கறுப்பின மக்களின் வாழ்வும் முக்கியம் அமைப்பு நெப்போலியன் மற்றும் பிரெஞ்சு புரட்சியுடன் போருக்கு செல்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவின் இனரீதியான மோதலையும், 1619 இல் அமெரிக்காவில் அடிமைகளின் முதல் வருகையையும் மையமாக கொண்டு எழுதப்பட்ட, அமெரிக்காவின் முழு வரலாற்றையும் திருத்தி எழுத முற்பட்டு மதிப்பிழந்த தனது முயற்சியான 1619 திட்டத்தை நியூ யோர்க் டைம்ஸ் மீண்டும் தொடர்கின்றது. இவர்களால் ஆதரவளிக்கப்பட்ட இனவாத சூழ்நிலையால் உந்தப்பட்ட, கறுப்பின மக்களின் வாழ்வும் முக்கியம் (Black Lives Matter) அமைப்பின் குட்டி முதலாளித்துவ ஆதரவாளர்களால் 1776 அமெரிக்கப் புரட்சியினதும், அமெரிக்க உள்நாட்டுப் போரில் அடிமை எதிர்ப்பு சக்திகளின் தலைவர்களின் சிலைகளும் வீழ்த்தப்பட்டது.

இப்போது, டைம்ஸ் பத்திரிகை பிரெஞ்சு புரட்சியை இலக்கு வைத்துள்ளது. மார்ச் மாதத்தில், பேராசிரியர் மார்லீன் டோட் (Marlene Daut) எழுதிய "நெப்போலியன் ஒரு வீரனாக கொண்டாட வேண்டிய ஒருவர் அல்ல" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. கறுப்பின மக்களின் வாழ்வும் முக்கியம் அமைப்பின் ஆதரவாளரான அவர், மே 5, 1821 இல் நெப்போலியனின் மரணத்தின் 200வது ஆண்டு கொண்டாடப்படுவதைக் கண்டு கோபப்படுகிறார். அவர் நெப்போலியனைக் கண்டித்து, கறுப்பின எதிர்ப்பு இனவாத இனப்படுகொலையால் அவர் உந்தப்பட்டதாகக் கூறுகிறார்:

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அடிமையுடமைவாதிகள் மற்றும் காலனித்துவவாதிகளின் சிலைகள் கவிழ்க்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு அல்லது அகற்றப்பட்ட ஒரு வருடத்திற்குப் பின்னர், பிரான்ஸ் எதிர் திசையில் செல்ல முடிவு செய்துள்ளது. ஹைட்டிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கறுப்பினப் பெண்ணும், பிரெஞ்சு காலனித்துவம் பற்றிய பட்டப்படிப்பாளரான எனக்கு நவீன இனப்படுகொலையை கட்டியமைத்தவரும், பிரெஞ்சு கரீபியனில் அடிமைத்தனத்தை மீளமைத்த மற்றும் எனது முன்னோர்களை கொல்ல எரிவாயு அறைகளை உருவாக்க அதன் படைகள் அனுப்பிய மனிதனைக் கொண்டாட பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது என்பதைக் காண குறிப்பாக மிகவும் வேதனையாக உள்ளது.

1789 புரட்சியால் பிரகடனப்படுத்தப்பட்ட “சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்” ஆகியவற்றின் கொள்கைகளை நெப்போலியன் மிகவும் வெளிப்படையாக காட்டிக் கொடுத்ததை டோட் தேர்ந்தெடுத்துள்ளார். இளம் பிரெஞ்சுக் குடியரசு வரம்பிலா முடியாட்சி மற்றும் அடிமையுடமை முறையை ஒழித்ததற்காக ஐரோப்பாவின் மன்னர்கள் அதன் மீது போர் தொடுத்தபோது 1799 இல் ஒரு சதித்திட்டத்தினால் நெப்போலியன் ஆட்சியைப் கைப்பற்றினார். பின்னர், 1789-94 வரையில் பிரான்சில் முடிவுக்கு வந்த நிலப்பிரபுத்துவ சலுகைகளுக்கு எதிரான போராட்டங்களை அவர் ஆயுதபலத்தால் ஐரோப்பா முழுவதும் விரிவுபடுத்தினார்.

எவ்வாறாயினும், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கான நிலைமைகளை ஒருங்கிணைப்பது தவிர்க்க முடியாமல் பிரெஞ்சு புரட்சியின் வாக்குறுதிகளை காட்டிக் கொடுப்பதாக ஆனது. மதிப்பிழந்த அடிமை மற்றும் சர்க்கரை வர்த்தகம் அட்லாண்டிக் பெருங்கடல் வர்த்தகத்தின் மையத்தில் இருந்தது, பிரிட்டனுடன் 1802 சமாதான உடன்படிக்கை பேச்சுவார்த்தையின் போது நெப்போலியன் அடிமைத்தனத்தை ஒழித்த 1794 ஆணையை இரத்து செய்தார். 1791 ஹைட்டிய புரட்சியால் தூக்கியெறியப்பட்ட அடிமைத்தனத்தை மீண்டும் திணிப்பதற்கான தோல்வியுற்ற முயற்சியில் இரத்தக்களரி மிக்க போரை நடத்திய ஒரு இராணுவத்தை அவர் ஹைட்டிக்கு அனுப்பினார். பின்னர், 1804 இல் அவர் தன்னை பேரரசராக முடிசூட்டி, முதலாம் குடியரசை முடிவிற்கு கொண்டுவந்தார்.

இங்கு அடிமைத்தனம் குறித்த நெப்போலியனின் ஆணையும் ஹைட்டியில் அவர் நடத்திய போரும் குற்றமா என்பது பிரச்சினை அல்ல. அவை தெளிவாகவே ஒரு குற்றமாகும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஹைட்டியில் 18 ஆம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகளால் எழுப்பப்பட்ட சர்வதேச மற்றும் வர்க்கப் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து, டோட் ஒரு எளிமையான, இனவெறி விவரிப்பை உருவாக்குகிறார். அவர் நெப்போலியனை "பிரான்சின் மிகப்பெரிய கொடுங்கோலன்" மற்றும் "ஒரு மோசமான இனவாதி, பாலியல்வாதி, சர்வாதிகாரி" என்று விவரிக்கிறார்.

அவரைப் பொறுத்தவரை, முதலாம் குடியரசு வரலாற்று ரீதியாக முற்போக்கான ஆட்சி அல்ல மாறாக கறுப்பினத்தவர்கள் மீதான இனப்படுகொலை வெறுப்பால் உந்தப்படுகிறது. "மிகப் பெரிய பிரெஞ்சு கொடுங்கோலன்" நெப்போலியன் மீதான அவரது தாக்குதல் நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. டோட் கூறுவது போல், முதலாம் குடியரசு, அது தூக்கியெறிந்த நிலப்பிரபுத்துவ வரம்பற்ற முடியாட்சி மன்னர்களை விட ஒரு கொடுங்கோன்மை ஆட்சியை மேற்பார்வையிட்டிருந்தால் பிரெஞ்சு புரட்சியின் நியாயத்தன்மை மறைந்துவிடும்.

ஒரு இனப்படுகொலையை செய்ய முதல் குடியரசு, "எரிவாயு அறைகளை" கட்டியது என்ற பொய், நாஜி ஆட்சியுடன் மோசமாக ஒப்பீடு செய்ய வாசகரை அழைக்கிறது. டோட் ட்விட்டரில் ஊக்குவிக்கும் வலதுசாரி கறுப்பு தேசியவாத எழுத்தாளர் குளோட் ட்ரீப் (Claude Ribbe), 2005 ஆம் ஆண்டு எழுதிய Le crime de Napoléon புத்தகத்திலிருந்து டோட் இந்த குற்றச்சாட்டை எடுக்கிறார். ட்ரீப் இன் புத்தகத்தின் அட்டைப்படத்தில் இரண்டு உருவப்படங்கள் உள்ளன. ஒன்று நெப்போலியன் மற்றயது ஹிட்லர். அவை ஒருவருக்கொருவர் அடுத்ததாக நிற்பதால் ஒன்றாக கலக்கப்பட்டு காட்டப்படுகின்றது.

