முன்னோக்கு

ஆசியா உலகளாவிய கோவிட்-19 பெருந்தொற்றின் ஒரு புதிய குவிமையமாக உருவெடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இன்னும் அதிக தொற்று ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வகைகளால் உந்தப்பட்ட இந்த பெருந்தொற்றின் ஒரு புதிய எழுச்சியை மனிதகுலம் முகங்கொடுக்கையில், ஆசியா உலகின் படுமோசமாக பாதிப்பிற்குள்ளான பிராந்தியமாக மேலெழுந்து வருகிறது. உலகின் அரை மில்லியனுக்கும் அதிகமான நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 40 சதவீதம் இப்போது ஆசியாவில் பதிவு செய்யப்படுகிறது, இங்கே தடுப்பூசி இடுதல் பெரும்பாலான இடங்களில் இன்னும் தொடங்கவே இல்லை. இதற்கும் மேலாக, இந்த நோயாளிகளில் சுமார் 90 சதவீதம் பேர் மத்திய கிழக்கு மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளின் பகுதியில் உள்ளனர், இங்கெல்லாம் நடைமுறையளவில் ஒரு வாரத்திற்கும் அடுத்த வாரத்திற்கும் இடையே, நோய்தொற்றின் வெடிப்பு அதற்கு முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையை முறியடித்து வருகிறது.

ஆனால், இந்த புதிய இன்னும் அதிக உயிராபத்தான வைரஸ் மேலெழுச்சியை தடுப்பதற்காக மருத்துவ ரீதியில் வழிநடத்தப்பட்ட சமூக அடைப்புகள் மற்றும் வேலையில் ஈடுபட முடியாதவர்களுக்கான சமூக உதவிகள் குறித்த அழைப்புகளோ, வேறுபாடின்றி ஆசியா எங்கிலுமான அரசாங்கங்களிடமிருந்து சமரசத்திற்கிடமின்றி எதிர்ப்பைச் சந்திக்கின்றன.

இந்தியாவில், மார்ச் மாத இறுதியில் இருந்து நாளாந்த நோய்தொற்றுகளின் எண்ணிக்கை உலகிலேயே மிக அதிகபட்சமாக, ஆசியாவின் 260,000 நோயாளிகளில் சுமார் பாதியளவில், 120,000 க்கும் அதிகமாக இரட்டிப்பாகி உள்ளன. ஆனாலும் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் அரசாங்கம் ஒரு நாடுதழுவிய அடைப்புக்கும், அல்லது மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அத்தியாவசியமற்ற வணிகங்களுக்குத் தடை செய்வதற்குமான அழைப்புகளை விடாப்பிடியாக எதிர்க்கிறது. அதற்கு பதிலாக, மோடியும் அவரது இந்து மேலாதிக்க பாஜக கட்சியும் "உலகிலேயே மிக அதிகளவில் தடுப்பூசி செலுத்தும்" முனைவை பெருமையாகக் கூறுகின்றன. இன்றைய தேதிக்கு, இந்தியா, உலகிலேயே அதிகபட்ச தடுப்பூசி வழங்கிய மூன்றாவது நாடாக இருக்கிறது. ஆனால் இந்தியர்களில் 6 சதவீதத்துக்கும் குறைவானவர்களே முதல் கட்ட தடுப்பூசியை பெற்றுள்ளனர், வெறும் 0.8 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

13 மில்லியன் நோயாளிகள் மற்றும் 167,000 இறப்புகளின் கோட்டை இந்தியா கடந்துவிட்ட நிலையில், அதன் குறைந்த நிதியுதவி பெறும் மருத்துவ அமைப்புமுறை பொறிவின் விளிம்பில் உள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் அமெரிக்க மேற்கு கடற்கரை வைரஸ் வகைகளுக்கு நிகராக உருமாறும், இந்த இரட்டை வகை வைரஸ், B.1.1.7 அல்லது பிரிட்டன் வகை வைரஸைப் போலவே பரவி வருகிறது. தங்களின் அன்புக்குரியவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை கோரும் நிர்கதியான குடும்பங்களிடம் இருந்து வரும் அழைப்புகளை ஒவ்வொரு ஒரு சில நிமிடங்களுக்கும் அவர் துண்டிக்க வேண்டியிருப்பதாக டாக்டர் லேன்சிலொட் பின்டோ BBC க்குத் தெரிவித்தார்: “நாங்கள் ஏற்கனவே மிதமிஞ்சிவிட்டோம். என் மருத்துவமனையில் எல்லா கோவிட்-19 படுக்கைகளும் நிரம்பிவிட்டன,” என்றார்.

