வெண் புலி: இந்தியாவின் எஜமானர்களும் சேவகர்களும் பற்றிய ஒரு சித்திரம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஈரானிய-அமெரிக்க இயக்குநர் ரஹ்மின் பஹ்ரானி அவர்களின் ஆக்கத்தில் கடைசியாக வந்துள்ள திரைப்படமாகிய வெண் புலி சமகால இந்திய யதார்த்த நிலையையும், செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான பாரிய வர்க்க பிளவினை எடுத்தாளும் முக்கிய படைப்பாகும்.

வெள்ளைப் புலி படத்தில் ஆதர்ஷ் கௌரவ், பிரியங்கா சோப்ரா, ராஜ்குமார் ராவ்

நெட்ஃபிலிக்சில் ஓடிக் கொண்டிருக்கும் பஹ்ரானியின் இந்தப் படைப்பு இதே தலைப்பில் இந்திய-ஆஸ்திரேலிய எழுத்தாளர் அர்விந் அதிகா எழுதிய அவரது முதல் நாவலின் தழுவல் ஆகும். இந்த நாவல் 2008ஆம் ஆண்டு Man Booker பரிசை வென்றது. பஹ்ரானியின் படைப்புகளில், 99 Homes (2015), Chop Shop (2007), Man Push Cart (2005) போன்ற சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர் திறமைமிக்க திரைப்பட இயக்குனரும், படைப்பாளரும் உலகெங்கும் சமகால வாழ்க்கையில் எதிர்நோக்கும் சிக்கல்களை பற்றி ஆழ்ந்துணர்ந்தவருமாவார்.

வெண் புலி என்பது, பல்ராம் ஹல்வாய் என்ற இந்தியக் கிராமத்து ஏழைச் சிறுவன் (ஆதர்ஷ் கௌரவ்) வளர்ந்து பெரியவனாவது பற்றிய கதை ஆகும். அவன் லஸ்மண்கர் (Laxmangarh) என்ற தனது சிற்றூரின் கொடிய வறுமையிலிருந்து தப்பிச் செல்கிறான் என்பது கதை. நிகழ்காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்யும் சீனப் பிரதமர் வென் ஜின்போ அவர்களுக்கு பல்ராம் ஒரு மின்னஞ்சல் எழுதுவதிலிருந்து படம் தொடங்குகிறது. பல்ராம் தன் கதையையே நினைவுகூர்ந்து, நவீனகால இந்தியாவில் வறியவர்களுக்கு வாழ்க்கை கொடுமையாக இருப்பதை ஒரு கூண்டில் அடைபட்ட கோழிக்குஞ்சுகளின் நிலையுடன் ஒப்பிடுகிறார்.

திறமை வாய்ந்த இளஞர் பல்ராம், இந்தியத் தலைநகர் டெல்லியில் பள்ளி செல்வதற்கு கல்வியுதவித் தொகை கிடைக்கிறது. ”மாபெரும் சோசலிச” அரசியல்வாதி ஒருவரை ஊக்குவிக்கும் ஒரு பள்ளி ஆய்வாளர் பல்ராமை ”அரியவகை வெண் புலி” என்று அங்கீகரிக்கின்றார். இதற்கிடையில் பல்ராமின் நலிந்த தகப்பனார் ”கொக்கு” எனப்படும் உள்ளூர் நிலச்சுவாந்தருக்கு இரையாக்கப்படுகின்றார். பல்ராமின் குடும்பம் குண்டராகிய அந்த நிலச்சுவாந்தரிடம் கடன்பட்டு விடுகிறது; அந்தக் கடனை அவர்களால் அடைக்க முடியவில்லை. இளைஞரின் டெல்லிக் கனவுகள் அவருடைய பாட்டியால் நொறுங்கிப் போய், அவர் குழந்தைப் பருவத்திலேயே கடுமையாக உழைக்கும் நிலைக்கு ஆளாகிறார். பல்ராமின் தந்தை அதன் பின்னர் காசநோயினால் இறந்துவிடுகிறார்.

இறுதியில் பல்ராம் நிலச்சுவாந்தரின் மகன் அசோக்கிடம் (ராஜ்குமார் ராவ்) காரோட்டியாக வேலைக்குச் சேர்கிறார். முன்பு அந்த வேலையில் இருந்தவர், தன் மதத்தை மறைத்துக் கொண்ட முஸ்லிம் என்பதை அம்பலப்படுத்தி, அவர் அந்த வேலையைக் கைப்பற்றுகிறார். இவ்வாறான பிரச்சினைகளில் பல்ராம் சந்தர்ப்பவாதியாகவும் பிறரின் கைக்கருவியாகவும் செயல்படும் போக்கை திரைப் படைப்பாளர் சித்திரிப்பதன் நோக்கம், இந்திய ஆளும் வர்க்கமும் அதன் கட்சிகளும் மதத்தை எப்படிப் பார்க்கின்றன, எப்படிப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை வெளிப்படுத்துவதே ஆகும்.

