இலங்கை: இ.தொ.கா. தலைவர் “கொரோனாவுக்கு பயப்படாமல் உற்பத்தியை அதிகரிக்குமாறு” தோட்டத் தொழிலாளர்களுக்கு கூறுகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தலைவரும், இராஜபக்ச அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தோட்டத் தொழிலாளர்களிடம் “தொற்றுநோய்க்கு அஞ்சாமல் இரண்டு கையால் கொழுந்து பறித்து உற்பத்தியை அதிகரிக்குமாறு” கோரினார். 'எங்கள் பலவீனம் கோவிட்-19 வைரசுக்கு பயப்படுவதே ஆகும், நாங்கள் பயத்திலிருந்து விடுபட்டால் வைரஸைக் கட்டுப்படுத்தலாம்,” என்று தெரிவித்தார். 'உற்பத்தியை அதிகரிக்காமல்' தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

ஜீவன் தொண்டமான் (Facebook)

கோவிட்-19 தொற்றுநோய் இலங்கையிலும் ஒரு பிரமாண்டமான பேரழிவை உருவாக்குகின்ற சூழ்நிலையிலேயே தொண்டமான் இந்த கருத்தை கூறுகின்றார். பூகோள ரீதியில் மில்லியன் கணக்கானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற சூழ்நிலையின் கீழேயே, இலங்கையில் இப்போது மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195,844 ஆகும். தினசரி இறப்பு எண்ணிக்கை 35-45 ஆக உள்ளது. மரண எண்ணிக்கை 1,608 ஐ நெருங்குகிறது. ஜூன் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயரக்கூடும் என்று சர்வதேச மற்றும் இலங்கை சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய மாகாணத்தில் கடந்த மாத இறுதி வரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில், ஜூன் 3 வெளியான அறிக்கைகளின் படி, மூன்றாவது அலையில் இதுவரை 2,772 பேரும் மொத்தமாக 4033 பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். டயகம சந்திரிகாமம் கால்நடை பண்ணையில் பெருந்தொகையான தொழிலாளர்கள் அண்மையில் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு மேலாக சந்திரிகாமம் தோட்டம், லிந்துலையில் சென்கூம்ஸ், டிக்கோயாவில் இன்ஜெஸ்ரி மற்றும் போடைஸ் தோட்டங்களிலும் நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தின், தெரணியகலையில் ஒரு தோட்டத்திலிருந்தும் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். பெரும்தோட்டப் பகுதிகளில் கொத்மலை மற்றும் மஸ்கெலியாவில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான தொற்று நோயாளர்கள் உள்ளனர். இந்த தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழிலாளர்களில் பெரும்பாலோர், தோட்டத் தொழிலாளர்களின் இளைஞர்கள் யுவதிகள் ஆவர்.

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிறிய லயன் அறைகளில் வசிக்கும், எந்தவொரு சுகாதார வசதியும் இல்லாமல், பொது கழிப்பறைகள் மற்றும் பொது நீர் குழாய்களைப் பயன்படுத்துவதும் பல்லாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில், இந்த தொற்று நோய் காட்டுத் தீ போல் பரவுவதற்கு ஆகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. வளர்ந்து வரும் ஆபத்தையிட்டு பீதியடைந்துள்ள தோட்டத் தொழிலாளர்கள், பாதுகாப்பற்ற நிலையிலும் பலவந்தமாகவும் தங்களிடம் வேலை வாங்கும் தோட்டத் கம்பனிகள் மீதும், அதை ஆதரிக்கும் அரசாங்கத்தின் மீதும் ஆத்திரமடைந்துள்ளனர்.

தொற்று நோய் சம்பந்தமாக தானும் அரசாங்கமும் பின்பற்றும் குற்றவியல் கொள்கைக்கு எதிராக, தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் கோபம், ஊதியக் குறைப்பு மற்றும் வேலை சுமை அதிகரிப்புக்கு எதிராகவும் தினமும் கிளர்ந்து வரும் போராட்டங்களை மேலும் ஊக்குவித்து, அவர்களின் இலாபங்களை சீர்குலைக்கும் என்று பெருந்தோட்டக் கம்பனிகள் அச்சமடைந்துள்ளன.

இந்த கவலையிலிருந்தே தொண்டமனின் கருத்து வெளிவருகின்றது. தொழிலாளர்களின் கோபத்தைத் தணித்து, கம்பனிகளின் இலாபத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு தொழிலாளர்களை வழிநடத்துவதே அவரது நோக்கம் ஆகும்.