1803 இல் ஹைட்டிய புரட்சியின் போது Vertières இல் நிகழ்ந்த மோதல் (Wikimedia Commons)

பல நூற்றாண்டுகளாக, 1789 புரட்சி பற்றிய வரலாற்று பொய்கள் அல்லது அதிகப்படியான எளிமைப்படுத்தல்கள் எப்போதும் அரசியல் நிலைப்பாடுகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் எதிரியாக காட்டிக்கொள்ள டோட் அவற்றைப் பயன்படுத்துகிறார். முன்னாள் பிரெஞ்சு ஆபிரிக்க காலனியான மாலியில் ஒரு இரத்தக்களரிப் போர், புர்காக்கள் அல்லது இஸ்லாமிய முகத்திரைகளை தடை செய்தல் மற்றும் பெரும்பாலும் அரபு அல்லது ஆபிரிக்க வம்சாவளியினரை குறிவைத்து, தொழிலாள வர்க்க இளைஞர்களுக்கு எதிரான கொலைகார பொலிஸ் மிருகத்தனம் போன்ற அவரது கொள்கைகள், பிரான்சில் இன, மத பதட்டங்களை தீவிரப்படுத்துகின்றன.

முஸ்லீம்-விரோத கொள்கைகளை விமர்சிப்பதை தடுக்கும் மற்றும் பிரான்சின் தற்போதைய ஐந்தாம் குடியரசிற்கு விசுவாச உறுதிமொழிகளை விதிக்கும் மக்ரோனின் பாசிசவகை “பிரிவினைவாத எதிர்ப்பு” சட்டங்களை டோட் சுட்டிக்காட்டுகிறார்:

"நெப்போலியன் ஆண்டு" ஒரு ஆபத்தான நேரத்தில் வந்துவிட்டது. இனம், பாலினம், இனக்குழு மற்றும் வர்க்கம் ஆகியவற்றைப் படிக்கும் பிரெஞ்சு கல்வியாளர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் காலனித்துவத்திற்கு பிந்தைய ஆய்வுகள் குறித்து கேலி செய்துள்ளார். இது இதுவரை "சமூக கேள்வியின் இனமயமாக்கலை ஊக்குவித்துள்ளது" என்று கூறி குடியரசு "பிளவுபடும்" அபாயத்தில் உள்ளது என்றார்.

மீண்டும், மக்ரோனின் பொலிஸ்-அரசு சட்டங்கள் பிற்போக்குத்தனமானவையா என்பது இங்கு கேள்வி அல்ல. அவை ஜனநாயக உரிமைகளுக்கு ஒரு அபாயகரமான அச்சுறுத்தலை முன்வைப்பதுடன், தொழிலாள வர்க்கத்தை இன மற்றும் மத ரீதியில் பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பிரெஞ்சு ஓய்வு பெற்ற மற்றும் தற்போது கடமையிலுள்ள இராணுவ அதிகாரிகளிடமிருந்து சதித்திட்டத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அவை வந்துள்ளன.

டோட் மக்ரோனை விமர்சிக்கையில், அப்பெண்மணியின் இனவாத வாதங்கள், பிரெஞ்சு ஜனாதிபதியின் வாதங்களை தெளிவாக எதிரொலிக்கின்றன. பிரெஞ்சு மக்களும், முழுமனித சமுதாயமும் கூட ஆழ்ந்து வேரூன்றிய, அடிப்படையில் தீர்க்கப்பட முடியாத இன மற்றும் இனக்குழு வெறுப்புகளால் பிளவுபட்டுள்ளன என்ற அவரது கருத்தை அவர் பகிர்ந்து கொள்கிறார். ஒரு முதலாளித்துவ பொலிஸ் அரசுக்கு அடிபணியவேண்டும் எனக் கோரி மக்ரோன் இதை முன்வைத்தாலும், அட்லாண்டிக்கின் இருபுறமும் கறுப்பினத்தவர்கள் மற்றும் அதனுடன் இணைந்த கல்வியாளர்களின் சலுகை பெற்ற அடுக்குகளுக்கு ஏற்ற ஒரு கதையை டோட் முன்வைக்கிறார். அவர்கள் கறுப்பினத்தவர் மீதான இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் பெயரில் பதவிகளும் செல்வாக்கும் தமக்கு கிடைக்கவேண்டும் எனக் கோருகின்றனர்.

நெப்போலியன் தொடர்பான பிரெஞ்சு மக்களின் அணுகுமுறைகள், அதாவது பிரான்சில் வெள்ளையின மக்களின் கறுப்பினத்தவர்கள் மீதான பிரெஞ்சுக்காரர்களின் சமரசமற்ற விரோதத்தை நிரூபிக்கின்றன என்று டோட் வாதிடுகிறார். அவர் மேலும் புகார் கூறுகிறார், “பிரெஞ்சுக்காரர்கள் [நெப்போலியனை] ஒரு வீரனாக, சிங்கமாக்குவது இன்னும் பொதுவானதாக உள்ளது. விரும்பத்தகாத ஒருவராக இருந்தாலும், ஆஸ்டர்லிட்ஸ் போரில் ஐரோப்பா முழுவதையும் அடிபணிய செய்தது மட்டுமல்லாமல், இன்றும் பயன்பாட்டில் உள்ள பிரான்ஸ் வங்கியையும் நவீன சட்டமுறை மற்றும் கல்வி முறையை உருவாக்கியவர்” என்று அவர் புலம்புகிறார். பின்னர் அவர் குறிப்பாக பின்வருமாறு தாக்குகிறார்.

அடிமைத்தனத்திற்கு தங்கள் நாடு வன்முறையுடன் திரும்புவதில் பிரெஞ்சு மக்கள் ஆற்றிய பங்கு. இது ஒரு பயங்கரமான சர்வாதிகாரியின் சலனமான விருப்பத்திலிருந்து மட்டுமே ஏற்படவில்லை. பிரெஞ்சு சட்டமன்ற உறுப்பினர்களும், பிரெஞ்சு இராணுவமும், பொதுமக்களிடமிருந்து பரந்த ஆதரவோடு, நெப்போலியனின் நடவடிக்கைகளை ஆதரித்தனர். இது பிரெஞ்சு குடியரசுவாதத்தின் தொடர்ச்சியான முரண்பாடான தன்மையை நிரூபிக்கிறது.

நெப்போலியனில் மீது டோட் வெறுப்பை வெளிப்படுத்துவதைப் படிக்கும்போது, ஒருவர் பின்வருமாறு கேட்க நிர்பந்திக்கப்படுகிறார்: ஆஸ்டர்லிட்ஸ் மற்றும் அவர் போராடிய பிற முக்கிய போர்களில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டிருப்பதை டோட் விரும்புகிறாரா?

உண்மையில், பிரான்சின் தெற்கு மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள மூலோபாய துலோன் துறைமுகத்திலிருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்றியது, 1793 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான நேரத்தில் அவர் முதன்முதலில் முக்கியத்துவம் பெற்றார். அந்த நேரத்தில், பிரிட்டிஷ், ஆஸ்திரிய, பிரஷ்யன், ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீய முடியாட்சிகள், ஹாலந்துடன் இணைந்து, பிரான்சுக்கு எதிராக போரை நடத்தி வந்தன. மேலும், ஜனவரி மாதம் தேசத் துரோகத்திற்காக லூயி XVI தூக்கிலிடப்பட்டதும், ஜூலை மாதம் இழப்பீடு இல்லாமல் நிலப்பிரபுத்துவ உரிமைகளை இறுதியாக ஒழித்ததும், பிரான்சினுள் முதலில் மேற்கு வென்டே (Vendée) பிராந்தியத்தில் உள்ள சுவானிலும் (Chouans), பின்னர் தெற்கில் உள்ள கூட்டாட்சிவாதிகளின் பிராந்தியங்களிலும் எதிர் புரட்சிகர கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது.

அதற்கு பதிலாக அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்திய ஐரோப்பாவின் மன்னர்கள், தெற்கு மற்றும் மேற்கு பிரான்சின் கட்டுப்பாட்டை பலப்படுத்திக்கொண்டு, பின்னர் பாரிஸிற்கு அணிவகுத்துச் சென்றிருந்தால், அடிமைகளுக்கு ஒரு சிறந்த விதி ஏற்பட்டிருக்குமா? 1792 ஆம் ஆண்டு தனது பிரபலமற்ற அறிக்கையில் பிரன்சுவிக் டியூக் அச்சுறுத்திய "மொத்த இராணுவ மரணதண்டனை" பாரிஸ் மக்கள் மீது சுமத்தி; வெகுஜன கொலை மற்றும் பயங்கரவாதத்தின் ஒரு களத்தில், புரட்சியை நசுக்கி, ஐரோப்பா முழுவதும் சவால் செய்யப்படாத நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையின் கொள்கையை மீண்டும் நிறுவியிருந்தால் சிறந்ததாக இருந்திருக்குமா?

