டேனிஷ் அரசுத் தொலைக்காட்சி, ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட அதிகாரிகள் மீது அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பால் நடத்தப்பட்டு வரும் உளவுபார்ப்பை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமை மாலை, ஜேர்மனிய சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும், ஜேர்மனிய, பிரெஞ்சு, நோர்வே மற்றும் சுவீடனின் உயர்மட்ட அதிகாரிகளை இலக்கில் வைத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை (NSA), டேனிஷ் உளவுத்துறையின் உதவியுடன், மின்னணு முறையில் உளவு பார்த்து வருவதாக வந்த உத்தியோகபூர்வ வெளியீடுகளைக் கண்டித்தனர். மேர்க்கெல், ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் முன்னாள் சமூக-ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் பீர் ஸ்டைன்ப்ரூக் (Peer Steinbrück) ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டவர்களில் உள்ளடங்குவர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2013 இல், NSA இரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோவ்டென், மொத்த உலகையும் இலக்கு வைத்து NSA மின்னணு முறையில் பாரியளவில் உளவு பார்ப்பதையும் மற்றும் தரவு சேகரிப்பதையும் வெளிப்படுத்தினார். அப்போதிருந்து, நேட்டோ உளவுத்துறை முகமைகளின் பாரிய உளவுபார்ப்பு குறித்த வெளியீடுகள் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் அதிகரித்த கண்காணிப்பு மற்றும் தணிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றன. உயர்மட்ட ஐரோப்பிய அதிகாரிகளை வேவு பார்க்க மாட்டோம் என்ற அமெரிக்க உத்தரவாதங்கள் இருந்த போதும், ஸ்னோவ்டெனின் வெளியீடுகளுக்குப் பின்னர் பல ஆண்டுகளாக அவர்கள் இலக்கில் வைக்கப்பட்டனர் என்ற உண்மை, பாரியளவில் நடந்து கொண்டிருக்கும் இந்த மின்னணு வலைபொறியிலிருந்து யாரும் பாதுகாக்கப்படவில்லை என்பதையே அடிக்கோடிடுகிறது.

French President Emanuel Macron and German Chancellor Angela Merkel (AP Photo/Francois Mori)

இப்போது நாடு கடந்து ரஷ்யாவில் உள்ள ஸ்னோவ்டென் ட்விட்டரில் எழுதினார், "டென்மார்க் மட்டுமல்ல, அவர்களின் மூத்த பங்காளியும் கூட முழுவதையும் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற வெளிப்படையான தேவை இருக்கிறது.” ஜூன் 11-13 இல் ஐரோப்பாவுக்கு வரவிருக்கும் பைடெனின் விஜயத்தைக் குறிப்பிட்டு, ஸ்னோவ்டென், ஒபாமாவின் NSA உளவு நடவடிக்கைகளின் கீழ் பைடென் துணை ஜனாதிபதியாக இருந்த முன்வரலாறைச் சுட்டிக் காட்டினார்: "ஆம், பைடென் இந்த மோசடியின் முதல் சுற்றிலேயே ஆழமாக சம்பந்தப்பட்டவர் என்பதால், விரைவில் ஐரோப்பாவுக்கான அவர் விஜயத்தின் போது இதற்கு பதிலளிக்க அவர் நன்கு தயாரிப்பு செய்திருப்பார்.”

ஐரோப்பிய அரசியல்வாதிகளை உளவு பார்க்க டேனிஷ் சொத்திருப்புக்களை NSA பயன்படுத்தியதை, டேனிஷ் அரசுத் தொலைக்காட்சி (DR), அதிகாரபூர்வமான டேனிஷ் அநாமதேய ஆதாரநபர்களை மேற்கோளிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டது. முன்னணி ஐரோப்பிய செய்தி ஊடகங்களுக்கு இடையிலான உயர்மட்ட ஒத்துழைப்பின் விளைபொருளான அந்த அறிக்கை, ஜேர்மனியின் Süddeutsche Zeitung மற்றும் NDR மற்றும் WDR தொலைக்காட்சிகளுடனும், பிரான்சில் Le Monde உடனும், சுவீடன் அரசு தொலைக்காட்சி SVT மற்றும் நோர்வே அரசு தொலைக்காட்சி NRK உடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

"ஆபரேஷன் டன்ஹாமர்" (Operation Dunhammer) என்று குறியீட்டு பெயர் கொண்ட அந்த இரகசிய நடவடிக்கையில், NSA மற்றும் டேனிஷ் இராணுவ உளவுத்துறைக்கு (Forsvarets Efterretningstjeneste - FE) இடையே ஒத்துழைப்பு இருந்தது, டேனிஷ் இராணுவ உளவுத்துறை டென்மார்க் வழியாக செல்லும் இணைய தரவுகளை NSA தேடலுக்குக் கையளித்தது. இருப்பினும், இந்த திட்டம் மீது 2015 இல் FE அதன் சொந்த உள்அலுவலக புலனாய்வைத் தொடங்கியது. DR எழுதுகிறது, "FE இன் புலனாய்வு NSA க்கு தெரியாத விதத்தில், மிகவும் இரகசிய முறைகளைப் பயன்படுத்தி அமெரிக்க-டேனிஷ் ஒத்துழைப்பை ஆய்வுக்குட்படுத்திய நான்கு இணைய ஊடுருவல் நிபுணர்கள் மற்றும் உளவுத்துறை பகுப்பாய்வாளர்களால் நடத்தப்பட்டது.”

