ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவத்தை திரும்பப்பெறுவதாக பைடென் அறிவிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆப்கானிஸ்தானில் மீதமுள்ள அமெரிக்க துருப்புக்கள் மே 1 ஆம் தேதி வெளியேறத் தொடங்கும் என்றும், அவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2021 செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறுவார்கள் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் புதன்கிழமை பிற்பகல் அறிவித்தார்.

செப்டம்பர் 11, 2001 அன்று நியூ யோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதில்தான் ஆப்கானிஸ்தானின் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு என்ற வாஷிங்டனின் நீண்டகால பொய்யை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் இறுதி திரும்பப் பெறும் திகதி தேர்வுசெய்யப்பட்டுள்ளது. உண்மையில், ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் அந்த தேதிக்கு முன்பே நன்கு தயாரிக்கப்பட்டதுடன், மற்றும் படையெடுப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான நீண்டகால மூலோபாய நோக்கங்களை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டிருந்தது.

ஏப்ரல் 12, 2009 அன்று ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபரா மாகாணத்தில் உள்ள குலிஸ்தான் மாவட்டத்தை விட்டு வெளியேறும்போது எம்ஐ -17 ஹெலிகாப்டரின் விமானிகள் மற்றும் குழுவினரின் பாதுகாப்பிற்காக கூட்டணி படைகள் பாதுகாப்பை வழங்குகின்றன.(ஆதாரம்: Wikimedia Commons/Joseph A. Wilson)

எவ்வாறாயினும், வெள்ளை மாளிகையின் தொலைக்காட்சி அறிக்கை மற்றும் அதனுடன் இணைந்த ஊடக கட்டமைப்பால், உண்மையில், இறுதி வெளியேற்றம் கால அட்டவணையில் நடந்தாலும் படைகள் திரும்பப் பெறுவதைச் சுற்றியுள்ள பயனற்ற தன்மை மற்றும் தோல்வியின் சூழ்நிலையை அகற்ற முடியவில்லை.

எந்தவொரு படைவிலக்கமும் "நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டதாக" இருக்க வேண்டும் என்ற பென்டகன் மற்றும் சிஐஏ அதிகாரிகளின் வேண்டுகோளை பைடென் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, தலிபான் கிளர்ச்சியாளர்களுக்கும் அமெரிக்காவால் நிறுவப்பட்ட காபூல் கைப்பாவை ஆட்சிக்கும் இடையிலான ஒருவித உடன்படிக்கை இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. பெயர்குறிப்பிடப்படாத "மூத்த நிர்வாக அதிகாரி" ஒன்றை மேற்கோள் காட்டி பைடென் அத்தகைய அணுகுமுறையை "ஆப்கானிஸ்தானில் என்றென்றும் தங்குவதற்கான செயல்முறையாக இருக்கும்" என்று கருதியதாக ஒரு தகவல் குறிப்பிட்டது.

படைகளை திரும்பப் பெறும் காலத்தில் அமெரிக்கப் படைகள் அல்லது அவர்களின் நேட்டோ நட்பு நாடுகளைத் தாக்க வேண்டாம் என்று தலிபான்களை எச்சரித்த அதே வேளையில், பைடென் தனது முடிவை மாற்றியமைக்கும் சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டினார். அமெரிக்காவிற்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் எதிராக அமெரிக்க இராணுவப் படை பயன்படுத்தப்படலாம் என்ற அச்சுறுத்தலை மட்டுமே அவர் விட்டுவைத்தார். இது உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தும் ஒரு எச்சரிக்கையாகும்.

ஆப்கானிஸ்தானில் அதிகாரபூர்வமாக 2,500 அமெரிக்க துருப்புக்களும் மற்ற நேட்டோ நாடுகளில் இருந்து 6,500 பேரும் இருக்கும்போது, பத்திரிகை அறிக்கைகள் அமெரிக்க படையினரின் உண்மையான எண்ணிக்கை 3,500 என்று சுட்டிக்காட்டுகின்றன. சிஐஏ முகவர்கள், கூலிப்படையினர் முதல் சிறப்புப் படைகள் கொண்ட படைப்பிரிவுகள் வரை ஆயிரக்கணக்கான பிற அமெரிக்க பணியாளர்களை இது கணக்கில் எடுக்கவில்லை. வேறு எந்த ஆதரவுமற்ற காபூல் ஆட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வாஷிங்டன் கருதும் வரை, அந்த நாட்டில் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

மத்திய ஆசியாவிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்கா முழுவதும் உள்ள அனைத்து பரந்த நிலப்பரப்புகளையும் போலவே ஆப்கானிஸ்தான் அமெரிக்க ட்ரோன் ஏவுகணைகளுக்கு ஒரு சுதந்திரமான தாக்குதல் மண்டலமாக இருக்கும்.