மனித உயிர்களுக்கு மேலாக இலாபத்தை முன்நிறுத்தும் உலக முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் பகுதியாக இருக்கின்ற இராஜபக்ஷ அரசாங்கத்தின் குற்றவியல் கொள்கைக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்வதே தொண்டமானின் நோக்கமாகும். தொற்றுநோய் வேகமாக பரவிவருவதை கணக்கில் எடுக்காது, ஏற்றுமதி துறையோடு சம்பந்தப்பட்ட ஆடை மற்றும் பெரும் தோட்டத் துறை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த இராஜபக்ஷ அரசாங்கம் முதலாளிகளை அனுமதித்துள்ளது. இதன் விளைவாக, ஆடைத் தொழிற்துறை வைரஸை உற்பத்தி செய்யும் மையமாக மாறியுள்ளதுடன், பெருந்தோட்ட நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து தோட்டத்துறையையும் அதே நிலைக்குள் தள்ளுகின்றன.

இ.தொ.கா. மட்டுமன்றி, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமையில் உள்ள அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட எதிர்க்கட்சி தொழிற்சங்களும், இதனுடன் இணைந்து, பெருந்தோட்டக் கம்பனிகளின் இலாபம் ஈட்டும் திட்டங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன.

தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு கோரி பொகவந்தலாவ நகரில் நடத்திய போராட்டம்.

தொற்றுக்கு உள்ளான தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்ட அதே வேளை, தோட்டக் கம்னிகளிடம் இருந்தோ அல்லது அரசாங்கத்திடம் இருந்தோ தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

போடைஸ் தோட்டத்தில் உள்ள ஒரு தொழிலாளி கூறியதாவது: “தனிமைப்படுத்தலின் போது நாங்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அரசாங்கம் எங்களுக்கு உணவுப் பொதிகள் கூட கொடுக்கவில்லை. தோட்ட முகாமைத்துவம் எங்களுக்கு அந்த காலத்திற்கு உரிய சம்பளம் வழங்கவில்லை. அரசாங்க கிராம அலுவலர், பொலிஸ் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு நாங்கள் தொலைபேசி அழைப்புகள் எடுத்தோம். அவற்றுக்கு பதில் கூட இல்லை.”

தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் தொழிலாளர்கள் பசியுடன் இருக்க வேண்டியிருந்ததாக தெரணியகலை தோட்டத்தின் தொழிலாளி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். “நாங்கள் பசியுடன் இருந்தோம். அரசாங்கமோ, தொழிற்சங்கங்களோ, வேறு எவரோ எங்களைப் பற்றி கவலைப்படவில்லை. குழந்தைகளுக்கு கொடுக்க பால்மா கூட பெறமுடியவில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் பெரும்பாலும் தேர்தல் காலத்தில் தவறாது வருவார்கள். ஆனால் இப்போது யாரும் இங்கு வரவில்லை.”

வறுமை அதே போல், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் அதிக ஊட்டச்சத்து குறைபாட்டைக் கொண்ட மக்கள் தொகையின் ஒரு பகுதியினராகவே தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் பெறும் அற்ப தினசரி ஊதியத்திலிருந்து நோயை எதிர்க்கும் திறனினுள்ள போசாக்குள்ள உணவைப் பெறமுடியாது.

தொழிலாளர்களை வைரஸிலிருந்து பாதுகாக்க, விஞ்ஞானப் பூர்வமான முறைகளை பின்பற்றுவது மற்றும் தேவையான வசதிகளை வழங்குவதற்கு பதிலாக, தோட்ட கம்பனிகள், ஆவிபிடித்தல் மற்றும் கொத்தமல்லி தண்ணீரைக் குடிப்பது போன்ற உள்ளூர் சிகிச்சைகளின் மூலம் தொற்றுநோய்களிலிருந்து தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க முடியும் என்ற மாயையை ஊக்குவித்து வருகின்றன.

வைரஸால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தற்போதைக்கு மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகள் சிகிச்சை மையங்களாக' மாற்றப்படுகின்றன என்றும் தொண்டமான் ஊடகங்களுக்கு தெரிவித்தார். கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லாத, அரச மருத்துவமனைகளின் கொள்ளளவு திறன் ஏற்கனவே விஞ்சி இருக்கின்ற நிலையில், பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை தொழிற்சாலைகளில் அமைக்கப்பட்ட. தற்காலிக சிகிச்சை மையங்களிலிருந்து தங்களுக்குத் தேவையான சிகிச்சையை ஒருபோதும் பெற மாட்டார்கள். மாறாக, தொற்றின் பேரழிவு அவர்கள் மீது ஈவிரக்கமற்ற முறையில் சுமத்தப்படும்.