NSA அந்த தரவுகளில், பல உயர்மட்ட ஐரோப்பிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் பிற தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி தேடுவதை அவர்கள் கண்டறிந்தனர். ஒரு டேனிஷ் ஆதார நபர் DR க்கு கூறுகையில், “அவர்கள் தங்கள் தொலைபேசிகளை எதெற்கெல்லாம் பயன்படுத்தினார்களோ [NSA] அவை அனைத்தையும் கைப்பற்றியது. இது இலக்கு வைக்கப்பட்ட உளவு நடவடிக்கை என்பதை மறுப்பது சாத்தியமில்லை," என்றார். மற்றொருவர் கூறினார், "இது டேனிஷ் வரலாற்றிலேயே மிகப்பெரிய உளவுத்துறை மோசடியாக மேலெழுந்து வரும் விவகாரம்," என்றார்.

பிரிட்டன், காண்டினென்டல் ஐரோப்பா, ஸ்காண்டிநேவியா மற்றும் ரஷ்யா இடையே டென்மார்க் ஒரு மூலோபாய இடத்தில் அமைந்திருப்பதால், ஐரோப்பிய ஒன்றிய-ரஷ்யா தகவல்தொடர்புகளை உளவு பார்க்க அது முக்கியமாக உள்ளது. இந்த கூட்டு ஒத்துழைப்பு குறித்து மற்றொரு டேனிஷ் அதிகாரி கூறுகையில், DR “அமெரிக்க-டேனிஷ் உறவுகளில் மூலோபாய முக்கியத்துவம் கொண்டுள்ளது" என்றார். இதனால், "ஆபரேஷன் டன்ஹாமர்" முறைப்படி 2015 இல் நிறுத்தப்பட்ட பின்னரும் கூட, FE அதிகாரிகள் NSA உளவுபார்ப்பில் தொடர்ந்து ஒத்துழைத்து வந்துள்ளனர்.

எவ்வாறெனினும், "ஆபரேஷன் டன்ஹாமர்" பற்றிய 2015 FE அறிக்கை, 2018 இல், டென்மார்க்கின் உளவுத்துறை மேற்பார்வை ஆணையத்திற்கு (TET) கசியவிடப்பட்டது, அது அந்த அறிக்கையைப் புலனாய்வு செய்தது.

கடந்த ஆகஸ்டில், பல உயர்மட்ட FE அதிகாரிகள் எந்த விளக்கமும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். "ஆபரேஷன் டன்ஹாமர்" இன் போது FE ஐ வழிநடத்திய Thomas Ahrenkiel ஜேர்மனிக்கான டேனிஷ் தூதர் பதவியிலிருந்து திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார். அவருக்குப் பின் பதவிக்கு வந்த Lars Findsen அரசிடமிருந்து FE இன் நடவடிக்கைகளை மறைத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார். குறிப்பிடத்தக்க வகையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் டைன் பிராம்சனுக்கு "ஆபரேஷன் டன்ஹாமர்" அறிக்கை கிடைத்த பின்னர் தான் உடனடியாக, இந்த உயர்மட்ட டேனிஷ் உளவுத்துறை அதிகாரிகளின் பாரிய பணிநீக்கம் நடந்தது. FE “டேனிஷ் சட்டத்தை மீறி திட்ட நடவடிக்கைகளைத் தொடங்கி இருந்தது" என்ற முடிவை அறிவித்த TET பத்திரிகை அறிக்கை ஒன்றையும் DR மேற்கோளிட்டது.

இந்த சம்பவங்கள், அனைத்துக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தை இலக்கில் கொண்ட நேட்டோ உளவுத்துறை முகமைகளின் இணையவழி உளவுவேலைகளது உலகளாவிய தன்மையை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளன. ஐயத்திற்கிடமின்றி NSA மிகப் பெரியளவில் அதன் வளங்களையும் உள்கட்டமைப்பையும் மின்னணு உளவுபார்ப்புக்கு அர்ப்பணித்துள்ளது ஒளிவுமறைவின்றி இருந்தாலும், ஸ்னோவ்டெனின் தைரியமான வெளியீடுகள் தான் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நடக்கும் பாரிய மின்னணு கண்காணிப்பை வெளிச்சத்திற்குக் கொண்டு வர உதவின.

