முன்னோக்கு

குடியரசுக் கட்சியினர் ஜனவரி 6 தாக்குதல் விசாரணையை தடுக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

காங்கிரஸ் சபை மீதான ஜனவரி 6 தாக்குதலை விசாரிக்க இருகட்சிகளும் இடம்பெறும் ஓர் ஆணையம் அமைக்க அழைப்புவிடுத்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபை புதன்கிழமை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த மசோதா 252 க்கு 175 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த சபையில் நிறைவேற்றப்பட்டது என்றாலும், செனட் சபையின் குடியரசுக் கட்சி தலைவர் மிட்ச் மெக்கொன்னலும் பிற உயர்மட்ட குடியரசுக் கட்சியினரும் மேல் சபையில் அந்த மசோதா நிறைவேற்றப்படுவதைத் தடுக்க அவர்கள் தீர்மானகரமாக இருப்பதை அறிவித்தனர்.

The U.S. Capitol is seen as national guard members pass by on Capitol Hill in Washington, Thursday, May 20, 2021. (AP Photo/Jose Luis Magana)

அந்த மசோதாவுக்கு எதிரான முட்டுக்கட்டைகளைக் கடக்க குறைந்தபட்சம் 10 குடியரசுக் கட்சி செனட்டர்கள் 50 ஜனநாயகக் கட்சியினருடன் இணைய வேண்டியிருக்கும், ஆனால் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியைத் தூண்டிவிட்ட முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அந்த முன்மொழிவைத் தடுக்க வேண்டுமென கோரியதும், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அந்த மசோதாவை ஆதரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனவரி 6 இல் வெள்ளை மாளிகைக்கு வெளியே ஒரு பேரணிக்காக ட்ரம்ப் தான் அந்த பாசிச கும்பலை வாஷிங்டனுக்கு அழைத்தார், பின்னர் அவர்களை தலைமை செயலகத்தை நோக்கி அணிவகுக்க வலியுறுத்தும் ஓர் உரை நிகழ்த்தினார். தலைமை செயலகத்தில் வேண்டுமென்றே பலவீனமாக வைக்கப்பட்டிருந்த பொலிஸ் எல்லைகளை உடைத்த அவர்கள், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடெனுக்கு கணிசமான வெற்றியை அளித்திருந்த தேர்வுக்குழு வாக்குகளைக் காங்கிரஸ் சபை அங்கீகரிப்பதை நிறுத்துவதற்காக அக்கட்டிடத்திற்குள் நுழைந்து அதை அடித்து நொறுக்கினர்.

ட்ரம்பின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் காங்கிரஸ் சபையின் கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்ததால், ட்ரம்ப்-ஆதரவு தாக்குதல்காரர்கள் அவரைத் தூக்கிலிட வேண்டுமென கோஷமிட்டனர். பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி மற்றும் பிற ஜனநாயகக் கட்சியினரையும் படுகொலை செய்ய அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். அந்த வன்முறை தாக்குதல், தலைமை செயலகத்தின் 140 பொலிசார் காயமடையும் அளவுக்கு இருந்தது.

இந்த சம்பவங்கள் 135 நாட்களுக்கு முன்னர் நடந்தவை என்றாலும், அவற்றை குழிதோண்டி புதைக்கவும், அவற்றின் முக்கியத்துவத்தை நிராகரிக்கவும், அமெரிக்க பொதுமக்களின் ஒருமித்த நினைவிலிருந்து அவற்றை அகற்றவும் கூட அங்கே ஏற்கனவே ஓர் ஒருங்கிணைந்த முயற்சி இருந்து வருகிறது. இது பிரதிநிதிகள் சபையின் கடைசி வரிசை குடியரசுக் கட்சியாளர் ஆண்ட்ரூ கிளைட் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டது, அவர் ஜனவரி 6 இல் என்ன நடந்ததோ அது "சாதாரண சுற்றுலா பயணம்" தவிர வேறொன்றுமில்லை என்று அறிவித்தார். (தாக்கும் கும்பலுக்கு எதிராக பிரதிநிதிகள் சபையைப் பெரும் பிரயத்தனத்துடன் பாதுகாப்பதில் கிளைட் மற்ற பிரதிநிதிகளுடன் இணைந்திருந்த அன்றைய நாள் புகைப்படங்கள் உள்ளன.)

ஆனால் ஜனவரி 6 தாக்குதலை விசாரிப்பதற்கு இருகட்சி ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான ஜனநாயகக் கட்சி தலைமையிலான முயற்சியானது, முயற்சிக்கப்பட்ட அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் சம்பந்தப்பட்ட சக்திகளை அம்பலப்படுத்துவதற்கான உண்மையான முயற்சி அல்ல. இது, சபாநாயகர் பெலோசி மற்றும் பிற முன்னணி ஜனநாயகக் கட்சியினர் அவர்கள் மேற்கொள்ள விரும்பும் விசாரணைக்கு முன்மாதிரியாக 9/11 ஆணையக்குழுவை தொடர்ந்து துணைக்கு இழுப்பதிலிருந்தே எடுத்துக்காட்டப்படுகிறது.

