காசா மீதான இஸ்ரேலின் போர் விரிவடைய்கையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து காசா பகுதியைத் தாக்கி, 100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றன, அவர்களில் குறைந்தது 27 குழந்தைகள், மற்றும் போர் தொடங்கியதிலிருந்து 980 க்கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டுள்ளனர்.

சுவர்களின் பாதுகாவலர் என்னும் நடவடிக்கையின் (Operation Guardian of the Walls) தொடக்கத்திலிருந்து, காசாவை கட்டுப்படுத்தும் முஸ்லீம் சகோதரத்துவத்துடன் (Muslim Brotherhood) இணைந்த குழுான ஹமாஸுடன் தொடர்புடைய 750 க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது. ஹமாஸ் பயன்படுத்திய கட்டிடங்கள், அதன் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கருவிகள், வங்கிகள் மற்றும் ஹமாஸ் கடற்படைப் பிரிவு ஆகியவைகள் இவற்றில் அடங்கும். அத்துடன் இது மூன்று உயரமான அடுக்குமாடி கட்டிடங்களை அழித்துள்ளது மற்றும் 10 மூத்த தளபதிகள் உட்பட சுமார் 60 ஹமாஸ் செயற்பாட்டாளர்களைக் கொன்றுள்ளது.

பாலஸ்தீனிய மருத்துவர் ஒருவர் காசா நகரத்திலுள்ள ஷிஃபா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் காயமடைந்த சிறுமிக்கு வியாழக்கிழமை, மே 13, 2021 இல் சிகிச்சை அளிக்கிறார். இச்சிறுமி மே 12 ம் திகதியன்று அவரது குடும்ப வீடு இஸ்ரேலிய தாக்குதலுக்குள்ளான போது காயமடைந்தார். சில வாரங்களுக்கு முன்பு, காசா பகுதியின் பலவீனமான சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையானது கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எழுச்சியினால் செயலிழப்புடன் போராடிக் கொண்டிருந்தது. இப்போது நெரிசலான கடலோர பகுதி முழுவதிலுமுள்ள மருத்துவர்கள் மிகவும் வித்தியாசமான நெருக்கடியைத் தொடந்து எதிர்கொள்ளுகின்றனர்: அதாவது குண்டுவெடிப்பு மற்றும் குண்டுவெடிப்பு காயங்கள், வெட்டுக்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட உறுப்புக்கள். (AP Photo/Khalil Hamra)

"நாங்கள் பல நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்கியுள்ளோம், கோபுரங்கள் விழுகின்றன, தொழிற்சாலைகள் சரிந்து கொண்டிருக்கின்றன, சுரங்கப்பாதைகள் அழிக்கப்படுகின்றன மற்றும் தளபதிகள் படுகொலை செய்யப்படுகின்றனர்" என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் இந்தப் படுகொலையை புகழ்ந்து கூறினார்.

காசா பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் "முழுமையான மற்றும் நீண்டகால சமாதானத்தை" கொண்டு வரும் வரை தொடரும் என்று அவர் அறிவித்தார்.

ஒரு வீடியோவில் பாலஸ்தீனியர்களை அச்சுறுத்திய கான்ட்ஸ், "காசா எரியும்" என்றார். 2014 ல் காசா மீதான இஸ்ரேலின் கடைசி போரின் போதும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தலைவர் தான் தான் என்பதை அவர் அவர்களுக்கு நினைவூட்டினார். அந்தப் போரில் 2,192 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 519 பேர் குழந்தைகள், பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர், ஆயிரக்கணக்கான வீடுகளையும் அதிகளவிலான அடிப்படை உள்கட்டமைப்பையும் அழித்தனர் அல்லது சேதப்படுத்தினர். "ஹமாஸ் அதன் வன்முறையை நிறுத்தாவிட்டால், 2021 தாக்குதலானது 2014 ஐ விட கடினமாகவும் வேதனையாகவும் இருக்கும்" என்று கான்ட்ஸ் எச்சரித்தார்.

