இங்கிலாந்து / பிரெஞ்சு மீன்பிடி உரிமை மீதான மோதலில் துப்பாக்கி படகுகள் ஜேர்சிக்கு அனுப்பப்பட்டன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்சி (Jersey) தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் மீன்பிடி உரிமைகள் தொடர்பாக இங்கிலாந்து மற்றும் பிரான்சுக்கு இடையில் ஒரு பேரினவாத இழிவான காட்சி இந்த வாரம் வெளிப்பட்டது.

60 பிரெஞ்சு மீன்பிடிக் கப்பல்கள் வியாழக்கிழமை ஆங்கில கால்வாயின் தீவுகளில் மிகப்பெரியதும் மற்றும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஜேர்சி தீவின் செயின்ட் ஹெலியர் (St Hellier) துறைமுகத்தை பல மணி நேரம் முற்றுகையிட்டன. இதனை இரண்டு ரோயல் கடற்படை துப்பாக்கிப் படகுகள் மற்றும் இரண்டு பிரெஞ்சு இராணுவக் கப்பல்கள் மேற்பார்வையிட்டன.

பிரெஞ்சு நோர்மண்டி கடற்கரையிலிருந்து 14 மைல் தொலைவிலும், இங்கிலாந்திற்கு தெற்கே 85 மைல் தொலைவிலும் அமைந்துள்ள ஜேர்சி தீவு, சேனல் தீவுகளில் மிகப்பெரியது. 1066 இல் படையெடுப்பாளர் வில்லியம் கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்து/ பிரிட்டிஷ் கிரீடத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஜோன் மன்னன் அத்தீவுகள் மீதான தனது கோரிக்கையை நோர்மண்டிக்கு கோமகனின் ஆட்சியிடம் 1259 இல் சரணடையும்வரை இவ்வாறு இருந்தது.

ஜேர்சி அனுப்பப்படுவதற்கு முன்னர், ஏப்ரல் 27, 2021 அன்று HMS Tamar (source: Wikimedia Commons-Forces News)

இந்த தீவு உத்தியோகபூர்வமாக இங்கிலாந்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. ஆனால் ஒரு சுய ஆட்சிபுரியும் இங்கிலாந்தின் முடியாட்சி சார்பான நிலையை கொண்டிருந்தது. அதன் பாதுகாப்பு மட்டுமே இங்கிலாந்து பொறுப்பாகும். மற்ற ஆங்கில கால்வாயின் தீவுகளைப் போலவே, ஜேர்சியும் அதன் வினோதமான அரசியலமைப்பு நிலையை ஒரு வரி சொர்க்க புகலிடமாகப் பயன்படுத்துகிறது. அங்கு இயல்புநிலை பெருநிறுவன வரிவிகிதம் பூஜ்ஜிய சதவிதம் மற்றும் அனைவருக்குமான 20 சதவீத வருமான வரி விகிதம் காணப்படுகின்றது. இந்த பெருநிறுவன வரிவிகிதம் 2020 ஆம் ஆண்டில் தீவுக்கு "சொர்க்க மதிப்பெண்" 100 க்கு 100இனை கொடுத்தது. இது வரி ஏய்ப்பில் மோசமான நாடுகளில் உலகின் எட்டாவது இடத்தில் உள்ளது.

பிரெக்ஸிட்டை தொடர்ந்து, ஜேர்சி உட்பட இங்கிலாந்து கடற்கரையிலிருந்து 12 மைல்களுக்குள் மீன் பிடிக்க விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய (EU) மீன்பிடி படகுகள் உரிமம் பெற வேண்டும். மேலும் அவை முன்பு அந்த நீர்ப்பரப்பில் மீன் பிடித்தன என்பதை நிரூபிக்க வேண்டும் மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு 12 மாத காலத்திற்குள் அது குறைந்தது 10 நாட்களுக்கு பிடித்திருக்கவேண்டும். இதற்கு விண்ணப்பித்த 41 பெரிய பிரெஞ்சு படகுகளில் 17 உரிமங்கள் பெறப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு தேவையான விவரங்களை வழங்கவில்லை என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இங்கிலாந்து கன்சர்வேடிவ் அரசாங்க சுற்றுச்சூழல் செயலாளர் ஜோர்ஜ் யூஸ்டிஸ் ஐரோப்பிய ஆணைக்குழுவை குற்றம்சாட்டி மற்றும் "அவர்கள் அந்த தரவுகளை வழங்கியவுடன்" உரிமங்கள் வழங்கப்படும் என்றார்.