பகுதியளவிலான உள்ளூர் அடைப்புகளைக் கூட எதிர்க்க இந்தியாவின் ஆளும் உயரடுக்கு இடையே ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் நடந்து வருகிறது. செவ்வாய்கிழமை தலையங்கத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா "நிஜமாகவே நோயை விட குணப்படுத்தல் மோசமாக இருக்குமென" அத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்தது. இதற்கிடையில், 83.1 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தர் முகேஷ் அம்பானியின் தம்பி மகனும், ஒரு பில்லியனரின் மகனுமான ஜெய் அம்பானி, சமூக அடைப்புகள் "நம் சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறித்துவிடும்" மற்றும் "உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்த" அவை ஒரு "சர்வாதிபத்திய" முயற்சியாக இருக்கின்றன என்று ட்வீட் செய்தார். இது, அமெரிக்க, பிரிட்டன் மற்றும் இந்திய ஆளும் உயரடுக்கின் தொற்றுநோய் கொள்கையை பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழ் "சமூக படுகொலை" என்று குணாம்சப்படுத்தியதை உறுதிப்படுத்துகிறது.

துருக்கியில் மார்ச்சுக்குப் பின்னர் இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து 406,004 ஆக உள்ள நிலையில், அது புதன்கிழமை முன்பில்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 54,740 கோவிட்-19 நோயாளிகள் மற்றும் அந்நோயால் 276 உயிரிழப்புகளைக் கண்டது. தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது, புதிய நோயாளிகளில் 75 சதவீதத்தினர் B.1.1.7 வகை வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. துருக்கியின் தீவிர சிகிச்சை பிரிவுகள் 10 நாட்களுக்குள் நிரம்புவிடுமென துருக்கியின் தீவிர சிகிச்சை பிரிவு சமூக அமைப்பின் தலைவர் பேராசிரியர் இஸ்மெயில் சினெல் எச்சரித்துள்ளார். துருக்கி மக்களில் வெறும் 8.7 சதவீதத்தினருக்கும் மற்றும் கல்வியாளர்களில் 10 சதவீதத்தினருக்கும் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறிருந்தும் கூட, ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களை அத்தியாவசியமற்ற தொழில்துறைகளில் பணியில் அமர்த்தியுள்ளார், அதேவேளையில் வாரயிறுதி ஊரடங்குகளை நீக்கியும், பல்கலைக்கழகங்கள் மற்றும் தேனீர்விடுதிகளை மீண்டும் திறந்துவிட்டும் சமூக இடைவெளி முறைமைகளை நீக்கி வருகிறார். இஸ்தான்புல் மருத்துவ சபை இந்த கொள்கையை ஒரு "படுதோல்வி" என்று முத்திரை குத்தியது, துருக்கிய மருத்துவ அமைப்பு (TTB) ட்வீட் செய்கையில், “இந்த தொற்றுநோய்க்கு எதிராக பகுத்தறிவார்ந்த, விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட போராட்டம் இல்லை. … தவறான மருத்துவக் கொள்கைகளை வலியுறுத்துவது சமூக படுகொலையாகும்,” என்று குறிப்பிட்டது.

