கவிஞர் அஹ்னப் ஜஸீமை பாதுகாத்திடுங்கள்!

பொதுமக்கள் மனு - கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழு

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த ஆண்டு மே 16 அன்று, கவிஞர் அஹ்னப் ஜஸீம் இலங்கை பொலிசாரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டது. அவர் மீது நீதிமன்றத்தில் முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படாமல், அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்ட விதிகளின் கீழ், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு (ரிஐடி), 'மாணவர்களுக்கு இனவாதம் மற்றும் தீவிரவாதத்தை கற்பித்தல் மற்றும் அது குறித்த புத்தகங்களை வெளியிடுதல்' என்ற போலி குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கவிஞரை கைது செய்தது. அவர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு, ஒப்புதல்-வாக்குமூலம் கொடுப்பதற்காக அஹ்னப்பை அச்சுறுத்தி கட்டாயப்படுத்தும் ஒரு மோசமான முயற்சியில் ஈடுபடும் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் அவரை தடுத்துவைப்பதை நீடித்துள்ளது.

இலக்கிய கூட்டமொன்றில் உரையாற்றும் அஹ்னப் ஜஸீம்

அஹ்னப்பால் எழுதப்பட்டு 2017 இல் வெளியிடப்பட்ட 'நவரசம்' என்ற கவிதை தொகுப்பு எந்த நீதிமன்றத்தாலும் தடை செய்யப்படவில்லை. மேலும், ரிஐடியின் போலி குற்றச்சாட்டுகளுக்கு நேர் மாறாக, அந்த புத்தகமானது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை கண்டித்தும் அதற்கும் இஸ்லாம் மதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுவதோடு, சமாதானம், சமூக ஒற்றுமை மற்றும் இனவாதத்தை எதிர்ப்பதற்கும் முன்நிற்கின்றது.

அஹ்னப்பை எதேச்சதிகாரமாகவும் சட்டவிரோதமாகவும் கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதானது கலை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஜனநாயக-விரோத தாக்குதலாகும். இந்த கவிஞர், முஸ்லீம் சமூகத்தை மிரட்டுவதற்கும் தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கும், இந்த வழியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களில் ஒருவர் மட்டுமே.

26 வயது இளைஞரான அஹ்னப், அன்றாட தொழிலாளி ஒருவரின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவராவார்.

பொலிசின் குற்றச்சாட்டுகளை நேரடியாக மறுத்துள்ள அஹ்னப், எந்த குற்றமும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார். 21 ஏப்பிரல் 2019 அன்று 269 பேரைக் கொன்று மேலும் நூற்றுக்கணக்கானவர்களை காயத்துக்குள்ளாக்கிய கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும், இந்த கவிஞருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தான் பட்டம் பெற்றதும், 2019 ஜூலையில், அஹ்னப் புத்தளத்தில் உள்ள ஸ்கூல் ஓஃப் எக்ஸலன்ஸ் என்ற ஒரு தனியார் சர்வதேச பாடசாலையில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய ஆசிரியராக சேர்ந்தார். அவர் “சேவ் த பேர்ல்ஸ்” என்ற நலன்புரி அமைப்புக்கு சொந்தமான கட்டிடத்தில் இருந்த தங்குமிடத்திலேயே தற்காலிகமாக தங்கியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சேவ் த பேர்ல்ஸ் அமைப்பை முடிச்சிப்போட்டு விடும் முயற்சியில், முஸ்லீம் அதிதீவிரவாதத்தை ஊக்குவிப்பது குறித்து அவர்களிடம் பொலிஸ் விசாரிக்கின்றது. சேவ் த பேர்ல்ஸ் உடன் தொடர்புகளைக் கொண்ட மற்றும் அதற்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்த, மனித உரிமை வழக்கறிஞரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும் 2020 ஏப்ரலில் இருந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு மார்ச் மாதம், அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

அஹ்னப்புக்கு, தனது வழக்கறிஞர்களையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதோடு, முறையான சட்ட வழிமுறைகளும் அவருக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் நித்திரைகொள்ளும் நேரத்தில் கூட கைவிலங்கு போட்டு வைக்கப்பட்டும், ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் வைக்கப்பட்டும் அவர் கொடூரமான, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளார். தற்போது அவர் செய்திகளை அறிய அல்லது நூலகத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைக் கூட இழந்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 16 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் மூலம், கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான குழுவானது, கவிஞரை கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து, அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அறைகூவல் விடுத்தது.

அந்த அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது: “முன்னெப்போதும் இல்லாதளவு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி இராஜபக்ஷ, முதலாளித்துவ பெரும் தொழில்முனைவோரின் நலன்களுக்கு சேவை செய்து, ஆரம்பத்தில் இருந்தே பரந்தளவு இராணுவத்தை அடிப்படையாக கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க செயற்பட்டு வந்துள்ளார். அவரது அரசாங்கம் வெளிப்படையாகவே தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு பொருளாதார யுத்தத்தை பிரகடனம் செய்துள்ளது…”

அந்த அறிக்கை தொடர்ந்து விளக்கியதாவது, “இந்த பின்னணியில், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கு எதிராக இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுக்கும் வேட்டையாடலானது, பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களின் பின்னர், அதிதீவிர வலதுசாரி சிங்கள-பௌத்த பிரிவுகளின் ஆதரவுடன், முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரமான இனவாத பிரச்சாரத்திற்கு வழியமைத்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கைகளை, மிகவும் உயர்ந்த மட்டத்தில் தொடர்ந்து பேணுவதாகும்.”