தலவாக்கலை, மவுசா எல்ல தோட்டத்தில் நிர்வாகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள ஆயுர்வேத ஆவி பிடிக்கும் கட்டமைப்பு (photo credit - P. Balendran)

ஆயுள்வேத வைத்தியம் மற்றும் 'மூடிய தேயிலை தொழிற்சாலைகளை சிகிச்சை மையங்களாக' மாற்றுவதற்கான தற்காலிக வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் தொழிலாளர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க முடியாது. தோட்டங்கள் உட்பட அனைத்து அத்தியாவசியமற்ற தொழில்களையும் மூடுவதன் மூலமும், அதற்குரிய காலத்தில் முழு ஊதியம் வழங்குவதன் மூலமும், அனைத்து தொழிலாளர்களையும் சம்பந்தப்பட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது, தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு அளவிலான சிகிச்சையை வழங்குவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்க முடியும்.

தொண்டமான், அரசாங்கத்துடன் இணைந்தவாறு நாட்டை முடக்குவதை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து, அவர் பாதுகாப்பற்ற சூழலில் தொழிலாளர்களை தொடர்ச்சியாக வேலையில் அமர்த்தும் ஒரு பிரதான துறையாக பெருநதோட்டத் துறையின் பேணுவதற்கு அவர் குற்றவியல்தனமாக ஆதரவாளித்து வருகின்றார்.

தேயிலை தொழிற்துறை உற்பத்தி செயல்முறையை நிறுத்த அனுமதிக்காமல், தொற்றுநோயால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து, தேயிலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருவதாக, இலங்கை தேயிலைச் சபையும் அரசாங்கமும் பெருமை பேசுகின்றன. இந்த ஆண்டு ஜனவரி-பெப்ரவரி மாதங்களில் தேயிலை ஏற்றுமதியிலிருந்து 41 பில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பெற்ற இலாபத்தை விட 10.4 பில்லியன் அதிகரிப்பு ஆகும்.

வறிய மட்ட ஊதிய நிலைமைகள் தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தைத் தணிக்கும் முயற்சியில், தோட்டத் தொழிலாளர்களுக்கு தினசரி 1,000 ரூபாய் (900 ரூபாயின் அடிப்படை சம்பளம் மற்றும் 100 ரூபாய் கொடுப்பனவு) வழங்குமாறு தோட்டக் கம்பனிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் இராஜபக்ஷ அரசாங்கம் உத்தரவிட்டது. பெருந்தோட்ட நிறுவனங்கள் அதை எதிர்த்தன. பின்னர், இதற்கு ஈடாக தினசரி உற்பத்தி இலக்குகளை உயர்த்தத் தொடங்கியது. 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்ற தினசரி இலக்கை அடையத் தவறும் தொழிலாளர்களின் ஊதியத்தை பாதியாகக் குறைப்பதுடன், மேலும் இலக்குக்கு மேலதிகமாக பறிக்கும் தேயிலைக் கொழுந்துக்கு முதலில் செலுத்தி வந்த விலையை வழங்கவும் மறுக்கின்றார்கள். சில தோட்டங்களில் ரூபா 1,000 சம்பளம் கொடுப்பதும் மறுக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா தோட்டக்கம்பனி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மரே மற்றும் பிறவுண்ஸ்விக் தோட்டங்களிலும் மற்றும் ஹட்டன் தோட்டக் கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள வெலிஓயா தோட்டத்தின் மேல் பிரிவிலும் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், சமீபத்தில் இத்தகைய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, தொழிற்சங்கங்களுக்கு பறம்பாக போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தொழிலாளர்களின் இந்த போராட்டங்களை, தொழிற்சங்கங்களின் முழு ஆதரவோடு நசுக்குவதில் முதலாளிகளும் அரசாங்கமும் ஈடுபடுகின்றன.

பெப்ரவரி 5 அன்று, தினசரி 1,000 ரூபாய் ஊதியம் கோரி, இ.தொ.கா. அழைப்பு விடுத்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை வேட்டையாட, தோட்டக் கம்பனியும் பொலிசும் கூட்டாக சேர்ந்து சதி செய்தன. ஓல்டன் தொழிலாளர்கள் மேலும் 47 நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை உடல் ரீதியாக தாக்கியதாக, தோட்ட முகாமையாளர்கள், பொலிசுடன் கூட்டுச் சேர்ந்து, இப்போது 24 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் உட்பட 38 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தொழிலாளர்கள் மறுக்கின்றனர். இ.தொ.கா. நேரடியாக இந்த வேட்டையாடலை ஆதரிப்பதுடன், ஏனைய தொழிற்சங்கங்கள் அவர்களுக்காக எந்தவொரு போராட்டத்தையும் ஒழுங்கமைக்க மறுக்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் வேட்டையாடப்பட்ட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் பிரச்சாரத்தைத் முன்னெடுத்துள்ளன.

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஒட்டுமொத்த தொழிலாளவர்க்கத்திற்கும் தொற்று நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், உரிமைகளை வெல்வதற்குமான போராட்டத்தை, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக அமைக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள் மூலம் மட்டுமே முன்னெடுக்க முடியும்.

Loading