடுத்திருக்கக்கூடிய இந்த நோயால், இங்கே தொடர்ந்து அவதிப்படுகிறார்கள்.

இவர்களில் கொரோனா வைரஸுக்கு பெற்றோரில் ஒருவரை பலி கொடுத்த பல குழந்தைகள் இருக்கிறார்கள். ரேச்சல் கிட்மான் மற்றும் அவரது சகாக்கள் எழுதி திங்கட்கிழமை JAMA குழந்தை மருத்துவ இதழில் வெளியான ஒரு கட்டுரை, அமெரிக்காவில் “ஒரு மதிப்பீட்டின்படி 37,300 இல் இருந்து 43,000 வரையிலான” குழந்தைகள் இந்த தொற்றுநோயின் விளைவாக இப்போது பெற்றோரை இழந்து வாடுவதாகவும், அவர்களில் முக்கால்வாசி பேர் இளம் பருவத்தினர் என்றும் குறிப்பிடுகிறது. எதிர்முரணாக, வியட்நாம் போரின் விளைவாக சுமார் 20,000 அமெரிக்க குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்திருந்தனர்.

கிட்மான் குறிப்பிடுவதைப் போல, இவர்கள் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் மட்டுந்தான், அவர்களின் முக்கிய பராமரிப்பாளரையோ அல்லது உறவினரையோ இழந்தவர்கள் இல்லை, அல்லது குழந்தைகளை இழந்த பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், அல்லது பரந்த நண்பர்களின் வட்டத்தை, சக தொழிலாளர்களை மற்றும் தாங்கள் அறிந்த குடும்பத்தை இழந்த வலியை இவர்கள் பார்க்கவில்லை.

கிட்மானும் அவரின் சக எழுத்தாளர்களும் இந்த நோயைக் கட்டுப்படுத்தத் தவறினால் ஏற்படும் அபாயங்களையும் குறிப்பிடுகின்றனர். இது கட்டுப்படுத்தப்படாவிட்டால், அமெரிக்காவில் "116,900 பெற்றோர் இழந்த குழந்தைகளை" உருவாக்கி, அமெரிக்காவில் மொத்தம் இந்த தொற்றுநோய் தொடர்பான 1.5 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்துமென அவர் குழு மதிப்பிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசியல், பெருநிறுவன மற்றும் ஊடக அதிகார வட்டாரங்கள் இப்போது ஊக்குவித்து வருகின்ற, சமூகம் இந்த “நோயுடன் தான் வாழ வேண்டும்” என்றால், குறைந்தது 75,000 முதல் 80,000 க்கும் அதிகமான இளைஞர்கள் குறைந்தபட்சம் பெற்றோரில் ஒருவரையாவது இந்த கொரோனா வைரஸிற்கு பலி கொடுத்தவர்களாக தான் வளர வேண்டியிருக்கும்.

எவ்வாறாயினும், இந்த கணக்குத்தான் பைடென் நிர்வாகத்தால் முன்நகர்த்தப்பட்டு வருகிறது, ஏனெனில் அது பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் முழுமையாக திறக்க அழைப்பு விடுக்கும் அதேநேரத்தில் படிப்படியாக பாதுகாப்பு நெறிமுறைகளையும் கைவிட்டு வருகிறது. இந்த பெருந்தொற்று பரவுவதற்கான முக்கிய வழிகளில் ஒன்றாக பள்ளிகள் இருக்கின்றன, இதன் மூலமாக ஆசிரியர்களும் மாணவர்களும் இரண்டு பேருமே, குறிப்பாக இப்போது ஆபத்திற்குள்ளாகி இருக்கிறார்கள், CDC இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கி கருத்துப்படி, “[இன்னும் அதிகமாக தொற்றக்கூடிய உயிராபத்தான] மிகவும் பொதுவான வழிதோன்றலான B.1.1.7 வகை வைரஸ் இப்போது அமெரிக்காவில் பரவி வருகிறது.”

அனைத்திற்கும் மேலாக, குழந்தைகளின் கல்வி மற்றும் மன ஆரோக்கியத்திற்கான செலவுகளைக் குறித்து பைடென் நிர்வாகம் என்ன தான் எரிச்சலூட்டும் வாதங்களை முன்வைத்தாலும், அந்த செலவுகள் ஏற்கனவே மிகப்பெரியளவில் உள்ளது. அமெரிக்காவில் 236,000 க்கும் அதிகமான கோவிட்-19 நோயாளிகளில், 34 சதவீதம் பேருக்கு அவர்களின் முதல் நோய்தொற்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நரம்பு சம்பந்தமான அல்லது மனநலம் சம்பந்தமான நோய் நிலைமைகள் கண்டறியப்பட்டிருப்பதை The Lancet Psychiatry ஆய்விதழில் வெளியான புதிய கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டின. பொதுவான அறிகுறிகளில் மனக்கவலையும் மனக்குழப்பமும் உள்ளடங்கி இருந்தது என்றாலும், ஏழு சதவீதத்தினருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்தது மற்றொரு ஏழு சதவீதத்தினருக்கு கட்டுப்பாடின்றி போதைப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அந்த ஆய்வில் இருந்த பதிமூன்று சதவீதத்தினருக்கு, இது அவர்களின் நரம்பு சம்பந்தமான அல்லது மனநலம் சம்பந்தமான நோயாக முதல்முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் அனைவருக்கும் பொதுப்படையாக வைத்து பார்த்தால், கோவிட்-19 இன் விளைவாக 45 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு நரம்பு சம்பந்தமான அல்லது மனநலம் சம்பந்தமான மருத்துவப் பிரச்சினை இருக்கும் அல்லது ஏற்படும் என்பதையே இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நோயாளிகள் "குணமடைந்த பிறகும்" கொரோனா வைரஸ் ஏற்படுத்திய நீண்டகால கூடுதல் பாதிப்புகள் குறித்தும் அந்த ஆராய்ச்சி ஆவணப்படுத்தி உள்ளது. அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பு ஆய்விதழில் சுவீடனின் டான்டெர்ட் மருத்துவமனை மற்றும் கரோலின்ஸ்கா பயிலகத்தின் மருத்துவர்கள் சமீபத்தில் பிரசுரித்த ஆவணத்தில், லேசான கோவிட்-19 நோய் ஏற்பட்டிருந்தவர்களில் 11 சதவீதத்தினர் இன்னமும் வாசனை நுகர்வுத்தன்மை, ருசி உணர்வை இழந்திருப்பதாகவும், அல்லது அந்நோயால் பாதிக்கப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னரும் அடிக்கடி சோர்வுக்கு உள்ளாவதாகவும், இது கணிசமானளவுக்கு அவர்களின் தொடர்ச்சியான ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை தரத்தைப் பாதித்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