உரிமங்களைப் பெற்றவர்கள், எவ்வாறு மீன் பிடிக்க அனுமதிப்பது என்பதற்கு மேலதிக நிபந்தனைகளை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியுள்ளது என்றும், இது அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினரை வணிகத்திலிருந்து வெளியேற்றிவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பிரெஞ்சு மீன்வள அமைச்சகம் இந்த நிபந்தனைகளை "பூஜ்ய மற்றும் செல்லுபடியற்றதாக" கருதுவதாகக் கூறியது. "ஐக்கிய இராச்சியம் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த விரும்பினால், அது ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்தார். ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் விவியன் லூனெலா இங்கிலாந்திற்கு "நாங்கள் சமீபத்தில் ஒப்புக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் / இங்கிலாந்து வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விதிகள் மதிக்கப்படவில்லை" என்று சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறினார்.

கடந்த மாதத்தின் பிற்பகுதியில், பிரெஞ்சு மீனவர்கள் இங்கிலாந்தில் மீன் ஏற்றப்பட்ட பாரவூர்திகள் பிரான்சில் இறக்கப்பட்டு, கடல் உணவு, சந்தைகளை அடைவதைத் தடுப்பதை எரியும் தடுப்புகளை அமைத்ததன் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜேர்சி விநியோகங்களைப் பெறுவதைத் தடுக்க "முற்றுகையிடுவதாக" அவர்கள் அச்சுறுத்தினர். Commodore Goodwillஎன்ற சரக்குக் கப்பல் வெளியேற அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் குறுகிய காலத்திற்கு துறைமுகத்தில் சிக்கியது.

இந்த நிலைமைக்கு பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் மோதல்நிலைமையை அதிகரிப்பதன் மூலம் பதிலளித்தன. இது அவர்களின் தேசியவாத அடையாளங்களை உறுதிப்படுத்த ஒரு மேடையாக பயன்படுத்தப்பட்டது. பிரிட்டன், கனரக ஆயுதங்களைக் கொண்ட HMS Severn மற்றும் HMS Tamar சம்பவ இடத்திற்கு அனுப்பியது. பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் “கடல்சார் பாதுகாப்பு ரோந்துப் பணிகளை நடத்துவதற்காக” இவை நிலைநிறுத்தப்படுவதாகக் கூறினார். பிரெஞ்சு கடற்படையின் "பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க" பிரான்ஸ் ஒரு "ரோந்து பணிக்கு" Athos மற்றும் Themis ஆகியவற்றை அனுப்பியது.

டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்று காலை ஜேர்சி அதிகாரிகளுடன் "ஜேர்சிக்கு தனது தெளிவான ஆதரவை" மீண்டும் வலியுறுத்தினார். ரியர் அட்மிரல் கிறிஸ் பாரி டெய்லி மெயிலிடம் பின்வருமாறு கூறினார், “அவர்கள் நோர்மண்டி அல்லது பிரிட்டானியில் ஏதாவது பிடிக்கவில்லை என்றால் அவர்கள் எப்போதும் சென்று வேறுஎதையோ அல்லது வேறுயாரையோ முற்றுகையிடுகிறார்கள். ரோயல் கடற்படையை, மக்களை தடுப்பதில் மிகவும் சிறப்பான குழு என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்”.

ரோயல் கடற்படையின் முன்னாள் தலைவர் லார்ட் வெஸ்ட், டைம்ஸ் வானொலியிடம், “அவர்கள் ஓரிரு மீன்பிடி படகுகளை நகர்த்த விரும்பினால், நீங்கள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து உள்ளூர் போலீசாரிடம் இது தொடர்பாக கையாள்வதற்கு ஒப்படைக்கப்படுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. "நீங்கள் சிலரைக் கைதுசெய்த பின்னர், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இது பொதுவாக மீனவர்களை மிகவும் கவனமாக இருக்க வைக்கும்."

