இலங்கை அமைச்சர் ஜனாதிபதி இராஜபக்ஷவை ஹிட்லர் போல் நடந்து கொள்ள வற்புறுத்துகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஏப்ரல் 12 அன்று கொழும்பு செய்தியாளர் கூட்டத்தில், இலங்கை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர், இந்த அசாதாரணமான கருத்தைத் தெரிவித்தார். 'பொது மக்கள், அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுவதற்கு காரணம், கோடாபய இராபக்ஷ ஜனாதிபதியானால் ஓரளவுக்கு அவர் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து விடயங்களை செய்துமுடிப்பார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்,” என அவர் பிரகடனம் செய்தார்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக உரையாற்றும் காணொலி காட்சி (YouTube)

பௌத்த துறவிகளும், இராஜபக்ஷ ஹிட்லர் போல் நடப்பதையே விரும்புகின்றனர் என்று அமுனுகம கூறினார். 'சில பகுதியினர் செயற்படும் விதத்தின் படி, அவர் ஒரு ஹிட்லர் ஆவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால், அவர் ஹிட்லர் ஆவார். யாரும் அவரை குறை கூற மாட்டார்கள். நடவடிக்கைகள் நன்று இடம்பெறும்.'

குறிப்பிடத்தக்க வகையில் இராஜாங்க அமைச்சரின் இந்த கபடத்தனமான கருத்திலிருந்து இராஜபக்ஷ தன்னை தூர விலக்கிக்கொள்ளவில்லை. அரசாங்க பேச்சாளர் கெஹெலியே ரம்புக்வெல்ல, அது வெறும் அமுனுகமவின் 'சொந்த கருத்து,' அரசாங்கத்தின் 'ஒருமித்த நிலைப்பாடு அல்ல' என்று கூறி, அதை பூசிமெழுக முற்பட்டார்,.

பாசிச சர்வாதிகாரி, அடொல்ப் ஹிட்லர், 1933 இல் ஆழமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் மத்தியில் ஜேர்மன் ஏகாதிபதியத்தால் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டார். சோவியத் ஸ்டாலினிச ஆட்சியின் அழிவுகரமான கொள்கைகளால் ஆட்சிக்கு வந்த நாஜிவாதிகள், தொழிலாள வர்க்கத்தை நசுக்கி, அதன் இயக்கங்களை நொறுக்கி, 6 மில்லியன் யூதர்களை மற்றும் இதர சிறுபான்மையினரை கொத்து கொத்தாக கொன்றதுடன், ஜேர்மனி மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் இடையே இரண்டாம் உலகப் போருக்கு வழி வகுத்தனர்.

இலங்கை ஒரு ஏகாதிபத்திய நாடல்ல. எவ்வாறெனினும், இராஜபக்ஷவை ஹிட்லராக மாறும் படி வற்புறுத்திய அமுனுகமவின் கருத்துக்கள், பூகோள பெருந்தொற்றால் தீவிரமடைந்த அரசியல் நெருக்கடி இன்னும் ஆழமடைந்து வரும் நிலைமையில், ஈவிரக்கமற்ற ஜனாதிபதி சர்வாதிகாரத்துக்காக ஆளும் தட்டின் பகுதிகள் முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் பாகம் ஆகும்.

ஒரு சர்வாதிகாரி போல் நடக்கவே 6.9 மில்லியன் மக்கள் இராஜபக்ஷவுக்கு வாக்களித்தனர் என்ற அமுனுகமவின் கூற்று, முழுக்க முழுக்க பொய் ஆகும். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்திய சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவின் 'தேசிய ஐக்கிய' அரசாங்கத்திற்கு எதிராக, எந்த ஒரு மாற்றீடும் இல்லாத பட்சத்தில், தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கவே மக்கள் இராஜபக்ஷவுக்கு வாக்களித்தனர்.

இந்த எதிர்ப்பினை சுரண்டிக்கொண்ட இராஜபக்ஷவும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதாக பொய் வாக்குறுதி கொடுத்தனர். அதே மூச்சோடு, அவர் ஒரு 'ஸ்திரமான மற்றும் பலமான' அரசாங்கத்தை அமைப்பதாகவும் ஆளும் வர்க்கத்துக்கு வாக்குறுதி அளித்தார். அவர், தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாதத்தை கிளறிவிட்டு, சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம், சிங்கள அதிதீவிரவாத குழுக்கள், பௌத்த பிக்குகள் மற்றும் இராணுவத்தின் ஒரு பிரிவினரையும் திரட்டிக்கொண்டார்.

இந்த அதிதீவிர வலதுசாரி பேரினவாத தட்டினருக்காகவே அமுனுகம பேசுகிறார். 2018 ஜூனில் இராஜபக்ஷவின் 69 ஆவது பிறநத நாள் விழாவின் போது, ஒரு முன்னணி பௌத்த பிரிவின் தலைமை பிக்குவான, வென்டருவே உபாலி, 'அவர்கள் உங்களை ஹிட்லர் என்று கூறினால், ஹிட்லராக மாறி தேசத்தை கட்டியெழுப்புங்கள்,' என அவருக்கு அறிவுரை கூறியிருந்தார். இராஜபக்ஷ, வென்டருவே உபாலியை கண்டனம் செய்வதற்கு பதிலாக, அவர கருத்தை விமர்சித்தவரை கண்டித்தார். இராஜக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன், அதிகாரத்தின் பிரதான பதவிகளில் முன்னாள் மற்றும் இன்னாள் இராணுவ அதிகாரிகளை அமர்த்தினார். ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெருந்தொற்றை சாக்காக பயன்படுத்திக்கொண்டு, இரண்டு டஜனுக்கும் அதிகமான அதிகாரிகளை உயர் பதவிகளில் அமர்த்தி, இராணுவமயமாக்கலை துரிதப்படுத்தியுள்ளார்.