அத்தகைய கேள்வியைக் கேட்பது அதற்கு பதிலளிக்கவும் வேண்டும் என்று ஒருவர் கூற விரும்பலாம். எவ்வாறாயினும், கல்வியாளர்களின் பின்நவீனத்துவத்தால் ஊக்குவிக்கப்பட்ட புரட்சிக்கான கடுமையான எதிர்ப்பையும், ஐரோப்பாவில் வளர்ந்து வரும் நவ-பாசிசக் கட்சிகளுக்கு அப்பால் தீவிர வலதுசாரி மற்றும் முடியாட்சி செல்வாக்கையும் குறைத்து மதிப்பிடுவதாகும். இது இறுதியில் மக்ரோனையும் உள்ளடக்கியுள்ளது. பிரான்சின் நாஜி-ஒத்துழைப்பு சர்வாதிகாரி பிலிப் பெத்தானை ஒரு "சிறந்த போர்வீரன்" என்று புகழ்வதற்கு முன்பு, பிரான்ஸிற்கு ஒரு அரசர் இல்லாது போய்விட்டது என்று அறிவித்தார். பின்வரும் கேள்வியிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது: முதலாம் குடியரசிற்கு எதிரான டோட்டின் கண்டனத்திற்கு ஏதேனும் உண்மையான அடித்தளம் உள்ளதா?

முதலாம் பிரெஞ்சுக் குடியரசு ஹைட்டியில் கறுப்பின எதிர்ப்பு இனப்படுகொலை செய்ததா?

நெப்போலியன் “நவீன இனப்படுகொலையின் காரணகர்த்தா” என்ற டோட்டின் வாதம் ஒரு வரலாற்றுப் பொய்யும், நெப்போலியனுக்கும் ஹிட்லருக்கும் இடையில் அவர் கண்டுபிடிக்கும் ஒப்பீடு அரசியல் ரீதியாக கீழ்த்தரமானது. நாஜிக்கள் "யூத-போல்ஷிவிசத்தை" கண்டித்து யூத மக்களை அழிக்க முயன்றது ஏனெனில் குறிப்பாக கம்யூனிச இயக்கத்தில் அவர்கள் வகித்த பங்கு மற்றும் அக்டோபர் 1917 இல் ரஷ்யாவில் போல்ஷிவிக் புரட்சியில் லியோன் ட்ரொட்ஸ்கி போன்ற தனிப்பட்ட யூதர்களின் முக்கிய பங்குமாகும். சோவியத் யூனியனுக்கு எதிராக நிர்மூலமாக்கும் போரை ஆரம்பித்த பின்னர் அவர்கள் 6 மில்லியன் யூதர்களையும் 20 மில்லியனுக்கும் அதிகமான சோவியத் குடிமக்களையும் கொலை செய்தனர்.

நெப்போலியன் கறுப்பின மக்களை அழிப்பதற்காகவோ அல்லது 1789 புரட்சியால் மேற்கொள்ளப்பட்ட நிலப்பிரபுத்துவ சொத்துக்களை தூக்கி வீசியதை அகற்றுவதற்கோ முன்மொழியவில்லை. எவ்வாறாயினும், நெப்போலியன் இனப்படுகொலை வன்முறை மூலம் அடிமைத்தனத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றே முடிவு செய்தார், அதில் பிரெஞ்சு மக்கள் விருப்பமான கருவிகளாக இருந்தனர் என டோட் ஒரு கட்டுக்கதையை உருவாக்குகிறார். அவர் பின்னர் எழுதுகிறார்:

1794 ஆம் ஆண்டில், பிரான்சை ஒரு முடியாட்சியில் இருந்து ஒரு குடியரசாக மாற்றிய புரட்சியை அடுத்து ஒரு பாரிய அடிமை கிளர்ச்சியின் பின்னர் பிரெஞ்சு தீவான செயிண்ட்-டொமிங்கில் (இன்று ஹைட்டி) அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. பிரான்ஸ் அதன் எல்லை முழுவதும் அடிமைத்தனத்தை ஒழிப்பதாக அறிவித்தது. ஆனால் 1802 ஆம் ஆண்டில், நெப்போலியன் பொறுப்பேற்று அந்த முடிவை மாற்றியமைத்தார். அடிமைத்தனத்தை ஒழித்த பின்னர் மீண்டும் கொண்டுவந்த ஒரே நாடு பிரான்சாகும்.

பிரெஞ்சு பள்ளிகள் "எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் நெப்போலியனால் அடிமைத்தனம் எவ்வாறு, ஏன் மீண்டும் நிறுவப்பட்டது என்பதைப் பற்றி விட்டுவிடுகிறது அல்லது அழகுபடுத்துகின்றன" என்று டோட் எழுதுகிறார், அவர் அதை மீண்டும் நிலைநிறுத்தவில்லை என்றால், விரைவிலோ அல்லது பின்னரோ, 'புதிய உலகின் செங்கோல்' 'கறுப்பினத்தவர்களின் கைகளில் விழும்.' பிரிட்டனிடமிருந்து பிரான்சுக்கு திரும்பும் காலனிகளை என்ன செய்வது என்று 1802 அமியான் உடன்படிக்கை பற்றி பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது நெப்போலியன் இந்த முடிவை எடுத்தார் என்று அவர் மேலெழுந்தவாரியாக குறிப்பிடுகிறார். இந்த காலனிகளில், பிரிட்டன் 1794ல் அடிமை ஒழிப்பு ஆணையைத் தடுத்து அடிமைத்தனத்தை பராமரித்து வந்தது.

குவாடலூப்பில் ஒரு எழுச்சியை நசுக்கிய பிரெஞ்சு இராணுவத்தின் இரத்தக்களரி பிரச்சாரங்களை அவர் விவரித்து மற்றும் செயிண்ட்-டொமிங்கில் எழுந்த முன்னாள் கறுப்பின அடிமைகளை நசுக்கத் தவறிவிட்டதை பற்றி குறிப்பிடுகின்றார்:

குவாடலூப் தீவில் உள்ள கறுப்பின மக்கள், நெப்போலியனால் அங்கு அவர்களை ஒடுக்க அனுப்பப்பட்ட பிரெஞ்சு துருப்புக்களை எதிர்த்துப் போராடினர். ஆனால் அவர்கள் மீண்டும் தங்கள் போராட்டத்தை இழந்து அடிமைத்தனம் உத்தியோகபூர்வமாக அந்த ஜூலை மாதம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதை கண்டனர்.

செயிண்ட்-டொமிங்கில் நிகழ்வுகள் வித்தியாசமாக வெளிப்பட்டன. ஆனால் அவை குறைவான துன்பகரமானதாக இல்லை. நெப்போலியனால் தீவுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளபதிகளின் கீழ், "கறுப்பினத்தவர்களின் அரசாங்கத்தை நிர்மூலமாக்கு" என்று பிரெஞ்சு இராணுவம் காலனியில் எப்போதும் “தோள்ப்பட்டி அணிந்த” கறுப்பநிற அனைத்து மக்களையும் கொல்ல அவரது வாயால் உத்தரவிட்டார். பிரெஞ்சு படையினர் புரட்சியாளர்களை நஞ்சுபுகையூட்டி, மூழ்கடித்து, காயப்படுத்த நாய்களை பயன்படுத்தினர்; பிரெஞ்சு காலனித்துவவாதிகள் "அழித்த பின்னர்" தீவை கண்டத்திலிருந்து அதிகமான ஆபிரிக்கர்களால் மீண்டும் குடியிருத்த முடியும் என்று பெருமையடித்துக் கொண்டனர்.

ஹைட்டிக்கான பயணம் 80,000 ஹைட்டியர்களையும் 20,000 பிரெஞ்சுப் படையினரையும் கொன்ற ஒரு அரசியல் குற்றமாகும். இது பிரெஞ்சு முதலாளித்துவமும் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளும் பிற்கால தசாப்தங்களிலும் நூற்றாண்டுகளிலும் மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்ட காலனித்துவ வன்முறைக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தது.

எவ்வாறாயினும், முதலாம் பிரெஞ்சு குடியரசு வரலாற்றில் முரட்டுத்தனமாக இயங்காமல் கறுப்பினத்தவர்களை அழிக்க முயன்றது என்ற கூற்றை தக்கவைத்துக்கொள்வது சாத்தியமில்லை. “புதிய உலகின் செங்கோல்” “கறுப்பினத்தவர்களின் கைகளுக்குள் செல்லும்” என்று அவர் அஞ்சினார் என நெப்போலியனின் சொந்தக் கையால் எழுதப்பட்ட வெளிப்படையான மோசமான ஆதாரத்தை டோட் மேற்கோள் காட்டும்போது இதுதான் நிகழ்கிறது.