ஈரான், அதிகபட்சமாக புதன்கிழமை கோவிட்-19 இன் 20,954 புதிய நோயாளிகள் மற்றும் 193 உயிரிழப்புகளைக் கண்டது — இந்த எண்ணிக்கை பிரிட்டன் வகை வைரஸ் பரவி வருவதால் ஒரு வாரத்தில் இரட்டிப்பாகி உள்ளது. தெஹ்ரானில் அதிகபட்சமாக 4,200 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில், ஒரு மருத்துவர் Le Monde க்கு கூறுகையில், “பொது மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன, அவசர கவனிப்பு அறைகளில் இனி இடமில்லை. நோயாளிகளைத் தரையில் கிடத்தியோ அல்லது படுக்கைக்காக காத்திருப்பு நாட்களில் வைத்தோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

கடுமையான அமெரிக்க பொருளாதார தடையாணைகளை முகங்கொடுத்து வரும் ஈரான் —83 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்நாடு— சீன, ரஷ்ய மற்றும் தென் கொரியா என ஒவ்வொன்றிடமிருந்து ஒரு சில நூறு தடுப்பூசிகளை மட்டுமே பெற்றுள்ளது. அமெரிக்க தடையாணைகள் மற்றும் போர் அச்சுறுத்தல்களின் பாதிப்பைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி சமூக அடைப்புக்கு உத்தரவிட மறுத்தார், அதன் பொருளாதார பாதிப்பு தொழிலாளர்களின் பாரிய போராட்டங்களைத் தூண்டிவிடுமென அவர் குறிப்பிட்டார்: “எல்லாவற்றையும் அடைப்பது மிகவும் எளிமையாக இருக்கலாம். ஆனால் அதற்குப் பின்னர், வறுமை, பட்டினி, வேலையின்மையை முகங்கொடுக்கும் மக்கள் வீதிகளில் இறங்கிவிடுவார்கள்,” என்றார்.

ஈராக் —1991 வளைகுடாப் போருக்குப் பின்னர் இருந்து பல தசாப்தங்களாக அமெரிக்க தலைமையிலான போர்கள், குண்டுவீச்சுக்கள் மற்றும் தடையாணைகளால் இதன் சுகாதார உள்கட்டமைப்பு சிதைந்து போயுள்ள நிலையில்— புதன்கிழமை அதிகபட்சமாக 8,331 புதிய நோயாளிகளைக் கண்டது. நோய்தொற்றுக்கள் அண்மித்து 1 மில்லியனை எட்டி வருகின்ற நிலையில், 39 மில்லியன் மக்கள் வாழும் ஒரு நாட்டில் வெறும் 119,000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் விரைவிலேயே வெள்ளமென நிரம்பிவிடுமென குழந்தைகளைப் பாதுகாப்போம் அமைப்பு (Save the Children) எச்சரிக்கிறது: “ஈராக்கில் கோவிட் -19 அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதைக் குறித்து அங்கே கவலைக்குரிய அறிகுறிகள் உள்ளன. … இந்த புதிய வகை வைரஸ் குழந்தைகளிடையே கண்டறியப்படாமலேயே பரவத் தொடங்கி விடுமோ என்று நாங்கள் கவலைப்படுகிறோம். ஈராக்கின் மருத்துவக் கவனிப்பு முறை நிரம்பி வழிவதென்பது நேரம் சார்ந்த ஒரு விடயமாக உள்ளது.”

பிலிப்பைன்ஸில், மார்ச் 2 இல் 2,065 ஆக இருந்த புதிய நாளாந்த நோயாளிகள் ஏப்ரல் 2 இல் 15,280 ஆக அதிகரித்தது. இப்போது சிகிச்சை பெற்று வரும் சுமார் 160,000 நோயாளிகள் கடந்த ஆகஸ்டில் முந்தைய 79,800 உச்சத்தை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது. மணிலா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாகாணங்கள் பிலிப்பினோ நோயாளிகளில் 70 சதவீதத்தைக் கொண்டுள்ளன, தேசிய தலைநகர் பகுதியில் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஏற்கனவே 79 சதவீதம் நிரம்பிவிட்டன, அங்குள்ள 150 மருத்துவமனைகளில் 26 முழுமையாக நிரம்பிவிட்டது. ஆனாலும் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற கடுமையாக தேவைப்படும் பொது நிதியிலிருந்து 19 பில்லியன் அமெரிக்க டாலரை பிரதான முதலீட்டாளர்களுக்கு அரசு கடன்களைச் செலுத்துவதற்காக திருப்பிவிட்டுள்ளது.

