தஞ்சம் கோருவோர் முறையான சட்ட பிரதிநிதித்துவம் இல்லாமல் இங்கிலாந்திலிருந்து அகற்றப்பட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புகலிடம் கோருவோரை சட்டபூர்வமற்றவர்களாக்குவதற்கும் அரக்கத்தனமானவர்களாக காட்டும் நீடித்த மற்றும் மிருகத்தனமான முயற்சியில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்ட இரு அடுக்கு புகலிட அமைப்புமுறை (two-tier asylum system) அடிப்படையில் இங்கிலாந்தில் தஞ்சம் கோருவதை சட்டவிரோதமாக்குகிறது. அவர்களின் பிரச்சாரத்தின் மற்றொரு மோசமான பகுதி புகலிடம் கோருவோரின் வழக்கை கேட்பதை பற்றிக்கூட கவலைப்படாமல் அவர்கள் துன்புறுத்தப்பட்ட இடத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

புகலிடம் கோருவோரின் வழக்குகள் சட்டரீதியாக பரிசீலிக்கப்படாமல் பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்படுவதாக LBC வானொலி வெளிப்படுத்தியது. புகலிடம் கோருவோரை அனுதாபத்துடன் கையாளுவதை ஒருவர் எதிர்பார்க்கும் முதல் இடம் வானொலி நிலையம் அல்ல. பிரெக்ஸிட் சார்பு குடியேற்ற எதிர்ப்பு வாய்வீச்சு நைஜல் ஃபாராஜ் சமீபத்தில் வரை அவர்களின் ஒளிபரப்பு பட்டியலில் ஒரு நட்சத்திரமாக இருந்தார். ஆனால், பூமியிலையே மிகவும் நம்பிக்கையிழந்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய சிலருக்கு சட்டபூர்வ உரிமைகளை மறுக்கும் ஒரு அரசாங்கத்தால் திட்டமிட்டமுறையில் சட்டத்தை மீறியதற்கான அதன் சான்றுகள், வேறு எந்த செய்தி ஊடகத்திலும் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை.

2020, ஆகஸ்ட் 8, 2020 சனிக்கிழமை, சிறிய படகுகளில் இருந்து இங்கிலாந்தின் துறைமுக நகரமான டோவரில் குடியேறியவர்கள் என்று கருதப்படும் ஒரு குழுவை இங்கிலாந்து எல்லைப் படை கப்பல் கொண்டு வருகிறது.(AP Photo/Kirsty Wigglesworth)

LBC இனால் காட்டப்பட்ட தகவல் சுதந்திர சட்டத்தின் கீழான புள்ளிவிவரங்கள், 2020 கோடையில் விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒப்பந்த விமானங்களில் உள்துறை அலுவலகத்தால் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு வழக்கறிஞரை கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. வெளியேற்றப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு போதுமான சட்ட பிரதிநிதித்துவத்திற்கான அணுகல் கிடைக்கவில்லை அல்லது சட்டபூர்வ பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியேற்றப்பட்ட 71 பேரில் 37 பேருக்கு ஒரு வழக்கறிஞர் கூட பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

2020 கோடையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிட்டன் வெளியேறும் என்ற எதிர்பார்ப்பில், உள்துறை அலுவலகம் நாடுகடத்தப்படுவதையும் வெளியேற்றுவதையும் துரிதப்படுத்தத் தொடங்கியது. நாடுகடத்தப்படுதல் (தண்டனை பெற்ற குற்றவாளிகளை பெரிதும் உள்ளடக்கியது) மற்றும் "நிர்வாக" நீக்குதல் எனப்படும் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோர் ஆகியோரை வேறுபடுத்தி காண்பதில் LBC சிக்கலுக்குள்ளானது. LBC பார்த்த புள்ளிவிவரங்கள் பிந்தைய வகையினரை குறிக்கின்றன. டிசம்பர் மாதம் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் வரை இந்த வெளியேற்றும் செயற்பாடுகள் விரைவாக தொடர்ந்தன.

"மரியாதைக்குரிய" புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோர் நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அகற்றப்பட்டவர்கள் மற்றும் குற்றவியல் பதிவு காரணமாக நாடுகடத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடையில் LBC காட்டிய வேறுபாடு தவறானது. இந்த நாடுகடத்தப்பட்டவர்கள் அநேகமாக ஒரே மாதிரியானவர்களாகும். இங்கிலாந்தில் இருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டபூர்வ பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்த பத்திரிகையாளரும் வழக்கறிஞருமான மோனீர் அஹ்மதி LBC யிடம் பின்வருமாறு கூறினார், "எனக்கு வழக்குகள் நிராகரிக்கப்பட்ட நண்பர்கள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஒரு வழக்கறிஞருடன் பேச வாய்ப்பில்லை. உங்களிடம் ஒரு வழக்கறிஞர் இல்லையென்றால், உங்களுக்கு உங்கள் வழக்கை எவ்வாறு முன்வைப்பது என்று தெரியாது. புகலிடம் கோருவோருக்கு தங்கள் வழக்கை ஆதரிக்க என்ன வாதங்களை முன்வைக்க முடியும் என்று தெரியாது. அவர்களிடம் ஆவணங்களும் ஆதாரங்களும் இருக்கலாம், ஆனால் அதை எவ்வாறு முன்வைப்பது என்று அவர்களுக்குத் தெரியாது."