இது, லண்டனுடனான பிரெஞ்சு பேச்சுவார்த்தைகள் குறித்து நெப்போலியன், வெளியுறவு மந்திரி சார்லஸ் தாலேரோண்டிற்கு எழுதிய 1801 கடிதத்தின் சிதைவு ஆகும், இதை அடையாளம் காணாமல் டவுட் மேற்கோளிட்டுள்ளார். கடிதத்தைப் படித்தல் நெப்போலியன் ஹைட்டியை ஆக்கிரமிக்க முடிவெடுக்கும் கணக்கீடுகளின் முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தை அளிக்கிறது.

அந்த வார்த்தையின் நவீன அர்த்தத்தில் நெப்போலியன் பிரான்சின் முதல் சிறந்த முதலாளித்துவ அரசியல்வாதியாகும். 1789-94ல் மேற்கொள்ளப்பட்ட நிலப்பிரபுத்துவ சொத்துடமைகளை தூக்கியெறிவதன் மூலம் முதலாளித்துவ சொத்துடமைகளை ஒருங்கிணைப்பதையும், உலக வர்த்தகத்தில் முடிந்தவரை வலுவான நிலையை பிரான்சுக்கு பெறுவதையும் அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். கீழே இருந்து வரும் அச்சுறுத்தலை நன்கு அறிந்த அவர், தனது இடதுசாரி எதிரிகளை "கருத்தியலாளர்கள்" என்று குறைத்துமதிப்பிட்டு, கேலி செய்தார்.

இனப்படுகொலை கறுப்பின எதிர்ப்பு வெறுப்பால் தூண்டப்படுவதற்கு பதிலாக, நெப்போலியன் தன்னை நடைமுறைவாத, தேசிய இராணுவ மற்றும் வணிகரீதியான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டார். ஹைட்டிய புரட்சிகரத் தலைவர் Toussaint L’Ouvertur இன் கட்டுப்பாட்டில் உள்ள செயிண்ட்-டொமிங்கு பகுதியில் அடிமைத்தனத்தை ஒழிக்க அவர் ஆரம்பத்தில் திட்டமிட்டார். ஆகஸ்ட் 16, 1800 மாநில குழுக்கூட்டத்தில், நெப்போலியன் பின்வருமாறு கூறினார்:

அடிமைத்தனத்தை ஒழிப்பது நல்லதா என்பது பிரச்சினை அல்ல. … கறுப்பினத்தவர்கள் எங்களுடன் இணைக்கப்படாவிட்டால், இந்த தீவு ஆங்கிலேயேர்களுக்கு சொந்தமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் ஒருவேளை குறைந்த சர்க்கரையை உற்பத்தி செய்யலாம்; ஆனால் அவர்கள் அதை எங்களுக்காக உற்பத்தி செய்வார்கள், தேவைக்கேற்ப படையினர்களையும் எங்களுக்கு வழங்குவார்கள். எங்களிடம் ஒரு சர்க்கரை சுத்திகரிப்பு நிலையம் குறைவாக இருக்கும், மேலும் ஒரு கோட்டை நட்பு துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். எனவே செயிண்ட் டொமிங்கின் சுதந்திரமான பகுதியில் நான் சுதந்திரத்தைப் பற்றி பேசுவேன்… நான் பராமரிக்கும் இடத்தில் அடிமைத்தனத்தை மட்டுப்படுத்தும் உரிமையை எனக்காக ஒதுக்கி வைத்துக் கொள்கிறேன், நான் சுதந்திரத்தை பராமரிக்கும் இடத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் மீண்டும் ஸ்தாபிக்கிறேன்.

இருப்பினும், L’Ouverture ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயிண்ட்-டொமிங்கின் பகுதியில் அங்குள்ள அடிமைகளை விடுவிப்பதற்காக படையெடுத்தபோது நெப்போலியன் தனது நிலைப்பாடுகளை மாற்றினார். L'Ouverture பெயரளவில் பிரெஞ்சு குடியரசின் பிரதிநிதியாக இருந்தபோதும், ஆனால் அவரது முன்முயற்சிக்கு பிரெஞ்சு ஆதரவு இருக்கவில்லை. இது ஐரோப்பாவில் புதிய புரட்சிகர அபிலாஷைகளை ஊக்குவிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியதுடன், 1802 ஆம் ஆண்டு பிரிட்டனுடனான சமாதான உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நெப்போலியன் ஒரு நட்புள்ளவராக இருந்த ஸ்பானிய மன்னனையும் கோபப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தியது.

Toussaint L’Ouverture [Source: Wikimedia Commons]

இதற்கு, செயிண்ட்-டொமிங்கை மீண்டும் கைப்பற்றி, இலாபகரமான சர்க்கரை தயாரிக்கும் அடிமைக் காலனியாக சுரண்டுவதற்கான ஒரு தோல்வியுற்ற முயற்சியில் ஒரு இராணுவத்தை அனுப்பியதன் மூலம் நெப்போலியன் பதிலளித்தார். இந்த முடிவு நவம்பர் 13, 1801 இல் நெப்போலியன் தாலேரோண்டிற்கு எழுதிய கடிதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "புதிய உலகின் செங்கோல்" "கறுப்பினத்தவர்களின் கைகளில்" விழுவதைத் தடுக்க நெப்போலியன் இனப்படுகொலையைத் திட்டமிட்டார் என்பதற்கான சான்றாக கடிதத்தின் சில சொற்றொடர்களை டோட் மேற்கோள் காட்டினாலும், கடிதத்தின் உண்மையாக வாசிக்கும்போது அது டோட்டின் தவறான கூற்றுக்களை மறுக்கிறது.

இந்த கடிதத்தில், செயிண்ட்-டொமிங்குவைத் தாக்குவது பிரெஞ்சு நலன்களுக்கு எதிரானது என்று நெப்போலியன் தாலேரோண்டிற்கு வலியுறுத்தினார்: “செயிண்ட்-டொமிங்கில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அரசாங்கத்தால் சட்டபூர்வமாக்கப்பட்ட கறுப்பினத்தவர்களின் சுதந்திரம், எல்லா வகையிலும் புதிய உலகில், குடியரசின் கோட்டையாக மாறும்.” ஒரு பலவீனமான, எதிர்ப்புரட்சிகர ஆட்சியை இருத்துவது, பிரான்சுக்கு இராணுவ ரீதியாக சுமையை ஏற்படுத்தும்: "வெள்ளையர்களால் திரும்பப் பெறப்பட்ட செயிண்ட்-டொமிங் பல ஆண்டுகளாக பலவீனமான புள்ளியாக இருக்கும் மற்றும் பிரான்சின் உதவி அதற்கு தேவைப்படும்."

மறுபுறம், நெப்போலியன் மேலும் கூறுகையில், கரீபியனில் அடிமைகளை நசுக்குவது பிரெஞ்சு குடியரசின் எதிரிகளுக்கு குறிப்பாக பிரிட்டிஷ் முடியாட்சிக்கு மிகவும் ஆர்வமானதாக இருக்கும். ஜமைக்கா மற்றும் பிற இடங்களில் அதன் சொந்த கரும்பு தோட்டங்களில் ஒரு கிளர்ச்சி பற்றி அது அஞ்சியது. அவர் பின்வருமாறு எழுதினார்:

தற்போது இங்கிலாந்தை பொறுத்தவரை சமாதானத்தின் ஒரு நன்மை என்னவென்றால், பிரெஞ்சு அரசாங்கம் செயிண்ட்-டொமிங்கின் அமைப்பை இன்னும் அங்கீகரிக்கவில்லை, அதனால் கறுப்பினத்தவர்களின் அதிகாரத்தையும் ஏற்கவில்லை. இது செய்து முடிந்திருந்தால், புதிய உலகின் செங்கோல் விரைவில் அல்லது பின்னர் கறுப்பினத்தவர்களின் கைகளில் விழுந்திருக்கும். இங்கிலாந்திற்கு ஏற்படும் அதிர்ச்சி கணக்கிட முடியாததாக இருக்கும். அதே நேரத்தில் பிரான்சில் ஒரு கருப்பு சாம்ராஜ்யத்தின் அதிர்ச்சி புரட்சியிலிருந்து பிரித்தறிய முடியாததாக இருந்திருக்கும்.