வெண் புலி

அசோக் சிறிது காலம் அமெரிக்காவில் இருந்து விட்டு, தன் இந்திய-அமெரிக்கக் காதலி பிங்கியுடன் (பிரியங்கா சோப்ரா) சேர்ந்து தொழில் செய்வதற்காக இந்தியா திரும்புகிறார். இறுதியில் அசோக்கிடம், அவருடைய தந்தை, குடும்பத்தினர் வரிகள் செலுத்தாமல் இருப்பதற்காக டெல்லியில் ”மாபெரும் சோசலிசவாதி” எனப் பெயர்பெற்ற அரசியல்வாதிக்கு அசோக் இலஞ்சம் கொடுக்க வேண்டும் என ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார்.

அசோக்கும் பிங்கியும் பல்ராமிடம் பரிவும் இரக்கமும் கலந்து பழகத் தொடங்குகின்றனர். பல்ராம், பிங்கியின் பிறந்த நாளில் அவர்கள் இருவரையும் காரில் மதுபான விடுதிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு அவர்கள் போதையேறும்வரை குடிக்கின்றனர். திரும்பி வரும்போது போதையேறிய நிலையில் பிங்கி நான்தான் காரோட்டுவேன் என்று அடம் பிடிக்கிறாள். அவர்கள் திரும்பிவரும் வழி முழுவதும் வீடில்லாத மக்கள் சாலையோரத்தில் கூடாரமடித்துப் படுத்துக் கிடக்கின்றனர். பிங்கி அவர்களின் மீது காரை ஏற்றியதில் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது. அசோக்கும் பிங்கியும் அச்சமடைந்த பல்ராமுடன் சேர்ந்து அங்கிருந்து ஓடி விடுகின்றனர்.

அடுத்தடுத்து பல அவமானங்கள் தொடர்கின்றன. பல்ராமின் எசமானர்கள் அவரைக் கட்டாயப்படுத்தி பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பமிடச் செய்கின்றனர். அடுத்து அவரை ஒழித்துக்கட்ட சூழ்ச்சி செய்கின்றனர். பல்ராம் தானே தன்னைக் காப்பற்றிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு அவநம்பிக்கையான செயலை செய்யத் திட்டமிடுகிறான். கடைசியில் பெருந்தொகையுடன் பெங்களூருக்கு (அதனை ”இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு” என்று அவர் சொல்வதுபோல) ஓடி விடுகிறான். அங்கு உள்ளூர் காவல்துறைக்கு இலஞ்சம் கொடுத்து, தொழில் செய்யத் தொடங்கிப் பணக்காரத் தலைமறைவு தொழில்முனைவர் ஆகி விடுகிறார்.

வெண் புலி படம் பல வகையிலும் வலுவான அம்சங்களை கொய்டுள்ளது. அவற்றில் முக்கியமானது, இந்தியாவில் பரவலாகக் காணப்படும் பாரிய வர்க்க இடைவெளி எவ்வளவு மிருகத்தனமானது என்பதைப் பெரும்பாலும் ஒப்பனையின்றிப் படம் பிடித்துக் காட்டுவதாகும். இந்தியாவின் புதுப் பணக்காரத் தொழில்முனைவர்களை கொடிய வேட்டை விலங்குகளாகவும் ரவுடிகளைப் போலவும் சித்திரிப்பது உண்மையாகவே தெரிகிறது. அவர்களிடம் குவிந்துகிடக்கும் பெருஞ்சொத்துகள் உண்மையில் பெரும் சமூகக் குற்றங்களின் ஊடாக உருவாக்கப்பட்டதாகும்.

பல்ராம் தொடக்கத்திலேயே சொல்கிறார்: “இந்திய தொழில்முனைவர் ஒரேநேரத்தில் நேராகவும் வக்கிரமாககவும் இருக்க வேண்டும், கிண்டல்காரராகவும் நம்பிக்கையுள்ளவராகவும் இருக்க வேண்டும், நயவஞ்சகமானவராகவும் உண்மையானவராகவும் இருக்க வேண்டும், ஒரேநேரத்தில் எல்லாமாக இருக்க வேண்டும்…. இந்தியா என்பது ஒன்றிற்குள் இரு நாடுகளாகும்.”