வியாழனன்று, கான்ட்ஸ் 16,000 இராணுவ சேமப் படையினரை அழைக்க உத்தரவிட்டார் மற்றும் "அனைத்து நிகழ்வுகளுக்கும் மற்றும் விரிவாக்கத்திற்கும்" தயாரிப்புக்காக தரைப் படைகளை எல்லைக்கு அனுப்பினார். IDF இன் செய்தித் தொடர்பாளர் ஹிதாய் ஜில்பர்மேன், தரைப்படை படையெடுப்பிற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், ஹமாஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கு கரையில் IDF இன் கைது நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது என்றும் கூறினார். மேற்குக் கரையில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் குறைந்தது மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏற்கனவே பெருந்தொற்று நோயை சமாளிக்க போராடிக் கொண்டிருக்கும் காசாவிலுள்ள மருத்துவமனைகளானது படுக்கைகள், ஊழியர்கள், உபகரணங்கள் மற்றும் இரத்தம் மற்றும் மின்சாரம் வழங்குவதிலுள்ள பிரச்சினைகளுக்கு இடையே காயமடைந்தவர்களை கவனித்துக்கொள்ள போராடி வருகின்றன. ஒரு செம்பிறை ஒருங்கிணைப்பாளர் "இங்கே நிலைமை மிகவும் கடினம், நான் வார்த்தைகளில் கொடூரத்தை விவரிக்க முடியாது" என்று கூறினார்.

உலகின் மிகவும் வறியதும் மற்றும் சன அடர்த்தியான பகுதிகளில் ஒன்றான இதில் நடைபெறுகிறது, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெறும் 140 சதுர மைல்களில் வாழ்கின்றனர். காசாவின் எல்லைகளை இஸ்ரேல் 14 ஆண்டுகளாக சட்டவிரோதமாக முற்றுகையிடுவதற்கு உட்படுத்தியதால், அது வார்சோ கெட்டோ (Warsaw Ghetto) போன்ற ஒரு திறந்தவெளி சிறையாக மாறிவிட்டது. காசா உலகிலேயே மிக அதிக வேலையின்மை விகிதத்தைக் கொண்டுள்ளது, மக்களில் 82 சதவிகிதத்தினர் இப்போது வேலையில் இல்லை. புதிய குடும்ப அமைப்பின் (New Family organization) சமீபத்திய கணக்கெடுப்பு, 63 சதவீத காசான்கள் ஐ.நா.வின் வரையறுக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழே ஒரு நாளைக்கு 2 டாலருக்கு கீழே வாழ்கின்றனர் என்று தெரிவித்துள்ளது. மின்சாரம் ஒரு நாளைக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்து நீரும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அல்லது உப்பு ஆகியவற்றால் மாசுபட்டுள்ளது.

ஹமாஸும் மற்றய பாலஸ்தீன போராளிக் குழுக்களும் இஸ்ரேலை நோக்கி 1,500 க்கும் மேற்பட்ட எறிகணைகளை ஏவியதாக IDF கூறியது. ராக்கெட்டுகள் இரண்டு பாலஸ்தீனிய குடிமக்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு இஸ்ரேலியர்களை கொன்றுள்ளன, இது இஸ்ரேலின் வான்வழி ஆயுதங்களின் அபரிமிதமான உயர்திறனைக் குறிக்கிறது.

திங்களன்று மாலை அல்-அக்ஸா மசூதி வளாகம் மற்றும் கிழக்கு ஜெருசலேம் சுற்றுப்புறமான ஷேக் ஜார்ராவிலிருந்து பாதுகாப்புப் படைகளை திரும்பப் பெறுவதற்கான ஹமாஸின் இறுதி எச்சரிக்கையை பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு புறக்கணித்ததை அடுத்து இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடங்கியது. ரமலான் மாதத்தில் 1,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படைகள் வளாகத்தை தாக்கி, இரப்பர் தோட்டாக்கள் மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளால் வழிபாட்டாளர்களைத் தாக்கி நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்தினார்கள்.