தனது அரசாங்கத்தின் அரசியல் மற்றும் மூலோபாய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு கொள்கையை ஏன் தொடர விரும்பினார் என்பதையும் நெப்போலியன் விளக்கினார். அடிமைகளின் விடுதலை சர்வதேச அளவில் புதுப்பிக்கப்பட்ட, இடதுசாரி அரசியல் நொதிப்பைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தை லண்டனுக்கு தெரிவிக்குமாறு அவர் தாலேரோண்டிடம் கூறினார்: "செயிண்ட்-டொமிங்கில் கறுப்பினத்தவர்களின் அரசாங்கத்தை நிர்மூலமாக்குவதற்கான எனது முடிவில், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அமைதியின்மைக்கும் ஒழுங்கின்மைக்குமான அனைத்துவித விதைகளையும் திணறடிக்க வேண்டிய அவசியத்தைவிட, வணிக அல்லது நிதிக் கருத்துக்களினால் நான் குறைவான அளவே வழிநடத்தப்பட்டேன்.

மிகவும் சக்திவாய்ந்த ஆங்கிலக் கடற்படையின் தலையீட்டிற்கு அஞ்சாமல், பிரான்சால் இறுதியாக இரண்டு சிறியளவிலான கப்பல் படைகளை, ஒன்று செயிண்ட் டொமிங்கிற்கு, மற்றொன்று குவாடலூப்பிற்கு அனுப்ப முடிந்தது.

அந்த நேரத்தில் நெப்போலியனின் முதல் தூதரின் தலைப்பைக் குறிப்பிடும் 'போனபார்ட், ஹைட்டி மற்றும் தூதரக ஆட்சியின் காலனித்துவ தோல்வி' என்ற தனது கட்டுரையில், வரலாற்றாசிரியர் தியரி லென்ட்ஸ் (Thierry Lentz) இந்த பயணங்களின் இரத்தக்களரி விளைவுகளைப் பற்றி எழுதுகிறார். குவாடலூப்பில், ஜெனரல் அன்ந்துவான் ரிஷ்செபொன்ஸ் (Antoine Richepanse), 1794 முதல் ஐரோப்பாவில் பிரெஞ்சு படைகளில் போராடிய ஒரு கறுப்பின அதிகாரி மாக்லுவார் பெலாஜ் (Magloire Pélage) மற்றும் லூயி டெல்கிரே (Louis Delgrès), ஜோசெப் இனியாஸ் (Joseph Ignace) தலைமையிலான அடிமைத்தனத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கு எதிரான எழுச்சிகளை நசுக்க கறுப்பின துருப்புக்களையும் நம்பினார். லென்ட்ஸ் பின்னர் எழுதுகிறார்:

அவருடைய சொந்த லெப்டினென்ட்கள் கூட தங்கள் அறிக்கைகளில் கடுமையாக கண்டனம் செய்தபோதும், ரிஷ்செபொன்ஸின் இராணுவ நடவடிக்கை ஒரு மிருகத்தனத்துடன் மேற்கொள்ளப்பட்டது. மே 10-28 வரை போர் மூண்டது. ஒட்டுமொத்தமாக, ரிஷ்செபொன்ஸ் தனது துருப்புக்களில் சுமார் 40 சதவிகிதத்தை போர் அல்லது நோயினால் இழந்தார். மற்றும் பெலாஜ் மற்றும் காலனியின் இராணுவத்தின் 600 வேறு நிற துருப்புக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார். பல மாதங்களாக, பெரிய அளவிலான படுகொலைகள் நடத்தப்பட்டு, கறுப்பின மக்களிடையே பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். கேப்டன் ஜெனரலின் சாதாரண ஆணையால் அடிமைத்தனம் மீண்டும் நிறுவப்பட்டு, மேலும் 5,000 கறுப்பினத்தவர்கள் மற்ற காலனிகளுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

செயிண்ட்-டொமிங்கில், ஜெனரல் சார்ல் லுக்கிளேர் (Charles Leclerc) இன் கீழிருந்த பிரெஞ்சு துருப்புக்கள் ஒரு கெரில்லா யுத்தத்தை நடத்த மேற்கு மலைகளுக்கு திரும்புமாறு L'Ouverture இன் துருப்புக்களை கட்டாயப்படுத்தினர். "கிளர்ச்சியாளர்கள் இப்போது, லுக்கிளேரை வெற்றிகொள்ள, கெரில்லா போர், ஒரு எரிந்த பூமி மூலோபாயம் மற்றும் மஞ்சள் காய்ச்சலின் அழிவுகள் என பல காரணிகளைக் கணக்கிட்டனர்” என்று லென்ட்ஸ் எழுதுகிறார். மஞ்சள் காய்ச்சலால் இறப்பதற்கு முன், லுக்கிளேர் 1803 இல் பிரான்சில் சிறையில் இறந்த L'Ouverture ஐ ஒப்படைக்க L’Ouverture இன் துரோக துணை அதிகாரிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்.

மஞ்சள் காய்ச்சலால் மேலும் அதிகமான பிரெஞ்சு துருப்புக்கள் இறந்ததால், ஜெனரல் டொனாஷியான் டு ரோஷம்போ (Donatien de Rochambeau) ஒரு வருடத்திற்கு லுக்கிளேரை விடவும் காட்டுமிராண்டித்தனத்துடன் ஒரு அழிவுகரமான போர் முயற்சியை தொடர்ந்தார். இந்த காட்டுமிராண்டித்தனமான போர், கணிக்கத்தக்க வகையில் பேரழிவில் முடிந்தது. ரோஷம்போவைப் பற்றி லென்ட்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்:

சித்திரவதை, கறுப்பினத்தவரை வேட்டையாட நிபுணத்துவம் பெற்ற நாய்களுக்கு பயிற்சி, கூட்டாக நீரில் மூழ்கடிப்பது மற்றும் இராணுவ நிலைமையை மேம்படுத்தாமல் அவரது கட்டளையால் சுருக்கமான மரணதண்டனை வழங்கினார். மாறாக, கறுப்பின தளபதிகள் வெற்றிகளைக் கொண்டிருந்தனர். அதன் தாக்கம் மிகவும் அழிவுகரமானது, அதில் ஐரோப்பிய துருப்புக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. 1803 இல் இங்கிலாந்தோடு புதுப்பிக்கப்பட்ட போர், செயிண்ட்-டொமிங்கில் நடந்த பயங்கரமான சாகசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. “என் பங்கில் ஒரு பெரிய தவறு” என்று பேரரசர் [நெப்போலியன்] பின்னர் கூறினார்.

1815 இல் நெப்போலியனின் தோல்வி மற்றும் ஐரோப்பிய சக்திகளால் பிரெஞ்சு முடியாட்சி மீளமைக்கப்பட்ட பின்னர், பாரிஸில் உள்ள உயரடுக்கு லூயி-லு-கிரோண்ட் (Louis-le-Grand) உயர்நிலைப் பள்ளியில் பயிற்சி பெற்ற ஹைட்டிய பத்திரிகையாளர் ஜூஸ்ட் சான்லாட் (Juste Chanlatte), செயிண்ட்-டொமிங் போரின் வரலாற்றை எழுதினார். 1824 ஆம் ஆண்டில் பாரிஸில் வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில், பிரெஞ்சு துருப்புக்கள் சிறைக் கப்பல்களின் தட்டுக்களில் கந்தக ஆக்சைடை எரித்ததாக சான்லாட் அறிவித்தார். "பாதிக்கப்பட்ட இரு பாலினத்தினரும், ஒருவர் மீது ஒருவர் நெருக்கமாக வைக்கப்பட்டு கந்தக ஆவியினால் மூச்சுத்திணறி இறந்தனர்" என அவர் எழுதினார்.

பிரெஞ்சு முதலாம் குடியரசு “எனது முன்னோர்களைக் கொல்ல எரிவாயு அறைகளை” உருவாக்கியது என்ற டோட்டின் கூற்று, இந்த அறிக்கையை பற்றிய குறிப்பு ஆகும். இது பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் ஹைட்டியின் மற்ற வரலாற்றாசிரியர்களாலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரெஞ்சு வரலாற்றாசிரியர் பியர் பிராண்டா (Pierre Branda), இதுபோன்ற விஷவாயு பயன்படுத்தியது தொடர்பாக எதிர்ப்புத் தெரிவித்தார். சிறைக் கப்பல்களில் கந்தகத்தை எரிக்க பிரெஞ்சு துருப்புக்களுக்கு உத்தரவிட்டதற்கான எந்தவொரு ஆவணப்பதிவும் இல்லை என்று வாதிட்டார்.

