ஜனாதிபதி இராஜபக்ஷ ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு மெய்சிலிர்க்கும் அச்சுறுத்தலை விடுத்தார். நுவரெலியா மாவட்டத்தில் வலபனையில் நடந்த “கிராமத்துடனான உரையாடல்” எனப்படும் கலந்துரையாடலின் போதே அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்தார். ஊடகங்கள், அரசாங்கத்திற்கு எதிராக ஒரு 'மாஃபியாவை' நடத்துவதாக அங்கு குற்றம் சாட்டிய அவர், 'இந்த மாஃபியாக்கள் அரசாங்கங்களையும் ஆட்சியாளர்களையும் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன. அது என்னுடன் முடியாது. அவர்களுக்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். வேண்டுமெனில் எப்படி கற்பிக்க வேண்டும் என்றும் எனக்குத் தெரியும்,' என்றார்.

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ (AP Photo/Eranga Jayawardena)

அவர் குறிப்பிட்ட ஊடக மாஃபியா எது என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், பிரதானமாக மகாராஜா அமைப்பால் நடத்தப்படும் எம்டிவி/சிரச தொலைக்காட்சி சேவைகளுக்கு சமிக்ஞை காட்டும் வகையில், 'நம் நாட்டில் அரசர்கள் இல்லை மகாராஜாக்களும் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவிலேயே இருந்தார்கள்” எனக் கூறினார். எவ்வாறாயினும், ஜனாதிபதியின் அச்சுறுத்தல், அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை விமர்சிக்கின்ற எந்தவொரு ஊடகத்தையும் பொறுத்துக்கொள்ளமாட்டேன் என்ற பாரதூரமான எச்சரிக்கையாக இருந்தது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு எதிராக இனவாத ஆத்திரமூட்டலைத் தூண்டும் தீய நோக்கத்துடன், “யுத்த காலத்தில் (மஹிந்த இராஜபகஷ) அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்ட ஒரு குழு இப்போது ஊடகங்களுக்குள் ஊடுருவிக்கொண்டு, மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றன” என்றும் அவர் கூறினார்.

முதலாளித்துவ ஊடகங்கள், நீர்த்துப் போன முறையில் இராஜபக்ஷ அரசாங்கத்தை விமர்சித்த போதிலும், அவை, ஆளும் வர்க்கத்தின் ஏதாவதொரு பிரிவை பிரதிநிதித்துவம் செய்கின்ற மற்றும் முதலாளித்துவ அரசின் தற்காப்பு வால்வுகளாக செயல்படுகின்ற, முதலாளித்துவ ஊடகங்களே அவையாகும்.

எவ்வாறாயினும், கொரோனா தொற்றுநோயால் மேலும் மேலும் ஆழமடைந்துள்ள உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியாக, அவருடைய அரசாங்கமும் மூழ்கியிருக்கும் கடுமையான பொருளாதார-அரசியல் நெருக்கடியின் மத்தியிலேயே ஜனாதிபதி இராஜபக்ஷ இவ்வாறு ஊடகங்கள் மீது பாய்கின்றார். அதே நேரத்தில், வளர்ந்து வரும் உலகளாவிய வர்க்கப் போராட்டம் மற்றும் சமூக வெடிப்பின் ஒரு பகுதியாக, இலங்கையிலும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய சமூகப் போராட்டங்கள் வெடிக்க உள்ளன.

வேலை மற்றும் ஊதிய வெட்டுக்கள், விலைவாசி உயர்வு, அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரச்சினைகள், கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் முழுமையான அலட்சியம் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு உட்பட தொழிலாளர் வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில், இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமாக வளர்ந்து வருகிறன்ற வெறுப்பும் கோபமும் அந்த போராட்டங்களுக்கான சூழ்நிலைகளை அமைத்தன.

