மிஸ் மார்க்ஸ்: திரைப்பட தயாரிப்பாளரது சொந்தக் கருத்தியல் படிமத்தில் எலினோர் மார்க்ஸ்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எழுத்து, இயக்கம் சுஸானா நிச்சியாரெல்லி

நடிகையும்-திரைப்படத் தயாரிப்பாளருமான சுஸானா நிச்சியாரெல்லி மிஸ் மார்க்ஸ் படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் ஒரு இத்தாலிய-பெல்ஜிய தயாரிப்பாகும். இது, எலினோர் மார்க்ஸ்ஸின் புகழ்பெற்ற தந்தை கார்ல் மார்க்ஸ் மார்ச் 1883 இல் இறந்ததிலிருந்து, மார்ச் 1898 இல் எலினோர் தற்கொலை செய்து கொண்டதுவரையான எலினோர் மார்க்ஸின் வாழ்க்கையின் பிற்பகுதியில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

Miss Marx

இந்த திரைப்படம் எலினோரின் அரசியல் மற்றும் பொது நடவடிக்கைகளின் சில அம்சங்களை மட்டுமே கவனத்தில் எடுக்கிறது. குறிப்பாக, அது அவரது உணர்ச்சிபூர்வமான வாழ்க்கையின் மீது மட்டுமே அதீதமான ஆர்வத்தினை செலுத்துகிறது. மிஸ் மார்க்ஸ், எழுத்தாளர்/இயக்குனரின் பெண்ணிய கண்ணோட்டத்தினால் ஆழமாக வண்ணமயப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தனது பெண்ணிய நிலைப்பாட்டினை கடந்த காலத்திற்குள் முன்வைக்க (மற்றும் அதை திணிக்கவும் கூட) முனைகிறார்.

நிச்சியாரெல்லியின் படம் 1883 இல் தொடங்குகிறது. எலினோர் மார்க்ஸ் (ஆக நடிகை ரோமோலா கராய் நடிக்கிறார்), அவரது குடும்பத்தினரால் துஸ்ஸி என்றே அழைக்கப்பட்டார், இலண்டனில் உள்ள தனது பெற்றோரது கல்லறையில் தனது தந்தையை (“அவர் மேன்மையடைந்து இறந்தார், அவரது அறிவு தீண்டத்தகாதது”) புகழ்ந்துரைக்கிறார். அதைத் தொடர்ந்து எலினோர் நாடக ஆசிரியர் எட்வார்ட் அவெல்லிங்கை (பேட்ரிக் கென்னடி) கவிஞர் பெர்சி ஷெல்லி பற்றி அவர் நிகழ்த்தும் ஒரு சொற்பொழிவில் சந்திக்கிறார். (அவரும் அவெலிங்கும் பின்னர் ஷெல்லியின் சோசலிசம் என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரதியை 1888 இல் இணைந்து எழுதியிருந்தனர்) அவர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவு வலுவடைகிறது, அவெல்லிங்கும் எலினோரும் அமெரிக்காவுக்கான ஒரு பயணத்தில் இருவரும் இணைந்து செல்கின்றனர். அந்தப் பயணத்தின்போது கால்நடைகளை மேய்ப்பவர்கள் (cowboys) கூட அவர்களது முதலாளிகளால் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை இருவரும் அறிகிறார்கள்.

எலினோர் மார்க்ஸ் ஒரு சோசலிச போராளியாக, ஒரு முழுமையான சர்வதேசவாதியாக மற்றும், சுருக்கமாக குறிப்பிடவேண்டுமானால், பிரிட்டனில் அதீதமாக சுரண்டப்பட்ட, சிறப்பு பயிற்சியற்ற தொழிலாளர் அமைப்புகளின் (உதாரணமாக, கப்பல்துறை, கடல் தொழிலாளர்கள், எரிவாயு தொழிலாளர்கள், பொதுத் தொழிலாளர்கள் மற்றும் பிற) "புதிய தொழிற்சங்கவாதத்தின்" வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மற்றும் உறுதியான பங்கேற்பாளராகவுமே வரலாற்றுக்குள் நுழைகிறார். 1880 களின் பிற்பகுதியில் இருந்து நாட்டில் வெடித்த அனைத்து வர்க்கப் போர்களின் இதயத்தின் மையத்தில் அவர் இருந்தார்.