என்ன நடந்திருந்தாலும், செயிண்ட்-டொமிங்கில் நடந்த பிரெஞ்சுப் போர் ஒரு இரத்தக்களரியான குற்றமாகும் என்பதும், விஷவாயு பயன்படுத்தப்பட்டு இருந்தால் அது இரண்டாம் உலகப் போரின்போது நாஜிகள் எரிவாயு அறைகளில் மில்லியன் கணக்கானவர்களை தொழில்துறை முறையில் கொலை செய்ததைப் போன்றது அல்ல என்பதும் தெளிவாகிறது. ஆயினும்கூட, டோட் ட்விட்டரில் ஊக்குவிக்கும் குளோட் ட்ரீப் (Claude Ribbe) இன் 2005 ஆம் ஆண்டு புத்தகம், நெப்போலியனின் கொள்கைகள், "இரண்டாம் உலகப் போரின்போது யூதர்கள் மற்றும் ஜிப்சிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அழிப்புக் கொள்கையை ஒரு தெளிவான வழியில் முன்கூட்டியே காட்டுகின்றன" என்று வலியுறுத்துகிறது.

ஏகாதிபத்திய ஆட்சி மற்றும் அல்ஜீரியா, இந்தோசீனா, சிரியா மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் நடந்த எதிர்-கிளர்ச்சிப் போர்களின் போது, சிந்தப்பட்ட மில்லியன் கணக்கான மக்களின் இரத்தம், பிரெஞ்சு முதலாளித்துவத்தின் வெளியுறவுக் கொள்கையை பாதுகாக்க அல்ல என்று கூறினால் அது ஒரு வரலாற்று பொய்யாகும். நெப்போலியன் இரத்தக்களரிப் போர்களை நடத்தினார், ஆனால் அவர் கரீபியனிலோ அல்லது வேறு இடங்களிலோ கறுப்பின மக்களை இனப்படுகொலை செய்யவோ திட்டமிடவோ இல்லை. முதலாம் பிரெஞ்சு குடியரசை நாஜிசத்துடன் பொய்யாக ஒப்பிடுவதற்கும், இதனால் சமூகப் புரட்சியை இழிவுபடுத்துவதற்கும் டோட், ட்ரீப் மற்றும் பலரின் முயற்சி ஒரு புனையப்பட்ட வரலாற்று விவரிப்பில் தங்கியுள்ளது.

அடிமைத்தனத்தை மீட்டெடுக்க பிரெஞ்சு மக்கள் உடந்தையாக இருந்தார்களா?

1802 ஆம் ஆண்டில் நெப்போலியன் பிரெஞ்சு காலனிகளில் அடிமைத்தனத்தை மீட்டெடுப்பதை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு அழிவுகரமான வாதத்தை டோட் வடிவமைக்கிறார். டோட்டின் கூற்றுப்படி, பிரெஞ்சு மக்கள் அடிமைத்தனத்தை பெரிதும் ஆதரித்தனர்: “பிரெஞ்சு சட்டமன்ற உறுப்பினர்களும் பிரெஞ்சு இராணுவமும் பொதுமக்களிடமிருந்து பரந்த ஆதரவோடு, நெப்போலியனின் நடவடிக்கைகளை ஆதரித்தனர். அதன் மூலம் பிரெஞ்சு குடியரசுவாதத்திற்கான நீடித்த ஒத்துழைப்பை எடுத்துக்காட்டினர்". தனக்கு சுயதண்டனை செய்துகொள்ள பிரான்ஸ் ஒரு நூற்றாண்டு தற்பரிசோதனைக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் முடிக்கிறார்:

உண்மை என்னவென்றால், அடிமைத்தனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான பிரெஞ்சு போராட்டத்தின் மிருகத்தனமான மனிதாபிமானமற்ற விளைவுகளை அம்பலப்படுத்துவது, இனவெறி மற்றும் காலனித்துவவாதம் ஆகியவற்றிற்கு அருகே உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனங்களுடன் இருப்பது விதிவிலக்கானவை அல்ல என்ற சங்கடமான உண்மையை வெளிப்படுத்துகின்றன. முரண்பாட்டின் இந்த வெளிப்படையான தோற்றம், உண்மையில் பிரெஞ்சு குடியரசுவாதத்திற்கான அடிப்படையாகும். அதைப் பற்றி சிந்திக்க பிரான்ஸ் குறைந்தது ஒரு நூற்றாண்டையாவது அர்ப்பணிக்க வேண்டும்”.

உண்மையில், இது பிரெஞ்சு புரட்சிக்கு 100 ஆண்டுகள் அல்ல 232 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரான்சில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் "சிந்தித்துப் பார்க்கவும்" மேலும் முதலாளித்துவ அமைப்பினால் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் வாக்குறுதிகளை காட்டிக் கொடுத்ததற்கு எதிராக போராடவும் நேரம் கிடைத்துள்ளது.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில், காலனித்துவ ஒடுக்குமுறை உட்பட அடுத்தடுத்த பிரெஞ்சு குடியரசுகளின் குற்றங்களுக்கு எதிர்ப்பு முதன்மையாக முதலாளித்துவத்தின் மீதான ஒரு சோசலிச விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்த குற்றங்கள், வெகுஜன புரட்சிகர நடவடிக்கை மூலம் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உண்மையாக நிறுவுவதற்கான முன்னோக்கை செல்லுபடியாக்காது என்று தொழிலாளர்கள் முடிவு செய்தனர். முதலாளித்துவ ஆட்சி தொடர்பான அனுபவமும், அடுத்தடுத்த முதலாளித்துவ பிரெஞ்சு குடியரசுகளால் தொழிலாளர்களின் எழுச்சிகள் இரத்தக்களரியாக அடக்குமுறைக்குள்ளானதிலும், 1871 ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனிலும், சமத்துவம் என்பது முதலாளித்துவ சொத்துடமையுடன் பொருந்தாது என்பதைக் காட்டியுள்ளது.

பாரிஸ் கம்யூனைப் பாதுகாத்ததன் பின்னர் கார்ல் மார்க்ஸின் படைப்புகளின் பிரபலமடைதலின் ஒரு பகுதியாக, பிரான்சிலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து தேசிய இனங்களின் தொழிலாளர்களும் சோசலிஸ்ட் கட்சிகளில் சேர்ந்தனர், அக்டோபர் 1917 இல் ரஷ்யாவில் நடந்த புரட்சிக்குப் பின்னர் பாரிய கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் இணைந்தனர்.

நெப்போலியன் மீதான டோட்டின் கண்டனங்கள் வேறுபட்ட, முற்றிலும் எதிர்மாறான வர்க்க நிலைப்பாட்டில் இருந்து வந்தவை. அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக் கொடுத்ததை நிறைவுசெய்து, சோவியத் ஒன்றியத்தை கலைத்து, 1991இல் முதலாளித்துவத்தை மீட்டெடுத்ததிலிருந்து நடுத்தர வர்க்க பின்நவீனத்துவ கல்வித்துறையில் ஆதிக்கம் செலுத்திய இனவகைப்பட்ட அடையாள அரசியல் சார்பில் அவர் பேசுகிறார். இந்த பார்வையில், மனிதநேயம், இனவாதத்தால் மிகவும் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கூட்டு புரட்சிகர நடவடிக்கையை முற்றிலும் சாத்தியமற்றது மற்றும் மோசமான ஆபத்தானது என்கிறது.

"ஒரு வருடம் முழுவதையும் நெப்போலியனின் நினைவாக அர்ப்பணிப்பது ஏற்கனவே குடியரசின் ஒரு முக்கியமான பகுதியாக உள்ள பிரான்சின் விருப்பமான சித்தாந்தமான பிரபஞ்சத்துவவாதம் அல்லது உலகளாவியவாதம் என்ற பெயரில் வரலாற்றை அடக்குவது என்பதை நிரூபிக்கிறது" என்று அப்பெண்மணி எழுதுகிறார்.

எவ்வாறாயினும், பிரெஞ்சு மக்களை அடிமைத்தனத்திற்காக குற்றம் சாட்டும் டோட்டினால் சொந்தமாக உருவாக்கப்பட்ட கணக்கு, வரலாற்றை புறக்கணிப்பதை அடிப்படையாகக் கொண்டது. 1802 ஆம் ஆண்டில் நெப்போலியன் அடிமைத்தனத்தை மீட்டெடுக்கும் போது, பிரான்சில் புரட்சிகர எதிர்ப்பு இல்லாததை அவர் கண்டிக்கிறார். இருப்பினும், தேர்மிடோருக்குப் பின்னர் இடதுசாரிகளின் இரத்தக்களரி அடக்குமுறை குறித்து அவர் மௌனமாக இருக்கிறார். அதாவது 9 தேர்மிடோரில் ரோபஸ்பியரின் வீழ்ச்சி (ஜூலை 27, 1794 இல் நிலையான காலண்டர்) குறித்து.