9/11 ஆணையக்குழு, செப்டம்பர் 11, 2001 சம்பவங்களை உத்தியோகபூர்வமாக பூசிமொழுவதாக இருந்தது, அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்கும் அல் கொய்தா விமானக் கடத்தல்காரர்களுக்கும் இடையிலான தொடர்புகளை வேண்டுமென்றே அது மறைத்தது, அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழையவும், விமானப் பயிற்சி பள்ளிகளில் சேரவும் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்கள் நகர்வுகளை CIA மற்றும் FBI கண்காணித்த போதும் கூட எந்த தலையீடும் செய்யப்படவில்லை.

இராணுவ-உளவுத்துறை எந்திரம் அந்த தாக்குதல்களை முன்னெடுக்க அனுமதித்தது என்ற யதார்த்தத்தை மூடிமறைக்க, "புள்ளிகளை இணைப்பதில் ஏற்பட்ட தோல்வி" என்ற அர்த்தமற்ற சாக்குபோக்கு முன்வைக்கப்பட்டது, ஏனெனில் அது ஒரு திட்டவட்டமான மூலோபாய இலக்கிற்குச் சேவையாற்றியது: அதாவது, முதலில் ஆப்கானிஸ்தான் மற்றும் பின்னர் ஈராக் படையெடுப்புகள் மூலம், மத்தியக் கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவுக்குள் அமெரிக்க இராணுவ பலத்தைக் காட்டுவதற்கான ஓர் அரசியல் சூழலை அது அமெரிக்காவுக்குள் உருவாக்கியது.

முன்மொழியப்பட்ட ஜனவரி 6 ஆணையக்குழுவில் ஏதாவது இருக்கிறதென்றால், அது 2020 ஜனாதிபதித் தேர்தல் திருடப்பட்டது என்ற ஆதாரமற்ற வாதங்களுடன் அந்த தாக்குதலைத் தூண்டிய கட்சிக்கு அந்த விசாரணை நடைமுறைகளில் சம குரல் வழங்கப்படும் என்பதால், அது அரசியல் மூடிமறைப்பில் இன்னும் கூடுதல் ஒத்திகையாக இருக்கும். இது எப்படி இருக்கிறதென்றால், பல மில்லியன் டாலர் வங்கிக் கொள்ளைக்குப் பின்னர், அந்த துப்பாக்கிதாரிகள் விசாரணைக்குக் கொண்டு வரப்படும் போது, அவர்கள் தப்பிச் செல்வதற்காக ஓட்டுநரும் நீதி விசாரணை குழுவில் என்ன நடக்கிறதென பார்ப்பதற்கு ஓரிடமும் வழங்குவதைப் போல உள்ளது!

அமெரிக்க இரு-கட்சி ஆட்சிமுறையின் செயல்பாட்டில் வழக்கமாக நடப்பதைப் போல, பேரம்பேசல்களின் இறுதி முடிவை போதுமானதாக இல்லை என்று குடியரசுக் கட்சியினர் ஆவணத்துடன் கண்டனம் செய்வதற்காக மட்டும், ஜனநாயகக் கட்சியினர் ஒன்று மாற்றி ஒன்றாக விட்டுக்கொடுப்புகளை வழங்கி, முடிவில்லாமல் அவர்கள் குடியரசுக் கட்சியினரிடம் கெஞ்சினார்கள். காங்கிரஸ் சபையின் இரண்டு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையில் இருக்கின்ற போதும், இதற்காக தான், பெலோசி ஆணைக்குழுவில் சம அளவு எண்ணிக்கையையும், மற்றும் குடியரசுக் கட்சியின் ஒப்புதல் இல்லாமல் எந்த அழைப்பாணைகளும் பிறப்பிக்கக்கூடாது என்பதையும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் வெள்ளிக்கிழமை பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வை குழுவின் ஜனநாயகக் கட்சி தலைவருக்கும் அதே சம அந்தஸ்தில் உள்ள குடியரசுக் கட்சி தலைவருக்கும் (இவர் இந்த உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக பெலோசி மற்றும் பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் கெவின் மெக்கார்த்தியால் நியமிக்கப்பட்டவர்) இடையே உடன்பாடு எட்டப்பட்டதும், குடியரசுக் கட்சியினர் சில நாட்களிலேயே அதை மீறினர்.