மிஸ் மார்க்ஸ் இனை உருவாக்கியவர்கள் ஒரு சில தொழிற்சாலை காட்சிகளையும் தொழிலாளர்களின் நிலைமைகள் பற்றிய பல சுருக்கமான கலந்துரையாடல்களையும் உள்ளடக்கியிருந்தாலும், குறைந்தபட்சம் நச்சியாரெல்லி கற்பனை செய்தபடியே, எலினோரினது வாழ்வில் ஏற்பட்ட சிறிய மாற்றத்தில் மட்டுமே படத்தின் மையக்கரு புரையோடிக்கிடக்கிறது. பெண்களை வசியப்படுத்தும் காமுகன், தீயொழுக்கமுடையவன், போதைப்பொருள் புகைப்பவனான அவெலிங்குடனான எலினோரின் கொந்தளிப்பான உறவும், "என் சுதந்திரத்தைத் தவிர எல்லாவற்றையும் எனக்காக விரும்பிய" அவளுடைய தந்தையுடனான உண்மையான அல்லது கூறப்படும் விரக்தியும் இதில் அடங்கும்.

Romola Garay in Miss Marx

இதில் ஒரு உடன்படமுடியாத துணைக் காட்சியில், அவெலிங்கும் எலினோரும் போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு, சமூக சீர்திருத்தவாதியும் பாலியல் ஆராய்ச்சியாளருமான ஹேவ்லாக் எல்லிஸ் (Freddy Drabble),மற்றும் தென்னாபிரிக்க எழுத்தாளர், பெண்ணுரிமை ஆதரவாளரும் மற்றும் போர் எதிர்ப்பு பிரச்சாரகர் ஆலிவ் ஷ்ரெய்னர் (கரினா பெர்னான்டேஸ் - Karina Fernandez) ஆகியோருடன் இணைந்து சாதாரணமான உரையாடல்களுடன் மாலை நேரத்தினை கழிப்பதாக காட்டப்படுகிறது.

மிஸ் மார்க்ஸ் படத்தின் பொதுவான நோக்குநிலை மற்றும் ஆர்வங்களின் ஒரு மேலதிக அறிகுறியாக, நிச்சியாரெல்லி ஒரு முக்கியமான, நீடித்த காட்சியை அதில் உட்புகுத்தியிருந்தார். அதில் தனது மரணத்தின் இறுதிக் கணத்தில் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் (ஜோன் கார்டன் சின்க்ளேர்), மார்க்ஸின் குடும்ப வீட்டு வேலைகள் செய்யும் பணிப்பெண் ஹெலன் டெமுத்தின் (Felicity Montagu) மகனான சையர்ட் ஃப்ரெட்டி (sired Freddy) இன் தந்தை நானல்ல, உன் தந்தை கார்ல் தான் என எலினோரிடம் காதுக்குள் கிசுகிசுக்கிறார். இந்த வெளிப்படுத்தலுக்கு எலினோரின் வெறித்தனமான அலறல் எதிர்வினை “post-rock” குழுவான கட்டோ சிலீஜியா கன்ட்ரோ இல் கிராண்டோ ஃப்ரெடோவின் (Gatto Ciliegia contro il Grando Freddo) காதுகளை செவிடாக்கும் காது கேளாதவர்களுக்கான இடி இசையின் செருகல்களுக்கு இணைந்து செல்வதாக இருக்கின்றது.