இந்த திரைப்படம் பெரும்பாலும் இறுக்கமாகப் பின்னப்பட்டுள்ளது. இந்திய கிராமங்களிலும் டெல்லி, பெங்களூர் ஆகிய பெருநகரங்களிலும் ஒளிப்பதிவு மனக்கிளர்ச்சியூட்டுவதாகவும் நிஜமானதாகவும் உள்ளது. கிராம வாழ்க்கை சித்திரிக்கப்படும் விதம் உணர்ச்சியைத் தூண்டுவதாக இருப்பதோடு, கடுமையாகவும் உணர்வுகளால் பாதிக்கப்படாததாகவும் உள்ளது. முரட்டுச் சாரதி, ஒளிவெள்ளம் சூழ்ந்த அடியாழங்களில் வாழும் கட்டிடத்தின் அடித்தளத்தில் குடிமயக்கத்தில் இருக்கும் அசோக்கிடம் பல்ராம் பாடுவது நிலைவில் அழியாத காட்சியாக உள்ளது. பல்ராம் அதிர்ச்சியுடனும் சோர்வுடனும் டெல்லித் தெருக்களில் அலைந்து திரிவதும் பிச்சைக்காரக் கிழவரிடம் நிதானமிழந்து ஆத்திரமடைவதும் இன்னுமொரு அழுத்தம்மிக்க தொடர்காட்சியாகும். வீட்டுரிமையாளரின் குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருப்போரிடம் அலட்சியமாகவும் கொடூரமாகவும் நடந்து கொள்வதும் கூட, உண்மையில் எஜமானர்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் இடையிலானது, நம்பும்படியாகவே உள்ளது. மொத்தத்தில் இது இந்திய சமூகத்தின் பேரழிவுகரமான எடுத்துக்காட்டலாக இருக்கிறது.

தொழில்முறைக் கலைஞரல்லாதவர்கள் உட்பட நடிகர்கள் பலரும் வாழ்க்கையின் கடுமையை வெளிப்படுத்த உதவுகிறார்கள். பல்ராமாக நடிக்கும் கௌரவ், தனிச்சிறப்பாக இருப்பதுடன், நடிப்பு அபாரம்! பிங்கியாக நடிக்கும் சோப்ராவும் மிக அற்புதமாக நடிக்கின்றார்!

நாவலில் இருந்த சில பலவீனங்கள் திரைப்படத்தில் அவ்வளவாக வெளிப்படவில்லை என்றாலும் அவை இருக்கத்தான் செய்கின்றன. நாவலை குறித்து நாம் முன்பே கூறியது போல், ”வெண் புலி நகைச்சுவையை இலக்காக கொண்டிருந்தாலும் மொத்தத்தில் மேம்போக்காக உள்ளது, நையாண்டி செய்வதாக அமையவில்லை. தன் நாயகனின் [பல்ராம்] வரம்புக்குட்பட்ட மற்றும் தன்னலம் சார்ந்து இருக்கும் நோக்கங்கள் பற்றிய அதிகாவின் அணுகுமுறை தெளிவற்றதாக இருக்கின்றது.”

அதிகாவின் நாவலுடன் ஒப்பிட்டால் பஹ்ரானியின் திரைப்படம் அவ்வளவு மேம்போக்கானதாக இல்லை. ஆனால் ”அடிமையொழுக்கத்தை” ஏற்க விரும்பாத நீட்சேயின் தத்துவத்தின் வகைப்பட்ட அமானுஷ்ய (superman) மனிதன் ஆவதன் மூலம் பல்ராமின் நிலைக்குத் தீர்வு காண்பது சமகால திரையாக்கத்திலும் கலையிலும் தொடர்ந்துவரும் கண்ணோட்ட சிக்கல்களை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. மாபெரும் முஸ்லிம் கவிஞர் இக்பால் சொல்வதை பல்ராம் எடுத்துக்காட்டுகிறார்: “இந்த உலகில் எது அழகானது என்பதை அறிந்து கொண்டவுடனே, நீங்கள் அடிமையாக இருப்பதை நிறுத்திவிடுகின்றீர்கள்.” உண்மையில் அதற்கு இதைவிட அதிகம் தேவைப்படுகின்றது.

அடிமைத்தனத்திற்கு எதிரான பல்ராமின் கலகம், ஒரு தனிமனித வாதமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அறிவொளி பெற்றால், அவர் ஒரு "எஜமானராக" மாறுவதன் மூலம் இந்தியாவின் சமூக சமத்துவமின்மையை எதிர்க்கிறார். வர்க்கங்களிடையிலான ஆழ்ந்த இடைவெளியை, பஹ்ரானி சரியாகவே வெளிப்படுத்தினாலும், இப்படியான ஒரு கண்ணோட்டத்தில் சிடுமூஞ்சித்தனம் ஒட்டிக்கொண்டுள்ளது. என்றாலும் வர்க்கங்களுக்கு இடையிலான ஆழ்ந்த இடைவெளியை / வர்க்க துருவப்படுத்தலை பஹ்ரானி சரியாகவே வெளிப்படுத்துகிறார்.

