முன்னோக்கு

பொலிஸால் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டுக்குப் பின்னர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இன்றிலிருந்து ஓராண்டுக்கு முன்பு, மே 25, 2020 இல், மினெயாபொலிஸ் பொலிஸ் அதிகாரி டெரெக் சோவன் (Derek Chauvin) ஒன்பது நிமிடங்களுக்கும் அதிகமாக ஜோர்ஜ் ஃபுளோய்ட் ஜூனியர் கழுத்தில் கால் முட்டியை வைத்து நெரித்தது, பட்டப்பகலில் அவரைப் படுகொலை செய்தார். வீதியில் ஃபுளோய்டின் கைகள் பின்னால் விலங்கிடப்பட்டு குனிய வைக்கப்பட்டிருந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அதை நிறுத்துமாறு பொலிஸிடம் கெஞ்சினார்கள், ஃபுளோய்ட் "என்னால் சுவாசிக்க முடியவில்லை!" என்று மீண்டும் மீண்டும் கதறி, அவர் உயிருக்காக மன்றாடினார்.

ஃப்ளோய்டின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த போராட்டங்கள், வேகமாக மினெயாபொலிஸில் உள்ளூர் அமைதியின்மையில் இருந்து பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தை நிறுத்தக் கோரிய உலகளாவிய போராட்டங்களின் எழுச்சியாக விரிவடைந்தன. அந்த ஆர்ப்பாட்டங்கள், பல இன மற்றும் பல தேச பன்முகத்தன்மையைக் கொண்டிருந்தன. மக்கள் வாழும் ஒவ்வொரு கண்டத்திலும், 2,000 இக்கும் அதிகமான சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் அந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. அமெரிக்காவில் மட்டும், ஒரு தருணத்தில் 15 முதல் 26 மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதால், அவை அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களாகின. தொழிலாளர்கள் மிகப் பெரிய நகரங்களின் வீதிகளை ஆக்கிரமித்தனர், பெரும்பாலும் வெள்ளை இனத்தவர்கள் வசிக்கும், பல சிறிய கிராமப்புற நகரங்களுக்கும் அந்த போராட்டங்கள் பரவின.

அமெரிக்காவில் பொலிஸ் படுகொலை கொள்ளைநோய் மீதான சீற்றமே பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கான உடனடி தீப்பொறியாக இருந்தது என்றாலும், அது ஆழத்திலிருந்த சமூக நிகழ்வுபோக்குகளை வெளிப்படுத்தியது. உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் ஒரு முக்கிய கட்டத்தில் ஃபுளோய்ட் படுகொலை நடந்திருந்தது.

மார்ச் மாத இறுதியில் வங்கிகளுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களைக் கையளித்த பின்னர், ஆளும் வர்க்கம் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பச் செய்யும் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. அதே நேரத்தில், அந்த தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு, கடன் வரம்புகளைக் குறைத்து, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கைத் தரங்களில் நீடித்த சரிவையும், மற்றும் சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சியையும் பெரியளவில் தீவிரப்படுத்தியது.

போராட்டங்கள் மீது ட்ரம்ப் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான விடையிறுப்பு, ஒரு பரந்த சமூக வெடிப்புக்கான அச்சத்தை வெளிப்படுத்தியது. நகரங்கள் ஊரடங்கைத் திணித்த அதேவேளையில், வெள்ளை மாளிகையும் 30 க்கும் அதிகமான மாநிலங்களும் தேசிய பாதுகாப்பு படை மற்றும் பிற இராணுவ பிரிவுகளில் இருந்து 96,000 இக்கும் அதிகமான துருப்புக்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தன. அமெரிக்க நகரங்கள் எங்கிலும் பொலிஸ் அராஜக வன்முறையில் ஈடுபட்டது, இது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரால் ஒருபோல மேற்பார்வையிடப்பட்டது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் விடையிறுப்பு, ஒரு ஜனாதிபதி ஆட்சிக்கவிழ்ப்பை நடத்துவதற்கான முயற்சியாக இருந்தது. அந்த படுகொலைக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், ட்ரம்ப் ரோஸ் கார்டனில் உரை நிகழ்த்தினார், அதில் அவர் உள்நாட்டு மண்ணிலேயே இராணுவத்தை நிலைநிறுத்த கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தை பயன்படுத்த அச்சுறுத்தியதுடன், அது “ஓர் இயக்கம்” அது "நசுக்கப்பட வேண்டும்" என்று ஆளுநர்களை எச்சரித்தார்.