இந்த இராணுவவாத காட்சிக்கு தொழிற் கட்சி ஆதரவளித்தது. நிழல் பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி கருத்து தெரிவிக்கையில், “ஜேர்சி மீதான அச்சுறுத்தல்கள் முற்றிலும் நியாயமற்றவை. முக்கியமான சூழ்நிலைகளில் கடற்படையின் அனுபவம் குடியிருப்பாளர்களுக்கு உறுதியளிக்கவும் பிரிட்டனின் பரந்த தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் உதவும்” என்றார்.

பிரான்சில், ஐரோப்பா மந்திரி கிளெமொன்ட் போன் (Clement Beaune), “இந்த தந்திரசூழ்ச்சிகளால் நாங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக மாட்டோம்” என்று அறிவித்துள்ளார். நோர்மண்டி-பிரிட்டானி கடல் பிராந்திய அதிகாரத்தின் தலைவர் டேவிட் செல்லாம் (David Sellam), “நாங்கள் போருக்கு தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால் நாங்கள் ஜேர்சியை முழந்தாளிட செய்யமுடியும்” என அச்சுறுத்தினார்.

இந்த வார தொடக்கத்தில், கடல்சார் மந்திரி அன்னிக் ஜிரார்டன் (Annick Girardin) பிரெஞ்சு நாடாளுமன்றத்தில், “பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் பதிலடி நடவடிக்கைகள் உள்ளன. சரி, அவற்றைப் பயன்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஜேர்சியை பொறுத்தவரை, நீருக்கடியில் கேபிள்களால் மின்சாரம் வழங்கப்படுவதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். நாங்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தால் அது வருந்தத்தக்கதாக இருந்தாலும், நாங்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தால் அதைச் செய்வோம்” என்றார்.

ஜேர்சியின் 95 சதவீத மின்சாரம் கடலுக்கு கீழான கம்பிகள் வழியாக பிரான்சால் வழங்கப்படுகிறது.

இது இரண்டாம் உலகப் போரின்போது, ஆங்கில கால்வாய் தீவுகளின் நாஜி ஆக்கிரமிப்புடன், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குள் வெறித்தனமான ஒப்பீடுகளைத் தூண்டியது. "நாஜிக்கள் குறைந்த பட்சம் விளக்குகளை எரியவிட்டிருந்தார்கள்" என டெலிகிராப் பத்திரிகை ஒரு அரசாங்க ஆதாரத்தை பொழிப்புரை செய்து கூச்சலிட்டது. அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக பிரான்சுடனான இங்கிலாந்தின் எரிசக்தி இணைப்புகளை மறுஆய்வு செய்வதாக வைட்ஹால் கூறுகிறது. அதற்கு பதிலாக நெதர்லாந்து வழியாக கடலுக்கு மேலான கம்பிகள் பற்றி கவனத்தை திருப்பியது.

பிரிட்டிஷ் ஊடகங்கள் கால்வாயின் இரு பக்கங்களிலிருந்தும் வெளிவரும் தேசியவாத அழுக்கை வெளிப்படுத்திக்காட்டின. "நாங்கள் போருக்குத் தயாராக இருக்கிறோம்", "இது எங்கள் புதிய டிராஃபல்கார்" (அக்டோபர் 21, 1805 இல் நடந்த டிராஃபல்கார் போர் மூன்றாம் கூட்டணிப் போரின்போது பிரிட்டிஷ் மற்றும் அதனுடன் இணைந்த பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் இடையே கேப் டிராஃபல்காரில் நடந்த கடற்படைப் போராகும்) மற்றும் "இது ஒரு படையெடுப்பு" என்று இருபுறமும் உள்ள மீனவர்களை மேற்கோள் காட்டி டெய்லி மெயில் தலைப்புச் செய்திகளை வெளியிட்டது. நேற்றைய முதல் பக்கத்தில் “போரிஸ் துப்பாக்கிப் படகுகளை ஜேர்சிக்கு அனுப்புகிறார்” என்பதை வெளியிடுவதில் டெய்லி எக்ஸ்பிரஸ் மற்றும் டெய்லி மிரர் இணைந்தன.