கடந்த நவம்பரில், பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பின் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு மேலும் எதேச்சதிகார அதிகாரங்கள் வழங்கப்பட்டன. சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளை நியமிக்க, அமைச்சரவையை கலைக்க மற்றும் அவசர சட்டங்களை நிறைவேற்றவும் இதன் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்கள் 1978 இல் கொண்டு வரப்பட்ட ஜனநாயக-விரோத அரசியல் அமைப்பையும் தாண்டிச் செல்கிறது.

ஆளும் வர்க்கத்தின் நெருக்கடி குவிந்துவருகின்ற நிலைமையிலேயே இத்தகைய சர்வாதிகார முறைகளுக்கான உந்துதல் ஏற்படுகிறது. சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அரசியல் பத்தி எழுத்தாளர் ஏப்ரல் 11 அன்று எழுதியதில், 'அரசாங்கம் இப்போது ஆட்சிக்கு வந்து 17 மாதங்கள் ஆகி, ஒரு நெருக்கடியில் இருந்து மற்றோரு நெருக்கடிக்கு அழிவுகரமாக செல்கிறது... பொருளாதாரத்துக்கு கொவிட்-19 வைரஸால் பெரும் அடி விழுந்துள்ளது. பெரிய மற்றும சிறிய வணிகங்கள் அடிபட்டு, பிரமாண்டமான வேலை இழப்புக்களை தூண்டியுள்ளது. பெரும் வணிகங்கள் நிவாரண நிதிகளை பெற்றுள்ளன, மற்றவைகளுக்கு இல்லை...'

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தடுப்பூசி பற்றாக்குறை, ஊழல் மற்றும் சுற்றுப்புற சீரழிவு ஆகியவைக்கு எதிராக, அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு வளர்ச்சியடைந்துள்ளதை இந்த கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது. அரசாங்கத்தின் நெருக்கடி தீவிரமடைவதற்கு முக்கிய காரணமான, கொவிட்-19 வைரஸ் ஏற்படுத்தியுள்ள பேரழிவுக்கு மத்தியில் பூகோள தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியின் பாகமாக தலைதூக்கி வரும் வர்க்கப் போராட்டங்கள் பற்றி அந்த கட்டுரை ஒன்றும் குறிப்பிடவில்லை.

2018 இல் இருந்து, முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், தனது சிக்கன நடவடிக்கைக்கு எதிராக வளர்ந்து வந்த தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு முகம் கொடுத்தது. தற்போது, தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டங்கள் மீளெழுகின்றன. ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் கல்வி, நீர் வழங்கல், மின்சாரம் மற்றும் வங்கி ஊழியர்கள் உள்ளடங்களாக, பல ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள், சம்பள அதிகரிப்பு மற்றும் சிறந்த நிலைமைகளை கோரி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் அல்லது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பிரதிபலித்த இராஜபக்ஷ ஆட்சி, தொழிலாள வர்க்க எதிர்ப்பினை பிளவுபடுத்த, தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகிறது. வெள்ளியன்று, புலி 'பயங்கரவாதத்தை புதுப்பிக்க' முயல்கின்றனர் என்று குற்றம் சாட்டி பொலிசார் ஐந்து தமிழ் இளைஞர்களை கைது செய்தனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டனர். கடுமையான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பல இஸ்லாமிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராஜபக்ஷ, அரசியல் பழிவாங்கல் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அவை நிறைவேற்றப்பட்டால், பிரதானமாக ஆளும் கட்சியை சேர்ந்த குற்றவாளிகளாக காணப்பட்ட அல்லது நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் நபர்கள் விடுதலை செய்யப்படுவர். அதே வேளை, அரசியல் எதிரிகள் உட்பட, பாதிக்கப்பட்டவர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள், குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வர்.

கடந்த வாரம் நீதி அமைச்சர், தேசிய பாதுகாப்பு, பொது மக்களின் சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, அரச நிதி மற்றும் ஏனைய நாடுகளுடனான உறவுகள் உட்பட, 'போலி செய்திகளை' தடுக்க, ஒரு பாரதூரமான தணிக்கை சட்டத்துக்கு அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்கப் போவதாக அருன பத்திரிகையிடம் கூறியுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இழக்கச் செய்வதை இலக்காகக் கொண்டது என கூறப்படும் “போலிச் செய்திகளைத்” தடை செய்வதும் இதில் அடங்கும்.

அமுனுகமவின் கருத்துக்கள், எதிர்ப்பை, குறிப்பாக தொழிலாள வரக்கத்தை நசுக்குவற்கான சர்வாதிகார நடவடிக்கைகளை ஆளும் வர்க்கம் திட்டமிட்டு அதிகரித்து வருகின்றது என்பதற்கான எச்சரிக்கை ஆகும். இது ஜேர்மனியில் பாசிச ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) மற்றும் நவ-பாசிச குழுக்கள் உட்பட சர்வதேச ரீதியில் அதிதீவிர-வலதுசாரி சக்திகளை முன்னிலைப்படுத்துவதன் பாகமாகும். முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பதை தடுக்கும் முயற்சியில், ஜனவரி 6 அன்று ஒரு பாசிச சதிப்புரட்சியை தூண்டிவிட்டார்.

Loading