டெமுத் பற்றிய இரகசியத்தின் வெளிப்பாட்டிற்கு ஒருவரது எதிர்வினை, உண்மையாக அல்லது பொய்யாகவும் இருக்கலாம்: எல்லாவற்றுக்கும் முதல், வரலாற்றில் இந்த கட்டத்தில் அத்தகைய கேள்வியை இட்டு அவனைப் பற்றியோ அல்லது அவளைப்பற்றியோ யார் அக்கறைப்பட முடியும்? இதுபோன்ற அர்த்தமற்ற கிசுகிசுக்களில் நிச்சியாரெல்லி ஈடுபாட்டுடன் செயல்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருக்கும் என்பது முன்கூட்டியே கணிக்ககூடியதாக இருந்தது. ஒருபுறம், இந்த வெளிப்படுத்தல் மார்க்ஸை கீழ்மைப்படுத்தும் நோக்கம் கொண்டது; அதாவது, அவரும் மற்றவர்களைப் போல்தான் கேள்விக்கு அப்பாற்பட்டவர் அல்ல, மாறாக அவரும் "பெண்களை மயக்கி கவரும் ஒரு காமுகனே” தவிர வேறொன்றுமில்லை என்பதையே நிச்சியாரெல்லி நிரூபிக்க முயல்கிறார். மறுபுறம், கூறப்படும் இந்த அவதூறானது இயக்குனர் மற்றும் அவரது சமூகத் தட்டினரின் நம்பிக்கைகளை, அதாவது உண்மையில், எல்லோரும் -ஆண்கள்- எப்போதுமே "அப்படித்தான் இருக்கிறார்கள்" என கூறுவதாக இருக்கிறது.

திரைப்படத்தில், ஃப்ரெட்டி மற்றும் எலினோர் அவரது பெற்றோரின் கல்லறைக்கு வருகை தருகிறார்கள், எலினோர் நம்பமுடியாமல் இந்த கேள்வியை எழுப்புகிறார், 'இந்த விவகாரத்திற்குப் பின்னர் [அவளது பெற்றோர்] எவ்வாறு தொடர்ந்து வாழந்திருக்க முடியும்?' — வெண்ணெய்யும் வேண்டும், வெண்ணெய் வித்த பணமும் வேண்டும் என்ற பேராசை பிடித்தவராக நிச்சியாரெல்லி இருக்கிறார். ஒன்று போஹோமிய ‘சுதந்திரச் சிந்தனையாளர்கள்’ (en bohème 'libre-penseur') போன்று —தொழில்துறை சமுதாயத்தின் கட்டமைப்பிற்குள் முதலாளித்துவ ஆதிக்கத்தையும் அதன் பகுத்தறிவையும் வாழும் சமூக ஒழுக்க மரபுகளையும் நிராகரித்து கலைக் கருத்தியலை உருவாக்குகிறோம் என தான்தோன்றித்தனமாக வாழும் வாழ்க்கை முறை— எலினோரையும் தனது சொந்த கருத்தியல் படிமத்திலிருந்து உருவாக்கியிருக்கிறார். அப்படிச்செய்துகொண்டு, பின்னர், கார்ல் மார்க்ஸுக்கு எதிராக தனது கற்களை குறிவைக்கிறார். அதாவது 'மார்க்ஸை அவரது பீடத்திலிருந்து அடித்து வீழ்த்துவதற்கு' இப்பட இயக்குனர் மார்க்ஸின் மகளை ஒரு விக்டோரிய மரபுவழிவந்த சீற்றம் கொண்ட பெண்ணாக சித்தரிக்கிறார்.

படத்தின் முடிவில் தனது கருத்தியலுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து எலினோரின் வாயால் அதை உச்சரிக்க வைக்கிறார். அந்த வார்த்தைகளை இவர் கண்டுபிடித்திருந்தாலும் அல்லது அதனது உள்ளடக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு அதை இவரது கருத்தியலுக்கு சார்பாக பயன்படுத்தியிருந்தாலும் அது 21ம் நூற்றாண்டின் பெண்ணியவாதியாக அவரை மாற்றம் செய்யப் பயன்படுத்துவதாக இருக்கிறது.