பிரெக்ஸைட்வாத கன்சர்வேடிவ் வட்டாரங்களில் ஒரு முன்னணி நபரான லார்ட் டானியல் ஹன்னன், மெயிலில் தனது கட்டுரைகளில் இரண்டு முனைகளில் ஒரு போரைத் தள்ளினார். “இமானுவல் மக்ரோன், புதிய நெப்போலியன்? இல்லை, அவர் ஒரு மலிவுவிலை புட்டின்” என எழுதினார்.

இங்கிலாந்து சுதந்திரக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான மைக்கல் ஹூக்கெம் எக்ஸ்பிரஸில், "நாங்கள் மீன் தொடர்பாக விட்டுக்கொடுப்போம் என்று ஐரோப்பிய ஒன்றியம் நினைத்தது, ஆனால் பிரெக்ஸிட் என்பது எழுந்து நின்று போராடுவது பற்றியது" என்று எழுதினார். டெலிகிராப் தனது தலையங்கத்தில் எதிர்கால மோதல்களைப் பற்றி "பிரெஞ்சு சண்டை என்பது மீன்பிடித் துறை பற்றிய கவலைகளின் ஆரம்பம் மட்டுமே" என எச்சரித்தது.

மீன்பிடித்தல் தொடர்பான ஒரு சிறிய சர்ச்சையில் அச்சுறுத்தல்கள், கண்டனங்கள் மற்றும் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான உடனடி திருப்பம் தேசியவாத பிற்போக்குத்தனத்தினுள் எப்போதும் ஆழமாக இறங்கும் ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு விளைவாகும்.

உலக அரசியலில் ஒரு முன்னோக்கிய கூர்மையான தேசியவாத திருப்பத்தை பிரெக்சிட் வெளிப்படுத்தியது. ஜோன்சன் தலைமையிலான பிரெக்சிட் ஆதரவாளர்கள், அனைத்து வர்க்கப் பிளவுகளும் அதனுள் கலைக்கப்பட்டதாகக் கூறப்படும் தேசிய நலன்கள் வெற்றிபெறுவதற்கான ஒரு வழிவகுத்தனர். கன்சர்வேடிவ் அரசாங்கம் வெளிநாடுகளில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு வர்த்தகம் மற்றும் இராணுவக் கொள்கைக்கு ஆதரவாக ஒரு தேசபக்தி அரசியல் முன்னணியை உள்நாட்டில் பலப்படுத்த முயற்சிக்கையில் இந்த பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கு தொழிற் கட்சி ஒவ்வொரு அடியிலும் உதவியது.

ஜேர்சி தொடர்பான பிரான்சின் அதே போன்ற அணுகுமுறையானது, ஐரோப்பிய சக்திகள் எந்தவொரு முற்போக்கான பதிலையும் வழங்க முடியாது என்பதை காட்டுகின்றது. இவை ஒவ்வொன்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்பிற்குள் தங்கள் தேசிய நிகழ்ச்சி நிரலை தீவிரமாக பின்பற்றுகின்றன.

தொற்றுநோயால் புவியியல் மூலோபாய போட்டி மற்றும் வர்க்க பதட்டங்கள் பெருமளவில் தீவிரமடைந்துள்ள நிலையில், பேரினவாதத்தின் வெடிப்புகள் வழக்கமாகிவிடுகின்றன.

இந்த மோதல்களை பின்பற்றுவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு எதுவும் இல்லை. இது "தங்கள்" நாடுகளின் ஆளும் பில்லியனர்களின் செல்வத்தை அதிகரிக்கும் போராட்டத்தில் வெவ்வேறு நாடுகளின் தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்திற்கு எதிராக, தொழிலாளர்களின் அதிகாரத்துக்காகவும், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காகவும் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச போராட்டத்தின் மூலம் மட்டுமே தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும்.

Loading