இதற்கு பதிலளிக்கும் விதமாக, உள்துறை அலுவலகம் மனித உரிமை மீறலை புறக்கணித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் "இங்கிலாந்தில் இருக்க உரிமை இல்லாதவர்களை மட்டுமே நாங்கள் வெளியேற்றுகின்றோம். அனைத்து உரிமைகோருபவர்களும் தஞ்சம் கோருவதைக் கருத்தில் கொண்டு சட்டபூர்வமாக பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பு உள்ளது மற்றும் சட்ட உதவி நிறுவனம் தேவைப்படுபவர்களுக்கு சட்ட உதவி நிதி வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. தற்போதைய அமைப்புமுறை உடைந்துவிட்டது. எங்கள் புதிய குடிவரவு திட்டம் இந்த அமைப்பின் துஷ்பிரயோகத்தை நிவர்த்தி செய்து மற்றும் குறிப்பிடத்தக்க நீதித்துறை வளங்களை வீணாக்குவதை நிறுத்த உதவும்.”

வெளியற்றுவதற்கான அதன் மிருகத்தனமான கொள்கையை கடந்த மாதம் பின்வருமாறு அறிவித்ததன் மூலம் நியாயப்படுத்த அரசாங்கம் முயன்றது. அதாவது வெளியேற்றுவதை தவிர்ப்பதற்கான கடைசி நிமிட முயற்சிகளில் 10 இல் 8 நிராகரிக்கப்படுவதாக தங்கள் சொந்த ஆராய்ச்சி பரிந்துரைத்தது என்றது. உண்மையில், கடைசி நிமிட 25 சதவிகிதம், அரசாங்கத்தின் காமாலை கண்களுக்கு கூட நியாயமானவை என்பதை அவர்களின் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. குடியேற்ற கைதிகளுக்கு சட்ட உதவி வழங்கும் Legal Aid Agency இன் உதவியுடனான தடுப்புக்காவல் ஆலோசனை திட்டம் (Detention Duty Advice Scheme) தற்போது Detention Action அமைப்பு உட்பட பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து சட்டரீதியான சவாலை எதிர்கொள்கிறது.

புகலிடம் கோருவோர் சார்பாக வாதிடும் நிறுவனங்கள், LBC க்கு சட்டபூர்வமான புகலிடம் கோருவோர் அல்லது மனிதக்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வழக்குகளை எடுக்கத் தவறிய பல நிகழ்வுகளைக் கண்டதாகக் கூறினர். இந்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட சில சட்ட நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையை மட்டுமே எடுத்துள்ளன என்பதற்கான சான்றுகள் இருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

Detention Action சார்பில் பேசிய இயக்குனர் பெல்லா சாங்கி, "அமைப்புமுறை சீர்குலைந்துள்ளது. இது நோக்கத்திற்கு பொருத்தமற்றதாக இருக்கின்றது. மக்களுக்கு வழக்கறிஞர்கள் கிடைப்பதில்லை. சில நேரங்களில் வழங்கப்படும் சட்ட ஆலோசனை தவறானது. நாங்கள் இந்த கவலைகளை Legal Aid Agency இடமும், சமீபத்தில் அரசாங்கத்திடமும் தொடர்ந்து எழுப்பினோம். நாங்கள் இப்போது இது தொடர்பான வழக்குகளைத் தொடங்கவுள்ளோம்."

LBC இதனை அம்பலப்படுத்திய சில நாட்களுக்குப் பின்னர், உள்நாட்டு அமைச்சின் கட்டாய-வெளியேற்றல் திட்டத்தின் மிருகத்தனம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஒரு தடுப்புக்காவல் நிலையத்தில் மற்றொரு புகலிடம் கோரியவரின் மரணம் தொடர்பான விசாரணையில் சாட்சியமளிப்பதற்கு முன்னர் தனது வழக்கில் தோல்வியுற்ற புகலிடக் கோரிக்கையாளரை வெளியேற்ற முயற்சிப்பதில் உள்துறை செயலர் பிரீதி பட்டேல் சட்டவிரோதமாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.

செப்டம்பர் 17, 2019 அன்று நைஜீரியாவுக்கு விமானத்தில் அஹ்மத் லாவாவை அனுப்ப உள்துறை அமைச்சகம் விரும்பியதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது ஹார்மண்ட்ஸ்வொர்த் குடியேற்ற தடுப்பு மையத்தில் (Harmondsworth immigration detention centre) அடுத்த அறையில் வசிக்கும் நண்பரான ஆஸ்கார் ஒகுரிம் இறந்த ஐந்து நாட்களுக்கு உள்ளேயாகும்.