Miss Marx (2020)

மொத்தத்தில், மிஸ் மார்க்ஸ் எமக்குள் ஒரு பெரிய அல்லது உற்சாகத்தினை ஊட்டும் தோற்றத்தை ஏற்படுத்தவில்லை. இது குறிப்பாக தீங்கிழைக்கவில்லை, ஆனால் அது மார்க்ஸ் என்று வரும்போது, அவரது அடையாளத்தின் மீது மோசமான பாதிப்பினை ஏற்படுத்த முயல்கிறது. ஏன் இவர்கள் எல்லோரும் அப்படி இருக்கிறார்கள்? நிக்கியாரெல்லியும் அவர் சார்ந்த தட்டுகளும் எலினோர் மார்க்ஸ் சார்ந்திருந்த சமூக பின்புலத்தினை கொண்டவர்கள் அல்ல மாறாக, இவர்கள் அனைவரும் எலினோர் போராடிய மற்றும் சார்ந்து வாழ்ந்ததற்கு எதிரான வர்க்க மற்றும் அரசியல் நோக்குநிலை மற்றும் முற்றிலும் மாறுபட்ட சூழலில் இருந்து வந்தவர்களாவர். இது ஒரு போலி மருத்துவரை ஒரு சிறந்த, முன்னோடி மருத்துவராக சித்தரிக்க முயற்சிப்பது போன்றது. இயக்குனர் நிச்சியாரெல்லி, துரதிர்ஷ்டவசமாக, தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கு ஒருவர் தன்னை அர்ப்பணிப்பதற்கான தியாகம், தன்னலமற்ற தன்மை, பொறுமை மற்றும் கொள்கைப் பிடிப்பு போன்றவற்றைப் பற்றி சிறிதாகக்கூட விளங்கிக்கொண்டிருப்பதாக தெரியவில்லை.

சமகால திரைப்படத் தயாரிப்பாளருக்கு, (அல்லது குறிப்பாக) 'இடது' வகையைச் சேர்ந்த தட்டுகளுக்கு கூட, இந்த வகையான அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வையை புரிந்துகொள்வது மிகவும் கடினமானதாகவே இருக்கிறது. ஆகையால், அவள் அல்லது அவன் மனிதர்களது தனிப்பட்ட நெருக்கடிகள் மற்றும் பலவீனங்களைத் தேடுகிறார்கள் மற்றும் பெரும்பாலும் வரலாற்றில் மனித சமூகத்திற்கு பங்களிப்பு செய்த மிக முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் மனிதர்களையும் தனிப்பட்ட பலவீனங்களை முன்வைத்து தமது தரத்திற்கு அமைய அல்லது இணங்க அல்லது தமது தரத்திற்கு பொருந்தக்கூடிய வகையில் கீழ்மைப்படுத்த முயற்சிக்கிறார்கள். நிச்சியாரெல்லி ஒரு நேர்காணலில் கூறுயது போல்: 'எலினோரின் கதைக்கு ஒரு நுட்பமான முரண்நகை அவசியமான ஒன்றாக நான் நம்புகிறேன்: அவளுடைய காதல் வாழ்க்கை அபத்தமான ஒன்றாக இருந்த அதேநேரம் துயரமானதாகவும் இருந்து, அவளுடைய துயரங்கள் இன்றைய பெண்களுக்கும் மிக நன்றாக பரீட்சையமானதே.'