வைரஸிற்குப் பிந்தைய நோய் அறிகுறிகள் அல்லது நீண்டகால கோவிட் அறிகுறிகள் என்று எது குறிப்பிடப்படுகிறதோ அதன் வெவ்வேறு அம்சங்களை பிற அறிக்கைகள் ஆவணப்படுத்தி உள்ளன. கடந்த கோடையில், இத்தாலியில் மருத்துவமனைகளிலிருந்து குணப்படுத்தி அனுப்பப்பட்ட நோயாளிகளில் 87 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு, கொரோனா வைரஸ் அறிகுறிகள் தெரியத் தொடங்கியதற்கு இரண்டரை மாதங்களுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், சோர்வு, சுவாச ஓட்டம் குறைவு, மூட்டு வலி மற்றும் நெஞ்சு வலி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சீனாவில் கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சையிலிருந்து குணமாக்கி அனுப்பப்பட்டு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இதேபோன்ற நிலைமைகள் இருப்பதாக சீனாவில் ஓர் ஆய்வு கண்டறிந்தது. அறிகுறியின்றி இந்நோய்தொற்றுக்கு உள்ளானவர்கள் மத்தியிலும் கூட இத்தகைய உடல்நல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன.

இந்த ஆய்வுகள் உயிராபத்தாக இருக்கக்கூடிய ஒரு நோய்தொற்றுக்கு உள்ளான 133 மில்லியன் மக்களின் நிலைமையைப் பற்றி ஒரு படுமோசமான சித்திரத்தை வழங்குகின்றன. பல மாதங்களாக நாள்பட்ட மற்றும் அசாதாரண உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுடன் அன்றாடம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் பத்து மில்லியன் கணக்கானவர்களும், இன்னும் பத்து மில்லியன் கணக்கானவர்களும் கூட, அவர்களுக்குத் தெரியாமலேயே நோய்தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம், அல்லது அனேகமாக பல மாதங்களாக அவர்களோடு நோய் அறிகுறிகள் இருந்து கொண்டிருக்கலாம் என்பதை அந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

இதுபோன்ற நீண்டகால அறிகுறிகள் எப்போது முடிவடையும், அல்லது முடிவடையுமா என்பதும், தெளிவாக இல்லை. சிறந்த மதிப்பீடுகளின்படி இந்த வைரஸ் வந்து வெறும் 18 மாதங்களே ஆகியுள்ளது, 10, 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்டகால பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. பேரழிவுகரமான மற்றும் வரம்பற்ற செலவுகளுடன் சேர்ந்து, மில்லியன் கணக்கானவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் நிரந்தரமாக சீரழிக்கப்படும் சாத்தியக்கூறு உள்ளது.

நிதிய தன்னலக் குழு மற்றும் அதற்கு சேவையாற்றும் அரசாங்கத்தினது கணக்கீட்டின்படி, அத்தகைய பரிசீலனைகளால் எந்த விளைவும் இல்லை. உயிரிழப்புகளும் நீண்டகால பாதிப்புகளும் வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமே. ஆனால் உண்மையில் இவை குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களின் குற்றகரமான கொள்கைகளால் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற, நூறாயிரக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்ட, உயிரோடு சுவாசித்துக் கொண்டிருக்கும் மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட, வீணடிக்க நிர்பந்திக்கப்படும் இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் சம்பந்தப்பட்ட, உண்மையாகும்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கத்தாலும் முன்வைக்கப்படும் —சமூகம் இந்த வைரஸுடன் தான் "வாழ்ந்தாக" வேண்டும் என்ற—வாதம், ஏற்க முடியாதளவில் உயிர்களையும், உடல்நலனையும், மன வேதனையும் விலையாக கொடுத்து வருகிறது. இல்லை, மனிதகுலத்தால் இந்த வைரஸ் உடன் "வாழ" முடியாது, அதைக் கட்டுப்படுத்த மறுக்கும் முதலாளித்துவ சமூக அமைப்புடனும் அதனால் "வாழ" முடியாது.

Loading