பைடென் முடிவுக்கு காங்கிரசில் இருந்து கலவையான எதிர்வினைகள் இருந்தன, ஆனால் இந்த பிளவு கட்சி அடிப்படையில் இருக்கவில்லை. பெரும்பாலும் கட்சியின் சாண்டர்ஸ்-வாரன் பிரிவைச் சேர்ந்த சில ஜனநாயகக் கட்சியினர் இந்த நடவடிக்கையை பாராட்டினர். அதே நேரத்தில் இராணுவத்திற்கு மிக நெருக்கமானவர்களான காங்கிரஸ் ஆயுத சேவைகள் குழுவின் தலைவரான ஆடம் ஸ்மித் மற்றும் செனட் வெளியுறவுத் தலைவரான ராபர்ட் மெனண்டெஸ் உட்பட்ட குழுவினர் பலமாக ஆதரிக்கவில்லை. வெளியுறவுக் குழுவின் உறுப்பினரான நியூ ஹாம்ப்ஷயரின் செனட்டர் ஜீன் ஷாஹீன், இந்த முடிவால் தான் “மிகவும் ஏமாற்றமடைந்தேன்” என்றும் காபூலில் அரசாங்கம் வீழ்ச்சியடையும் வாய்ப்பை மேற்கோள் காட்டினார்.

குடியரசுக் கட்சியினர் பகிரங்கமாக பிளவுபட்டனர். ட்ரெட் சார்பு செனட்டர்களான டெட் க்ரூஸ் மற்றும் ஜோஷ் ஹவ்லி ஆகியோர் வெளியேறியதைப் பாராட்டினர். அதே நேரத்தில் செனட் சிறுபான்மைத் தலைவர் மிட்ச் மெக்கொனெல் அதை பயங்கரவாதத்திற்கு அடிபணியச் செய்ததாகக் கண்டித்தார். "இது இதுவரை அழிக்கப்படாத ஒரு எதிரியின் முகத்தின் முன்னால் பின்வாங்குவது, அமெரிக்கத் தலைமையை கைவிடுவது" என்று அவர் செவ்வாயன்று செனட்டில் கூறினார்.

வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ராப் ஹானிக்கு செவ்வாயன்று பைடெனின் முடிவை அறிவித்தார். மேலும் பிரஸ்ஸல்ஸில் ஒரு கூட்டத்திற்கு முன்னர் தனது நேட்டோ சகாக்களுக்கு முன்மொழியப்பட்ட நடவடிக்கையை அறிவித்தார். ஆப்கானிஸ்தானில் படைகளை வைத்திருக்கும் ஜேர்மனியும் பிற நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு ஒரு அரசியல் மரண தண்டனையாக இருக்கக்கூடிய ஹானி, பைடெனின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்குப் பின்னர் அமெரிக்கா திரும்பப் பெறுவது குறித்து தனக்கு எந்தக் கருத்தும் இருக்காது என்று கூறினார். இது பற்றி உத்தியோகபூர்வமற்ற முறையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் நிர்வாக அதிகாரிகள், ஆப்கானிஸ்தானில் உள்ளதைப் போன்ற குறைந்த மோதல்களிலிருந்து அமெரிக்கா விலகிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, முக்கிய மூலோபாய போட்டியாளர்களான ரஷ்யா, சீனா, வட கொரியா மற்றும் ஈரான் நோக்கி திரும்பவேண்டும் என்று கூறினர். "ஆப்கானிஸ்தான் இந்த நேரத்தில் மற்ற அச்சுறுத்தல்களின் நிலைக்கு உயரவில்லை" என்று ஒரு அதிகாரி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.

புதன்கிழமை தனது கருத்துக்களில், ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட 2,300 அமெரிக்க படையினர், பல்லாயிரக்கணக்கான காயமடைந்தவர்கள் மற்றும் 2 டிரில்லியன் டாலர் 20 ஆண்டுகால யுத்தத்திற்காக செலவிடப்பட்டதை பைடென் குறிப்பிட்டார். ஈராக், சிரியா, லிபியா, ஏமன் மற்றும் வடக்கு ஆபிரிக்காவின் பெரிய பகுதிகளுடன் கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அழிக்கப்பட்ட பலவற்றில் ஒன்றான ஆப்கானிய மக்கள் மீதும் ஆப்கானிஸ்தானின் மீதும் ஏற்படுத்தப்பட்ட ஒரு பேரழிவுகரமான தாக்கத்தை பற்றி அவர் குறிப்பிடவில்லை.