மிஸ் மார்க்ஸ் இல் கார்ல் மார்க்ஸ் பற்றிய சுருக்கமான குறிப்புகள் கூட பொதுவாக இழிவுபடுத்தப்படுத்துவதாக இருக்கிறது, மற்றும் இன்னொரு அறிவுசார் மாபெரும் மேதமையான ஏங்கெல்ஸ் சதி செய்பவராக படத்தில் வந்துபோகிறார். பிரெஞ்சு சோசலிச இயக்கத்தில் தீவிரமாக செயல்படும் லோரா மார்க்ஸ் (எலினோரின் மூத்த சகோதரி) மற்றும் அவரது கணவரைப்போல் லாஃபார்க் ஆகியோர் ஒரு வழக்கமான முதலாளித்துவ இருப்பில் சுமூகமாக வாழ்பவர்களாக வந்துபோகிறார்கள் - லோரா சமையலறையில் சமைத்துக்கொண்டிருப்பதிலே திருப்தி அடைகிறார், அவரது கணவர் லாஃபார்க் கோழிகளை வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். எது எப்படியிருந்தபோதும், எல்லாவற்றுக்கும் மேல், மிக முக்கியமாக, எலினோர் அடக்குமுறை, சுயநலம் கொண்ட ஆண்களால் சூழப்பட்டிருக்கிறார் என்பதாக இருக்கிறது.

மிஸ் மார்க்ஸின் இனை உருவாக்கிய படைப்பாளிகள் வரலாற்று மற்றும் வர்க்க கேள்விகளை மங்கலான ஒரு பின்னணி பாத்திரத்திமாக குறுக்கியுள்ளதானது, நீண்ட பல தசாப்தங்களாக 'இடது' கல்வியாளர்கள் வட்டத்திற்குள் ஆதிக்கம் செலுத்திவந்த பொது கருத்தியல் பின்னடைவின் ஒரு பகுதியாக இருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரை, 'தனிநபர்களின் தனிப்பட்ட உள்ளக வரலாறு', அவர்களின் தனிப்பட்ட விருப்புகள் மற்றும் துக்கங்கள் தான் அவர்களது வாழ்வின் 'செயல்களையும்' மற்றும் புதிரான பக்கத்தினையும் உருவாக்குகின்றன. உண்மையில் இதை வேறுவிதமாகக் கூறினால், பாலியல் உணர்வு, மரணம் மற்றும் சில குடும்ப உறவுகள் தான் அவர்களின் வாழ்வின் மையமாக இருக்கின்றன என கூறுவதாகும்.

இந்த வகையான கருத்துக்களை எதிர்கொள்ளும்போது, எலினோர் மார்க்சின் சுருக்கமான சுயசரிதையை இங்கே முன்வைப்பது பொருத்தமாக இருக்கும்.

ஜென்னி ஜூலியா எலினோர் மார்க்ஸ் இலண்டனில் ஜனவரி 15, 1855 இல் பிறந்தார். கார்ல் மார்க்ஸ் மற்றும் ஜென்னி வான் வெஸ்ட்பாலனின் ஆறாவது குழந்தை மற்றும் நான்காவது மகள். பல மொழிகளை சரளமாக பேச அறிந்திருந்தார், தனது தந்தையின் படைப்புகளைத் திருத்தியவர், நாளுக்கு எட்டு மணிநேர வேலை நேர உரிமைக்காக பிரச்சாரம் செய்தவர், மே தினத்தை உத்தியோகபூர்வமான விடுமுறை நாளாக்க உதவினார், மற்றும் இப்சன் மற்றும் ஃப்ளோபேர் [Ibsen and Flaubert] ஆகியோரின் படைப்புகளை மொழிபெயர்த்தார்.

எலினோரின் மிக சமீபத்திய சுயசரிதையாளரான, ரஷேல் ஹோம்ஸ் பின்வருமாறு எழுதினார்: "துஸ்ஸி [Tussy - எலினோரின் குடும்பச் செல்லப்பெயர்] அவள் ஒரு குழந்தையாக இருந்தபோது [மார்க்ஸ்] அவரது மூலதனத்தின் முதல் தொகுதி எழுதிக்கொண்டிருந்தார், அப்போதிருந்தே மார்க்ஸ்சுக்கும் துஸ்ஸிக்குமான நெருக்கமான உறவு வளர்ந்து வந்தது, அந்த நெருக்கமான உறவின் பலாபலன் என்னவாக இருந்தெனில் பிரித்தானிய சமூக பொருளாதார அரசியல் வரலாறு பற்றிய ஒரு திடமான அடித்தளத்த்தினை அவளுக்கு அது வளங்கியது. துஸ்ஸியும் மூலதனமும் ஒன்றாகவே வளர்ந்தன.