பங்களதேஷில், ஒரு நாளைக்கு வெறும் ஒருசில டாலர்கள் மட்டுமே சம்பாதிக்கும் ஆயத்த ஆடை தொழிலாளர்களைக் கொண்ட உலகின் ஆயத்த ஆடை மையமாக விளங்கும் அங்கே, நாளாந்த நோய்தொற்றுக்கள் ஒரே மாதத்தில் 606 இல் இருந்து 6,854 ஆக அதிகரித்துள்ளன. அந்த அரசு ஒரு சில வாரங்களுக்கு மட்டும் சமூக அடைப்பை அறிவித்துள்ளது. இதற்கிடையே, பங்களாதேஷின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய நாடுகளை தளமாகக் கொண்ட ஆயத்த ஆடை பெருநிறுவனங்களை திருப்திப்படுத்த அந்த அரசு தொழிலாளர்களைப் பணியில் இருக்குமாறு கட்டாயப்படுத்துகிறது. 666,132 கோவிட்-19 நோயாளிகளைக் கண்டுள்ள 163 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்நாட்டில் வெறும் 5.5 மில்லியன் தடுப்பூசிகளே வழங்கப்பட்டுள்ளன.

அந்த வைரஸை இல்லாதொழிக்க பெருந்திரளான மக்களுக்கு தடுப்பூசி வழங்க தயாராகும் அதேவேளையில் விஞ்ஞானபூர்வ சமூக இடைவெளி கொள்கையால் அந்த வைரஸைத் தடுக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டும் உதாரணங்களையும் ஆசியா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சீனா, இந்த தொற்றுநோயின் ஆரம்ப குவிமையமான இது, 2021 முழுவதும் 3,270 கோவிட்-19 நோயாளிகள் மற்றும் இரண்டு இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, அதுவும் பயணிகள் அந்த வைரஸை மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வந்ததன் விளைவாக ஏற்பட்டதாகும். இதே போல, தைவான் இந்தாண்டின் 3 உயிரிழப்புகள் உள்ளடங்கலாக 246 நோயாளிகளை அறிவித்துள்ளது, வியட்நாம் 1,174 நோயாளிகளைப் பதிவு செய்தது, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

வைரஸைத் தடுத்துள்ள வெகு சில நாடுகளின் வெற்றிகள், ஆசியாவின் பிற பகுதிகளில் மட்டுமல்ல, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களிலும் பின்பற்றப்பட்ட “சமூக நோயெதிர்ப்பு பெருக்கும்” கொள்கைகளின் திவால்நிலையை மற்றும் குற்றகரத்தன்மையை அம்பலப்படுத்துகின்றன. இந்த தொற்றுநோய் கட்டுக்கடங்காது அதிகரித்துக் கொண்டிருக்கையிலும் வணிகங்கள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி, இந்நாடுகளது அரசாங்கங்கள் திட்டமிட்டு உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளன. சீனாவின் 1.4 பில்லியன் மக்களில் 5,000 க்கும் குறைவான கோவிட்-19 உயிரிழப்புகளே ஏற்பட்டுள்ள அதேவேளையில், நேட்டோ நாடுகளின் 941 மில்லியன் மக்களில் 1.4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள நாடுகளுக்கு மீண்டும் அதை இறக்குமதி செய்வது ஓர் இன்றியமையா அரசியல் புள்ளியை அடிக்கோடிடுகிறது. எல்லைகளைக் கடந்து, கடவுச்சீட்டுக்கள் அவசியமின்றி தொடர்ந்து உருமாறும் இந்த வைரஸுக்கு எதிரான போராட்டம் சர்வதேச போராட்டமாகும். இதை தனியொரு நாட்டிலோ, அல்லது ஒரு கண்டத்திலோ கூட நிறுத்தி விட முடியாது, மாறாக உலகம் தழுவியே இதை நிறுத்த முடியும். எவ்வாறாயினும் அதை நிறுத்துவதற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சர்வதேச போராட்டம் தேவைப்படுகிறது.