கிழக்கு ஜெருசலேம் பல வாரங்களாக, தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவை எதிர்கொள்ளும் ஷேக் ஜார்ராவிலுள்ள பாலஸ்தீனிய குடியிருப்பாளர்களுக்கும், யூத குடியேற்றக்காரர்கள் மற்றும் வலதுசாரி வெறியர்களுக்கும் இடையே பெருகிய முறையில் வன்முறை மோதல்களைக் கண்டுள்ளது. பழைய நகரத்தின் தெற்கிலுள்ள சில்வானிலுள்ள பல குடும்பங்களும் வெளியேற்றத்தை எதிர்கொள்கின்றன. திட்டமிடப்பட்ட வெளியேற்றங்களானது ஜெருசலேம் மக்கள் தொகையில் 40 சதவீதமாக இருக்கும் பாலஸ்தீனியர்களை யூத குடியேற்றக்காரர்களுக்கு ஆதரவாக அகற்றுவதற்கான பரந்த இனச்சுத்திகரிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

கடந்த ஆண்டு, இஸ்ரேல் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் வீட்டு இடிப்புகளை அதிகரித்தது, இதனால் 1,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் வீடிழந்தனர். இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், கிழக்கு ஜெருசலேமில் மட்டும், இஸ்ரேல் 50 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய வீடுகள் மற்றும் கட்டமைப்புகளை இடித்து, 40 கூடுதல் இடிப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட 5,000 புதிய குடியேற்ற அலகுகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேலின் முன் ஆழ்ந்து திட்டமிட்டுச் செய்த குற்றத்தன்மைக்கு அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய சக்திகளின் எதிர்வினையானது அதிர்ச்சியூட்டும் பாசாங்குத்தனத்தில் ஒன்றாகும். பல மாதங்களாக, வீகர்ஸ்கள் (Uighurs) இனம் மீது இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சீனாவை, அவர்களின் கூற்றை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை மேற்கோள் காட்டாமல் அவர்களை அரக்கத்தனமாக சித்தரித்துள்ளனர். ஆயினும் கூட இஸ்ரேல் விஷயத்தில், காசாவிற்கு எதிரான அதன் போர்க் குற்றங்கள் "தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமை" என்ற மந்திரத்துடன் பச்சை விளக்கு காட்டப்படுகின்றன, அதே நேரத்தில் கிழக்கு ஜெருசலேமில் இனச்சுத்திகரிப்புக்கான அதன் திட்டங்கள் குறித்த ஒரு சட்ட ரீதியான சர்ச்சையாக சித்தரிக்கப்படுகின்றன.

ஷேக் ஜார்ரா குடும்பங்கள் வெளியேற்றப்படுவதையும், கிழக்கு ஜெருசலேம் குடியிருப்பாளர்கள் மீதான இனவாத தாக்குதல்கள் மற்றும் அல்-அக்ஸா மசூதியை முற்றுகையிடுவதையும் எதிர்த்து இஸ்ரேலின் பாலஸ்தீன குடிமக்கள் மீது நெத்தனியாகு போர் பிரகடனம் செய்துள்ளார். மக்கள் தொகையில் சுமார் 21 சதவீதமான இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலில் மிகவும் ஏழ்மையானவர்கள், கிட்டத்தட்ட பாதி அரேபிய குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளன. அவர்கள் பல தசாப்தங்களாக பாரபட்சத்தை அனுபவித்துள்ளனர், 2018 இல் "தேசிய-அரசு சட்டம்" நிறைவேற்றப்பட்டதன் மூலம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது, இது யூத மேலாதிக்கத்தை அரசின் சட்ட அடித்தளமாக உறுதிப்படுத்துகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலிருந்து நூற்றுக்கணக்கான குடியேற்றக்காரர்களுடன் யூத இனவாதிகள் நகரங்கள் மற்றும் நகரங்களிலுள்ள அரேபிய சுற்றுப்புறங்கள் வழியாக அணிவகுத்துச் சென்று, "அரேபியர்களுக்கு மரணம்" என்று கோஷமிட்டு, பாட்டில்கள் மற்றும் கற்களை எறிந்து வன்முறை மோதல்களைத் தூண்டியுள்ளனர், அதே நேரத்தில் பாதுகாப்புப் படைகள் கண்ணை மூடிக் கொண்டனர்.