பிரித்தானியாவின் முதலாவது சோசலிச அமைப்பானது (ஜனநாயக கூட்டமைப்பு என்று அழைக்கப்பட்டது) 1881 இல் உருவாக்கப்பட்டது. இது 1884 இல் சமூக ஜனநாயக கூட்டமைப்பு என மறுசீரமைக்கப்பட்டபோது, எலினோர் அதனது ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். “17 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் இறக்கும் வரை, அவர் சோசலிச சமூகத்தினை உருவாக்குவதற்காக சொற்பொழிவு செய்தார், எழுதினார், வேலைநிறுத்தங்கள், பேரணிகள், தேர்தல் பிரச்சாரங்களை ஒழுங்கமைக்க உதவினார். மேலும் அந்தக் கொள்கைக்காக போராடிய அவரது அங்கத்துவத்தினை ஏற்றுக்கொண்டிருந்த ஒவ்வொரு சோசலிச அமைப்பிலும் நடந்த கருத்து மோதல்களிலும் அவர் பெரும் பங்களிப்பினை செய்திருந்தார்”, என அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர்களில் ஒருவர் குறிப்பிடுகிறார்.

1880 களில், எலினோர் சோசலிசத்தை பரப்புவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாக நாடகக் கலை இருப்பதாக நம்பி அதில் ஆர்வம் காட்டினார். அது மட்டுமல்ல அவர் பல நூல்களையும் நீண்ட ஆய்வுகளையும் எழுதியுள்ளார். அதில், Factory Hell (நரகத்து தொழிற்சாலை-1885), The Women Question (பெண்கள் பிரச்சனை -1886), The Working Class Movements in America (அமெரிக்காவில் தொழிலாள வர்க்க இயக்கம்-1888) The Working Class Movement in England (இங்கிலாந்தில் தொழிலாள வர்க்க இயக்கம்-1896), போன்றவை உள்ளடங்கும்.

முக்கியமாக ஒன்றை குறிப்பிடவேண்டுமானால், அவெலிங்கின் நடத்தை தொடர்பான தனிப்பட்ட நெருக்கடி காரணமாக, எலினோர் மார்க்ஸ் மார்ச் 31, 1898 அன்று தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 43 ஆகும்.

