இலங்கை அரசாங்கம் போலி குற்றச்சாட்டில் இளம் முஸ்லிம் கவிஞரை தடுத்து வைத்திருக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை கவிஞரான 25 வயது அஹ்னப் ஜஸீம், குற்றப் புலனாய்வுத் துறையினரால் மே 16 அன்று, முஸ்லிம் அதிதீவிரவாதத்தை ஊக்குவித்தார் என்று பொய்யாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர், குற்றச்சாட்டுக்கள் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கொவிட்-19 நோய்த்தொற்று பற்றிய கவலையின் சாக்கில், டிசம்பர் 8 நடக்கவிருந்த நீதிமன்ற விசாரணை, 2021 மார்ச் வரை ஒத்திவைக்கப்பட்டது. அஹ்னப்பின் தொடர்ச்சியான சிறைவாசம், உண்மையில், இராஜபக்ஷ அரசாங்கத்தின் தற்போதைய முஸ்லீம்-விரோத வேட்டையாடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களின் பாகமாகும்.

எந்தவொரு நபரையும் பல மாதங்கள் குற்றச்சாட்டு இன்றி தடுத்து வைக்கவும், சித்திரவதையின் மூலம் கறக்கப்பட்ட வாக்குமூலங்களை நீதிமன்றங்களில் ஆதாரமாக பயன்படுத்தவும் அதிகாரிகளை அனுமதிக்கும் பயங்கரவாத தடைச் சட்டம், பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இலங்கையின் 30 ஆண்டுகால இனவாத போரின் போது பரவலாக பயன்படுத்தப்பட்டது.

அஹ்னப் ஜஸீம் (முகநூல் படம்)

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், மோதலின் போது புலி சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் சிறையில் இருக்க, பலர் கைது செய்யப்பட்ட பின்னர் "காணாமல் போயினர்".

கவிஞரின் புனைப்பெயர் மன்னாரமுது அஹ்னப் ஆகும். ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் இணைந்த அதிதீவிரவாதக் குழுவால் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது, கடந்த வருடம் ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன், கவிஞரை முடிச்சிப்போட்டு விட குற்றப் புலனாய்வுத் துறை முயற்சிக்கிறது. இந்த குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

அவரது கவிதை புத்தகங்களில் ஒன்றான நவரசம், அவர் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக நிரூபிக்கிறது என்று குற்றப் புலனாய்வுத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த கூற்றுக்கள் பொய்யானவை. உண்மையில், இந்த புத்தகம் சமாதானம் மற்றும் இன ஒற்றுமையை ஊக்குவிப்பதுடன், ஐ.எஸ்.ஐ.எஸ். இன் கொலைகாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. அதற்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று கவிஞர் அறிவிக்கின்றார்.

உருவக்கு என்ற தலைப்பில் உள்ள கவிதைகளில் ஒன்று, ஆயுத வன்முறையை கண்டிப்பதுடன் எழுத்துக்களே ஆயுதம் என்று அறிவுறுத்துகிறது -உதாரணமாக, வாளை விட வலிமையானது பேனை.

மன்றக்கவி என்ற தலைப்பிலான இன்னொரு கவிதையில், அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அயோக்கியர்கள் என கண்டிக்கின்றார். ஏனையவை மத்திய கிழக்கில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய போர்களை கலைத்துவமாக எதிர்ப்பதுடன், மேலும் மத்தியதரைக் கடலைக் கடக்கும்போது உயிரை இழந்த அகதிகளின் நிலை குறித்து மிகுந்த அனுதாபத்துடன் குரல் கொடுக்கின்றது.

கொழும்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அஹ்னப்பின் சில கவிதைகள் கொழும்பில் உள்ள பிரதான சிறுவர் வைத்தியசாலையான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிறுவர் மனநல மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டன. அஹ்னப் தனது புத்தகத்தை சிறுவர்களுக்கு விநியோகித்திருப்பதால் இந்த பரிசீலனை அவசியம் என்று பொலிசார் கூறினர். எளிமையான மொழியில் எழுதப்படாத, மரபுக் கவிதை பாணியில் எழுதப்பட்ட அந்த கவிதைகள், வார்த்தைக்கு வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோடு, இந்த அரைகுறை மொழிபெயர்ப்புகளின் அடிப்படையில், அவை தீங்கு விளைவிப்பவையாகக் கருதப்பட்டன.

டெய்லிஎஃப்டி செய்தியின் படி, நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அறிக்கை, அஹ்னப்பின் கவிதைகள் “வன்முறையைத் தூண்டுகின்றன, பாலியல் உணர்வுகளைத் தூண்டுகின்றன, தற்கொலையை ஊக்குவிக்கின்றன, மரணத்தை மகிமைப்படுத்துகின்றன, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான அநீதியைப் பற்றி பேசுகின்றன, மற்றும் சில கவிதைகள் வன்முறைச் செய்பவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுகின்றன,” என அறிவிக்கின்றது.

அஹ்னப் ஜஸீம் ஒரு கவிதையை வாசிக்கின்றார் (யூடியூப்)

இருப்பினும், ஈஸ்டர் தாக்குதலுக்கு அடுத்த நாள் அவர் தனது வலைப்பதிவில் வெளியிட்ட மற்றொரு கவிதையில், அஹ்னப் வெளிப்படையாகவும், தெளிவான மொழியிலும், அந்த தாக்குதல்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பையும் கண்டிக்கின்ற அதே நேரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபத்தை வெளிப்படுத்துகிறார். இருப்பினும், குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த கவிதையை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது.