பஹ்ரானியின் நெருங்கிய நண்பர் அதிகா (அவர்கள் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தவர்கள்) Vulture உடனானபேட்டியில் இந்த முரண்பட்ட பார்வைகள் சிலவற்றை வெளிப்படுத்துகிறார். “இந்தியர்களிடம் காணப்படும் புதிய தொழில்முனைவுக் கண்ணோட்டத்தை நான் விரும்பினேன். எனது காலத்தில் இதைக் கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஆனால் அது என்னைச் சற்றே கவலைப்படவும் வைத்தது…. இந்த புத்தகம் எழுதப்பட்ட நேரத்தில் இருந்ததைக் காட்டிலும் இந்தியாவில் இன்று நம்பிக்கை பெரிதும் குறைந்து விட்டது.”

வெண் புலி (2021)

இந்திய சமூகம் இன்று ஆழமாகப் பிளவுபட்டு இரு துருவங்களாகியுள்ளது. தொழிலாள வர்க்கமும் ஒடுக்குண்ட பெருந்திரளான மக்களும் கொதித்தெழுந்து பெருங்கொந்தளிப்புகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளது. இந்தியாவில் 177 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். அதேவேளை கோடிக்கணக்கான மக்கள் வறுமைச் சுமையால் நசுக்குண்டு பசி பட்டினியோடு வாழ்கின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கைகள், பாரியளவிலான ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சிதைத்துச் சின்னாபின்னமாக்கி விட்டன. 1,60,000 க்கு மேற்பட்ட மக்கள் மடிந்து விட்டார்கள் என்பது உத்தியோகபூர்வக் கணக்கு. இதுவே ஒரு மிகவும் குறைமதிப்பீடாகத்தான் இருக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் அதிதீவிர வலதுசாரி அரசாங்கமும் அவருடைய பாசிசவகைப்பட்ட பாரதிய ஜனதா கட்சியும் தலைமையேற்று நடத்தும் பொருளாதாரம் பெரும்பாலும் சிதைவடைந்து விட்டது. எதிர்ப்புக்கள் அனைத்தையும் ஒடுக்க, காவல்துறையின் அடக்குமுறையையும் வன்முறையையும் பயன்படுத்துகின்றனர். அரை நூற்றண்டுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியும், ஸ்ராலினிசக் கட்சிகளில் உள்ள அதன் ஆதரவாளர்களும் உட்பட ஆளும் வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளும் அதன் தொங்குசதைகளும் அதிதீவிர வலதுசாரியின் எழுச்சிக்கு உதவியுள்ளன. ஸ்ராலினிஸ்டுகளின் சில போலி “சோசலிசமும்” மற்றும் ஊழலும் பஹ்ரானியின் படத்தில் மேலோட்டமாக என்றாலும் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஆனால் பரந்துபட்ட அளவில் சமூகச் சீற்றம் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டுக்கு முன்னதாக, விவசாயிகள் தங்களைப் பலியிட்டு முதலீட்டாளர்களுக்கும் வேளாண் வணிகத்துக்கும் நன்மைபயக்கும் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்துப் பெருந்திரளான போராட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். மேற்கொண்டு தனியார்மயமாக்கும் முயற்சிகளுக்கு எதிராகப் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட வங்கி ஊழியர்கள் அண்மையில் இருநாள் வேலைநிறுத்தம் செய்தார்கள். ஸ்ராலினிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் ஆளும் வர்க்கக் கட்சிகளும் நெடுங்காலமாக ஒடுக்கி வைத்திருந்த கூர்மையான வர்க்க முரண்பாடுகளிலிருந்து எழுவதே இந்த எதிர்ப்பு. அந்தக் காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஒரு சில குறைபாடுகள் இருப்பினும், வெண் புலி நுண்ணறிவுத் திறமும் கூர்மையும் கொண்ட திரைப்படமாகும். இது ”உலகின் மிகப் பெரும் ஜனநாயகம்” என்று இந்திய ஆளும் வர்க்கத்தினர் சொல்லிக் கொண்டிருக்கும் பொய்யை தோலுரிக்கும் படமாகும். உத்தியோகபூர்வ இந்திய சினிமா, யதார்த்தத்திலிருந்து பெரிதும் அந்நியப்பட்டு நிற்கையில், இன்னும் கூடுதலான கலை ஆய்வைக் கோரும் ஒரு சமூகத்தினை பற்றி கடுமையான கண்டனத்தை காட்டும் தவிர்க்கமுடியாத ஒரு சித்திரமாகும்.

Loading