1895 ஆம் ஆண்டில், ஜேர்மன் மார்க்சிசவாதி வில்ஹெல்ம் லீப்னெக்ட் (கார்ல் லீப்னெக்டின் தந்தை) எலினோர் பற்றி இப்படி எழுதினார்: “‘இங்கிலாந்தில் தொழிலாள வர்க்க இயக்கம்’ என்ற நூலின் ஆசிரியையான எலினோர் ஆங்கிலத் தொழிலாளர்களின் நிலைமைகளை பற்றிய முழுமையான புரிதலை கொண்டுள்ளதுடன், அதை மிக ஆழமாக விபரித்தும், இதயத்துடிப்புடனும் எழுதியுள்ளார். அவர் ஆங்கிலத் தொழிலாளர்களிடையே வாழ்ந்தவர் மட்டுமல்ல, அவர்களுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் போராடியவரும் கூட, அவர்களை நேசிக்கவும் கற்றுக்கொண்டிருந்தார். அவர் அவர்களுடன் அவர்களில் ஒருத்தியாகவும் இருக்கிறார், மேலும் அவர் நவீன ஆங்கிலத் தொழிலாளர் இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார். உணர்ச்சி ததும்பும் வார்த்தைகளால், மனிதர்கள் பற்றி நம்பிக்கை மிகுந்த மற்றும் அவர்கள் முகம் கொடுக்கும் ஏனைய விடயங்களைப் பற்றிய உண்மையான படத்தை அவர் நமக்குத் தருகிறார். ஆங்கிலத் தொழிலாளர்கள் இயக்கம் மற்றும் அனைத்து ஆங்கில வரலாற்றின் தனித்துவமான அடையாளத்தையும், நிலையான முன்னேற்றத்தையும், வென்றதை உறுதியாகத் தக்க வைத்துக் கொள்வதையும், எல்லாவற்றையும் மீறி ஆர்வத்துடன் முன்னோக்கி அழுத்துவதையும் அவர் நமக்குக் காட்டுகிறார். அது எப்போதும் இலக்கை நோக்கி முன்னேறுகின்றது; ஒருபோதும் பாய்ச்சல் இல்லாது, சில நேரங்களில் விரைவான, சில நேரங்களில் மெதுவான முன்னேற்றங்களுடன், பெரும்பாலும் ஒரு அங்குமிங்குமான, பெரும்பாலும் பக்க பாதைகளால் — ஆனால் எப்போதும் முன்னோக்கி, எப்போதும் இலக்கை நெருங்குகிறது.”

‘எலினோர் வாழ்ந்த காலகட்டத்தில் அல்லது சகாப்தத்தில் ஆண், பெண் என்ற பாலின அடிப்படையில் சமூகத்தை பார்க்கவில்லை, மாறாக சமூகத்தினை வர்க்கமாக பார்ப்பதே அடிப்படையாக இருந்தது. ஆகையால்தான் எலினோர் உதாரணமாக இப்படியாக எழுதினார், “நாங்கள் ஆண்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் பெண்களல்ல, மாறாக சுரண்டல்களுக்கு எதிராக போராடும் தொழிலாளர்கள்.” மேலும்: “பெண்களின் உண்மையான கட்சி, சோசலிஸ்ட் கட்சியே தவிர வேறொன்றுமில்லை […] உழைக்கும் பெண்களின் தற்போதைய சாதகமற்ற நிலைப்பாட்டின் பொருளாதார காரணங்கள் குறித்த அடிப்படை புரிதலைக் கொண்டுள்ள கட்சி அதுமட்டுமே […] உழைக்கும் பெண்களை தங்கள் வர்க்க சகோதரர்களான ஆண் தொழிலாளர்களுடன் ஒன்றுபட்டு பொதுவான எதிரிக்கு எதிராக, அதாவது முதலாளித்துவ ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது.

மேலும், முன்னர் ஒரு முறை நிந்தனை மற்றும் அவமதிப்பாக இருந்த, 'சோசலிஸ்ட்' மற்றும் 'சோசலிசம்' என்ற கருத்துருக்கள் தொழிலாள வர்க்கத்தின் மரியாதைக்குரிய மற்றும் நம்பிக்கையின் சிறந்த பாதைகளாக மாறி வருகின்றன என்று அவர் 1891 ஆம் ஆண்டில் வலியுறுத்தினார். […] ஒவ்வொரு தேசமும் தத்தமது சொந்த வழிமுறைகளையும் மற்றும் வேலை முறைகளையும் கொண்டுள்ளன. ஆனால் இந்த வழிமுறைகள் மற்றும் வேலைமுறைகள் எதுவாக இருந்தாலும், உலகெங்கிலும் முடிவு ஒன்றுதான்: அதாவது தொழிலாள வர்க்கத்தின் பரிபூரணமான விடுதலையும், அனைத்து வர்க்க ஆட்சியை ஒழித்தலுமாகும்!

“தொழிலாள வர்க்க இயக்கத்தின் சர்வதேச ஒற்றுமை நீடூழீ வாழ்க!”

Loading