எவ்வாறாயினும் அடிமைத்தனத்தை ஒழித்த பிப்ரவரி 4, 1794 இன் ஆணையின் தலைவிதியை, தேர்மிடோரை தொடர்ந்த வலதுசாரி திருப்பத்திலிருந்து பிரித்துப்பார்க்க முடியாதது. அடிமைத்தனத்தின் மீதான பரந்த மக்கள் வெறுப்பை பிரதிபலிக்கும் வகையில், மாநாட்டில் ஒருமனதாக வாக்களிக்கப்பட்ட இந்த ஆணை பெரும்பாலும் செயிண்ட்-டொமிங்கிற்கு வெளியே ஒரு இறந்த கடிதமாகவே இருந்தது. அங்கு அடிமைகள் ஏற்கனவே ஆட்சியைப் பிடித்திருந்தனர். மற்றும் பிரெஞ்சு கயானா மற்றும் குவாடலூப் ஆகியவை முரண்பாடாகப் பயன்படுத்தப்பட்டன. பிரிட்டிஷ் கடற்படை பல பிரெஞ்சு காலனிகளைக் கைப்பற்றியது. மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள மஸ்கரேயின்களில் உள்ள பிரெஞ்சு அடிமைதாரர்கள், 1796 இல் ஆணையை அமல்படுத்த வந்த அதிகாரிகளை விரட்டியடித்தனர்.

உண்மையில், முடியாட்சி ஒழிக்கப்பட்ட, நிலப்பிரபுத்துவ சொத்துக்களை பறிமுதல் செய்த, மற்றும் வென்டே கிளர்ச்சியை (Vendée revolt) தோற்கடித்த புரட்சியாளர்களிடையே மோதல்கள் எழுந்ததால் இந்த ஆணை வாக்களிக்கப்பட்டது. பயங்கர காலத்தின் போது அதிக வருமானம் மற்றும் மரணதண்டனை மீதான அதிகபட்ச வரம்புகள் போன்ற அவசரகால நடவடிக்கைகளை பராமரிப்பதா என்பது குறித்த ஒரு குழுவாதப்போராட்டம் மாக்சிமிலியன் ரோபஸ்பியர் தலைமையிலான La Montagne என்ற ஒரு அரசியல் குழுவையும், ஜாக்-ரெனே ஏபேர் (Jacques-René Hébert,) தலைமையிலான அன்ராஜே (Enragés) ஐயும், ஜோர்ஜ் டோன்ரோன் (Georges Danton) தலைமையிலான ஆன்டுலுஜோன்களையும் (Indulgents) கிழித்து எறிந்தது. ஐந்து மாதங்களில், மார்ச் முதல் ஜூலை 1794 வரையான காலத்தில், முதலில் ஏபேர், பின்னர் டோன்ரோன் மற்றும் இறுதியாக ரோபஸ்பியரும் தலைவெட்டும் மேடைக்கு (guillotine) சென்றனர்.

ரோபஸ்பியர் தூக்கிலிடப்பட்ட பின்னர், “F*** அதிகபட்ச [வருமான வரம்பு]” என்று கூச்சலிடும் ஒரு கூட்டத்திற்கு முன்னால், முதலாளித்துவ வர்க்கம் இடதுபுறத்திலிருந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக அதன் ஆட்சியை பலப்படுத்த செயற்பட்டது. ரோபஸ்பியர், டோன்ரோன் மற்றும் ஏபேர் போன்ற நபர்கள் பேசிய பிரெஞ்சு புரட்சியின் முன்னணி மன்றமான ஜாக்கோபின் மன்றம் மூடப்பட்டது. ஏப்ரல் 1 மற்றும் மே 20, 1795 இல் இராணுவம், பசி, மோசமான ஊதியங்களுக்கு எதிரான இரண்டு பாரிசியன் எழுச்சிகளை நசுக்கியது. குறைந்தது 2,000 பேர், பெரும்பாலும் ஜாக்கபின்கள், எதிர் புரட்சியாளர்களான யேசுவின் நண்பர்கள் (Compagnons de Jésus) மற்றும் சூரியனின் நண்பர்கள் (Compagnons du Soleil) போன்ற ஆயுதக் குழுக்களின் ஒரு வெள்ளை பயங்கரவாதத்தில் கொல்லப்பட்டனர்.

தேர்மிடோரியன் ஆட்சிக்கு எதிராக தோன்றிய சமத்துவவாத, இடதுசாரி போக்குகள் நசுக்கப்பட்டன. புரட்சிக்கு முன்னர்; அடிமைத்தனத்தைத் தாக்கிய எழுத்தாளர் கிராக்கூஸ் பாபேஃப் (Gracchus Babeuf) தலைமையிலான Conspiracy of Equals போன்ற சோசலிச இயக்கத்தின் அரசியல் மூதாதையர்களும் இதில் அடங்குவர். இது சொத்துக்களை பொதுவுடமையாக வைத்திருப்பதற்கான அழைப்பை முன்வைத்தது. கிளர்ச்சியைத் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் 1796 இல் கைது செய்யப்பட்ட பாபேஃப் 1797 மே மாதம் தூக்கிலிடப்பட்டார்.

அடிமைத்தனத்தை ஒழிக்கும் ஆணையை அமல்படுத்துவதற்கு எதிராக, பிரான்சில் முதலாளித்துவ சொத்துக்களை கெட்டியாக்கிய வெள்ளை பயங்கரவாதத்தின் அரசியல் சூழல் அடிமைத்தனத்தை ஒழிப்பதை நிறைவேற்றுவதற்கு எதிராக இருந்தது. எவ்வாறாயினும், பிரெஞ்சு மக்கள் அடிமைத்தனத்தை ஆதரித்ததாக டோட்டின் குற்றச்சாட்டை இது நிரூபிக்கவில்லை. மாறாக, மூன்றில் இரண்டு நூற்றாண்டின் பின்னர், மூலதனத்தில் கார்ல் மார்க்ஸ் கூறிய கருத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: “ஓஜியே (Augier) இன் கூற்றுப்படி, பணம் ஒரு கன்னத்தில் பிறவி இரத்தக் கறையுடன் உலகிற்கு வந்தால், 'மூலதனம் தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு துளையிலிருந்தும், இரத்தமும் மற்றும் அழுக்கும் சொட்டுகின்றது."

உண்மையில், பிரெஞ்சு மக்கள் மீதான டோட்டின் இனவாதக் கண்டனம், தேர்மிடோர் குறித்து அவர் அமைதியாக இருக்கும்போது, சமூகப் புரட்சிக்கு எதிரான அவரது எதிர்ப்பிலிருந்து பிரிக்க முடியாதது.

நெப்போலியன் ஒரு முதலாளித்துவ நபராக இருந்தார், அவர் தேர்மிடோரின் உச்சக்கட்டமாக ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றி, குடியரசு மற்றும் முடியாட்சி சக்திகளுக்கு இடையிலான சமரசத்தின் அடிப்படையில் ஆட்சி செய்தார். அவர் எந்த வகையிலும் மார்க்சிச இயக்கத்தின் செயல்வீரன் அல்ல. எவ்வாறாயினும், அவரை "பிரான்சின் மிகப்பெரிய கொடுங்கோலன்" என்று டோட் வெறித்தனமாகக் கண்டனம் செய்வது ஒரு முக்கியமான கேள்வியை புறக்கணிக்கிறது.