மறுபுறம், ஜனநாயகக் கட்சியினர் பொலிஸ் ஒடுக்குமுறையை ஆதரித்த அதேவேளையில், போராட்டங்களைக் கொள்ளையடித்து அவற்றை இனவாத தடங்களில் திசைதிருப்பி விட தலையீடு செய்தனர். ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களின் போலி-இடது துணை அமைப்புக்களது கூற்றுப்படி, பொலிஸ் படுகொலைக்கு வர்க்க உறவுகளுடன் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்பட்டது. அதற்கு மாறாக, அது "அமைப்புமுறை சார்ந்த இனவாதம்" சம்பந்தமான பிரச்சினை என்றும், அதற்கு ஓர் அரசு அமைப்பாக பொலிஸை அல்ல, மாறாக ஒட்டுமொத்த மக்களையும் குற்றஞ்சாட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இது மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட, நன்கு நிதியுதவி பெற்ற ஒரு பிரச்சாரமாக இருந்தது, கருப்பினத்தவரின் உயிரும் மதிப்புடையதே (Black Lives Matter) அமைப்பு போன்ற அமைப்புகளுக்குப் பெருநிறுவனங்கள் பத்து மில்லியன் கணக்கான பண உதவி வழங்கின.

சந்தேகத்திற்கிடமின்றி, பல பொலிஸ் படுகொலைகளில் இனவாதம் ஒரு பங்கு வகிக்கிறது தான். முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் நலன்களைப் பாதுகாக்கும் பணியில் "ஆயுதமேந்தியவர்களது சிறப்பு அமைப்புக்களின்" பதவிகளில் மிகவும் பின்தங்கிய தீய சமூக சக்திகள் வளர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் அனைத்திற்கும் மேலாக விகிதாசாரமற்ற முறையில் இனச் சிறுபான்மையினர் கொல்லப்படுவது இன சிறுபான்மைக் குழுக்களிடையே நிலவும் உயர்ந்த வறுமை மட்டத்தால் விளக்கப்படுகிறது. பொலிசாரால் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்களை இணைக்கும் பொதுவான நூலிழை என்னவென்றால், அவர்களின் இனம் என்னவாக இருந்தாலும், அவர் வறிய அல்லது தொழிலாள வர்க்க பின்னணியில் இருக்கிறார்கள்.

ஃபுளோய்ட் படுகொலை செய்யப்பட்டு இந்த ஓராண்டில், பொலிஸால் 1,000 இக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பலர் வெள்ளை இனத்தவர்கள் ஆவர். ஒவ்வொரு ஆண்டும் பொலிஸால் கொல்லப்படுபவர்களில் வெள்ளை இனத்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் கணக்கில் வருகிறார்கள்.

ஃபுளோய்ட் இறந்த தேதிக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, திங்கட்கிழமை, டென்னசியில் இருந்து புதிதாக வெளியிடப்பட்ட ஒரு காணொளி, மார்ஷல் உள்ளாட்சி சிறை அதிகாரிகள் கை-கால்கள் கட்டப்பட்டு குப்புற படுக்க வைக்கப்பட்ட ஒருவரை ஏறக்குறைய நான்கு நிமிடங்கள் கால் முட்டியால் நெரிப்பதைக் காட்டுகிறது. 48 வயதான வில்லியம் ஜென்னெட் என்ற அந்த வெள்ளை இன மனிதர், பொலிஸால் ஃபுளோய்ட் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், மே 6, 2020 இல் பொலிஸாரின் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

அந்த காணொளியில், ஜென்னெட் மூச்சுவிட முடியவில்லையென அதிகாரிகளிடம் கெஞ்சியதை அவர் பொலிஸை வெறுப்புடன் திட்டியதாகத் தெரிவித்தனர். “உதவுங்கள்! என்னை இவர்கள் கொன்றுவிடுவார்கள்!” என்று கத்தும் அவர், தன்னால் மூச்சு விட முடியவில்லை என்று கதறுகிறார். “உன்னால் மூச்சு விட முடியாது, முட்டாள் வேசிமகனே,” என்று ஒருவர் பதிலுரைத்தார். மார்ஷல் உள்ளாட்சியின் மருத்துவ பரிசோதகர் அலுவலகம் ஜென்னெட்டின் மரணத்தை படுகொலையாக உறுதிப்படுத்தியது என்றாலும், ஒரு பெரு நடுவர் மன்ற விசாரணை அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரொருவர் மீதும் குற்றச்சாட்ட மறுத்துவிட்டது.

ஏறக்குறைய துல்லியமாக ஜோர்ஜ் ஃபுளோய்டுக்கு நடந்த அதே மாதிரி நடந்திருந்த அவர் மரணம், பொலிஸ் வன்முறை அமெரிக்க சமூகத்தின் அமைப்புமுறையிலேயே உள்பொதிந்துள்ள ஒரு பிரச்சினை என்ற சொல்லாடலுக்கு பொருத்தமாக இல்லை என்பதால், ஜென்னெட் இன் கொடூர மரணம் அந்நேரத்தில் முதலாளித்துவ ஊடகங்களால் ஆராயப்படாமலேயே விடப்பட்டது. நியூ யோர்க் டைம்ஸும் ஏனைய பிரதான ஊடகங்களும் வெள்ளை இன தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான பொலிஸ் படுகொலையைப் பெரும்பாலும் ஒருபோதும் வெளியிடுவதில்லை.