மே 17 திங்கட்கிழமை மாலை, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையின் சிறுபான்மை பிரிவு கொறடாக்கள், பிரதிநிதி ஸ்டீவ் ஸ்க்ளேஸ் மற்றும் செனட்டர் ஜோன் தூனே ஆகியோர் இருகட்சி ஒருமித்த ஓர் ஆணைக்குழு நிறுவப்படுவதைக் குடியரசுக் கட்சியினர் தடுக்க முயலவில்லை என்று தெரிவித்தார். ஆனால், செவ்வாய்கிழமை, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் தலையீடு வந்தது, அவர் முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவைக் கண்டித்தும், பெயரிட்டே, மெக்கார்த்தி மற்றும் மெக்கொன்னல் அதன் மீதான அனைத்து விவாதத்தையும் நிறுத்த வேண்டுமென கோரியும் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

காணக்கூடிய வகையில் Mar-a-Lago வசமிருந்து முன்கூட்டியே குறிப்புகளைக் பெற்ற மெக்கார்த்தி செவ்வாய்கிழமை காலை அவர் எதிர்ப்பை தெரிவித்து ஏற்கனவே ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த ஆணைக்குழுவை ஆதரிப்பதா மற்றும் அந்த முன்மொழிவை "கேட்க தயாராக" இருக்கிறாரா என்பதை பற்றி "முடிவெடுக்கவில்லை" என்று கூறியவாறு மெக்கோனெல் இன்னமும் பாசாங்கு செய்துக் கொண்டிருக்கிறார். ஆனால் புதன்கிழமை, ட்ரம்பின் அறிக்கை வெளியான சில மணி நேரத்தில், மெக்கோனெல், "பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியினரின் ஒருதலைபட்சமான மற்றும் பாரபட்சமான முன்மொழிவு" என்று குறிப்பிட்டு அந்த முன்மொழிவைத் திட்டவட்டமாக அவர் எதிர்ப்பதாக அறிவித்தார்.

பிரதிநிதிகள் சபை விவாதத்தின் போது ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பு, குடியரசுக் கட்சியினரை வலதிலிருந்து தாக்குவதாக இருந்தது. “தலைமைச் செயலக பொலிஸை ஈயக் குழாய்களைக் கொண்டு தலையில் தாக்கிய" நபர்கள் மீதான இருகட்சி விசாரணையைக் குடியரசுக் கட்சி எதிர்ப்பதால், "அமெரிக்காவில் ஒவ்வொரு சாமானிய பொலிஸ்காரரின் முகத்தில் அறையும்" குடியரசுக் கட்சியின் நிலைப்பாட்டை ஓஹியோ ஜனநாயகக் கட்சியின் டிம் ரெயான் கண்டித்தார். நல்ல வேளை, “சீனாவை நாம் எதிர்கொள்ள போகிறோம் என்பதாக இருந்திருந்தால்" இவ்வாறு இருகட்சி சேர்ந்த நடவடிக்கையைக் கைவிடுவது அமெரிக்காவின் அந்தஸ்தைக் கீழறுக்கிறது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இத்தகைய கருத்துக்கள் பிற்போக்கானவை மட்டுமல்ல, இவை ஜனவரி 6 சம்பவங்கள் முன்நிறுத்தும் மையப் பிரச்சினையில் இருந்து திசைதிருப்புவதாகவும் உள்ளன. காங்கிரஸ் சபை மீதான பாசிச தாக்குதல், 81 மில்லியன் பேர் பைடெனுக்கு வாக்களித்த 2020 தேர்தலை கவிழ்க்கவும், மற்றும் வார்த்தைகளில் வெளிப்படவில்லை என்றாலும் வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்பை ஒரு சர்வாதிகாரியாக வைத்திருக்கவும் செய்யப்பட்ட ஒரு முயற்சியாக இருந்தது.

அந்த தாக்குதலில் Proud Boys அமைப்பு போன்ற பாசிச குழுக்கள் முன்னிலையில் இருந்திருந்தாலும், பத்தாயிரக் கணக்கான தேசிய பாதுகாப்புப் படை துருப்புக்கள் மற்றும் ஆயுதப்படை துருப்புக்கள் உட்பட அமெரிக்க அரசாங்கத்தின் ஆசனத்தைச் சூழ்ந்துள்ள பாரிய இராணுவ மற்றும் பொலிஸ் எந்திரம் திட்டமிட்டு ஒதுங்கிக் கொண்டதால் மட்டுமே அந்த தாக்குதல் சாத்தியமாகி இருந்தது. அந்த படைகள் தலைமை செயலகத்திற்கு அனுப்பப்பட வேண்டுமென காங்கிரஸ் சபை தலைவர்கள் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் முறையீடுகளும் இருந்த போதும் கூட, அவற்றை நிலைநிறுத்துவது வேண்டுமென்றே தாமதிக்கப்பட்டது என்பது அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.