இதற்கும் மேலாக, டென்மார்க் உடனான இப்போது வெளிப்பட்டிருக்கும் பங்காண்மையை போன்று NSA ஏற்கனவே ஐந்து பங்காண்மைகளைத் தொடர்ந்து கொண்டிருந்ததை ஸ்னோவ்டென் கசியவிட்ட NSA ஆவணங்கள் 2013 இலேயே எடுத்துக்காட்டின.

ஸ்னோவ்டென் அவர் வெளியீடுகளை வெளியிட்டு சில நாட்களில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அவர் மீது அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும் கொண்டிருந்த விரோதத்திற்கு எதிர்முரணாக அவருக்கிருந்த வெகுஜன மக்கள் அனுதாபத்தை எடுத்துக்காட்டியது. அது பின்வருமாறு எழுதியது:

ஸ்னோவ்டெனின் நடவடிக்கைகள் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவையும் நன்றியையும் பெற்றிருந்த அதேவேளையில், அவர்களை ஆட்சி செய்யும் அரசாங்கங்களின் நிலைப்பாடு அவ்வாறு இருக்கவில்லை. அவை அனைத்தும் வாஷிங்டனில் இருந்து வந்த மிரட்டலுக்கு அடிபணிந்தன. அமெரிக்க அரசாங்கத்தைப் போலவே, அவை எப்போதும் விரிவடைந்து வரும் சமூக சமத்துவமின்மை நிலைமைகளின் கீழ் செல்வந்த ஆளும் வர்க்கங்களையே பாதுகாக்கின்றன என்பதால், தங்கள் சொந்த மக்களுக்கு எதிரான அவற்றின் சதிகளும் வெளிச்சத்திற்கு வந்து விடுமென அவை அஞ்சுகின்றன.

ஸ்னோவ்டெனுக்கு புகலிடம் அளிக்க மறுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐயத்திற்கிடமின்றி, "அவர் வைத்திருக்கும் தகவல்கள் அதே போன்ற குற்றங்களில் அவற்றின் சொந்த அரசாங்கங்களையும் உடந்தையாய் ஆக்கும்" என்று அஞ்சின என்பதையும் WSWS குறிப்பிட்டது.

அடுத்தடுத்த நிகழ்வுகளால் முழுமையாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட, அந்த பகுப்பாய்வு, இவ்வார டென்மார்க் வெளியீடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய சக்திகளின் மெளனமான ஆரம்ப விடையிறுப்பால் மீண்டும் பிரகாசமாக ஒளிர்கிறது. "விளக்கம் பெறுவதற்காக எல்லா நாட்டு மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் தொடர்பு கொண்டு வருவதாக" திங்கட்கிழமை காலை பேர்லின் ஓர் அறிக்கையை வெளியிட்டது. Le Monde கருத்துரைக்க கோரிய போது பாரிசின் எலிசே ஜனாதிபதி மாளிகை கருத்துரைக்க மறுத்து, அதற்கு பதிலாக ஐரோப்பிய விவகாரங்களுக்கான இளநிலை அமைச்சர் Clément Beaune ஐ France-Info இல் பேச அனுப்பியது.

மேர்க்கெல் உட்பட அதன் ஐரோப்பிய ஒன்றிய "நட்பு நாடுகள்" மீதே அமெரிக்கா ஒட்டுக் கேட்டதை ஸ்னோவ்டெனின் இரகசிய ஆவண வெளியீடுகள் அம்பலப்படுத்தின, இதனால் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மீதான உளவுபார்ப்பை நிறுத்துவதாக ஜனவரி 2014 இல் வெற்று வாக்குறுதிகள் அளிக்க ஒபாமா நிர்பந்திக்கப்பட்டார். இருப்பினும் Beaune கூறுகையில் வாஷிங்டன் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை உளவுபார்க்கிறதா என்பது தெளிவாக இல்லை என்று வாதிட்டார். "இது மிகவும் முக்கியமான விஷயம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நமது டேனிஷ் பங்காளிகள் அமெரிக்க உளவுத்துறை முகமைகளுடன் ஒத்துழைப்பதில் தவறுகளோ இல்லை பிழைகளோ செய்தார்களா என்பதை நாம் பார்க்க வேண்டும்,” என்றார். “அந்த அறிக்கையின் உண்மைத்தன்மையை சரிபார்க்க" அழைப்பு விடுத்த அவர், “மேலும் அமெரிக்க தரப்பிலும், அரசியல் அதிகாரிகள் மீது ஒட்டுக் கேட்கப்படுகிறதா, உளவுபார்க்கப்படுகிறதா … என்றும் நாம் பார்க்க வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