கொரோனா வைரஸ் தொற்றுநோய் சம்பந்தமான அரசாங்கத்தின் அலட்சியப் பிரதிபலிப்பும் அதன் கொலைகாரக் கொள்கையும், அரசாங்கத்தின் மீதான பொதுமக்கள் அதிருப்தியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்று, அதன் அரசியல் நெருக்கடி மற்றும் ஜனநாயகத்தின் வீழ்ச்சியை மேலும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இத்தகைய கைதுகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, தீவிலும் மற்றும் உலகம் முழுதும் வாழும் தொழிலாள வர்க்கத்தால், சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், இளைஞர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரையும் தங்களைச் சூழ அணிதிரட்டிக்கொண்டு முன்னெடுக்கப்படும் ஒரு பரந்த அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே, அஹ்னப்பின் விடுதலையை உறுதிப்படுத்த முடியும்.

அஹ்னப் மற்றும் இராணுவ-பொலிஸ் வேட்டையாடலுக்கு இரையான ஏனையவர்களை -ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஊடக ஆர்வலர்கள், கலைஞர்களை- பாதுகாப்பதற்கு, தங்கள் பிரதேசங்களிலும் வேலைத் தளங்களிலும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்பி, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஏனைய ஜனநாயக உரிமைகள் உட்பட கலை மற்றும் கருத்துச் சுதந்தித்தை பாதுகாப்பதற்கான ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க முன்வருமாறு கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான தீவில் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கும் உலகெங்கிலும் உள்ள அதன் வர்க்க சகோதரர்களுக்கும் அழைப்பு விடுத்தது.

ஜனநாயக உரிமைகளை மதிக்கின்ற, கமிட்டியின் குறித்த அறிக்கையை மற்றும் பொது அழைப்பையும் ஏற்றுக் கொள்ளும் அனைவரையும், இலங்கை அசாங்கத்திற்கு அழைப்புவிடுக்கும் பின்வரும் மனுவில் கையெழுத்திடவும், கவிஞர் அஹ்னப் ஜஸீமைப் பாதுகாப்பதற்காக அறிக்கைகளை வெளியிடுமாறும் கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழு அழைப்பு விடுக்கின்றது:

இணையவழி பொதுமக்கள் மனுவுக்கான இணைப்பு: Defend Poet Ahnaf! අහ්නාෆ් ජසීම් කවියා ආරක්ෂා කරනු! கவிஞர் அஹ்னப் ஜஸீமை பாதுகாத்திடுங்கள்!

***

செயலாளர்,

பாதுகாப்பு அமைச்சு,

15/5, பௌத்தாலோக மாவத,

கொழும்பு 3.

சட்டமா அதிபர்,

சட்டமா அதிபர் திணைக்களம் துறை,

புதுக்கடை,

கொழும்பு 12.

பொலிஸ் மா அதிபர்,

பொலிஸ் தலைமையகம்,

கொழும்பு 1.

ஐயா,

கவிஞர் அஹ்னப் ஜஸீமை உடனடியாக விடுதலை செய்தல்

இங்கு கீழ் கையொப்பமிடுகின்ற நாம், 'நவராசம்' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியரான கவிஞர் அஹ்னப் ஜஸீமை கைது செய்து தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதை கண்டிக்கிறோம். உங்கள் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை நசுக்குவதற்காக, அந்த வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்த மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக இலங்கையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக நீங்கள் முன்னெடுத்துள்ள இனவாத இயக்கத்திற்கு கவிஞர் அஹ்னப்பும் பலியாகி உள்ளார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கின்றோம். கவிஞர் அஹ்னப் ஜஸீமை ஒரு அரசியல் கைதியாக அறிவிக்கும் நாங்கள், அவரது சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதானது கவிஞரதும் இந்த நாட்டின் மக்களதும் கருத்துச் சுதந்திரத்தையும் கலைப் படைப்பில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தையும் அப்பட்டமாக மீறுவதாகும் என்று கூறுகின்றோம்.

கவிஞர் அஹ்னப் ஜஸீம் இலங்கை பொலிசாரால் சுமத்தப்படும் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்று எங்களுக்கு ஒரு நியாயமான புரிதல் உள்ளது.

அதனால், கவிஞர் அஹ்னப் ஜஸீமை உடனடியாகவும் நிபந்தனை இன்றியும் விடுதலை செய்யுமாறும், அவருக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேற்கொள்ளும் வழக்கு விசாரணைகளை நிறுத்துமாறும், நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மேலும், கவிஞருக்கு இழைக்கப்பட்ட இழப்பு மற்றும் துன்பங்களுக்காக அவருக்கு ஒரு பெரிய நட்ட ஈட்டுத் தொகையை செலுத்துமாறும் நாம் இலங்கை அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு கீழே கையொப்பமிடும் நாம்:

(...)

Loading