பென்டகனில் ட்ரம்பால் நியமிக்கப்பட்டிருந்த, இடைக்கால பாதுகாப்புச் செயலர் கிறிஸ்டோபர் மில்லரும் மற்றும் தலைமை செயலகத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்க தனது துருப்புகளை அனுப்ப அனுமதிக்க வேண்டுமென D.C. தேசிய பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த பாதுகாப்புப் படை தளபதி ஜெனரல் வில்லியம் வாக்கரிடம் இருந்து வந்த கோரிக்கைகளை மூன்று மணி நேரம் 19 நிமிடங்களுக்கு (199 நிமிடங்கள்) மறுத்தளித்து நிறுத்தி வைத்திருந்த இராணுவச் செயலர் ரியான் மெக்கார்த்தியும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தனர்.

மார்ச் 5, 2021 இல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு விளக்கியது:

ஜனவரி 6 சம்பவங்கள் ஆச்சரியத்திற்கு அப்பாற்பட்டவை. அந்த கிளர்ச்சிக்கு பல மாதங்களுக்கு முன்னரே, ஒரு தொடர்ச்சியான அரசியல் நெருக்கடி இருந்தது, அப்போது அமெரிக்க ஜனாதிபதி அவர் சமாதானமான முறையில் அதிகார மாற்றத்தை ஏற்கப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்தினார். குறிப்பாக ஜனவரி 6 தேதியை இலக்கில் வைத்திருந்த திட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை உளவுத்துறை முகமைகளும் இராணுவமும் நன்கு அறிந்திருந்தன.

ஆனால் அதற்கு எதிர்மாறாக, ஒரு திட்டவட்டமான அரசியல் மூலோபாயமாக செயல்படுவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, அந்த பாசிச குழுக்கள் தலைமை செயலகக் கட்டிடத்தின் மீது நடைமுறையளவில் சுதந்திரமாக கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன. செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகளில் இருந்து பிணைக் கைதிகளைத் தேடிப் பிடிக்க அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டு வந்ததை, கலகக்காரர்களுக்குள் இருந்த இராணுவப் பயிற்சி பெற்ற கூறுபாடுகள் அறிந்திருந்தன.

அந்த சம்பவத்தின் போது, ட்ரம்ப் அவசரகால நிலையை பிரகடனம் செய்து, காங்கிரஸ் சபையை முடக்கி, பைடெனின் வெற்றியை அங்கீகரிப்பதை காலவரையின்றி தாமதப்படுத்தியிருப்பார், மேலும் அவரே ஜனாதிபதி பதவியைத் தொடர்வதற்கு ஏற்ப, ஏதோவொரு வடிவில், ஜனநாயகக் கட்சியை சரணடையச் செய்வதில் போய் முடிந்திருக்கும் பேரம்பேசல்களை தொடங்கி இருப்பார். அந்த தாக்குதல் அதன் நோக்கங்களை அடையத் தவறிவிட்டது என்பது தெளிவான பின்னர் தான் இராணுவம், தலைமை செயலகத்தைக் காப்பாற்ற உள்நுழைந்தது, பின்னர் ட்ரம்ப் பகிரங்கமாக கலகத்தை நிறுத்துமாறு அழைப்புவிடுத்தார்.

உலக சோசலிச வலைத் தள அறிக்கை பின்வரும் தீர்மானத்தை வரைந்தது:

ஜனநாயகக் கட்சியின் ஆதரவின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்த விசாரணையும் அந்த சதித்திட்டத்தில் ஈடுபட்ட சக்திகளை அம்பலப்படுத்த சேவையாற்றாது. அதுவே வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியாக இருப்பதால், ஜனநாயகக் கட்சியினர் அவை வெளிப்படுவதன் அரசியல் மற்றும் சமூக விளைவுகளைக் குறித்து மிரள்கின்றனர்.

ஜனவரி 6 இன் நூற்றி தொண்ணூற்றொன்பது நிமிடங்கள் ஒரு எச்சரிக்கையாகும். அந்த சம்பவம் எவ்வளவு தீவிரமாக இருந்ததோ, அதே அளவுக்கு அதற்கான விடையிறுப்பும் முக்கியத்துவத்தில் குறைந்ததில்லை. ஜனநாயக உரிமைகளுக்காக ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவையோ அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகளையோ நம்ப முடியாது. தொழிலாள வர்க்கம் அடுத்த கட்டத்தில் தயாரிப்பின்றி இருக்கக்கூடாது. அது இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக, தனது சொந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அது சுயாதீனமாக தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.

ஜனவரி 6 சம்பவம் மீது இருகட்சி ஆணைக்குழு என்ற ஜனநாயகக் கட்சியினரின் அரசியல் மூடுதிரைக்கு ஏற்படவிருக்கும் முடிவு மட்டுமே இந்த மதிப்பீட்டை கூடுதலாக நிரூபணம் செய்யும்.

Loading