ஊடகங்களுக்கு எதிராக ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்குப் பின்னால் இருப்பது, வளர்ந்து வரும் சமூகப் போராட்டங்களையும் ஜனநாயக உரிமைகளையும் கொடூரமாக அடக்குகின்ற, இராணுவ அடிப்படையிலான ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கு மாறுவதற்கான முயற்சியே ஆகும். ஊடகங்களுக்கு சட்டபூர்வமாக தண்டனை வழங்குவதற்காக, பத்திரிகை சபை சட்டத்தில் திருத்தம் செய்வது உட்பட, புதிய சட்டங்களையும் விதிகளையும் ஊடகங்களுக்கு விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி இராஜபக்ஷ, ஊடகங்களுக்கு 'படிப்பினைகளை எவ்வாறு கற்பிப்பது' என்பது பற்றி விரிவாகக் கூறவில்லை என்றாலும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் நிர்வாகத்தின் போது, அவர் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய காலத்தில், ஊடக நிறுவனங்களை தாக்கியது, தீ வைத்தது, ஊடகவியலாளர்களை கடத்திச் செல்வது மற்றும் கொலை செய்வது சம்பந்தமாக இழிவான சரித்திரத்தை கொண்டவராகும். “அவர்களுக்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும்,” “தேவையெனில் எவ்வாறு கற்பிப்பது என்றும் எனக்குத் தெரியும்,” என்று அவர் கூறியது, அரசாங்கத்தை விமர்சித்த ஊடகங்களுக்கு இந்த சரித்திரத்தை நினைவுபடுத்திக் கொடுப்தற்கே ஆகும். இந்த காலகட்டத்தில் அத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளான ஊடகங்கள் பின்வருமாறு:

* ஜனவரி 01, 2007 நுகேகொடவில், பிட கோட்டேயில் உள்ள “லங்கா” அச்சகம் தீக்கிரையாக்கப்பட்டது.

* நவம்பர் 21, 2007 ரத்மலானலையில் இருந்த “லீடர்” அச்சகம் எரிக்கப்பட்டது.

* டிசம்பர் 27, 2007 அமைச்சர் மேர்வின் சில்வா, தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்துக்குள் பாய்ந்து அதன் ஊழியர்களை அச்சுறுத்தினார்.

* ஜனவரி 06, 2009 பன்னிப்பிட்டியில் உள்ள “சிரச” நிறுவனத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தயமை.

* பிப்ரவரி 23, 2009 நுகேகொடவில் “மெக்ஸ்” மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

* மார்ச் 24, 2009 யாழ்ப்பாணத்தில் உள்ள “உதயன்” அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல்.

* ஜூன் 30, 2010 கொழும்பில் “சியத” நிறுவனம் எரிக்கப்பட்டது.

* ஜனவரி 31, 2011 மலம்பேயில் உள்ள “லங்கா இநியூஸ்” அலுவலகத்திற்கு தீ வைத்தமை.

* ஏப்ரல் 10, 2013: யாழ்ப்பாணத்தில் உள்ள “உதயன்” அச்சகம் தீக்கரையாக்கப்பட்டது.

ஜனவரி 8, 2009 அன்று, தி சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரான லசந்தா விக்ரமதுங்க, அத்திடிய பிரதேசத்தில் வைத்து, பட்டப் பகல் நேரத்தில் ஆயுதமேந்திய ஒரு குழுவினரால் படுகொலை செய்யப்பட்டமை, பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொட ஜனவரி 24, 2010 அன்று கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் 2008 மே 22 அன்று தி நேஷன் பத்திரிகையின் துணை ஆசிரியர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமையும் அந்த காலத்தில் நாட்டில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட பல பெரிய தாக்குதல்களில் சிலவாகும். ஒரு டஜன் பத்திரிகையாளர்கள் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம், இந்த சம்பவங்கள் குறித்து “விரிவான விசாரணைகளை” மேற்கொண்டு பொறுப்பானவர்களை தண்டிப்பதாக உறுதியளித்த போதிலும், அத்தகைய விசாரணைகள் அதன் கீழ் அல்லது அந்த சம்பவங்களை சுரண்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ் நடக்கவில்லை.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல், முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களால் உலகளவில் பின்பற்றப்படும் பிற்போக்கு கொள்கையாகும். ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றவியல் அலட்சியம் காரணமாக அமெரிக்கா முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவியது குறித்த துல்லியமான தரவுகளை கசியவிட்ட ரெபேக்கா ஜோன்சுக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதத்தில் பொலிஸ் பாய்ந்ததோடு, போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் மீது 175 குற்றச்சாட்டுகள் சுமத்தி அவர் மீது அமெரிக்கா வழக்குத் தொடர முயற்சித்தமை, ஊடகவியலாளர்களுக்கு எதிரான சர்வதேச அளவில் தொடங்கப்பட்ட தாக்குதலின் மோசமான வெளிப்பாடு ஆகும்.

இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தின் போது ஒரு எதிர்ப்பாளரின் மரணம் குறித்த செய்தியை வெளியிட்டமைக்காக தி கேரவன் சஞ்சிகையின் பல பத்திரிகையாளர்களும் மற்றும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அழைப்பு விடுத்த ஒரு ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக, சமூக ஆர்வலரான திஷா ரவி, இந்திய பொலிசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

Loading