இங்கிலாந்தில் இருந்து அவர் வெளியேற்றப்படுவது ஒகுரிமின் மரணம் தொடர்பான விசாரணையில் சாட்சியங்களை வழங்குவதைத் தடுக்கும் என்று லாவா அறிந்திருந்தார். லாவாவின் சாட்சியத்தை கேட்டபின், ஒரு மரணவிசாரணை அதிகாரி ஒகுரிமின் மரணம் (மூளை இரத்தக்கசிவிலிருந்து) “இயற்கைக்கு மாறானது” என்று கண்டறிந்தார். இது தடுப்பு மையத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் நிர்வாகத்தின் “பல தோல்விகளால்” ஓரளவுக்கு இடம்பெற்றது என்று அறிவித்தார்.

ஒகூரிமின் மரணம் தொடர்பான விசாரணையை பற்றிய அவரது சாட்சியை பாதுகாக்க "நியாயமான நடவடிக்கைகளை" எடுக்காமல் லாலலை விமானத்தில் நிறுத்த முயன்றதன் மூலம் பட்டேல் சட்டவிரோதமாக நடந்து கொண்டார் என்று நீதிபதி லேன் தீர்ப்பளித்தார். நீதிபதி ஒரு உள்துறை அமைச்சின் கொள்கை ஆவணமான “குடிவரவு தடுப்புக்காவலில் மரணம்” சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தார். ஏனெனில் வாழ்க்கையை பாதுகாப்பதற்கான உரிமையை உள்ளடக்கிய மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மாநாட்டின் 2 வது பிரிவின் கீழ், இது கைதிகளின் உரிமைகளை மீறும் அபாயத்தை கொண்டுள்ளது. மேலும், காவலில் இடம்பெற்ற மரணம் தொடர்பான ஒரு சாட்சியின் வழக்கைக் கையாள அதற்கு பொறுப்பானவர்களுக்கு போதுமான வழிமுறைகளை வழங்கத் தவறியதன் மூலம் உள்துறை அமைச்சகம் சட்டத்தை மீறியதாக லேன் கூறினார்.

நீதிபதி லேன் அவரது தீர்ப்பில், லாவால் விசாரணையின்போது அவர் அலறல் மற்றும் கூச்சல் கேட்டதாகவும், அவர் இறந்து கிடப்பதற்கு முந்தைய இரவு 11 மணியளவில் ஒகுரிமின் அறையிலிருந்து அபாய மணியை அடிக்க முயற்சித்ததாகவும் சாட்சியம் அளித்ததை விளக்கினார். ஒகுரிம் மறுநாள் காலையில் அவரது மரணப்போராட்டம் முடிந்து இறந்து கிடந்தது மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக ஒரு நீதிபதி லாவால் நைஜீரியாவுக்கு திரும்பி அனுப்பப்படுவதை தடுக்க அனுப்பதிட்டமிட்ட நாளில் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்தார். பின்னர் இந்த வழக்கின் மரண விசாரணை அதிகாரி, இணைய வீடியோ இணைப்பு மூலம் லாவாலால் போதுமான அளவு ஆதாரங்களை வழங்க முடியவில்லை என்று கூறினார்.

லாவாலைப் பிரதிநிதித்துவப்படுத்திய குடிவரவு வழக்கறிஞரான டங்கன் லூயிஸ் சொலிசிட்டர் நிறுவனத்தின் ஜேமி பெல், பைனான்சியல் டைம்ஸ் இடம், “வெளியேற்றங்களை செயல்படுத்தும்போது உள்துறை செயலரின் திமிர்பிடித்த மனப்பான்மையை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகின்றது” என்றார்.

பெல் தொடர்ந்தார் “தனது தடுப்புக்காவல் நிலையத்திற்குள் ஒரு துன்பகரமான மரணம் இருந்தபோதிலும், சாட்சி வழங்க முன்வர விரும்பும் எவரையும் புறக்கணித்து, சாத்தியமான சாட்சியை ஒப்பந்த விமானம் மூலம் வெளியேற்றுவதற்கான தனது திட்டத்தை நிறைவேற்ற உள்துறை செயலாளர் தயங்கவில்லை.” நீதித்துறை மறுஆய்வு மற்றும் குடியேற்ற தடுப்புக்காவலில் தகுந்த சட்ட ஆலோசனையை அணுகுவதற்கான "முக்கியத்துவத்தை" இந்த வழக்கு நிரூபிக்கிறது என்று பெல் கூறினார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோர் ஆகியோரை பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கம் ஒரு உறுதியான போராட்டத்தை நடத்த வேண்டும். ஏகாதிபத்திய போர்களாலும் மற்றும் நாடுகடந்த நிறுவனங்களின் மிருகத்தனமான சுரண்டல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மிகக் கடுமையான குற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டு, போர்க்கப்பல்களை பயன்படுத்தி ஐரோப்பாவின் அரசாங்கங்களால் கூட்டாக வேட்டையாடப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்களை கடலில் இறந்துபோக விடப்பட்டு மற்றும் வதை முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டு நாடுகடத்தப்படுகின்றனர். சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து நாடுகடத்தல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அகதிகளை வரவேற்க வேண்டும் என்றும் குடியுரிமைக்கான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்றும் கோருகிறது.

Loading