இதேபோல், அமெரிக்க ஊடகங்களில் சேதம் மற்றும் அமெரிக்க படைகள் ஏற்படுத்திய பாரிய உயிர் இழப்பு பற்றி எந்த குறிப்பும் இல்லை. அதற்கு பதிலாக, காபூலில் அடிப்படைவாத மதக் குழு மீண்டும் ஆட்சிக்கு வருமானால், தலிபான்களின் காட்டுமிராண்டித்தனம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கு கடுமையான பின்னடைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து முதலைக் கண்ணீர் இருந்தது.

பைடெனின் முடிவை ஒரு மனிதாபிமான மற்றும் முற்போக்கான செயலாக சித்தரிப்பதற்கான மிகவும் இழிந்த முயற்சிகளில் ஒன்று, நியூ யோர்க் டைம்ஸில் சிஐஏ மற்றும் பென்டகனில் இருந்து தகவல் கசிவுகளைப் பெற நியமிக்கப்பட்ட பெறுநரான டேவிட் சாங்கரிடமிருந்து வந்தது. பைடென் குறைந்த பட்சம் துருப்புக்களை வெளியேற்றுவதாக அவர் எழுதினார். ஏனெனில் "அமெரிக்கா ஒரு மாற்றத்தக்க பொருளாதார மற்றும் சமூக நிகழ்ச்சி நிரலில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்," என்றும் பைடெனின் பார்வையில் "முன்னுரிமைகள் வறுமை மற்றும் இன ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடுவதும் இணைய வலையரிசை, குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் 5G தகவல்தொடர்புகளில் முதலீட்டை அதிகரிக்கவே பைடென் குறைந்த பட்சம் துருப்புக்களை வெளியேற்றுவதாக அவர் எழுதினார். ஏனெனில் “ஜனாதிபதி அஷ்ரப் ஹானியின் அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்க அவர் இராணுவத்தை பயன்படுத்த விரும்பவில்லை. "இறுதியில், காபூலைக் காப்பாற்றுவதை விட மிட்வெஸ்டில் கெனோஷா நகரின் எதிர்காலமே முக்கியமானது என்பதே அந்த நாளில் வென்ற வாதம்." என்று அவர் முடித்தார்.

எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வீணாக்கப்பட்ட வளங்கள் மிட்வெஸ்டில் உள்ள அழிக்கப்பட்ட தொழிற்துறை நகரங்களை மீண்டும் கட்டியெழுப்பப் போவதில்லை. ரஷ்யா மற்றும் சீனா போன்ற வாஷிங்டனின் முக்கிய இலக்குகளுக்கு எதிராக அவை மீண்டும் பயன்படுத்தப்படும்.

வாஷிங்டனில் உண்மையான மூலோபாய சிந்தனை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான அந்தோனி கோர்டெஸ்மன் பைடெனின் முறையான அறிவிப்புக்கு சற்று முன்பு மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தில் (CSIS) எழுதிய ஒரு அப்பட்டமான மற்றும் இரத்தவெறி பத்தியில் வெளிப்படுத்தப்பட்டது. தலிபான்கள் பலம் அடைந்து வருவதாகவும், காபூலில் ஆட்சி “நம்பிக்கையற்ற முறையில் பிளவுபட்டு, ஊழல் நிறைந்ததாகவும், பயனற்றதாகவும்” இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கோர்டெஸ்மன் இராணுவப் படைகளைத் திரும்பப் பெறுவது மட்டுமல்லாமல், அனைத்து மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தில் (CSIS) இராணுவ மற்றும் பொதுமக்கள் உதவிகளையும் வெட்டுவதை ஆதரித்தார். "இது ஒரு சோகமாக இருக்கும். ஆனால் ஒரு கருணைக் கொலைக்கான மூலோபாய மதிப்புமிக்க நேரம் வந்துவிட்டது," என்று அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் ஒரு அமெரிக்க தோல்வியாக கருதப்படும்போது, "முதல் நன்மை ஆப்கானிஸ்தானின் சுமையையும் மற்றும் எந்தவொரு தீவிரவாத நடவடிக்கைகளின் மையத்தையும் அதன் எல்லைகளுக்கு வெளியே சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கும் மாற்றுவதாகும்" என்று அவர் வாதிட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலையீட்டால் உருவாக்கப்பட்ட இடிபாடுகள் இப்போது அதன் அண்டை நாடுகளுக்கு ஒரு பிரச்சினையாக மாறும். இவை அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலக்குகளாக இருக்கின்றன.

Loading