இத்தகைய தாக்குதல்கள் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நடந்து கொண்டிருந்தாலும், இப்பொழுது இஸ்ரேலுக்குள்ளேயே வெளிப்படையாக நடைபெற்றுவரும் தாக்குதல்கள், 1947 க்கும் 1949க்கும் இடையில் பாலஸ்தீனியர்களை அவர்களின் வீடுகளில் இருந்து விரட்டிய இனச்சுத்திகரிப்பை எதிரொலிக்கின்றன.

இந்த வாரம், மத்திய நகரமான லோடில், யூத கும்பல்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்தன, இது ஒரு பாலஸ்தீனியர் மரணத்திற்கு வழிவகுத்தது மற்றும் மேலும் கலவரங்களுக்கும் வழிவகுத்தது, இதில் ஒரு யூத ஆலயம், பள்ளி மற்றும் பல வாகனங்கள் பாலஸ்தீனியர்களால் எரிக்கப்பட்டன. அரசாங்கமானது நகரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தது மற்றும் அவசரகால நிலையை அறிவித்தது, 1966 ல் அரபு சமூகங்கள் மீதான இராணுவ சட்டம் அகற்றப்பட்ட பின்னர் அரசாங்கம் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

டெல் அவிவுக்கு தெற்கேயுள்ள ஒரு கடற்கரை நகரமான பேட் யாம் என்ற கடற்கரை நகரத்தில், யூத தீவிரவாதிகளின் கும்பல்கள் முக்கிய தெருக்களில் அணிவகுத்து, அரபுக்கு சொந்தமான வணிகங்களை அடித்து நொறுக்கி, வழிப்போக்கர்களை தாக்கினர். அரேபியர் என்று கருதப்பட்ட ஒரு மனிதரை அவர்கள் மாறி மாறி அடித்து உதைத்தனர், அவரது உடல் தரையில் அசையாமல் கிடந்ததையும், நேரடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நான்கு பேர் "அரேபியர்களுக்கு மரணம்" மற்றும் "உங்கள் கிராமம் எரியட்டும்" என்று கோஷமிட்டபோது கைது செய்யப்பட்டனர். அனைவரும் அநாமதேயமாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நகரத்தின் மேயரின் கூற்றுப்படி, கலவரங்கள் "நகரத்திற்கு வெளியே இருந்து வந்த ஆத்திரமூட்டல்காரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டன."

பாலஸ்தீனிய வீடுகள், கடைகள் உடைப்பதையும் மற்றும் சாலைத் தடைகளை அமைக்க முயற்சிக்கும் யூத கும்பல்களின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.

நாடானது ஒரு "மோசமான உள்நாட்டுப் போரில்" இறங்குகிறது என ஜனாதிபதி ரெயுவென் ரிவ்லின் எச்சரித்தார். இந்த தாக்குதல்கள் "அராஜகத்திற்கு" ஒப்பானவை என்றும், கலப்பு மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மற்றும் நகரங்களில் ஒழுங்கை பராமரிக்க பொலிசாருக்கு உதவுவதற்காக 10 சேமப் படைப் பிரிவுகள் உட்பட இராணுவப் படைகளை அனுப்புவதாகவும் நெத்தனியாகு கூறினார்.

கிழக்கு ஜெருசலேம் இனச்சுத்திகரிப்பைத் தூண்டிவிட்டு ஒரு போரை தூண்டிவிட நெத்தனியாகு மேற்கொண்ட திட்டமிட்ட முயற்சிகளுக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது, எதிர்க் கட்சித் தலைவர் யாயர் லாபிட் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்த சாத்தியக்கூறையும் முடிவுக்குக் கொண்டு வரும் அவரது உறுதிப்பாடு ஆகும். அவர் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. வலதுசாரி யாமினா கட்சியின் தலைவரான நாஃப்தாலி பென்னெட், சமீபத்திய நிகழ்வுகளின் வெளிச்சத்தில், நெத்தனியாகுவிற்கு பதிலாக பிரதமராக முயற்சிக்கும் கட்சிகளான ஒரு "மாற்றத்திற்கான அரசாங்கம்" இப்போது கேள்விக்கு இடமில்லை என்றும், அவர் ஒரு ஐக்கிய அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறினார்.

Loading