இது வரையில் வெள்ளை இனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கின்ற நிலையில், உலக சோசலிச வலைத்தளம் விவரித்துள்ளதைப் போல, பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தை இனரீதியாக காட்டுவதற்கான முயற்சியானது அமெரிக்காவில் பொலிஸ் வன்முறை கொள்ளைநோய்க்குப் பின்னால் இருக்கும் வர்க்க பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கே சேவையாற்றுகிறது.

வர்க்கப் பிரச்சினைகளை மூடிமறைக்கும் முயற்சி, பொலிஸ் வன்முறையை எதிர்க்க என்ன தேவைப்படுகிறதோ, அதாவது, எல்லா இன, வம்சாவழி மற்றும் தேசியங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தி ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தின் அபிவிருத்தியைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மட்டுமே, சமத்துவமின்மை, ஒடுக்குமுறை மற்றும் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரைப் பிளவுபடுத்துவதற்காக ஆளும் வர்க்கம் ஊக்குவிக்கும் இனவாதம் உள்ளடங்கலாக பிற்போக்குத்தனத்தின் எல்லா வெளிப்பாடுகளையும் எதிர்ப்பதற்கான ஒரே அடித்தளமாகும்.

அமெரிக்காவில் பொலிஸ் வன்முறை பரவலாக இருப்பது, முன்னெப்போதும் இல்லாதளவில் சமூக சமத்துவமின்மை மட்டங்களால் குணாம்சப்பட்டு, வர்க்க விரோதப் பகைமைகளுடன் பிளவுபட்டுள்ள ஒரு சமூகத்தின் விளைபொருளாகும். 2020 இல் உருவாக்கப்பட்ட 412 புதிய பில்லியனர்களுடன் சேர்ந்து, சமூகத்தின் உயர் மட்டத்தினரின் கைகளில் குவிந்துள்ள செல்வவளம் கடந்தாண்டு பாரியளவில் அதிகரித்துள்ளது.

கடந்தாண்டில் என்ன மாறியுள்ளது? இப்போது வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸ் சபையின் இரண்டு அவைகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஜனநாயகக் கட்சியினர், 2013 இல் இருந்து அதே விகிதத்தில், அதாவது நாளொன்றுக்கு சராசரியாக மூன்று நபர்களைப் பொலிஸ் தொடர்ந்து படுகொலை செய்து வருகின்ற போதும், தொழிலாளர்கள் சீர்திருத்தத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளனர். சட்ட அமலாக்க பொறுப்பைத் தாங்கிப் பிடிக்கும் கொள்கைகள் என்ற பாசாங்குத்தனத்தில் அறிமுகமாக இருக்கும் 2020 பொலிஸ் சட்டத்தில் ஊதிப்பெரிதாக்கப்பட்ட ஜோர்ஜ் ஃபுளோய்ட் நீதி காங்கிரஸ் சபையில் அனைத்து உத்வேகதையும் இழந்துள்ளதுடன், ஒரு பொலிஸ் சீர்திருத்த சட்டமசோதாவை நிறைவேற்றுவதற்கான ஜனாதிபதி ஜோ பைடெனின் செவ்வாய்கிழமை காலக்கெடுவையும் தவற விட உள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினரை விட குறைந்தவர்கள் இல்லை என்பதோடு, அவர்கள் முதலாளித்துவ அரசு மற்றும் அதன் பொலிஸின் ஈவிரக்கமற்ற பாதுகாவலர்கள் என்பதை பைடென் நிர்வாகம் மீண்டும் எடுத்துக்காட்டி வருகிறது.

ஆனால் மற்றொரு அபிவிருத்தியும் வெளிப்படுகிறது— அதுவாவது, பெருவணிக தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை உடைத்து அதிலிருந்து விடுபட போராடி வரும் வாகனத்துறை தொழிலாளர்கள், கல்வியாளர்கள், சுகாதார மருத்துவத்துறை தொழிலாளர்கள், எஃகுத்துறை தொழிலாளர்கள், சுரங்கத்துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் போராட்ட வடிவங்களில், ஆளும் வர்க்க கொள்கைகளுக்கு எதிராக வெடிப்பார்ந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஆரம்ப வளர்ச்சியாகும்.

இந்த தொற்றுநோய் அனைத்து இன மற்றும் தேசியத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நனவில் மிகப் பெரியளவில் தீவிரமயப்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் மீது அணிதிரட்டப்படும் இந்த சமூக சக்தி தான் அமெரிக்காவில் பொலிஸ் படுகொலை கொள்ளைநோய்க்கு எதிரான உண்மையான அடித்தளமாகும்.

Loading