“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும், வேகமாக விரைவாக தடுப்பூசிகளை உருவாக்குவதற்கும், இந்த பெருந்தொற்றைத் தடுப்பதற்கும் போதுமான பணம் இல்லை என்று கூறுவது பொய்களாகும். ஏகாதிபத்திய மையங்களின் மத்திய வங்கிகள் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள், யூரோக்கள், பவுண்டுகள் மற்றும் யென் ஆகியவற்றை பொது நிதிகளிலிருந்து நிதிச் சந்தைகளுக்குள் பாய்ச்சியதால், இந்த கடந்தாண்டு, உலகின் பில்லியனர்கள் ஏற்கனவே அவர்கள் வைத்திருந்த 8 ட்ரில்லியன் டாலருடன் இன்னும் 5.1 ட்ரில்லியன் டாலர் செல்வவளத்தைச் சேர்த்தனர். இந்தியாவின் மூன்று செல்வந்த பில்லியனர்கள் கடந்தாண்டு அவர்களின் செல்வவளத்துடன் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேர்த்தனர், அதே நேரத்தில் துருக்கியின் 26 பில்லியனர்களின் நிகர செல்வவளம் 53.2 பில்லியன் டாலராக உயர்ந்தது.

அதே நேரத்தில், ஆசியா மற்றும் உலகெங்கிலுமான நாடுகள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் போர் தயாரிப்புகளுக்குள் செலுத்துகின்றன. நேட்டோ நாடுகள் இந்தாண்டு அவற்றின் இராணுவங்களுக்குள் 1 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட உள்ளன. கடந்தாண்டு வரவு-செலவு திட்டக்கணக்கில் இந்தியா வெறும் 8.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே மருத்துவ கவனிப்புக்காக ஒதுக்கிய அதேவேளையில், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து அமெரிக்க தலைமையிலான நாற்கர மூலோபாய பங்காண்மை மூலமாகவும் உட்பட, சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் தன்னை முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டது. சிரியாவில் நேட்டோ போரைத் தொடர்வதற்காக உள்ளடங்கலாக, துருக்கி அதன் இராணுவத்திற்காக 19 பில்லியன் டாலரைச் செலவிட்டது.

ஏகாதிபத்திய மையங்களின் நிதிய பிரபுத்துவத்தினரால் இன்னும் அதிக சொத்துக்களுடன் சேர்ந்து, இந்த தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டால், அவை, தொற்றுநோயை தடுக்கவும் மற்றும் பத்து மில்லியன் கணக்கானவர்களின் தேவையற்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கும் தேவையான ஆதார வளங்களை மனிதகுலத்திற்கு வழங்கும்.

ஆனால் இதற்கு ஆசியா எங்கிலுமான பிற்போக்குத்தனமான முதலாளித்துவ அரசாங்கங்கள், வல்லரசு மோதல் மற்றும் போர், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், சோசலிசத்திற்காகவும் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவது அவசியமாகும்.

பல தசாப்தங்களாக உற்பத்தியின் பூகோளமயமாக்கல், பில்லியன் கணக்கான விவசாயிகளை ஆசியா முழுவதும் உள்ள நகரங்களுக்கு கொண்டு வந்து, ஒரு பரந்த மற்றும் சக்தி வாய்ந்த தொழிலாள வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் மில்லியன் கணக்கானவர்களின் வேலைநிறுத்த போராட்டங்கள் அல்லது தொழில்துறை நடவடிக்கைகள், துருக்கி மற்றும் பங்களதேஷின் மிகப்பெரும் தொழில்துறை ஆலைகளில் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கு எதிரான தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள், மற்றும் ஈரானில் பாரிய சமூக போராட்டங்களைக் கடந்தாண்டு கண்டுள்ளது.

தொற்றுநோயைத் தடுப்பதற்கு, பொருளாதார வாழ்வைத் தனியார் இலாபத்திற்கு அல்ல மாறாக சமூக தேவைக்காக மறுஒழுங்கமைக்கும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இந்த பலமான சக்தியை, அதன் பல பிராந்திய ரீதியான, இனரீதியான மற்றும் குறுங்குழுவாத பிளவுகளைக் கடந்து, ஏகாதிபத்திய அதிகாரங்களில் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள அதன் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைப்பது அவசியமாகும்.

Loading