அஹ்னப் வடக்கு மாவட்டமான மன்னார், சிலவத்துரைச் சேர்ந்தவர். அவர் கைது செய்யப்பட்டபோது புத்தளம் மாவட்டம் மதுரங்குலியில் உள்ள ஸ்கூல் ஒஃப் எக்ஸலன்ஸ் இல் பிரத்தியேக வகுப்புகளை நடத்தி வந்தார். இந்த பாடசாலை, சேவ் த பேர்ல் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இந்த அமைப்பை பற்றி விசாரித்து வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம், அதை ஈஸ்டர் தாக்குதல்களுடன் அல்லது இலங்கையில் முஸ்லிம் அதிதீவிரவாதத்தை ஊக்குவிப்பதுடன் பினைத்துவிட முயற்சிக்கின்றது.

சேவ் த பேர்ல் அமைப்பின் இணைப்பாளரும் மனித உரிமை ஆர்வலருமான பிரபல வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வெடிகுண்டு தாக்குதலுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் மறுத்து வருகின்ற அதே நேரம், சட்ட ஆலோசகரை சந்திக்க விடாமல் தடுக்கப்படுவதற்கு எதிராக ஒரு ரிட் மனுவையும் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் ஹிஸ்புல்லாவின் சிறைவைப்பைக் கண்டித்து அவரை உடனடியாக விடுவிக்கக் கோரியுள்ளன. அவர் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது காவல்துறை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யவில்லை.

பயங்கரவாத குண்டுவெடிப்பு தொடர்பாக இன்னும் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. முன்னாள் அரசாங்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் உட்பட பல பிரசித்தமான நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முந்தைய அரசாங்கத்தின் தலைவர்கள், இராணுவம் மற்றும் பொலிஸ் உயர் மட்டத்தினருக்கும் ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமைக்கு முன்னதாகவே தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதற்கான தெளிவான ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக எச்சரிக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் அடங்குவர். வளந்து வந்த வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதற்குப் பயன்படுத்திக்கொள்வதன் பேரில், அவர்கள் எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல், தாக்குதல்களை நடத்த அனுமதித்தனர்.

கொழும்பு ஊடகங்கள் பயங்கரவாத குண்டுவெடிப்புகளை முஸ்லீம்-விரோத உணர்வைத் தூண்டுவதற்கு தொடர்ந்து பயன்படுத்துகின்றன. அதேபோல் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் பிரதமர் மஹிந்தவும் தங்களது தேர்தல் பிரச்சாரத்துக்கு முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை மையமாகக் கொண்டனர். தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும், இந்த வெறித்தனமான தமிழர்-விரோத பிரச்சாரத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளித்து பயன்படுத்தப்படுத்திக்கொள்கின்றன.

தனது பெரும் வணிகக் கொள்கைகளுக்கும், கொவிட்-19 தொற்றுநோய்க்கு அதன் போதிய பிரதிபலிப்பு இன்மை மற்றும் இராணுவ அடிப்படையிலான ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வுக்கும் எதிராக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களை எதிர்கொள்ளும் இராஜபக்ஷ அரசாங்கம், வேண்டுமென்றே பிளவுபடுத்தும் இனவாதத்தையும் எழுத்தாளர்கள் மீதான ஜனநாயக விரோத தாக்குதல்களையும் ஊக்குவித்து வருகிறது.

செப்டெம்பர் மாதம், ஹிஸ்புல்லாவின் வழக்கில், அஹ்னப்பின் கவிதை வெளிக்கொணரப்பட்ட பின்னரே, அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. அவர், அரசாங்கத்தின் முஸ்லிம்-விரோத வேட்டையாடலின் சமீபத்திய பலிகடா ஆவார். இந்த இளம் கவிஞர் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏழு உறுப்பினர்கள் கொண்ட அவரது குடும்பம், நிரந்தரமற்ற வேலைகள் மற்றும் சிறிய அளவிலான விவசாயத்தில் இருந்து கிடைக்கும் அற்ப வருமானத்தை சார்ந்துள்ளது. அவர்களால், சிறையில் போய் அஹ்னப்பை பார்வையிடுவது ஒரு புறம் இருக்க, ஒரு வழக்கறிஞருக்கு செலவிட முடியாது.

அஹ்னப்பின் குடும்பத்திற்கு அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடம், அவர் எதிர்கொள்ளும் சிறை நிலைமைகள் அல்லது அவரது வழக்கு நிலைமை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த வாரம் அவர் தனது பெற்றோருடன் சில நிமிடங்கள் தொலைபேசியில் பேசவும், அவர் நலமாக இருக்கிறார் என்று சொல்லவும், அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் கேட்டறியவும் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க..) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், அஹ்னப் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை நிபந்தனைகள் இன்றி எதிர்க்கின்றன. இந்த இளம் கவிஞரின் தற்போதைய சிறைவைப்பும் வேட்டையாடலும், எழுத்தாளர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான அரசாங்க தாக்குதல்களை எதிர்ப்பவர்கள் அனைவரையும் மௌனமாக்கும் முயற்சியாகும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் அஹ்னப்பை உடனடியாக விடுவிக்கக் கோரவும், அவருடைய ஜனநாயக உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடவும் முன்வர வேண்டும் எனகேட்டுக்கொள்கிறோம்.

Loading