செயிண்ட்-குளோட்டில் 18வது புரூமேரின் ஆட்சி கவிழ்ப்பின் போது ஜெனரல் போனபார்ட், ஓவியம் 1840 பிரான்சுவா பூஷ்சோ (Wikimedia Commons)

1815 ஆம் ஆண்டில் வாட்டர்லூவில் நெப்போலியனின் இறுதி தோல்விக்கு முன்னர், நெப்போலியனிச பிரான்சால் ஐரோப்பாவின் முடியாட்சிகள் சந்தித்த பாரிய தோல்விகள், பிரான்சிலும் ஐரோப்பாவின் பெரும்பகுதி முழுவதும் நிலப்பிரபுத்துவ சொத்துடமைகளை ஒழிப்பதை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தன. 2009 ஆம் ஆண்டு “நெப்போலியன் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்தல்” என்ற ஒரு கட்டுரையில் பேராசிரியர் ரபே ப்ளூஃபார்ப் (Rafe Blaufarb) இவ்வாறு எழுதுகிறார்:

நெப்போலியன், நிலப்பிரபுத்துவ சொத்துறவுகளை இல்லாதொழித்த பிரெஞ்சு சட்டத்தை, இணைத்துக்கொண்ட பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தினார். நேபிள்ஸ் மற்றும் வெஸ்ட்பாலியா போன்ற தொலைதூர இராச்சியங்களிலும் இதேபோன்ற கொள்கைகள் பின்பற்றப்பட்டன. நெப்போலியனின் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னரும், அதிகாரத்திற்கு மீட்டெடுக்கப்பட்ட மன்னர்கள் இந்த மாற்றங்களை தவிர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள், நெப்போலியன் கொண்டு வந்த மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்தனர் .... ஐரோப்பிய பிராந்தியங்களில் நெப்போலியன் ஆதிக்கம் கடுமையாக போட்டியிட்டது, விரைவில் குறுகிய ஆயுள் உள்ளதாக நிரூபிக்கப்பட்டாலும், நிலப்பிரபுத்துவ ஒழிப்புத் திட்டம் என்று ஒன்று அங்கே இருக்கவில்லை. உண்மையில், இது நெப்போலியன் அத்தியாயத்தின் மிக முக்கியமான நீண்டகால மரபுகளில் ஒன்றாகும். இந்த கண்ணோட்டத்தில், நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது ஐரோப்பாவிற்கு பரவியதற்கு ஒரு காரணியாக இருந்த 1789 ஆம் ஆண்டின் உண்மையுள்ள வாரிசாக இன்னும் நாம் நெப்போலியனை காணலாம்.

ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பதில் டோட் அக்கறை காட்டவில்லை என்பது அப்பட்டமாக காணப்படுவது ஆச்சரியமல்ல. ஆளும் உயரடுக்கின் கறுப்பின மக்களின் வாழ்வும் முக்கியம் (Black Lives Matter) இயக்கத்தை வளர்ப்பதன் பரந்த சூழலில் அவரது இனவாதவகை அரசியல் வெளிப்படுகிறது. வோல் ஸ்ட்ரீட்டுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஒரு முன்னணி பெருநிறுவன அறக்கட்டளையான ஃபோர்ட் அறக்கட்டளையின் பல்லாயிரக்கணக்கான டாலர் பணப்பாய்ச்சல் மற்றும் அமெரிக்க கல்வித்துறை மற்றும் ஊடகங்களில் பெரும் பிரசன்னத்தைக் கொண்டுள்ள அவ்வமைப்பு பிரான்சில் சமூக ஊடகங்களில் அதிக அளவில் செயலில் உள்ளது. குறிப்பாக மினியாபோலிஸில் கடந்த ஆண்டு ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிரான பாரிய போராட்டங்களில் தலையிடுகிறது.

இந்த சக்திகள் இன சமபங்கிற்கான அழைப்புகளை முன்வைப்பதுடன், கல்வியாளர்கள், பெருநிறுவன நிர்வாகிகள் அமைப்பு மற்றும் பிற இடங்களில் கறுப்பின நடுத்தர வர்க்கத்தின் அடுக்குகளுக்கு செல்வாக்கு மற்றும் சலுகைக்கு அதிக அணுகலை நாடுகின்றன. தொழிலாள வர்க்கத்தை இனவகை வார்த்தையாடல்களால் பிளவுபடுத்துவதற்கு பெருமளவில் நிதியளிக்கப்பட்ட இந்த நபர்கள், 18 ஆம் நூற்றாண்டில் அல்லது தற்போதுள்ள எந்தவொரு சொத்துடமை வடிவங்களையும் புரட்சிகரமாக தூக்கிவீசுவதற்கு விரோதமாக உள்ளனர்.

டோட்டினால் ஆதரிக்கப்படும் இனவாதவகை கண்ணோட்டத்தைப் பற்றி ஒரு இறுதி அவதானிப்பு செய்யப்பட வேண்டும். 18 ஆம் நூற்றாண்டு பிரான்சில் நடந்த புரட்சிகர போராட்டங்களைப் பற்றி, வெளிப்படையான அவமதிப்பு மற்றும் விரோதத்துடன் எழுதுவதன் மூலம், பிரெஞ்சு புரட்சியின் சாதனைகளின் பாதுகாவலர்களாக பொய்யாக காட்டிக்கொள்ள பிற்போக்குத்தனமான பிரெஞ்சு தேசியவாதிகளுக்கு டோட் உதவுகிறார். மதசார்பின்மை மற்றும் "குடியரசுக் கொள்கைகளை" பாதுகாப்பதாகக் கூறும் சாக்குப்போக்கில் முஸ்லீம்-விரோத இனவெறியைத் தூண்டும் மக்ரோனின் "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டம் இதற்கு ஒரு உதாரணம் மட்டுமே.

ஒரு தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பிலிப் டு வில்லியே சமீபத்தில் "பிரான்சின் அழிவை தவிர்க்க" இனப் போர், கலாச்சாரத்தை இரத்துசெய்தல், குடியேற்றத்தை திருப்பியனுப்பு ஆகியவற்றை தாக்கி … "கிளர்ச்சிக்கான அழைப்பு" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். "நவ-பாசிச இதழான Valeurs actuelles இல் பிரெஞ்சு அதிகாரிகளின் மட்டத்தில் தீவிர வலதுசாரி சக்திகளிடமிருந்து ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தல்களை வில்லியே இன் கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது. "இனவாதம், சுதேசிய தேசியவாதம் மற்றும் காலனித்துவ கோட்பாடுகள்" ஆகியவற்றைக் கண்டிக்கும் ஒரு கடிதம் "இனப் போர்கள்" பற்றி எச்சரித்ததுடன், பிரெஞ்சு இராணுவம், "ஆயிரக்கணக்கான மரணங்களுக்கு" வழிவகுக்கும் வகையில் பிரான்சிற்குள் இராணுவ ரீதியாக தலையிடக்கூடும் என்று அறிவித்தது.

மக்ரோன் மற்றும் டு வில்லியேயின் வாதங்கள் முற்றிலும் மோசடியானது. ஏகாதிபத்தியப் போர், பொலிஸ் அடக்குமுறை, மிருகத்தனம் மற்றும் "வைரஸுடன் வாழ்வது" என்ற அவர்களின் தொற்றுநோய் தொடர்பான கொள்கைகளுக்கு தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் எதிர்ப்பால் பீதியடைந்த அவர்கள், ஒரு புரட்சிகர பாரம்பரியத்தை பாதுகாக்கவில்லை. முஸ்லீம்-விரோத உணர்வை அவர்கள் தூண்டுவது, 1789 புரட்சியின் பெரும் பாரம்பரியமான இடதுசாரி மரபுகளுக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பின் மறுக்க முடியாத அறிகுறியாகும்.

அமெரிக்க மற்றும் ஹைட்டிய புரட்சிகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச புரட்சிகர எழுச்சியின் பாகமான பிரெஞ்சு புரட்சி, சமத்துவத்தின் வாக்குறுதியையும், உள்ளடக்கத்தில் சர்வதேசரீதியாக இருந்த வர்க்க சலுகைகளுக்கு எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டது. பிரான்சிலும் ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பை ஒழிப்பதன் மூலம், அது அடிமைத்தனத்திற்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த அடியை கொடுத்தது, 1791 இல் ஹைட்டிய புரட்சியைத் தூண்ட உதவியது. அதே ஆண்டில், அது அந்த நேரத்தில் பிரான்சின் மத சிறுபான்மையினரான யூதர்கள், புராட்டஸ்டன்ட்டுகள் மற்றும் முஸ்லிம்களுக்கு முழு சட்ட சமத்துவத்தை வழங்கியது. இந்த கொள்கைகளை நெப்போலியன் ஒருபோதும் பின்வாங்கவில்லை.

எவ்வாறாயினும், முதலாம் பிரெஞ்சு குடியரசை ஒரு இனப்படுகொலை அரசாக, தனது பொய்யான இனவாத கண்டனத்துடன் டோட், 1789 புரட்சியில் இருந்து தோன்றிய சமத்துவத்தையும் சர்வதேசியவாதத்தையும் குறைத்து மதிப்பிடுகிறார். இதனால் தீவிர வலதுசாரி ஆட்சி மற்றும் இராணுவ சர்வாதிகார அச்சுறுத்தல்களுக்கான தொழிலாளர்களின் சோசலிச எதிர்ப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார். தொழிலாள வர்க்கத்தை இன மற்றும் இனக்குழு ரீதியில் பிரிக்கும் மற்றும் எந்தவொரு இனவாத அடையாள அரசியல் அடிப்படையிலான வரலாற்று பொய்மைப்படுத்தல்கள் மற்றும் அதிகப்படியான மிகைப்படுத்தல்களை தீர்க்கமாக நிராகரிக்க வேண்டும்.

Loading