திங்கட்கிழமை மாலை, மாலி போர் தொடர்பாகவும் மற்றும் கூட்டு போர் விமானங்கள் மற்றும் பீரங்கி அமைப்புகளுக்கான புதிய திட்டங்கள் தொடர்பாகவும் பிராங்கோ-ஜேர்மனிய இராணுவ ஒத்துழைப்பு கூட்டத்தில், மக்ரோனும் மேர்க்கெலும் இந்த விவகாரம் சம்பந்தமாக பேசினார்கள். "நட்பு நாடுகளுக்கு இடையே இதை ஏற்றுக் கொள்ள முடியாது, நட்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய பங்காளிகளுக்கு இடையே இது இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியாது,” என்று கூறிய மக்ரோன், “நமது டேனிஷ் பங்காளிகளும் அமெரிக்க பங்காளிகளும் இந்த வெளியீடுகள் மீதும் இதே போன்ற கடந்த கால உண்மைகள் மீதும் முழு விபரங்களை நமக்கு வழங்க வேண்டுமென நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

மக்ரோனின் அறிக்கைகளுடன் அவர் "உடன்பட மட்டுமே முடியும்" என்று கூறிய மேர்க்கெல், தொடர்ந்து கூறுகையில், NSA உளவுபார்ப்பு மீதான டேனிஷ் அரசாங்கத்தின் விமர்சனங்களால் அவருக்கு "மறுநம்பிக்கை" கிடைத்திருப்பதாக தெரிவித்தார். அவர் கூறினார், "உண்மைகளை நிறுவுவதற்கு அப்பாற்பட்டு, உண்மையிலேயே பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட உறவுகளை எட்டுவதற்கு இதுவொரு நல்ல தொடக்கப் புள்ளியாக உள்ளது,” என்றார்.

உண்மையில், இந்த வெளியீடுகள் நேட்டோ கூட்டணிக்குள் நிலவும் தீர்க்கவியலா மோதல்களை மீண்டும் உயர்த்திக் காட்டுகின்றன, அமெரிக்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் மீது பில்லியன் கணக்கான டாலர்கள் வரி விதிக்கவும், ஐரோப்பிய ஒன்றிய இராணுவத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்குப் பதிலடி கொடுக்கவும் அச்சுறுத்திய ஒபாமாவின் முந்தைய அச்சுறுத்தல்களில் அது வெளிப்பட்டது. "ஆபரேஷன் டன்ஹாமர்" புலனாய்வு நடந்து கொண்டிருந்த போது வந்த அத்தகைய அச்சுறுத்தல்களில் ஒன்றுதான், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை வாங்குவதற்கான ட்ரம்பின் முன்மொழிவாக இருந்தது. அப்போது அவர் டென்மார்க் அதன் ஆர்க்டிக் பிரதேசத்தை விற்க மறுத்ததைக் கண்டித்தார், அதேநேரத்தில் அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ கிரீன்லாந்தில் வர்த்தக ரீதியிலான சீனாவின் பிரசன்னத்தைக் கண்டனம் செய்தார்.

அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் மேம்பட வழிவகுக்கிறது என்று சித்தரித்துக் காட்டி, இந்த வர்த்தக மற்றும் இராணுவ பதட்டங்களை பைடென் குறைத்துக் காட்ட வேண்டிய வேதனையில் இருக்கின்ற அதேவேளையில், உலக சந்தைகள் மற்றும் மூலோபாய ஆதாயங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அடியிலுள்ள மோதல்கள் எதுவும் தீர்க்கப்படவில்லை. இதற்கும் மேலாக, ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட அதிகாரிகளை உளவுபார்ப்பதை NSA நிறுத்தும் என்ற ஒபாமாவின் ஜனவரி 2014 உறுதிமொழிகள் பொய்கள் என்பதை FE இன் "ஆபரேஷன் டன்ஹாமர்" கோப்பு வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்னோவ்டெனின் வெளியீடுகள் வந்து அண்மித்து ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், மின்னணுமுறை உளவுபார்ப்பின் மைய இலக்கு தொழிலாள வர்க்கம் என்பது முன்னெப்போதையும் விட வெளிப்படையாக உள்ளது. பாரியளவிலான தரவு சேகரிப்பு திட்டங்கள் கண்காணிப்பை மட்டுமல்ல மாறாக சமூக ஊடக இடுகைகளைத் தணிக்கை செய்தல் மற்றும் பிரான்சில் "மஞ்சள் சீருடை" இயக்கம் போன்ற சமூக போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களை அடையாளங்கண்டு சட்டரீதியில் இலக்கு வைத்தல் என இவற்றுக்கும் உதவியுள்ளன. அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, ஏகாதிபத்திய இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளின் பிற்போக்குத்தனமான சூழ்ச்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அரசியல் அணிதிரள்வு தேவைப்படுகிறது.

Loading